தேடுக !

நினைவுகள்.1982.26 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள்.1982.26 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 29 நவம்பர், 2021

மலரும் நினைவுகள் (26) ஊதிய நிரக்கும் - பண்டகக் காப்பாளர் பாதிக்கப்பட்ட வரலாறும் !

(1982 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்) 

இரண்டாவது ஊதிய ஆணைக்குழுவின் பரிந்துரைகள்  02-10-1970  முதல் நடைமுறைப்படுத்தப்பட்டன. அதில், வேலை வாய்ப்பு பயிற்சித் துறையின் பயிற்சிப் பிரிவில் பணியாற்றும் உதவியாளர், கணக்கர், உதவியாளர் (பண்டகக் காப்பாளர்) மூன்று  வகையினரும் பெற்று வந்த ஊதிய நிரக்கான (Pay Scale) உருபா 127-5-175 என்பது உருபா 250-10-400 என மாற்றியமைக்கப்பட்டிருந்தது ! புதிய ஊதிய நிரக்கு மூன்று வகையினருக்கும் 02-10-1970 முதல் அனுமதிக்கப்பட்டது !

 

பின்பு அமைக்கப்பட்ட ஒற்றையாள் ஆணைக்குழு (One Man Commission) உதவியாளர், கணக்கர், உதவியாளர் (பண்டகக் காப்பாளர்மூவகையினருக்கும்   உருபா. 250-10-300-15-450 என்னும் ஊதிய நிரக்கைப் பரித்துரைத்தது. இதை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டிருந்ததுஆனால் அரசாணையில்  உதவியாளர் (பண்டகக் காப்பாளர்) என்னும் வகை விடுபட்டுப் போயிற்று.  {உதவியாளர் (பண்டகக் காப்பாளர்) என்னும் பெயர் பின்பு பண்டகக் காப்பாளர் என மாற்றம் செய்யப்பட்டது என்பதை நினைவிற் கொள்க !}

 

உதவியாளர், கணக்கர் இரு வகையினரும் உருபா 300 என்னும் ஊதிய நிலைக்குப் பின்பு  ஆண்டு ஊதிய  உயர்வாக உருபா 15 பெற்றனர். ஆனால் அரசாணையில் பெயர் விடுபடல் காரணமாக பண்டகக் காப்பாளர்கள் மட்டும்  உருபா 300 என்னும் ஊதிய நிலைக்குப் பின்பும் ஆண்டு ஊதிய உயர்வாக உருபா 10 மட்டுமே பெற்று வந்தனர். இந்த முரண்பாட்டின் திரள் பயன் விளைவாக  உருபா 300 வரை சமநிலையில் இருந்து வந்த மூவகையினரில், பண்டகக் காப்பாளர் மட்டும்  உருபா 300 –என்னும் நிலைக்கு மேல் மற்ற இருவகையினரை விடக் குறைந்த ஊதியம் பெறும் நிலை உருவானது !

 

ஊதியம் மற்றும் முன்மை நிலையை (Seniority)  பொறுத்தவரை என்னுடன் சமநிலையில் இருந்து வந்த  உதவியாளர் / கணக்கர்  சிலர் ஆறு  ஊதிய உயர்வுகளுக்குப் பின் (After six annual Increments)  என்னைவிட உருபா 30  கூடுதலாகப் பெறும் நிலை உருவானது. இதன் விளைவாக மூன்றாவது ஊதிய ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி  1-7-1978 முதல் நடைமுறைப்படுத்தப் பெற்ற உருபா 400-15-490-20-650-25-700 என்னும் ஊதிய நிரக்கில் என் அடிப்படை ஊதியம் மிகக்  குறைவாக வரையறை செய்யப்பட்டது !

 

நான் மட்டுமல்ல, எல்லாப் பண்டகக் காப்பாளர்களும் இதனால் பாதிக்கப்பட்டோம். இந்த முரண்பாட்டைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி  பண்டகக் காப்பார்கள் அனைவரும்  இயக்குநருக்கு விண்ணப்பித்தோம். இயக்ககத்தில் எங்கள் கோரிக்கைக்கு உரிய முதன்மை இடம் தரப்படாமல் பத்தோடு பதினொன்றாக  கோப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது !

 

ஐந்தாண்டுகளுக்கும் மேலாக எங்கள் கோரிக்கை மீது தீர்வு காணப்படவில்லை. எங்கள் நடவடிக்கையை இன்னும் கூர்மைப்படுத்த வேண்டி, அனைத்துப் பண்டகக் காப்பாளர்களுக்கும் கடிதம் எழுதி, ஒரு குறிப்பிட்ட நாளில் திருச்சிக்கு வரச் சொல்லியிருந்தேன். திருவாளர்கள் S.C.முருகேசன் (கோவை), S.நவராஜ் மதுரம் (திண்டுக்கல்), S.ரெங்கசாமி (தஞ்சை), சுப்ரமணிய பிள்ளை (உளுந்தூர்ப்பேட்டை) S.குருசாமி (தேனி) திரு.கனகராஜ் (விருதுநகர்) இன்னும் சிலபேர் ஆக மொத்தம் எட்டுப் பேர் திருச்சியில் கூடி ஆலோசித்தோம் !

 

ஒவ்வொருவரும்  வெவ்வேறு  கோணங்களில் நடவடிக்கை எடுப்பது என்று முடிவு செய்தோம். அத்துடன் ஒவ்வொருவரும் அரசுக்கு விண்ணப்பமும் அனுப்புவது என்று முடிவு செய்தோம்; அவ்வாறே அனுப்பினோம்.  மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி  உறுப்பினர் திரு.மு.அம்பிகாபதி அவர்கள் மூலம் சட்டமன்றத்தில் எங்கள் பிரச்சனையைப் பேச வைத்தேன். அவர் பேச்சு அரசின் கவனத்தை ஈர்த்தது !

 

பிற நண்பர்களும் வெவ்வேறு வகைகளில் முயன்றார்கள். இதற்கிடையே, தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை, நிதிவிதிக்கோவை ( T.N.Financial Code Vol 2) தொகுதி 2-க்கு வெளியிட்ட திருத்த அரசாணையில், பண்டகக் காப்பாளர்களின் ஊதிய நிரக்கு  உருபா 250-10-300-15-450 என விதிக்கோவையில் மாற்றம் செய்யப்படுவதாக  அறிவித்திருந்தது !

 

இதைக் குறிப்பிட்டு இயக்குநருக்கு அனைவரும் விண்ணப்பித்தோம். நிதித் துறையால் வெளியிடப்படும் ஆணைகள் மட்டுமே செல்லுபடியாகும் என்று குறிப்பிட்டு, இயக்ககக் கணக்கு அலுவலர் எங்கள் கோரிக்கையைத் தள்ளுபடி செய்துவிட்டார் !

 

எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இயக்குநர்  அலுவலகம் முன்பு உண்ணாநோன்பு இருக்கப்போவதாக நான் அறிவித்தேன். அப்போது நான் திருச்சி மண்டலத் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தேன். பிரச்சனை வேறு வடிவம் எடுப்பதை உணர்ந்த சங்க நிர்வாகிகள் என்னை சமாதானப்படுத்தி, தாங்கள் பிரச்சனையைக் கையில் எடுத்துக் கொள்வதாகவும், நான் அமைதி காக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர் ! பிரச்சனையைச் சங்கம் முனைப்பாக முன்னெடுத்துச் சென்றது !

 

1982 –ஆம் ஆண்டு நடைபெற்ற சங்கப் பொறுப்பாளர்கள் தேர்தலில் திரு.செல்லையா தலைவராகவும், திரு.பால்ராஜ் பொதுச் செயலாளராகவும்,  திரு.இரெ.நடராசன் பொருளாளராகவும்  தேர்வு செய்யப்பட்டனர். அந்த நேரத்தில் திரு.இலட்சுமிகாந்தன் பாரதி இ... இயக்குநராகப் பொறுப்பேற்றிருந்தார் !

 

சங்கப் பொறுப்பாளர்கள் திரு.செல்லையா தலைமையில் இயக்குநரிடம் சென்று  பண்டகக் காப்பாளர் பிரச்சனையை   அவரிடம் விரிவாக எடுத்துரைத்தனர். நிதிவிதிக்கோவை விதிகளில்   திருத்தம் செய்து அரசு வெளியிட்ட  ஆணையையும் காண்பித்தனர் !

 

எல்லாவற்றையும் அலசி ஆய்வு செய்த இயக்குநர், அரசாணை நிதித் துறையால் வெளியிடப்பட்டால் என்ன, பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத் துறையால்  வெளியிடப்பட்டால் என்ன, அஃது அரசு வெளியிட்ட ஆணை தானே ! பண்டகக் காப்பாளர்களுக்கு  2-10 1970 முதல் உருபா 250-10-300-15-450 என்னும் ஊதிய நிரக்கை அனுமதித்து அவர்களின் ஊதியத்தை ஒழுங்குபடுத்துங்கள் என்று உத்தரவிட்டார் !

 

10 ஆண்டுகளாக நீடித்து வந்த எங்கள் பிரச்சனை இயக்குநரின் ஒரே உத்தரவால் தீர்த்து வைக்கப்பட்டது. இதே இலட்சுமிகாந்தன் பாரதி தான் அ.தி.மு..ஆட்சியில் பணிநீக்கம் செய்யப்பெற்ற 5000-க்கும் மேற்பட்ட முன்னாள் கிராம அதிகாரிகளுக்கு ஓய்வூதியம் கிடைக்கக் காரணமாக இருந்தவர்.  இப்படிப்பட்ட அன்புள்ளம் படைத்த அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கின்றனர் !

------------------------------------------------------------------------------------                

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[தி.: 2052, நளி (கார்த்திகை) 13]

{29-11-2021}

------------------------------------------------------------------------------------