தேடுக !

நினைவுகள்.1978.22 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள்.1978.22 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 நவம்பர், 2021

மலரும் நினைவுகள் (22) அனைத்து நிலையங்களுக்கும் ஆட்சி அலுவலர் பதவி தேவை; எனது தீர்மானம் !

 (1978 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்) 

1975 - ஆம் ஆண்டு இறுதியில் சங்கமெனும் மாளிகைக்கு, கால்கோள் இடப்பெற்றது. தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களின்  அயராத உழைப்பால்,  அனைத்துத் தொழிற் பயிற்சி நிலையங்களிலும், பிற சார்பு அலுவலகங்களிலும் இந்த மாளிகை தன் நிழலைப் பரப்பத் தொடங்கியது. பல இன்னல்களுக்கு ஆட்பட்டுக் கிடந்த அமைச்சுப் பணியாளர்களின்  மனத்தில் அப்பொழுது தான் நம்பிக்கையொளி  சற்றுத் தலைகாட்டத்  தொடங்கியது !

 

தலைவர் திரு.வேதாச்சலமும், பொதுச் செயலாளர் திரு.டி.வி. சீனிவாசனும் பிற  பொறுப்பாளர்களும்  பல இன்னல்களுக்கிடையே சங்கப் பயிரைத்  தம் கண் போலக் காத்து, அமைச்சுப் பணியாளர்களின் நலனுக்கான  செயல்களில் முனைப்புக் காட்டி,  நல்ல விளைச்சலுக்கு அடித்தளம் இட்டனர் !

 

இதற்கிடையில் 1978 –ஆம் ஆண்டு (அதாவது 43 ஆண்டுகளுக்கு முன்பு)  மதுரை, திருப்பரங்குன்றத்தில் சங்கத்தின் செயற்குழு / பொதுக்குழு கூடியது. [நி/வா] திரு.சி.முத்துகிருஷ்ணன், திரு.சிவசிதம்பரம், திரு.மலைசாமி ஆகியோரின் ஏற்பாடுகளால், செயற்குழு / பொதுக்குழுக் கூட்டம் களைகட்டியது. சங்கவிதிகளில் பல முற்போக்கான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.  செயற்குழு / பொதுக்குழுக் கூட்டத்தில் நாகப்பட்டினத்தின் சார்பில் நானும் கணக்கராக இருந்த  திரு.சீதாராமனும் கலந்துகொண்டோம் !

 

செயற்குழுவில் இரண்டு தீர்மானங்களை நான் கொண்டுவந்தேன்  (01) ”சங்கத்தின் ஆட்சிப் பொறுப்பில் துணைத் தலைவர் (புறநகர்) என்னும் ஒரு பதவி மட்டுமே சென்னைக்கு வெளியே உள்ளது. பிற பதவிகள் அனைத்தும் சென்னை நகருக்குள் அமைந்திருக்கின்றன. இதனால் புறநகர் உறுப்பினர்களுக்குப் போதுமான படியாளர்கள் (Representatives) இல்லாத நிலை உள்ளது. ஆகையால் மண்டலத் துணைத் தலைவர்கள் பதவிகளை உருவாக்க இந்தச் செயற்குழு ஒருமனதாக முடிவு செய்கிறது !”

 

இந்தத் தீர்மானம் அனைத்து உறுப்பினர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்தத் தீர்மானத்தினால் திருச்சி, கோவை, மதுரை, நெல்லை ஆகிய 4 மண்டலத் துணைத் தலைவர்கள் சங்கத்தின்  ஆட்சிமன்றக்  குழுவில் இடம்பெறும் வாய்ப்பைப் பெற்றனர். மண்டலத் துணைத் தலைவர்கள் பதவிப் பொறுப்புக்கு கால்கோள் இட்ட பெருமைக்கு நான் சொந்தக்காரன் ஆனேன் !

 

நான் கொண்டு வந்த இரண்டாவது தீர்மானம் (02) ”தொழிற்பயிற்சி நிலையங்களில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தில் முழுக்கவனம் செலுத்தவேண்டிய நிலையில் முதல்வர்கள் இருப்பதால், ஆட்சிப் பணிகளில் (நிர்வாகப் பணி)  கவனம் செலுத்த அவர்களுக்கு நேரம் போதவில்லை. ஆகையால் அனைத்துத் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் ஆட்சி அலுவலர் பணியிடம்  உருவாக்கப்பட்டு ஆட்சிப் பொறுப்பை (நிர்வாகப் பொறுப்பை) அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் !”

 

இந்தத் தீர்மானம்  தேவையற்றது; அரசு இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாது; நிறைவேறவே முடியாத ஒரு கோரிக்கைக்காக ஒரு தீர்மானமா ?” என்றெல்லாம் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். சங்க ஆட்சிமன்றக் குழுவினர் (நிர்வாகிகள்) என் தீர்மானத்தை ஏற்கத் தயங்கினர்.  அவர்களுகெல்லாம்  நான் அழுத்தமாக விளக்கமளித்தேன் !

 

முதல்வர்களின் தொழில்நுட்ப அறிவு வீணாகக் கூடாது. அவர்களின் முழுக்கவனமும்  பயிற்சியின் மீது இருந்தால் தான் பயிற்சித் திட்டம் செழுமையுடையதாக இருக்கும். இளைஞர்களுக்குத் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பது தானே அரசின் நோக்கம். அப்படி இருக்கையில் அவர்களை ஆட்சிப் பணிகளில் (நிவாகப் பணிகளில்) நேரம் செலவிட வைப்பது  தவறு ! ஆகையால், முழுக்க முழுக்க ஆட்சிப் பணிகளை மட்டுமே கவனிக்கும் வகையில் அனைத்துத் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் ஆட்சி அலுவலர் பணியிடம் மிக மிகத் தேவை !”

 

உங்களுக்கெல்லாம் ஒன்று சொல்கிறேன்; அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் என்பார்கள்; நாம் அழாமலே இருந்தால், நமக்குப் பசிக்கவில்லை  என்று  தாய் (அரசு) தவறாகக் கருதி நமக்குப் பால் தராமலே விட்டுவிடுவாள். அழவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அழுவதற்கு ஏன் தயங்குகிறீர்கள். அனைத்துத் தொழிற் பயிற்சி நிலையங்களுக்கும் ஆட்சி அலுவலர் பதவிகள் தேவை என்று காரண காரியத்தோடு  இன்று கேட்போம்; இன்று  கேட்டால் தான் நாளையோ நாளை மறுநாளோ நமக்குக் கிடைக்கும். கேட்காமலேயே இருந்தால் எந்த அரசும்  தானாக முன்வந்து எதையும் தராது. பதவி உயர்வு வாய்ப்புக்காகப் பல்லாண்டுகளாகக் காத்திருக்கும்  அலுவலக மேலாளர் / கண்காணிப்பாளர்களைப் பாருங்கள் என்றேன் ! ”

 

என் விளக்கம்  செயற்குழு உறுப்பினர்களின் சிந்தனையைக் கிளறிவிட்டது. சங்க ஆட்சி மன்றக் குழுவினரும் (நிர்வாகிகள்) என் வாதத்தில் உள்ள உண்மையை இறுதியில் ஒப்புக்கொண்டனர்ஏறத்தாழ 15 நிமிட வாத, எதிர்வாதங்களுப்பிறகு என் தீர்மானத்தை செயற்குழு ஒருமனதாக ஏற்றுக் கொண்டது. பின்பு மேற்கண்ட இரண்டு தீர்மானங்களும் பொதுக்குழுவில் வைக்கப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன !

 

1978 –ஆம் ஆண்டு மதுரைச் செயற்குழு / பொதுக்குழுவில் ஊன்றப்பட்ட விதை,  முளைவிட்டுத் தலை நிமிர்வதற்கு, சங்கத் தலைவர்கள் அயராத தொடர் உழைப்பை நல்கிவந்த போதிலும் கூட 16 ஆண்டுகள் ஆகிப்போயின.  ஆம் ! அனைத்துத் தொழிற் பயிற்சி நிலையங்களுக்கும் ஆட்சி அலுவலர் பணியிடங்கள் ஆண்டுக்கு 8 பணியிடங்கள் வீதம் மூன்று ஆண்டு காலத்தில் கிடைத்திட  ஒப்பளிப்புச் செய்து  1994 –ஆம் ஆண்டு அரசு ஆணை வெளியிட்டது !

 

இந்த அரசாணை மூலம் நமது கோரிக்கையை வென்றெடுத்து வெற்றி வீரர்களாகத் திரும்பி வந்த  அப்போதைய சங்கப் பொறுப்பாளர்கள் திரு.சு.செல்லையா, திரு.மு.பால்ராஜ், திரு.இரெ.நடராசன் ஆகியோருக்கு அமைச்சுப் பணியாளர் சங்கம், என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறது ! அவர்கள் காட்டிய நல்வழியில் ஒட்டுமொத்த அமைச்சுப் பணியாளர்களும்  ஒற்றுமையாக ஓரணியில் திரண்டு   நடைபயில்வது தான் அவர்களை நினைவுகூர்ந்து  அவர்களுக்கு நன்றி  நவிலும்  செயலாக அமையும் !

 

சங்கத்தின் அன்றைய, இன்றைய  உறுப்பினர்களின்  தூவலில் (பேனா) பச்சை மையை நிரப்பிக் கையெழுத்திட வைத்த  சரித்திர நாயகன் திரு செல்லையா, அந்தப் பச்சை  மைகொண்டு கையெழுத்து இடும் வாய்ப்பைப் பெறாமலேயே , கண்காணிப்பாளர் பதவியிலிருந்தபடியே  24-12-1994 அன்று நம்மை விட்டு மறைந்து போனார் !

 

அனைத்துத் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் ஆட்சி அலுவலர் பணியிடங்கள் ஒப்பளிக்கப்பட்டு  இப்போது செயல்பட்டு வருவதற்கான  மூல விதையை  43 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை செயற்குழு / பொதுக்குழுவில் ஊன்றிய சங்கத் தொண்டர் என்னும் வகையில்  உங்களுடன் என் துய்ப்புகளை (அனுபவங்களை) அன்றாடம்  பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் !

 

--------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[தி.: 2052, நளி (கார்த்திகை) 05]

{21-11-2021}

--------------------------------------------------------------------------------------