தேடுக !

நினைவுகள்.1996.51 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள்.1996.51 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 பிப்ரவரி, 2022

மலரும் நினைவுகள் (51) ஆட்சி அலுவலராகப் பதவி உயர்வு பெற்றேன் !

(1996 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்) 

எனது 20 –ஆம் அகவையில் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் இளநிலை ஆய்வாளராக (JUNIOR INSPECTOR – AUDITOR)  பணிபுரிந்ததை மலரும் நினைவுகள் பகுதி 02-ல் குறிப்பிட்டிருக்கிறேன். அச்சமயத்தில் தமிழ்நாடு தேர்வாணைக் கழகத்திற்கு ஒரு விண்ணப்பம் அனுப்புவதற்கு நன்னடத்தை (CONDUCT CERTIFICATE) சான்று தேவைப்பட்டது !

 

அப்போது பாபநாசத்தில் ஜெயசெல்வராயன் என்பவர் வட்டார வளர்ச்சி அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தார். அவரும் நானும் பிறப்பால் ஒரே ஊர்க்காரர்கள். என்னை அவர் முன்னதாகப் பார்த்தது இல்லை; அவரையும் நான் பார்த்தது இல்லை. எனக்கும் அவருக்கும் அகவை வேறுபாடு 30 ஆண்டுகள் அளவுக்கு இருக்கும். அவரிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, நன்னடத்தைச் சான்று தேவைப் படுவதை எடுத்துச் சொன்னேன் !

 

அவர் கிறித்தவர்நானோ இந்து.  நான் யார் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டார். என் தந்தையை அவர் மாமா என்று தான் அழைப்பார். நான் பிறந்த ஊரில் 100 கிறித்தவக் குடும்பங்களும் 750 இந்துக் குடும்பங்களும் வாழ்ந்து வந்தன. கிறித்தவர்இந்து என்னும் மதப் பாகுபாடு எல்லாம் அங்கு இல்லை !

 

கிறித்துமஸ் நாளன்று இந்துக்கள் அவர்கள் வீட்டிற்குச் சென்று வாழ்த்துச் சொல்வார்கள். பொங்கல் நாளன்று அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவிப்பார்கள் ! இந்த ஒற்றுமையை இரு மதத்தினரும் இன்றும் பேணி வருவது தான் எங்கள் ஊரின் சிறப்பு !

 

நான் யார் என்பதை அறிந்துகொண்டதும் வட்டார வளர்ச்சி அதிகாரி திரு.ஜெயசெல்வராயன் அவர்களுக்கு மனம் கொள்ளாத மகிழ்ச்சி ! நன்னடத்தைச் சான்று வழங்கினார்பச்சை மையில் கையொப்பமிட்டு !

 

அன்று அவர் வழங்கிய நன்னடத்தைச் சான்றில் அவரது கையொப்பத்தைப்  பச்சை மையில் பார்த்ததும், எனக்குள்  ஒரு ஆவல் தோன்றியதுநானும் பச்சை மையில் கையொப்பமிடும் நாள் வாராதா என்று ! 1964 –ஆம் ஆண்டு என்னுள் எழுந்த அந்த ஆவல் 1996 –ஆம் ஆண்டு  - 32 ஆண்டுகள் கடந்து நிறைவேறியது. ஆம் ! 1996 –ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ஆம் நாள் ஓசூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ஆட்சி அலுவலராகஅதாவது - பச்சை மையில் கையொப்பமிடும் பதவிப் பொறுப்பில் - அமர்ந்தேன்!

 

ஆட்சி அலுவலர் வாய்ப்பு நெருங்கி வரும் சூழ்நிலையில், எந்த ஊர் சென்றால் எனக்கும், பிள்ளைகளுக்கும் நலம் பயக்கும் என்று கணக்குப் போட்டேன். மகன் இளம்பரிதி எந்திரவியலில் பட்டயப் படிப்பு (D.M.E) முடித்துவிட்டு, சேலம் தியாகராயர் பல்தொழில் பயிற்சிக் கல்லூரியில் (POLYTECHNIC) கணினிப் பயன்பாட்டியலில் 18 மாதப் பட்டயப்படிப்பை (P.D.C.A) மேற்கொண்டிருந்தார் !

 

மகள் கவிக்குயில் தியாகராயர் பல்தொழில் பயிற்சிக் கல்லூரியில் மின்னியல் & மின்மவியலில் (D.E.E.E) பட்டயப்படிப்பு மூன்றாம் ஆண்டில் பயின்று வந்தார். இன்னொரு மகள் இளவரசி சாரதா பதின்மப் பள்ளியில் 10 –ஆம் வகுப்பில் பயின்று வந்தார். மகன், மகள் வேலை வாய்ப்புக்கு ஓசூர் தான் சிறந்த இடம் என்று மனத்திற்குள் கணக்குப் போட்டு, ஓசூருக்கு வாய்ப்புக் கேட்பது என்று முடிவு செய்தேன் !

 

என்னுடன் நட்பால் இணைந்த திரு.செல்லையா இப்போது உயிருடன் இல்லைஉதவி செய்வதற்கு ! அடுத்த வாய்ப்பாக என் மனத்தில் தோன்றியவர் [நி/வா] திரு.எஸ்.எம்முஹையதீன் அவர்கள். திருச்சியில் இருவரும்  ஒன்றாகப் பணி புரிந்ததால் என்னுடைய நட்பு வட்டத்தில் அவரும் இருந்தார். இயக்ககத்தில் அப்போது அவர் ஆட்சி அலுவலராகப் பொறுப்பில் செல்வாக்காக இருந்தார். என் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தேன். உதவி செய்வதாகக் கூறினார் !

 

ஓசூரில் அப்போது திரு.ஆர்.ஜெயராமன், சார்புரை மையத்தில் அலுவலக மேலாளர். அவரும் ஆட்சி அலுவலர் பதவி உயர்வு பெறும் வாய்ப்பில் இருந்தார். திரு.எல்.முத்துகிருஷ்ணன் பணி ஓய்வுக்குப் பிறகு ஓசூரில் ஆட்சி அலுவலர் பணியிடம் நிரப்பப்படாமல் இருந்து வந்தது. அந்த இடத்திற்கு திரு.ஜெயராமன் வாய்ப்பு  எதிர்பார்ப்பது இயல்பு தானே !

 

என்றாலும், நான் பல்லாண்டுகளாகப் பலருக்கும் செய்து வந்த உதவியின் பலன் இப்போதும் எனக்குக் கைக்கொடுத்தது. திரு.எஸ்.முஹையதீன் அவர்களின் முயற்சியின் விளைவாக எனக்கு ஓசூரும், திரு.ஜெயராமனுக்கு மேட்டூர் அணையும் அளித்து ஆட்சி அலுவலர் பதவி உயர்வு ஆணை வெளியாகியது !

 

பண்டகக் காப்பாளராகத் தேர்வாணையம் மூலம் பணியமர்வு பெற்று, 18 ஆண்டுகள் அப்பதவியில் கடமையாற்றிய பின் அலுவலக மேலாளர் வாய்ப்புக் கிடைத்தது. அடுத்த பதவி உயர்வும் உடனே கிடைத்து விடவில்லை. அலுவலக மேலாளராக 12 ஆண்டுகள் 7 மாதம் பணியாற்றிய பிறகு ஆட்சி அலுவலர் பதவியில் அமரும் வாய்ப்புக் கிடைத்தது. கீழ்ப் பதவிகளில் 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய பட்டறிவுடன் ஆட்சி அலுவலர் பதவியில் அமர்ந்த எனக்கு அப்பதவியில் ஆளுமை செய்வது  ஒரு சுமையாகத் தோன்றவில்லை !

 

தேநீர் விருந்துடன் சேலத்திலிருந்து விடுவிப்புப் பெற்ற எனக்கு மூன்று நண்பர்கள் தூவல் (PEN) பரிசளித்தார்கள். திரு.ஜவகர், திரு.அங்குசாமி இருவரும் இணைந்து விலை மதிப்பு மிக்க தூவல் ஒன்றைத் தங்கள் அன்புப் பரிசாகத் தந்தார்கள் !

 

அடுத்து கணக்கர் திரு.சா. இராமமூர்த்தி (NOW HE IS RETIRED A.O) அப்போது புகழ்பெற்றிருந்த வெளிநாட்டுத் தூவல் (PILOT PEN) ஒன்றில் பச்சை மை நிரப்பித் தந்து தன் அன்பை வெளிப்படுத்தினார். இரண்டும் இப்போதும் என்னிடம் இருக்கின்றன ! அன்பின் வழியது  உயிர் நிலை என்று ஆசான் வள்ளுவப் பெருந்தகை சொல்லியிருப்பது நாம் எப்போதும்  மறக்கவியலாத மணிமொழி அல்லவா ?

 

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

வேதரெத்தினம்வலைப்பூ,

[தி.ஆ: 20523, கும்பம் (மாசி) 07]

{19-02-2022}

-------------------------------------------------------------------------------------

S.M.முஹையதீன்