தேடுக !

நினைவுகள்.1975.21 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள்.1975.21 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 நவம்பர், 2021

மலரும் நினைவுகள் (21) அமைச்சுப் பணியாளர் சங்கம் அமைப்பு - ஒரு வரலாற்று நிகழ்வு !

 (1975 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்) 

மலரும் நினைவுகள் பகுதி (19) –ல் குறிப்பிட்டமுயற்சி முன்னணி” 1975 –ஆம் ஆண்டில்  மீண்டும் தன் இரண்டாவது முயற்சியைத் தொடங்கியது. திருவாளர்கள் பி.எஸ்.ஜேசுதாஸ், பா.வே.சு. மணியன், சந்தான கிருஷ்ணன், ஜி.நல்லசிவம், இராமலிங்கம், வெங்கடசுப்பையா, சி.வீரராகவன்எஸ்.சங்கரன், வி.வேதாச்சலம், டி.வி.சீனிவாசன், வெங்கட்ரமணி, சோம.நடராசன், கி.மா.கோவிந்தராசன், ரெ.நடராசன், து,ஜெயராமன் போன்றோர் சங்கம் அமைப்பதில் மீண்டும் முனைப்புக் காட்டினர் !

 

முன்னதாக, அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் திரு.சிவ.இளங்கோ அவர்களைச் சந்தித்துப் பேசி  சில ஆலோசனைகளைப் பெற்றனர்.  தமிழ்நாடு தொழிற் பயிற்சி அமைச்சுப் பணியாளர் ஒன்றியம் (பயிற்சிப் பிரிவு)( TAMIL NADU INDUSTRIAL TRAINING MINISTERIAL STAFF UNION (TRAINING WING) என்று சங்கத்திற்குப் பெயர் சூட்ட முடிவு செய்து, சங்கத்திற்கான விதித் தொகுதியையும் இறுதி செய்தனர் !


இயக்ககம் மற்றும்  வடசென்னை, அம்பத்தூர், கிண்டி, தியாகராய நகர் திரு. மூல இராம வர்மா மகளிர்  தொழிற்பயிற்சி நிலைய அமைச்சுப் பணியாளர்களையும் இயன்றவரை வரவழைத்து, இயக்க்கத்துக்கு வெளியே ஒரு இடத்தில் 1975 –ஆம் ஆண்டின் பின்பகுதியில்  கூட்டத்தை ஏற்பாடு செய்து, குழுமியிருந்த அனைவரின் ஒருமனதான முடிவுக்கிணங்க முறைப்படிச்  சங்கத்தை அமைத்தனர் !

 

சங்கத்தின் தலைவராக திரு.வேதாச்சலமும், பொதுச் செயலாளராக திரு.டி.வி.சீனிவாசனும், பொருளாளராக திரு.அப்துல் சத்தாரும், இணைச் செயலாளராக திரு.நா.வெங்கட்ரமணியும், புறநகர்த் துணைத் தலைவராக சேலத்திலிருந்த திரு.செல்லையாவும்  ஒருமனதாகத் தேர்வு செய்யப்பெற்றனர். சென்னை நகரத் துணைத் தலைவராக திரு. சுந்தரராமன் தேர்வு செய்யப்பெற்றதாக நினைவு !  

 

தேர்வு செய்யப்பெற்ற  பொறுப்பளர்கள் பெயரை என் நினைவிலிருந்து மீட்டு இங்குப் பதிவு செய்திருக்கிறேன். 45 ஆண்டுகளுக்கு முந்திய நிகழ்வல்லவா ? ஒருசில பெயர்களில் பிழை  இருக்கவும் கூடும்; சரிபார்ப்பதற்கு எனக்கு எந்த ஆவணமும் கிடைக்கவில்லை ! திரு.மு.பால்ராஜ், திரு.நா.வெங்கட்ரமணி இருவரும் தந்த சில குறிப்புகளின் அடிப்படையில், என் நினைவுகளை துணையாகக் கொண்டு சங்கம் தொடர்பான சில செய்திகளை இங்குப் பதிவு செய்து வருகிறேன் !

 

தோற்றுவிக்கப்பெற்ற சங்கத்திற்கு  அரசு அலுவலர் ஒன்றியத்தின் இணைவு (Affiliation) பெறுவதற்கு முறையாகக் கடிதம் தந்துவிட்டு, இயக்ககத்தில் உயர் அலுவலர்களிடம் செய்தி தெரிவிப்பதற்காக முதன்மைப் பொறுப்பாளர்கள் சிலர் சென்றிருக்கின்றனர். அமைச்சுப் பணியாளர்களுக்குச்  சங்கம் அமைத்திட மிகவும் எதிர்ப்புக் காட்டி வந்த   திரு.பலராமன் அவர்கள் வழக்கம் போல் தன் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்ஆனால் அவர் அப்போது இணை இயக்குநர் (பழகுநர் சட்டம்) என்னும் பதவிக்கு மாற்றப்பட்டு, இருந்தமையால் அவரால் சங்கத்தை துறைத் தலைமை ஏற்பதைத் தடுக்க முடியவில்லை !

 

அயற்பணியில் வேறு துறையில் பணியாற்றி வந்த  திரு.உசேன் என்பவர் இணை இயக்குநர் (கைவினைஞர் பயிற்சித் திட்டம்) பதவியில் அமர்த்தப் பட்டுப் பொறுப்பேற்றது  அமைச்சுப் பணியாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக அமைந்தது. அவரது ஆதரவுடன், அப்போது இயக்குநராக இருந்த திரு.D.K.ஓசா அவர்கள் அமைச்சுப் பணியாளர் சங்க அமைப்புக்கு தன் ஆதரவைப் பதிவு செய்தார் !

 

1976 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருத்தணியில் நடைபெற்ற  தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியச் செயற்குழு / பொதுக்குழுவின் இசைவுடன் நமது சங்கம் அரசு அலுவலர் ஒன்றியத்தின் இணைவை (Affiliation)  பெற்று ஏற்பளிக்கப் பெற்ற சங்கம் என்னும் தகுதியைப் பெற்றது.  இணைவு  (Affiliation) அளிப்பதற்கு சில வட்டாரங்களில் கடுமையான எதிர்ப்பு எழுந்த போது,  மிக முனைப்பாக ஒரு வழக்குரைஞரைப் போல்  வாதாடி  அரசு அலுவலர் ஒன்றியச் செயற்குழு / பொதுக்குழுவில் இணைவுத் தீர்மானம் நிறைவேறச் செய்தவர்  திரு.T.V. சீனிவாசன் என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன் !

 

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”வை.வேதரெத்தினம்” வலைப்பூ !

[தி.: 2052, நளி (கார்த்திகை) 04]

{20-11-2021}

-------------------------------------------------------------------------------------