தேடுக !

புதன், 16 மார்ச், 2022

மலரும் நினைவுகள் (75) பணி நிறைவும் பாராட்டு விழாவும் !

             

         (2001-ஆம் ஆண்டு  நிகழ்வுகள்)

 

பதவி உயர்வு பெற்று 1996 -ஆம் ஆண்டு ஓசூருக்குச் சென்றதும், அங்கு நான் நேர்கொண்ட சூழல் என்னை மிகவும் கலவரப் படுத்தியது. எங்கு சென்றாலும் சுந்தரத் தெலுங்கு சுற்றிச் சுற்றி வந்து  என் காதுகளில் ஒலிக்கத் தொடங்கியதுகடைக்குச் சென்றால் தெலுங்குக் குரல்; காய்கறி வாங்கச் சென்றால் தெலுங்குக் குரல்; மருந்துக் கடையில் தெலுங்கு; மளிகைக் கடையில் தெலுங்கு !

 

என்ன வேண்டுமென்று அவர்கள் தெலுங்கில் கேட்கையில் நான் தமிழில் தயங்கித் தயங்கிச் சொல்வேன். தமிழ் தெரிந்த மக்கள் தான். ஆனாலும் அவர்கள் இயல்பாகவே தெலுங்கில் தான் பேசுவார்கள் கன்னட நாட்டின் எல்லையில் அமைந்திருந்தாலும் ஓசூர் மக்கள் கன்னடம் பேசுவதில்லை; தெலுங்கில் தான் பேசுவார்கள் !

 

ஒரு மனிதனை வானூர்தியில் ஏற்றிச் சென்று ஆத்திரேயாவில் கதுமென (திடீரென) இறக்கிவிட்டு வந்துவிட்டால் அவன் நெஞ்சம் எப்படிப் பதை பதைக்குமோ அப்படி நான் உணர்ந்தேன். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்னும் சூழ்நிலையிலிருந்து மாறி எங்கும் தெலுங்கு எதிலும் தெலுங்கு என்னும் சூழ்நிலையில் குடும்பத்துடன் வாழ்வதென்பது பாதுகாப்புக் குறைவானதாக எனக்குத் தோன்றியது. எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பான சூழ்நிலையை முதலில் உறுதிப் படுத்திக்கொள்ள  வேண்டும் என்று எண்ணினேன் !

 

இதற்கு அடித்தளமாக என் நட்பு  வட்டத்தை உருவாக்கப் பல வழிகளைக் கையாண்டேன். தஞ்சை, நாகை, திருச்சி, புதுகை மாவட்டங்களைச் சேர்ந்தோர் யார் யார் எந்தெந்த நிறுவனங்களில் பணி புரிகிறார்கள் என்பதைப் புலனாய்வு செய்து அவர்களுடன் நட்புக் கொள்ளத் தொடங்கினேன். இரண்டு மாதங்களுக்குள் என் நட்பு வட்டத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்தனர் !


இஃதல்லாமல் நான் குடியிருந்த இராயக்கோட்டை சாலை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில், குடியிருப்போர் நலச் சங்கம் ஒன்றைத் தொடங்கி அதன் தலைவராக ஓராண்டு காலம் பணியாற்றினேன் ! நட்பு வட்டம் பெருகிய பின் பாதுகாப்பு உணர்வு என்னில் அழுத்தமாகப் பதிந்து என்னை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்தது !

 

இந்த நட்பு வட்டம் தேவையான நேரங்களில் ஒருவர்க்கொருவர் உதவி செய்துகொள்வது என்னும் அடிப்படையில் உருப்பெற்றதால், வலுவான அமைப்பாக மாறியது. சோழ மண்டல நண்பர்கள் நலச் சங்கம் என்னும் இந்த அமைப்பு, உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக நம்பிக்கையை ஏற்படுத்தியது !

 

பணியிலிருந்து ஓய்வு பெறும் நான் பணி ஓய்வுச் செய்தியை என் நட்பு வட்டத்தினருக்குச் சொல்லித் தான் ஆகவேண்டும். ஊராருக்கு  விளம்பாவிட்டாலும், உற்ற நண்பர்களுக்கு உரைக்காமல் தவிர்த்தால் அவர்களது மனக் குறைக்கு ஆட்பட நேரிடுமல்லவா


ஆகையால் எழினி வழியாக ஒரு சிலருக்கு மட்டும் பாராட்டு விழாவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்திருந்தேன் ! அழைக்கப் பெற்றவர்கள் அவர்களது அணுக்க நண்பர்களுக்குச் செய்தியைச் சொல்ல, பணி ஓய்வுச் செய்தி நட்பு வட்டத்தில் விரைவாகப் பரவத் தொடங்கியது !

 

பணியிலிருந்து ஓய்வு பெற்று மூன்று நாள் ஆயிற்று. நான் வேண்டிக் கொண்டபடி பாராட்டுவிழா 04-05-2001 அன்று ஏற்பாடாகியது. பயிற்சி நிலைய நண்பர்கள் விழாவை விரிவாகச் செய்திருந்தனர். விழா அரங்கினை பூக்களால் மிக அழகாக ஒப்பனை செய்திருந்தனர். காலை 10-30 மணியளவில் நிகழ்ச்சிகள் தொடங்கின. முதல்வர் திரு..அப்துல் அமீது அவர்கள் தலைமை வகிக்க, வாழ்த்துரை வழங்க விரும்புவோர் முன்வரலாம் என்று அழைக்கப்பட்டனர் !

 

அமைதியான குளத்தில் கல் எறிந்தது போல், பயிற்சி நிலையத்தில் பத்து நாள் முன்பு ஒரு சலசலப்பை  ஏற்படுத்தியிருந்த பயிற்சி அலுவலர் திரு.மாதவன் முதலாவதாக வந்து எனக்குச் சால்வை அணிவித்து நினைவுப் பரிசாக பாரதிதாசன் பாடல் புத்தகம் ஒன்றை அளித்துவிட்டு வாழ்த்துரையைத் தொடங்கினார் !


அனைவரும் வியக்கும் வண்ணம் என்னைப் பற்றி உயர்வாகப் புகழ்ந்து பேசி நான் எப்படி அலுவலர்களுக்கு உதவிகள் புரிந்து அனைவர் மனத்திலும் இடம்பிடித்தேன் என்பதை எடுத்துரைத்து, இந்த மாதவன் தானா பத்து நாள் முன்பு வேறு மாதிரியாகப் பேசியவர் என்று அனைவரையும் வியக்க வைத்தார் !

 

அடுத்தடுத்துப் பல அலுவலர்கள் வாழ்த்துரை வழங்கி நினைவுப் பரிசுகளை வழங்கலாயினர். மணி 1-30 –ஐக் கடந்தும் கூட வாழ்த்துரை தொடர்ந்துகொண்டே இருந்தது. என் நட்பு வட்டத்திலிருந்து கீழ்க்காணும் நண்பர்கள் வருகை தந்து விழாவில் கலந்து கொண்டதுடன் வாழ்த்துரை வழங்கி நினைவுப் பரிசுகளும் அளித்தனர் !

 

    01) திரு.தாயுமானவன்          Cashier State Bank of Mysore

    02) திரு.முத்துராமலிங்கம்      Elecrical Contractor

    03) திரு.முனியாண்டி            Advocate

    04) திரு.சிவக்குமார்             Ashok Leyland Unit.1

    05) திரு.இராமநாதன்            Ashok Leyland Unit.2

    06) திரு.வேலுச்சாமி            Titan Industries Ltd

    07) திரு கிருபா                  Asst, Director, Health Dept

    08) திரு.சுகுமார்                 Agricultural Extension Officer

    09) திரு.கிருபானந்தன்          Asst.Engineer, T.N.E.B.

    10) திரு.இராமசாமி             Taluk Supply Officer

    11) திரு.தன்ராஜ்                Sub Inspector of Police

    12) திரு.அன்பழகன்             T.V.S.Motor Compny

    13) திரு.ஜான் ஆசீர்             Panchyat Union, Hosur

    14) திரு.சிராஜுதீன்              Industries Dept

    15) திரு.ஏழுமலை              Housing Board Office

    16) திரு.கணேஷ்குமார்         Charted Accountant

    17) திரு.ஆர்.ஜனார்த்தனன்      Retd Training Officer, Salem

    18) திரு..அப்பாவு              Retd Training Officer, T.V.Malai

    19) திரு.முகமது உசேன்         Asst Training Officer, Nagai

    20) திரு.குப்பையா செட்டி       Part Time Medical Officer

    21) திரு.அரிகிருஷ்ணன்         D’man, Housing Board Office

    22) திரு.பாலாஜி ராவ்           B.D.O. Hosur

    23) திரு..அன்பழகன்           H.R.D, Asian Bearings

    24) திரு.வெ.கணேசன்           Revenue Inspector

    25)திரு.எஸ்.முத்து              Asst.Engr, Central Silk Board

    26) திரு.கந்தசாமி                Manager, Hotel Gowrisankar.

    27)திரு.நெடுஞ்செழியன்        Hindustan Motors Limited.

    28) திரு.இராபர்ட்ஸ் (?)          Correspondent, St. Joseph I.T.I.

 

[புனித ஜோசப் ஐ.டி... தாளாளர் பெயர் மட்டும் சரியாக நினைவில்லை. அவர் தனது நிலைய ஈப்பு வண்டியைப் பயன்படுத்தி என் இல்லத்தினரை என் வீட்டிலிருந்து விழா அரங்கத்திற்கு அழைத்து வந்தார். அத்துடன் இன்னொரு வண்டி மூலம் ஓசூர் கௌரிசங்கர் உணவகத்திலிருந்து மதிய உணவை, விழா அரங்கத்திற்குக் கொண்டுவந்து இறக்கியதுடன், அவர் நிலைய அலுவலர்களைக் கொண்டு  பரிமாறும் வேலையையும்  திறம்படச் செய்து மகிழ்ச்சியூட்டினார்.]

 

அலுவலர்களும் நண்பர்களும் வாழ்த்துரை வழங்கிய பின் பகுதி நேர மருத்துவ அலுவலர் திரு.குப்பையா செட்டி, உதவி இயக்குநர் திரு.இரவிச் சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி சால்வை அணிவித்தனர். அடுத்து, விழாத் தலைவர், முதல்வர் அப்துல் அமீது அவர்கள், வாழ்த்துரை வழங்கி, சந்தன மாலை அணிவித்தார். அத்துடன், கோவை மண்டலப் பயிற்சித் துணை இயக்குநர், கோவை மண்டலத்தில் உள்ள அனைத்து நிலைய  முதல்வர்கள் ஆட்சி அலுவலர்கள், உதவி இயக்குநர்கள் சார்பில் விலை உயர்ந்த டைட்டன் கைக்கடிகாரம் ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினார் !

 

இறுதியில் நான் ஏற்புரை வழங்கினேன். எனக்குக் கல்விக் கண் திறந்து வைத்து வாழ்வில் உயர்வடைய வைத்த  ஆசிரியர்கள் முதல், அரசுப் பணியில் உதவிகள் நல்கிய அனைத்து அலுவலர்கள் வரை எல்லோருக்கும் நன்றி நவில்கையில் நண்பகல் மணி 2-00 ஆயிற்று !

 

அதன் பின் காவலர்கள், துப்புரவளர்கள் உள்பட பயிற்சி நிலைய அலுவலர்கள், வெளியிலிருந்து வந்திருந்த நண்பர்கள்,என் இல்லத்தார் என  எல்லோரையும் அமரவைத்து என் கையால் உணவு பரிமாறினேன். இதைப் பலரும் எதிர்பார்க்கவில்லை. சில அலுவலர்கள் உணர்ச்சிப் பிழம்பாகி, கண்களில் நீர் துளிக்க என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் !

 

எனக்கு அணிவித்த 57 சால்வைகளும் அடுத்து வந்த ஆண்டுகளில் குளிரால் வாடிய ஏழைகள் மற்றும் உறவினர்களின்  வாட்டம் போக்க உதவியது. நினைவுப் பரிசுகளில் பல பிறந்த நாள் பரிசாகப் பல குழந்தைகளுக்கு  வழங்கப் பெற்று, அவர்கள் முகத்தில் மகிழ்ச்சிக் கீற்றை  வரவழைக்க உதவியது !

 

வேலை வாய்ப்பு, பயிற்சித் துறையில் 1966 – ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்தகுளத்துத் தவளையான இந்த வேதரெத்தினம் 2001 –ஆம் ஆண்டில் அரசுப் பணிப் பயணத்தை நிறைவு செய்கையில் பக்குவப்பட்ட மனிதனாக அனைவருக்கும் உதவி செய்யும் உள்ளம் படைத்தவனாகமுழு மனிதன்என்னும் தகுதியுடன் உலா வந்துகொண்டிருக்கிறேன் !

 

அகவை 79 –ல், முகநூல் போன்ற பல்வேறு தளங்களில் உங்களுடன் உலா வந்து கொண்டிருக்கும் இந்த உதய சூரியனை இன்னும் பல்வேறு உயரங்களை எட்ட உளமார வாழ்த்துங்கள் ! அதுவொன்றே நான் உங்களுக்கு வைக்கும் வேண்டுகோள் !

 

             [ மலரும் நினைவுகள் தொடர் நிறைவு பெறுகிறது ]

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

வேதரெத்தினம்வலைப்பூ,

[தி.ஆ: 2053, மீனம் (பங்குனி) 02]

{16-03-2022}

-------------------------------------------------------------------------------------