தேடுக !

நினைவுகள்.1992.39 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள்.1992.39 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 டிசம்பர், 2021

மலரும் நினைவுகள் (39) வழக்குரைஞருக்கு நான் தந்த வழிகாட்டுக் குறிப்புகள் !

(1992 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்) 

குறிப்பிட்ட நாளில் நேர்காணல் தொடங்குவதற்கு முன் துணை இயக்குநர் / முதல்வர் திரு.தா.அரங்கநாதன் அவர்களிடம் நான் ஒரு கருத்தைத் தெரிவித்தேன். திரு.சண்முகத்திடமிருந்து குறுக்கீடு வர வாய்ப்புள்ளதால் நீங்கள் தொலைப்பேசியின் ஒலிவாங்கியை (RECEIVER) எடுத்துக் கீழே வைத்துவிடுங்கள் அல்லது அவர் என்ன சொன்னாலும் அதைக் கேட்டுக்கொண்டு அதன்படியே செய்துவிடுகிறேன் என்று சொல்லிவிடுங்கள் !

 

பதவி ஓய்வு பெறும் நாளில் உங்களுக்கு மனத் துன்பம் ஏற்படாமலிருக்க இது உதவும். அவரிடம் நீங்கள் என்ன சொல்லியிருந்தாலும், அதை நிறைவேற்ற வேண்டியதில்லை; உங்கள் மனசாட்சிப்படிச் செயல்படுங்கள். உங்கள் முடிவைப்பற்றி நாளை யாரும் உங்களைக் கேட்கமுடியாது என்றேன். அவர் சற்று சிந்தித்து, இரண்டாவது கருத்தின்படிச் செயல்படலாம் என்று நினைக்கிறேன் என்றார் !

 

நேர்காணல் முற்பகல் 10-00 மணிக்குத் தொடங்கி சீராக நடைபெற்று மாலை 3-00 மணி வாக்கில் நிறைவு பெற்றது. நேர்காணலில் கலந்துகொண்ட அத்தனை பேருக்கும் தகுதி, முன்அனுபவம், கேள்விக்கு விடையளிக்கும் திறன் போன்ற சில தலைப்புகளில் மதிப்பெண் தந்து, இறுதியில் மூவரைத் தேர்வு செய்து, தனது முடிவுக்கான காரணத்தை அதில் பதிவு செய்தார். அவர் பதிவு செய்திருந்த காரணத்தை வேறு யாரும் குறை சொல்ல முடியாதபடி அழுத்தமாகக் குறிப்பிட்டிருந்தார் !

 

இறுதியில் தேர்வு செய்திருந்த மூவரின் பெயர்களையும் குறிப்பிட்டு. அவர்களுக்கு பணியமர்வு ஆணையைப் பதிவஞ்சலில் அனுப்பி வைக்கவும் பணித்திருந்தார். தன் பணியை தனது மனசாட்சிப்படி நேர்மையாகச் செய்து முடித்த மனநிறைவில் அமர்ந்திருந்த போது, இயக்குநரிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது. குறிப்பிட்ட மூன்று ஆளிநர்களின் பெயரைக் குறிப்பிட்டு, (அதில் ஒருவர் பெயர் மோகன் என்பதாக எனக்கு நினைவு; பிற பெயர்கள் நினைவில்லை) அவர்கள் மூவரையும் தேர்வு செய்யுமாறும். பணியமர்வு ஆணையின் படியை  (COPY) தனக்கு அனுப்புமாறும்  முதல்வரை திரு.சண்முகம்  பணித்தார் !

 

அப்படியே செய்கிறேன் என்று சொல்லிவிட்டு, முதல்வர் இணைப்பைத் துண்டித்துவிட்டு, என்னை அழைத்து விவரம் கூறினார். துணை இயக்குநர் / முதல்வராகக் கூடுதல் பொறுப்பு ஏற்கும் திரு..இரத்தினம் அவர்களிடம் இப்போது செய்தியையும் சொல்லவேண்டாம், கோப்பினையும் அவரிடம் தரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். கோப்பு தங்களிடமே இருக்கட்டும், நாளை வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினேன். அதுவும் சரிதான் என்று ஒப்புக்கொண்டார்!

 

மறுநாள்  காலை  10-00 மணியளவில் அலுவலகத்திற்கு வந்து  கோப்பினை எடுத்து என்னிடம் கொடுத்து, பணியமர்வு ஆணையில் திரு.இரத்தினம் அவர்களின் கையொப்பத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறிவிட்டு வீட்டிற்குச் சென்று விட்டார் ! பணியமைப்புப் பிரிவு உதவியாளரிடம் கோப்பினைத் தந்து, மூவருக்கும் பணியமர்வு ஆணைகளைத் தயாரித்து, முதல்வர் (பொறுப்பு) திரு.இரத்தினம் அவர்களின் ஒப்பத்திற்கு அனுப்பச் சொன்னேன். அவர் எல்லாவற்றையும் படித்துப் பார்த்துவிட்டுப் பணியமர்வு ஆணையில் ஒப்பமிட்டார் !

 

அந்த நேரத்தில் திரு.சண்முகத்திடமிருந்து மீண்டும் துழனியழைப்பு (PHONE CALL) வந்தது.  அதை எடுத்துப் பேசிய திரு.இரத்தினம் ஆடிப்போய்விட்டார். இயக்குநரிடம், நீங்கள் தெரிவித்த மூன்று பேர் தேர்வு செய்யப்படவில்லை, வேறு மூவர் தான் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர், தேர்வுக்கான காரணத்தையும் திரு.அரங்கநாதன் அவர்கள் பதிவு செய்திருக்கிறார் என்று தயங்கித் தயங்கிக் கூறிவிட்டார் !

 

நெருப்பை அள்ளிக் கொட்டியதைப் போன்ற கொதிப்பான உரையாடலில் பத்து நிமிடம் போல் திரு.சண்முகம் ஈடுபட்டதுடன், தேர்வு செய்யப்பட்ட ஆளிநர்க்கு ஆணைகளை அனுப்ப வேண்டாம் என்றும்  நேர்காணல் மதிப்பீட்டுத் தாளை (INTERVIEW ASSESSEMENT SHEET) படியெடுத்து எனக்கு நிகரி (FAX) வழியாக அனுப்புங்கள் என்றும் திரு.இரத்தினம் அவர்களைப் பணித்தார். செய்தியை அவர் என்னிடம் தெரிவித்த போது பணியமர்வு ஆணையை அனுப்பாமல் காலத் தாழ்வு செய்தால், பிற்காலத்தில்  நீங்கள் அதற்குப் பொறுப்பு ஏற்க  வேண்டி வருமே  என்று தெரிவித்தேன் ! 

 

அவர் சேலம் நகருக்குச் சென்று நேர்காணல் மதிப்பீட்டுத் தாளை நிகரியில் (FAX) இயக்குநருக்கு அனுப்பிவிட்டு, அங்கிருந்தே அவரிடம் பேசி, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆணை அனுப்பாமல் நிறுத்தி வைக்குமாறு ஒரு செய்தி அனுப்பி வைக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார். அனுப்புகிறேன் என்று சொல்லியிருக்கிறார் !

 

மறுநாள் இயக்குநரின் உத்தரவு ஒன்று அஞ்சல் வழியாக சேலத்துக்கு வந்தது. பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தருமாறு இயக்ககத்தில் வேலைவாய்ப்புப் பிரிவிலிருந்து (EMPLOYMENT WING) நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் படியொன்றை இணைத்து, அதனை நிறைவேற்றும் வகையில் புதிதாக நேர்காணல் நடத்தி மூவரைத் தேர்வு செய்யவேண்டும் என்று முதல்வர் (பொ) பணிக்கப்பட்டிருந்தார் !

 

முதல்வர் (பொ) பணியமைப்புப் பிரிவு உதவியாளரை அழைத்து, இயக்குநரின் உத்தரவைக் காட்டி, மார்ச் 31 அன்று நேர்காணலுக்கு வந்திருந்த அனைவருக்கும், மீண்டும் ஒரு கடிதம் அனுப்பச் சொன்னார். அக்கடிதத்தில், முன்பு நடந்த நேர்காணல் நீக்கம் (CANCEL) செய்யப்படுவதாகவும் மீண்டும் ஒரு நேர்காணலுக்கு, ஒரு குறிப்பிட்ட நாளில் வருமாறும் தெரிவித்து இன்னொரு கடிதம் அனுப்பச் சொன்னார். !

 

பணியமைப்புப் பிரிவு உதவியாளர் என்னிடம் வந்து செய்தியைச் சொன்னார். பணி விதிகளின்படி (AS PER SERVICE RULES)  பணிமனை உதவியாளரைத் தேர்வு செய்யும் உரிமை முதலவருக்கு மட்டுமே உள்ளது; இதில் இயக்குநர் தலையிட உரிமையில்லை; இருந்தாலும் அவரை எதிர்த்து நாம் போராட முடியாது; முதல்வர் கூறியபடியே செய்யுங்கள் என்று கூறினேன். அதற்கு முன்பு கோப்பின் குறிப்புத் தாளில் பொருத்தமாகக் குறிப்பு எழுதி  முதல்வரிடம் ஆணை பெறுங்கள் என்றும் கூறினேன் !

 

குறிப்புக் கோப்பில் தக்கபடிக் குறிப்பு எழுதி முதல்வரிடம் ஆணை பெறப்பட்டது.  பின்பு, நேர்காணலுக்குப் புதிய கடிதம் அனுப்பப்பட்டது ! நேர்காணல் கடிதத்தில், பார்வை (REFERENCE)  பகுதியில் குறிப்பிட்டுள்ள இயக்குநரின் ஆணைப்படி, 31-03-1992 அன்று நடைபெற்ற நேர்காணல் நீக்கம் செய்யப்படுவதாகவும், அதற்கு மாற்றாக மீண்டும் நேர்காணல் ஏப்ரல்...........அன்று நடைபெறுவதாவும் குறிப்பிடப்பட்டது ! (நாள் நினைவில்லை; ஆனால் ஏப்ரல் 20 வாக்கில்  என்பதாக ஞாபகம்)   

 

இந்தக் கடிதம்,  முன்னதாக நேர்காணலுக்கு வந்தவர்களிடையே புயலைக் கிளப்பிவிட்டது. திரு.முகமது கனி யூசூப் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது அனைத்தும் தெரிந்துவிட்டது. என் வீட்டிற்கு வந்து, தக்க வழிகாட்டி உதவி செய்யுமாறு  கேட்டுக்கொண்டார் !

 

திரு.சிராஜ் முகமதுவுடன் தேர்வு செய்யப்பெற்றிருந்த திரு.ஜவஹர், திரு.அங்குசாமி இருவரது முகவரியையும் கொடுத்து அவர்களை அணுகி, மூவருமாக இணைந்து ஆட்சிமுறைத் தீர்ப்பாயத்தினை (ADMINISTRATIVE TRIBUNAL) அணுகுங்கள் என்று கூறினேன். அப்போது அரசு அலுவலர் தொடர்பான வழக்கு எதுவாயினும் தீர்ப்பாயத்தைத் தான் அணுகவேண்டும். உயர்நீதிமன்றத்தை அணுகமுடியாது. தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் முறையீடு செய்ய வேண்டும்அப்போதும் உயர் நீதிமன்றத்தை அணுக முடியாது !

 

பணிமனை உதவியாளர் தொடர்பான பணிவிதிகளின் (SERVICE RULES) படியொன்றை (COPY)  திரு.கனி யூசூப் என்னிடமிருந்து கேட்டுப் பெற்றுக்கொண்டார். வழக்குரைஞரிடம் தருவதற்கு வழிகாட்டிக் குறிப்பு ஒன்றை எழுதித் தருமாறும் கேட்டார். நடந்திருப்பது ஞாயத்திற்குப் புறம்பான செயல். பணியிடங்களைப் பணத்திற்கு விற்பனை செய்யும் திரு.சண்முகத்தின் தவறான செயலுக்கு நான் துணை போக விரும்பவில்லை. அஃதன்றியும், திரு.கனி யூசூப் அண்மைக்காலம் வரை அமைச்சுப் பணியாளர்களின் குலத்தைச் சேர்ந்தவராக இருந்தவர். அவருடைய மகனுக்கு ஒரு வேலை கிடைக்குமென்றால் அதற்காக நான் உதவி செய்வது என் கடமை என்று கருதினேன் !

 

வழக்குரைஞருக்குத் தருவதற்கான குறிப்பினை எழுதித் தந்தேன். அதில் நான் குறிப்பிட்டிருந்த செய்தி:- பணிமனை உதவியாளரை நேர்காணல் மூலம்  தேர்வு செய்து  பணியமர்த்தும் உரிமை பணி விதிகளின்படி (AS PER SERVICE RULES)  முதல்வருக்கு மட்டுமே  தரப்பட்டுள்ளது.  அதைச் சரியாகப் பின்பற்றி முதல்வர் நேர்காணலை நடத்தியுள்ளார் !

 

நடந்து முடிந்த  நேர்காணலை நீக்கம் செய்வதற்கோ, புதிய நேர்காணலை நடத்துமாறு உத்தரவிடுவதற்கோ  இயக்குநருக்கு பணி விதிகளின்படி (AS PER SERVICE RULES)  உரிமை தரப்பவில்லை. இரண்டாவது நேர்காணல் அழைப்புக் கடிதத்தில் பார்வைப் பகுதியில் இயக்குநரின் கடித எண்ணும் நாளும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தின் நாளைப் (தேதி)  பார்க்கையில் முதலாவது நேர்காணலை நீக்கம் செய்தல் தொடர்பாக இயக்குநரின் தலையீடு இருப்பது உறுதியாகத் தெரிகிறது.  இந்த நேர்வில் இயக்குநரின் தலையீடு முற்றிலும் தேவையற்றது (COMPLETELY UNWARRANTED) மட்டுமல்லாது உள்நோக்கம் உடையதாகவும் (ULTERIOR MOTIVE) தோன்றுகிறது !

 

எனவே, இயக்குநரின்  உத்தரவுப்படி, ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மறு நேர்காணலுக்கு (SECOND INTERVIEW)  தடை விதிக்கவேண்டும்; அத்துடன் முதலாவது நேர்காணலின்படித் தேர்வு செய்யப்பெற்றவர்கள் பட்டியலில் என் பெயரும் இருப்பதாக உறுதியாக நான் நம்புவதால்,   என்னைப் பணியமர்த்த உத்தரவிட வேண்டும் !

 

இது தான் நான் எழுதித் தந்த குறிப்பு. திரு.சிராஜ் முகமது, திரு.ஜவஹர், திரு.அங்குசாமி மூவரின் சார்பிலும் ஒரே வழக்குரைஞர் ஆட்சிமுறைத் தீர்ப்பாயத்தினை அணுகி வாதிட்டு, இரண்டாவது நேர்காணலுக்கான  தடை உத்தரவை, அந்த நேர்காணல் நடைபெறவிருந்த நாளுக்கு முந்திய நாள்  பெற்றுத் தந்தார் ! இந்தச் செய்தி திரு.இரத்தினம் அவர்கள் மூலம் இயக்குநருக்குச் சென்றது !

 

அவ்வளவு தான் ! திரு சண்முகம் கொதித்துப் போய்விட்டார். மே மாதம் 2-ஆம் நாள் சேலத்தில் வந்து இறங்கினார் !


-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”வேதரெத்தினம்” வலைப்பூ,

[தி.: 2052, சிலை (மார்கழி) 01]

{16-12-2021}

--------------------------------------------------------------------------------------