தேடுக !

நினைவுகள்.1982.29 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள்.1982.29 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 டிசம்பர், 2021

மலரும் நினைவுகள் (29) அமைச்சுப் பணியாளர்களுக்கு N.C.T.V.T. பணியமைப்பு ஒப்பளிப்பு !

(1982 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்)

சேலத்தில் ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் (15-07-1981 – 02-05-1984) பண்டகக் காப்பாளராகப் பணியாற்றினேன்.  இந்தக் காலக்கட்டத்தில் தான் அமைச்சுப் பணியாளர்களுக்கு N.C.T.V.T. பணியமைப்பு வரையறை செய்திருந்த அளவுகோலின்படி பணியிடங்களை ஒப்பளிக்கக் கோரி   திரு.செல்லையா தலைமையிலான தமிழ்நாடு தொழிற்பயிற்சி அமைச்சுப் பணியாளர் சங்கம் மிக முனைப்பாக  நடவடிக்கை எடுத்து வந்தது


தேவையான கருத்துரு திரு.வேதாச்சலம் தலைவராக இருந்த காலத்திலேயே இயக்ககத்திலிருந்து அரசுக்கு முன்பே அனுப்பப்பட்டு நிலுவையில் இருந்து வந்தது  !

 

திரு.செல்லையா (தலைவர்), திரு.பால்ராஜ் (பொதுச் செயலாளர்), திரு.இரெ.நடராசன் (பொருளாளர்)  ஆகியோர், எழிலகம் அருகில் இருந்த இயக்ககத்துக்கும் தலைமைச் செயலகத்துக்குமாக நாள்தோறும்  ஒருவர் மாற்றி ஒருவராகப் படையெடுக்கத் தொடங்கினர். தலைமைச் செயலகத்திலேயே  படுத்துத் தூங்காத குறையாக அவர்களது உழைப்பு இருந்தது. சென்னைக்கு வெளியே பணிபுரிந்து வந்த என்னைப் போன்றோர், தொலைபேசி வழியாக அவர்களுடன் பேசி ஊக்கமூட்டி வந்தோம் !

 

அமைச்சுப் பணியாளர்களின் நல்வாய்ப்போ என்னவோ, திரு.செல்லையா, திரு.பால்ராஜ்  இருவருக்கும்  பள்ளி / கல்லூரி அளவில் அறிமுகமான / ஒன்றாகப் படித்த சில நண்பர்கள் தலைமைச் செயலகத்தில் வேலைவாய்ப்புப் பணிகள் துறையில் பணியாற்றி வந்தனர். அவர்களது நட்பு  திரு.செல்லையா, திரு.பால்ராஜ் இருவருக்கும் பேருதவியாக அமைந்தது !

 

சங்கத்தினரின்  கடுமையான உழைப்பும், தலைமைச் செயலகத்தில் அவர்களுக்குக்  கிடைத்த நட்புமாகச் சேர்ந்து, 1982 –ஆம் ஆண்டின் முற்பகுதியில்  N.C.T.V.T. பணியமைப்பு வரையறை செய்திருந்த அளவுகோலின்படி அமைச்சுப் பணியாளர்களுக்குக் கூடுதல் பணியிடங்கள் ஒப்பளிக்கப்படுவதாக அரசு ஆணை வழங்கியது. இந்த ஆணையில் அலுவலக மேலாளர்  பணியிடங்கள்  21 – ஒப்பளிக்கப்பட்டிருந்தன. அத்துடன்  உதவியாளர், இளநிலை உதவியாளர் (நூலகம்) பணியிடங்களும் ஒப்பளிக்கப்பட்டன. அவற்றின் எண்ணிக்கை விவரம் நினைவில்லை. !

 

ஒப்பளிக்கப்பட்ட  அலுவலக மேலாளர் பணியிடங்கள்  21 – ல், 7 பணியிடங்கள் உடனடியாக ஒப்பளிக்கப் படுவதாகவும் எஞ்சிய 14 இடங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒப்பளிக்கப்படும் என்றும்  அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் படி முதற் கட்டமாக ஒப்பளிக்கப்பட்ட 7  அலுவலக மேலாளர் பணியிடங்களில் ஒன்று நாகப்பட்டினத்துக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக  எனக்கு நினைவு !

 

அப்போது நான் சேலத்தில் பணிபுரிந்து வந்தேன்.  N.C.T.V.T. பணியமைப்பு அளவுகோலின் படி புதிய பணியிடங்களை ஒப்பளித்து வெளியான அரசாணை பற்றிய   செய்தியைத் தொலை பேசி வாயிலாகக்  கேட்டவுடன் (யாரும் கேட்காமலேயே) தொலைவரிப் பணவிடை (Telegraphic Money Order) மூலமாக உருபா (1000/= ) ஆயிரத்தைச் சங்கத்திற்கு அனுப்பி வைத்தேன். பணியிடங்கள் ஒப்பளிக்கப் பெற்றதையும், நான் நன்கொடை அனுப்பியதையும் அறிக்கை வாயிலாகத் தலைமைச் சங்கத்தினர் மறுநாளே அனைத்துக்  கிளைகளுக்கும்  தெரிவித்திருந்தனர் !

 

சங்கத்தின் சாதனையை அறிந்து நிறைய நண்பர்கள் சங்கத்திற்கு நன்கொடைகளை அனுப்பத் தொடங்கினர். போக்குவரத்துச் செலவுகளுக்குக் கூடப் பணமில்லாமல் இன்னற்பட்டு வந்த  சங்கப் பொறுப்பாளர்களுக்கு, நண்பர்கள் அனுப்பிவந்த நன்கொடை கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த  குளிர் தருவாய் அமைந்திருந்தது !

 

இரண்டாம் கட்டமாக அரசாணை (நிலை) எண்:116, வேலைவாய்ப்புப் பணிகள் துறை, நாள் 29-12-1983  -ன் படி அரசினால் ஒப்பளிக்கப் பட்டிருந்த  ஏழு அலுவலக மேலாளர் பணியிடங்களில்  ஒன்று தாராபுரத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது.  இந்தப் பணியிடத்திற்கு சேலத்தில் தேர்வு நிலைப் பண்டகக் காப்பாளராகப் பணியாற்றி வந்த நான் பதவி உயர்வில் நியமிக்கப்பட்டிருந்தேன். இதற்கான உத்தரவு 09-01-1984 அன்று  எனக்குக் கிடைத்திருந்தாலும், சேலத்திலிருந்து 02-05 1984 அன்று தான்  விடுவிக்கப்பட்டு 11-05-1984 அன்று மு.. தாராபுரத்திற்குச் சென்று பணியில் சேர்ந்தேன் ! காலத் தாழ்வாகத் தாராபுரம் சென்று பணியில் சேர்ந்தமைக்கான காரணம் இப்போது எனக்கு  நினைவில் இல்லை !

 

தாராபுரத்தில் அலுவலக மேலாளராக நான் பணியேற்கையில்  இன்னொரு மேலாளராக இருந்தவர் யார் என்பது நினைவில்லை. அவர் நீண்ட விடுப்பில் இருந்ததாக நினைவு. அலுவலகத்தில் திரு..சுப்ரமணியன் கணக்கராகவும், திரு.சீதாராமன் உதவியாளராகவும்  பணியில்  இருந்தனர்.  திரு.ஈசுவரன் இளநிலை உதவியாளர் என்று நினைவு. பிற அலுவலர்கள் பற்றிய செய்திகள் இப்போது நினைவில் இல்லை !

 

-----------------------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[தி.: 2052, நளி (கார்த்திகை) 17]

{03-12-2021}

----------------------------------------------------------------------------------------------