தேடுக !

நினைவுகள்.1998.60 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள்.1998.60 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

மலரும் நினைவுகள் (60)ஆட்சி அலுவலரின் அதிகாரங்கள் !

 (1998 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்) 

மிகப் பழமையான இரண்டு மூன்று தொழிற் பயிற்சி நிலையங்கள் தொடக்கத்தில் தமிழ்நாடு அரசின் தொழில் வணிகத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ்  செயல்பட்டு வந்தன. தொழில் வணிகத் துறையிலிருந்து வேலை வாய்ப்பு, பயிற்சித் துறை 1958 அல்லது 1959-ஆம் ஆண்டு பிரிந்ததாக எனக்கு நினைவு. தனித் துறை உருவாக்கப்பட்ட பிறகே பல்வேறு தொழிற்பயிற்சி நிலையங்கள் தமிழ் நாட்டில் தோன்றின !

 

நான் பணியில் சேர்ந்த 1966-ஆம் ஆண்டு தொழிற் பயிற்சி நிலையங்களின் எண்ணிக்கை 28 ஆக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் திருச்சி, மதுரை, கிண்டி ஆகிய மூன்று நிலையங்களில் ஆட்சி அலுவலர் பணியிடங்கள் இயங்கி வந்திருக்கின்றன. அப்பொழுது இந்தப் பணியிடங்களின் பெயர் முதல்வரின் நேர்முக உதவியாளர். (P.A.TO PRINCIPAL). பின்பு இந்தப் பெயர் GAZETTED ASSISTANT என்று மாறியது ! மேலும் சில காலம் சென்ற பின் ADMINISTRATIVE OFFICER என்று பெயர் மாற்றம் பெற்றது !

 

அப்போதைய ஆட்சி அலுவலர்களுக்கு அதிகாரங்களைத் தொகுத்தளித்து  ஆணை எதுவும் வெளியிடப்படாத நிலை இருந்தது. பட்டியல்கள் மூலம் கருவூலத்திலிருந்து பணம் எடுத்து உரியவர்களுக்குக் கணக்கர் மூலம் தருகின்ற செயலை மட்டுமே அவர்கள் கவனித்து வந்தனர் !

 

இதன் மூலம் அவர்கள் எடுப்பு அலுவலர் (DRAWING OFFICER), மற்றும் கொடுப்பு அலுவலர் (DISBURSING OFFICER) ஆகிய  இரண்டு உரிமைகள் மட்டுமே அளிக்கப் பெற்றவர்களாகத் திகழ்ந்து வந்தனர். ஆனாலும் உதிரியாக ஓரிரண்டு செயல்களுக்கு ஆட்சி அலுவலர்களுக்கு அதிகாரம் உண்டு என்பதாக இயக்குநர் அலுவலகத்திலிருந்து குறிப்பாணை வெளியிடப் பெற்றிருந்தன.  இவற்றின் படிகள் என்னிடம் இருந்தன !

 

ஆட்சி அலுவலராக ஓசூரில் பொறுப்பு ஏற்ற சில மாதங்களில், அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்த திரு.பால்ராஜ் அவர்களுக்கு நான் தனிப்பட்ட முறையில் (NOT IN OFFICIAL CAPACITY) ஒரு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்துடன்,  திருச்சி, மதுரை, கிண்டி நிலைய ஆட்சி அலுவலர்களின் அதிகார உரிமை தொடர்பாக இயக்குநர் வெளியிட்டிருந்த  குறிப்பாணைகளை இணைத்திருந்தேன் !

 

இந்த ஆணைகளைப் பார்வையிட்டு, ஆட்சி அலுவலர்களின் அதிகார உரிமை தொடர்பாக, கூடுதலாகச் சில உரிமைகளையும் அளித்து, எல்லாவற்றையும் தொகுத்து புதிய ஆணை  வெளியிடச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டிருந்தேன் !


நான் அனுப்பியிருந்த ஆணையின் படிகளை (COPIES) இணைத்து, ஆட்சி அலுவலருக்குக் கூடுதல் அதிகார உரிமைகளை அளித்து ஆணை வழங்குமாறு சங்கத்தின் சார்பின் இயக்குநருக்குக் கோரிக்கை ஒன்றை திரு.பால்ராஜ் அவர்கள் முன்வைத்தார் !

 

மாநிலச் சங்கத் தலைவரின் தொடர் முயற்சியின் விளைவாக, தொழிற் பயிற்சி நிலைய ஆட்சி அலுவலர் என்னென்ன அதிகாரங்களைச் செயற்படுத்தலாம் என்று இயக்குநரால் அலுவலக ஆணை (OFFICE ORDER) ஒன்று 1998-ஆம் ஆண்டு வெளியிடப் பட்டது !


அலுவலர்களுக்கு, பயண முன்பணம், பண்டிகை முன்பணம், கைத்தறியாடை முன்பணம், ஊதிய முன்பணம் மற்றும் வேறு சிலவகை  முன்பணங்களை  ஒப்பளித்தல், ஈட்டிய விடுப்பு ஒப்பளித்தல்,  விடுப்பு ஒப்படைப்பை ஏற்றல் (SANCTION OF EARNED LEAVE SURRENDER) போன்ற வேறு சில அதிகாரங்களும் வழங்கப்பெற்றிருந்தன !

 

முதல்வர் விடுப்பில் இருக்கையில் அல்லது அவர் வெளியூர் சென்றிருக்கையில் பயிற்சி நிலையத் தலைமைப் பொறுப்பு அதிகாரியாக ஆட்சி அலுவலர் செயல்படுவார் என்றும் அதில் அதிகாரம் அளிக்கப்பட்டு இருந்தது. அளிக்கப்பட்ட பிற அதிகாரங்கள் பற்றி 24 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், பணியிலிருந்து ஓய்வு பெற்று 21 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இப்போது எனக்கு நினைவு இல்லை !

 

முதல்வர் விடுப்பில் இருக்கையில் அல்லது வெளியூர்ப் பயணத்தில் இருக்கையில் ஆட்சி அலுவலரே முதல்வர் பொறுப்பு என்னும் நிலையில் அலுவலர்களுக்கு வைப்புநிதி முன்பணம் (G.P.F.ADVANCE) ஒப்பளித்துச் செயல்முறை ஆணை வழங்கிருக்கிறேன். ஊதிய உயர்வுகள் ஒப்பளித்திருக்கிறேன். பணிப் பதிவேட்டில் செய்யப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் சான்றொப்பம் இடும் உரிமை ஆட்சி அலுவலருக்கு வழங்கப்பட்டிருப்பதால், அந்தப் பணியை முழுமையாகச் செய்திருக்கிறேன் !

 

ஆட்சி அலுவலர் என்பவர் ஒரு அலுவலக மேலாளர் போல் செயல்பட்ட நிலை மாறி அவருக்கென்று அதிகாரங்கள் அளிக்கப் பெற்றமைக்கு நான் அடித்தளம் இட்டேன். திரு.பால்ராஜ் அந்த அடித்தளத்தின் மீது மாளிகையே கட்டிவிட்டார் ! அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் சாதனைகளில் இதுவும் ஒன்று என்பதை இப்போதைய அமைச்சுப் பணி அலுவலர்கள் உணர வேண்டும் ! ஒன்றுபட்டு ஒரே சங்கமாகச் செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும் !

 

இயக்குநராக திரு.கணேசன் இ... இருந்த போது ஆட்சி அலுவலர்களின்  அதிகாரங்களைத் தொகுத்து, கூடுதல் அதிகாரங்களும் வழங்கி  ஆணை வெளியிடப் பெற்றதாக எனக்கு நினைவு. இயக்குநர் அளித்திருந்த அதிகாரங்களை நான் முழுமையாகச் செயல்படுத்தினேன் !

 

பிற நிலைய முதல்வர்களுக்குத் தேவைப்பட்ட நேரங்களில்  நேர்முகக் கடிதங்கள்  எழுதினேன். பிற நிலைய ஆட்சி அலுவலர்களுக்கும் நேர்முகக் கடிதங்கள் நிரம்ப எழுதினேன். நேர்முகக் கடிதம் எழுதும் உரிமை  ஆட்சி அலுவலருக்கும் உண்டு என்பதை மெய்ப்பிக்கும் வகையில் என் செயல்பாடுகள் அப்போது இருந்தன ! இப்போது பணியில் இருக்கும் ஆட்சி அலுவலர்கள் நேர்முகக் கடிதங்கள் எழுதுகிறார்களா என்பது எனக்குத் தெரியாது !

 

நான் நேர்முகக் கடிதங்களை நிரம்ப எழுதி வந்த சூழ்நிலையில், ஒரு ஆட்சி அலுவலர் என்னிடம் துழனி (PHONE) வழியாகத் தொடர்பு கொண்டு  ஒரு தெளிவுரை கேட்டார். முதல்வர் பயிற்சி நிலையத்  தலைவராக (HEAD OF INSTITUTION) இருக்கையில் ஆட்சி அலுவலர் இவ்வாறு நேர்முகக் கடிதம் எழுதலாமா, கோப்புகளில் உத்தரவுகளை வழங்கலாமா என்பதே அவரது ஐயம். செய்யலாம்; உரிமையுண்டு என்பதே அவருக்கு நான் அளித்த மறுமொழி. அதற்கு ஒரு விளக்கத்தையும் தந்தேன் !

 

இயக்ககத்தில், எல்லாக் கோப்புகளும் இயக்குநரின் ஆணைக்குச் செல்கின்றனவா ? சில கோப்புகளில் அங்குள்ள ஆட்சி அலுவலர் இறுதி உத்தரவைப் பிறப்பிக்கிறார். வேறு சில கோப்புகளில் அங்குள்ள துணை இயக்குநர் ஆணை பிறப்பிக்கிறார். இணை இயக்குநரின் பார்வைக்கும் ஆணைக்கும் முகாமையான சில கோப்புகள் செல்கின்றன !


அவ்வாறே அரசுடன் கடிதத் தொடர்பு போன்ற மிக மிக முகாமையான புலனங்கள் (MATTERS) தொடர்பான கோப்புகளே இயக்குநரின் ஆணைக்குச்  செல்லும் ! அனைத்துக் கோப்புகளும் இயக்குநரின் ஆணைக்குச் செல்லும் என்றால் ஒவ்வொரு நாளும் அவர் பல ஆயிரக் கணக்கான கோப்புகளையன்றோ பார்க்க வேண்டியிருக்கும் ?

 

அதுபோன்று தான், ஆளுமை (ADMINISTRATIVE MATTERS) தொடர்பான கோப்புகளில் ஆட்சி அலுவலர் இறுதி உத்தரவு பிறப்பிக்கலாம்; நேர்முகக் கடிதங்கள் எழுதலாம். சேர்க்கை (ADMISSION), பயிற்சி (TRAINING), தொழிற் தேர்வு (TRADE TEST), கொள்முதல் (PURCHASE), தொழில் நுட்பம் (TECHNICAL MATTERS)  தொடர்பான கோப்புகள் முதல்வரின் பார்வைக்கு அனுப்பப்பட வேண்டும் !

 

இத்தகைய கோப்புகள் ஆட்சி அலுவலரின் பார்வைக்கு அனுப்பப்பட வேண்டியதில்லைமேலாளரிடமிருந்து  நேராக முதல்வருக்கு அனுப்பப்பட வேண்டும் !

 

ஒரு கோப்பில் ஆட்சி அலுவலர் சுருக்கொப்பம் இட்டு அந்தக் கோப்பு முதல்வருக்கு அனுப்பப்படுகிறது என்றால், ஆட்சி அலுவலர் என்பவர் அங்கு இன்னொரு மேலாளர் என்ற  நிலைக்குத் தகுதி இறக்கம் செய்யப்படுகிறார். இன்னொரு அலுவலக மேலாளரை உருவாக்கவா அரசு அங்கு ஆட்சி அலுவலர் பணியிடத்தை ஒப்பளித்திருக்கிறது ?

 

மாநிலப் பணி அதிகாரி (STATE SERVICE OFFICER) என்னும் தகுதி அளிக்கப்பட்டு இருப்பது, அதிகாரங்களையும் பணிகளையும் பரவலாக்குவதற்காகவே தவிர, கண்காணிப்பு நிலை அதிகாரிகளின் எண்ணிக்கையைப் பெருக்குவதற்காக அல்ல !

 

என் விளக்கத்தைக் கேட்ட அந்த ஆட்சி ஆலுவலர், தனது ஐயப்பாடு தீர்ந்தது என்றும், இனி தங்களைப் போல் நானும் செயல்படுவேன் என்றும் மகிழ்ச்சியுடன் கூறினார் !

 

இப்போது பணி புரிந்து வரும் ஆட்சி அலுவலர்களில் எத்தனை பேர் கோப்புகளில் இறுதி உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றனர், எத்தனை பேர் பிற அலுவலர்களுக்கு நேர்முகக் கடிதங்களை எழுதுகின்றனர் என்பது எனக்குத் தெரியாது.  சில நிலையங்களில் ஆட்சி அலுவலர்கள், அலுவலக மேலாளர் இருக்கையிலேயே அமர்ந்து கொண்டு ஆட்சி அலுவலர், அலுவலக மேலாளர் இருவரது பணியையும் சேர்த்துச் செய்து வருவதாகக்  கேள்விப்படுகிறேன்இது தவறு !

 

ஆட்சி அலுவலர் என்பவர் ஆளுமை செய்யும் அதிகாரியே தவிர கண்காணிப்பு அலுவலர் அல்லர் என்பதை அவர்கள் உணர வேண்டும் ! அரும்பாடுபட்டு முன்னோர்கள் பெற்றுத் தந்த ஆட்சி அலுவலர் பணியிடங்களுக்குப் பெருமை சேர்க்க வேண்டுமேயன்றி, அதன் தகுதியைக் குறைத்து இழுக்கு சேர்த்திடக் கூடாது !

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

வேதரெத்தினம்வலைப்பூ,

[தி.ஆ: 2053 கும்பம் (மாசி) 15]

{27-02-2022}

--------------------------------------------------------------------------------------