தேடுக !

நினைவுகள்.1967.08 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள்.1967.08 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 14 நவம்பர், 2021

மலரும் நினைவுகள் (08) பண்டகத்தில் பகுப்பலகீடு (Unitization) செய்தல் என்பது என்ன? - விளக்கம் !

 (1967 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்) 

பண்டகக் காப்பாளராக என் பணிகள் ஓரளவுக்கு மனநிறைவு தருவதாகவே சென்று கொண்டிருந்தன.   உயர் அலுவலர்களின் வருகையும்  பண்டகத்தில் அவர்களது பார்வை ஆய்வும் (Test Check) அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருந்தன. இவ்வாறு வருகை தந்தோரில் அப்போதைய இணை இயக்குநர் (Joint Director) திரு.M.A..ரெங்கசாமி, பயிற்சி ஆய்வாளர்கள் (Inspector of Training) திரு.தயானந்தம், திரு.M.M.பகாவுதீன், திரு.R.இராசகோபாலன் ஆகியோரும் அடங்குவர் !


பண்டகத்தில் பார்வை ஆய்வு (Test Check) நிகழும் போது, அவர்கள் கேட்கும் பொருள்களை எல்லாம் நானே எடுத்துவந்து காண்பிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். பண்டக உதவியாளர் பணியிடம் அப்போது ஒப்பளிக்கப்படாத நிலை. அத்தகைய ஒரு நிகழ்வின் போது திரு.தயானந்தம் அவர்கள் சொன்ன ஒரு நல்லுரையை  (Advice) இன்றும் என்னால் மறக்கமுடியவில்லை. அப்படி என்னதான் அவர் சொன்னார் ?


அலுவல் நிலையில்  நான் உனக்கு உயர் அதிகாரி (I am your Superior) . நான் கேட்கிறேன்,  எனக்கு குமிழ் விளக்கு (Incandascent Bulb) ஒன்று தேவைப்படுகிறது, கொண்டுவந்து கொடு ? (I am in need of an electric Bulb. Go and bring it to me) ” நான் திகைத்துப் போனேன். ஈராண்டுகளே பணிக்காலம் நிறைவுற்ற எனக்கு, அரசுப் பணி என்பது  எதிர்காலத்திற்கான ஊன்றுகோல். அதற்கு ஊறு வந்துவிடுமோ ? – அச்சம் என்னைச் சூழ்ந்துகொண்டது !

 

இருந்தாலும் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு அவரிடம் சொன்னேன், “ஐயா ! நீங்கள்  கேட்கும்  குமிழ் விளக்கைத் தருகிறேன்; ஆனால் அதை  நான் எந்தக் கணக்கில் செலவுக் காண்பிப்பது என்பதை எனக்குச் சொல்லிக் கொடுங்கள்என்று மறுமொழி உரைத்தேன். அவர் என் மறுமொழியை எதிர்பார்க்கவில்லை !

 

என்னை அருகில் அழைத்து முதுகில் தட்டிக்கொடுத்து, “இப்படித்தான் இருக்க வேண்டும். உயர் அதிகாரிகள் சொல்கிறார்கள்  என்பதற்காக நீ தவறு செய்யக் கூடாது. ஒரு குமிழ் விளக்கை எனக்கு நீ கொடுத்துவிட்டால், அதை ஈடு செய்ய, பயிற்றுநர் (Craft Instructor) ஒருவரின் உதவியை  நீ நாடவேண்டியிருக்கும் ! அவர் உனக்கு உதவி செய்துவிட்டு வேறு கோரிக்கைகளை உன்னிடம் வைப்பார். இது தொடர்கதையாகி, இறுதியில் உன்னை  ஒரு ஊழல் அலுவலராக உருமாற்றிவிடும். விதிகளுக்கு மாறாக எதிர்காலத்தில்  எதுவும் செய்யாதே; அதுவே உனக்கு யானையைப் போன்ற வலுவைத் தரும்என்றார் !

 

நான் மெய்சிலிர்த்துப் போனேன் ! திரு.தயானந்தம் அவர்களின் நல்லுரை  அரசுப் பணியில் இருக்கும் காலம் முழுவதும் எனக்கு  நல்ல வழிகாட்டியாகதிசை காட்டும் கருவியாக அமைந்திருந்தது. 53 ஆண்டுகள் கடந்துவிட்டாலும்தயானந்தம்என்னும் அந்த மாபெரும் மனிதரின் பெயரும் அவர் முகமும் என் வாழ்வில் மறக்கமுடியாதவை ஆகிவிட்டன !

 

திரு.தயானந்தம் அவர்கள் என்னுள் ஏற்றி வைத்த ஒளிவிளக்கு, இன்னும் ஏதாவது செய்து நற்பெயர் ஈட்ட வேண்டும் என்னும் உந்துதலை எனக்குள் ஏற்படுத்தியது. சிந்தித்தேன்பண்டகத்தில் இன்னும் என்ன சீர்திருத்தங்களைச் செய்ய முடியும் ? என் முனைப்பான சிந்தனையில் விளைந்த  புதிய கருத்தேபகுப்பலகீடு” (Unitization) !

 

பண்டகத்தில் உள்ள பொருள்களில் பெரும்பாலானவை  இடையளவாக (Medium Quantity) இருப்பில் இருக்கும். அரியுருக்குப் போன்றவை மட்டுமே பேரளவாக (Large Quantity) இருப்பில் இருக்கும். இவற்றின் இருப்பை எளிதாகக் கணிக்கும் வகையில்  அலகிட்டு (Unitize)  வைப்பதே பகுப்பலகீடு (Unitization)!

 

ஒரு குறிப்பிட்ட மின்கம்பிச் சுருள் 56 எண்கள் இருப்பில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவற்றை, ஓர் ஒழுங்குமுறையின்றி போட்டு வைத்திருந்தால், தேவைப்படும்போதெல்லாம் அவற்றை எடுத்து  ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்துத் தான் 56 சுருள்கள் இருப்பதாக அறிய முடியும். ஆனால் அவற்றை,   பத்துப் பத்தாக அடுக்கி வைத்து, ஒவ்வொரு அடுக்கிற்கும் 1, 2, 3, என்று எண்கள் கொடுத்து எழுதி வைத்தால், ஒரே பார்வையில் 5 அடுக்குகளும், உதிரியாக 6 சுருள்களும் ஆகமொத்தம் 56 சுருள்கள் இருப்பது தெரிந்துவிடும் அல்லவா ? இந்த உத்திக்குப் பெயர்தான் பகுப்பலகீடு !

 -------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”வேதரெத்தினம்” வலைப்பூ.

[தி.: 2052, துலை (ஐப்பசி) 14]

{31-10-2021}

--------------------------------------------------------------------------------------