தேடுக !

நினைவுகள்.1967.09 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள்.1967.09 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 14 நவம்பர், 2021

மலரும் நினைவுகள் (09) முன்றிலும் பகுப்பலகும் ! இலக்கண விளக்கம் !

(1967 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்)

இலக்கணப் போலி என்று  தமிழ் இலக்கணத்தில்  ஒரு  குறிப்பு உண்டு. ”இல் + முன்என்பதற்கு   இல்லத்தின் முன்புறம் (முற்றம்)  என்று பொருள். இல் + முன் என்பது தலைமாறாக முன்றில் (முன் + இல் = முன்றில் (முற்றம்) ) என்று இலக்கியங்களில் பயின்று வரும். “மக்கள் போகிய அணிலாடு முன்றில்…” குறுந்தொகைச் செய்யுள் (43). இதுபோல் தமிழில் பல சொற்கள் உள்ளன !


பகுப்பலகு (Unitize)  என்பதும் இலக்கணப் போலி வகையைச் சார்ந்த ஒன்று. அலகிட்டுப் பகுத்தல் என்னும் பொருளில் அலகு + பகுப்பு என்பது தலைமாறாக இங்குபகுப்பு + அலகு = பகுப்பலகுஎன்று வந்துள்ளது.  பகுப்பு + அலகீடு = பகுப்பலகீடு = Unitization ! இச்சொல் எனது உருவாக்கம் !

 

தேக்குமர ஆளிப் பேழை (T.W.Swich Box)  100 x 100 மி.மீ பண்டகத்தில் 92 எண் இருப்பிலிருப்பதாக வைத்துக் கொள்வோம். அவற்றை எப்படி அடுக்கி வைக்கலாம் ? ஒன்றின் மேல் ஒன்றாக  ஒரு அடுக்கிற்கு 10 வீதம் 9 அடுக்குகளாக அடுக்கலாம். உதிரியாக உள்ள  2 எண்களை கடைசி அடுக்கிற்குப் பக்கத்தில் வைக்கலாம்.  ஒரு பார்வையிலேயே 9  x 10 = 90 + 2 = 92 என்பதைக் கண்டறியலாம் அல்லவா ?

 

மணல வெண்கலக் கம்பி 3 மி.மீ  (குறுக்களவு) (Silicon Bronze Filler Rod 3 mm dia) 35 கிலோ இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு கிலோ எடைக்கு எத்தனைக் கம்பிகள் இருக்கும் என்று எடை போட்டுப் பார்க்க வேண்டும். (16 கம்பிகள் இருக்கும் என்பது என் நினைவு)  16 கம்பிகள் என்பது உறுதியானால், மொத்த இருப்பான 35 கிலோவையும் 16 – 16 கம்பிகளாக எண்ணி அல்லது ஒவ்வொரு கிலோவாக எடைபோட்டு, ஒவ்வொரு கிலோவையும் தனித் தனியாக இறுகக்  கட்டி வைக்க வேண்டும் !

 

ஒவ்வொரு கிலோவாக பகுத்து அலகிட்டு (Unitize), கட்டிவைத்ததை,   அடுத்தாக  10 – 10 கொண்ட இன்னும் சில  பெரிய கட்டுகளாகக்  கட்டலாம். இந்த வகையில் 3 பெரிய கட்டுகளும் 5 சிறிய கட்டுகளும் இருக்கும். முதல் பார்வையிலேயே  3 x 10 = 30 + 5 = 35 கிலோ என்று எளிதாகக் கணக்கிட முடியும் !

 

அரியுருக்குப் பட்டைகளைப் பொறுத்த வரையில்  எனது பகுப்பலகீடு (Unitization) வேறுவிதமானது. அரியுருக்குப் பட்டை 50 x 12 மி.மீ அளவுள்ளவை 30 பட்டைகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.  (M.S.Flat 50 x 12 mm). சில பயிற்சியாளர்கள் உதவியுடன் ஒவ்வொரு பட்டையாக எடை போடுவேன். அதன் எடை 20 கிலோ இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தப் பட்டையிலேயே (01) 50 x 12 mm = 20 Kg  ( Gross 20 Kg) என்று  நீரில் நனைத்த சுண்ணக் காம்பினால்  எழுதி வைப்பேன். அடுத்தடுத்த பட்டைகளில் கீழ்க்காணும் வகையில் எழுதப்படும்.

 

(02).  50 x 12 mm = 20 kg (Gross 40 Kg)

(03).  50 x 12 mm = 20 Kg (Gross 60 Kg)

(04).  50 x 12 mm = 20 Kg (Gross 80 Kg)

(05).  50 x 12 mm = 20 Kg (Gross 100 Kg)

...............................................................

..............................................................

(30).  50 x 12 mm = 20 Kg. (gross 600 Kg)

 

இவ்வாறு எடைபோட்டு எழுதி முடித்தபின்  மாழை ஏந்தில் (Metal Rack) (01) என இலக்கமிடப்பட்ட முதலாவது பட்டை தொடங்கி ஒன்றன் மீது ஒன்றாக வரிசை மாறாமல் அடுக்குவேன். அடுக்கிவைத்த பட்டைகளின் உச்சியில் (At the Top of all Flats) 30-ஆவது பட்டை இருக்கும். அதில் குறிக்கப்பட்டுள்ள 600 கிலோ என்பது ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பட்டைகளின் மொத்த எடை 600 கிலோ என்பதைக் குறிக்கும் !

 

ஒவ்வொரு வழங்கலுக்குப் பின்பும் எஞ்சியுள்ள பட்டைகளின் மொத்த எடையைக்  கணிப்பதில் எந்த இன்னலும் இருக்காது. எடுத்துக் காட்டுக்காக இன்றைய பதிவில் மூன்று இனங்களைக் குறிப்பிட்டிருக்கிறேன். பண்டகத்திலுள்ள அனைத்து  இனங்களும் எவ்வாறு பகுப்பலகீடு (Unitizatiuon)  செய்யப்பெற்றன என்பதை விளக்குவதற்கு இங்கு இடம் போதாது !

 --------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”வேதரெத்தினம்” வலைப்பூ.

[தி.: 2052, துலை (ஐப்பசி) 16]

{02-11-2021}

--------------------------------------------------------------------------------------