தேடுக !

நினைவுகள்.1996.55 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள்.1996.55 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 பிப்ரவரி, 2022

மலரும் நினைவுகள் (55) தன் பதிவேடு ஆய்வு செய்வது எப்படி ?

 (1996 -ஆம் ஆண்டு நிகழ்வுகள்) 

தன்பதிவேடு என்பது ஒரு இருக்கைப் பொறுப்பாளர் பேணிவரும் கோப்புகளைப் பற்றிய வரலாற்றுக் குறிப்பு மட்டுமல்ல, அவரது பணியற்றலை மதிப்பிடும் ஆவணக் குறிப்பேடும் ஆகும். 1996, நவம்பர், 27 அன்று ஆட்சி அலுவலராக ஓசூரில் பொறுப்பேற்றேன் என்பதை முன்னரே சொல்லியிருக்கிறேன் !

 

திசம்பர் முதல் வாரம்.  ஒரு குறிப்பிட்ட இருக்கைப் பொறுப்பாளர் தன்பதிவேட்டை ஆட்சி அலுவலரின் ஆய்வுக்கு வைக்கவேண்டிய  வரம்பு நாள் (DUE DATE). தன்பதிவேட்டையும், ஆய்வுக் குறிப்பேட்டையும் எடுத்துவந்து ஆய்வுக்கு வைத்தார். கோப்புகள் அனைத்தையும் கொண்டு வருமாறு அவரிடம் சொன்னேன். அவர் திகைப்பில் ஆழ்ந்து போனார் !

 

கோப்புகள் கொண்டுவரப்பட்டன. அவரை என் மேசைக்கு எதிரிலிருந்த இருக்கையில் அமரச் சொல்லி ஒவ்வொரு கோப்பிலும் உள்ள  குறிப்புத் தாள்களை (NOTE FLE)  எடுத்து அதில் உள்ளபடி நடவடிக்கை எடுத்த நாள்களைப் படிக்கச் சொன்னேன். அவர் படிக்கப் படிக்க, தன்பதிவேட்டில் குறிப்பிட்டுள்ள நடவடிக்கை எடுத்த நாள்களை ஒப்பிட்டுச்  சரிக்குறி (TICK MARK) இட்டு வந்தேன் !

 

பல நேர்வுகளில் நடவடிக்கை எடுத்த நாள்கள் பற்றிய புனைவுப் பதிவுகள் (BOGUS ENTRIES) இருந்தன. புனைவுப் பதிவுகளை நீல மைத் தூவலால் அடித்து (STRIKE OUT) வந்தேன். அவர் பேணிவந்த ஏறத்தாழ 100 கோப்புகளில் 60 கோப்புகள் அளவுக்கு நடவடிக்கை எடுக்காமலேயே, குறிப்பிட்ட நாள்களில் நடவடிக்கை எடுத்ததாகத் தன்பதிவேட்டில் புனைவுப் பதிவுகள் (BOGUS ENTRIES) காணப்பட்டன !

 

ஆய்வு முடிந்த பிறகு, பெயரளவுக்கு சில கோப்பு எண்களைக் குறிப்பிட்டு அவற்றில் நடவடிக்கை எடுத்துப் பார்வைக்கு வைக்குமாறு ஆய்வுக் குறிப்பேட்டில் பதிவு செய்தேன். பின்பு அவரிடம் “100 கோப்புகள் வைத்திருக்கிறீர்கள், ஒரு மாதத்தில் 20 வேலை நாள் என்று வைத்துக் கொண்டாலுங்கூட ஒரு நாளைக்கு 5 கோப்புகளில் நடவடிக்கை எடுக்க முடியாதா ? ஏன் இந்த புனைவுப் பதிவுகள் (BOGUS ENTRIES) ? இந்த வழக்கத்தை இன்றோடு விட்டொழியுங்கள். இனி ஒவ்வொரு மாதமும் கோப்புகளை வைத்துக்கொண்டு தான் தன்பதிவேடுகள் ஆய்வு செய்யப்படும்என்று சொல்லியனுப்பினேன் !

 

வேர்க்க விறுவிறுக்க தனது இருக்கைக்குச் சென்ற அவரைப் பிற இருக்கைப் பொறுப்பாளர்கள் சூழ்ந்து கொண்டு என்ன நடந்தது என்று உசாவியறிந்து, அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர். பின்பு அவரவர் இருக்கைத் தன்பதிவேடுகளிலும் அவர்கள் செய்திருந்த புனைவுப் பதிவுகளை மைப்பயின் (INK RUBBER) கொண்டு அழித்து, சரியான பதிவுகளைச் செய்திருக்கின்றனர் !

 

ஒரு இளநிலை உதவியாளரோ, உதவியாளரோ ஒரு நாளைக்கு 10 கோப்புகளில் நடவடிக்கை எடுப்பதாக வைத்துக் கொள்வோம். அவரது ஒரு நாள் சம்பளத்தை 10 –ஆல் வகுத்துப் பாருங்கள். கிடைக்கும் ஈவுத் தொகை, ஒரு கோப்பில் நடவடிக்கை எடுத்ததற்காக அவர் பெறும் ஊதியம் அது !

 

இன்றைய நிலையில் ஒரு உதவியாளரின் ஒருமாத ஊதியம் உருபா 45,000 என்று வைத்துக்கொள்வோம். ஒரு மாதத்தில் 100 கோப்புகளில் அவர் நடவடிக்கை எடுப்பதாகவும் வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் ஒரு கோப்பில் நடவடிக்கை எடுக்க அவர் பெறும் ஊதியம் உருபா 450 ஆகிறது அல்லவா ?

 

கட்டட வேலை செய்யும் சிற்றாள் ஒருவர் இற்றை நாளில் பெறுகின்ற  நாட்கூலியுடன், ஒரு கோப்பில் நடவடிக்கை எடுப்பதற்காகத் தான்பெறும் ஊதிய அளவையும் அவர் ஒப்பிட்டுப் பார்த்தால், புனைவுப் பதிவுகள் (BOGUS ENTRIES) செய்வதற்கு அவருக்கு  மனம் வருமா ? இந்த அழகில் ஒருசில அலுவலகங்களில், மேலாளரை மதிக்காத போக்கும் அவர் சொல்வதைக் கேட்காத தன்மையும் அந்தக் காலத்திலேயே நிலவியது; இந்தக் காலத்திலும் நிலவுகிறது!

 

தன்பதிவேடு ஆய்வு என்பது மேலாளருக்கு வழங்கப்பட்டுள்ள போர்ப்படைக் கருவி. அந்த ஆய்வை மேலாளர்கள் சரிவரச் செய்தால், அவர் கண்காணிப்பின் கீழுள்ள எந்த அலுவலரும்  அவருக்கு உரிய மதிப்பைக் கொடுத்தே ஆகவேண்டும். அடக்கமிலாத குறும்புக் காரர்கள் தங்கள் வாலைச் சுருட்டிக்கொண்டு அமைதியாகப் போவதன்றி அவர்களுக்கு வேறு வழியிருக்காது !

 

குறிப்பிட்ட நாளில் தன்பதிவேடுகளை ஆய்வுக்கு வைத்தே தீர வேண்டும் என்னும் நிலையை அலுவலக மேலாளர்கள் உருவாக்க வேண்டும். காலத் தாழ்வாக வைத்தாலும் அல்லது பின் தேதியிட்டு வைத்தாலும், அலுவலக மேலாளர் அதை ஏற்க மாட்டார் என்னும் கருத்தோட்டத்தை அலுவலர்களிடையே மேலாளர் பதிய வைக்க  வேண்டும் !

 

விதிமுறைகளை, நியதிகளை, வகுக்கப்பட்ட வரம்புகளைப் பிறழ்வு  இன்றி அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்   என்பதில் அலுவலக மேலாளர் எந்த அளவுக்கு உறுதி காட்டுகிறாரோ, அந்த அளவுக்கு உதவியாளர்களும் இளநிலை உதவியாளர்களும் தம் பணியில் ஒழுங்கு நிலவச் செய்வர். மேலாளர் அனைத்திலும் தளர்வு காட்டினால், அலுவலகப் பணியாளர்கள் தம் கடமைப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில்  ஒழுங்கின்மை குடிபுகுந்துவிடும் !

 

ஒரு அலுவலகம் சீராக இயங்குவதும் அல்லது சீர்மை குலைந்து ஒழுங்கின்மை தலைவிரித்து ஆடுவதும் அலுவலக மேலாளரின் திறமையைப் பொறுத்து அமைகிறது. ”கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டுபவர்என்னும் குறளை அறியாத ஒருவர் அலுவலக மேலாளராக இருந்தால், அந்த அலுவலகத்தில் கட்டுப்பாடும் ஒழுங்கும் துளியளவு கூட இருக்காது !

 

கடைசி நான்கு பத்திகளில் குறிப்பிட்டுள்ள கருத்துகள் அலுவலக மேலாளருக்கு மட்டுமல்ல, ஆட்சி அலுவலருக்கும் பொருந்தும் !

 

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

வேதரெத்தினம்வலைப்பூ,

[தி.ஆ: 2053, கும்பம் (மாசி) 16]

{28-02-2022}

--------------------------------------------------------------------------------------