தேடுக !

நினைவுகள்.1999.67 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள்.1999.67 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 மார்ச், 2022

மலரும் நினைவுகள் (67) தனக்குத் தானே குழி தோண்டிக் கொண்டு அதில் விழுந்திருக்கிறார் !

(1999- ஆம் ஆண்டு நிகழ்வுகள்)

முதல்வர் அறையில் குழுமியிருந்த அனைத்து மாணவர்களும் தனித் தனியாக எழுதிக் கொடுத்தனர். அவர்கள் எழுதிக் கொடுத்திருந்த விண்ணப்பத்தின் சாரம், “உதவிப் பயிற்சி அலுவலர், எங்களைப் பயமுறுத்தி, பழகுநர் பயிற்சி தொடர்பான அகில இந்தியத் தொழிற் தேர்வில், மதிப்பெண் அளிக்கப் போவது தானே என்றும், ஆகையால் தேர்வில் நாங்கள் தேர்ச்சி பெற வேண்டுமானால், அவர் சொற்படிக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் !

 

நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று அவரிடம் கேட்ட போது, வகுப்பறையில் குடிப்பதற்குத் தண்ணீர் இல்லை, வெளிச்சம் போதவில்லை, துப்புரவாக இல்லை, இருக்கைகள் உடைந்திருக்கின்றன என்று போராட்டம் நடத்த வேண்டும், உதவி இயக்குநருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்ப வேண்டும், அதில் நானும் உங்களுடன் கலந்து கொள்கிறேன் என்றார் !

 

அவரது அச்சுறுத்தலுக்கு பயந்து நாங்கள் அலுவலக நுழைவாயிலுக்கு வந்து  வாயிலை மறித்துக் கொண்டு நின்று, ’உதவி இயக்குநர் ஒழிக”, “குடிநீருக்கு ஏற்பாடு செய்யாத உதவி இயக்குநர் ஒழிகஎன்றெல்லாம் முழக்கமிட்டோம். முழக்கத்தை அவர் முதலில் சொல்ல, நாங்கள் அவரைப் பின் தொடர்ந்து சொன்னோம். அவரது வற்புறுத்தலுக்காகப் போராட்டத்தில் கலந்துகொண்டோமே தவிர, உதவி இயக்குநர் மீது எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை

 

மாணவர்கள் தங்கள் நிலையைத் தெளிவு படுத்தி எழுதிக் கொடுத்துவிட்டு, அமைதி காத்ததால், காவல் துறையினர், மாணவர்களை எச்சரித்துவிட்டு, எங்களிடம் விடைபெற்றுச் சென்றுவிட்டனர் !

 

உதவி இயக்குநரிடம் சொல்லி மாணவர்களுக்குப் பிற்பகல் விடுமுறை என்றும், அவர்கள் வீட்டிற்குச் செல்லலாம் என்றும் அறிவிக்கச் சொன்னேன். காவல் துறையினர் வருகையைப் பார்த்ததும் உதவிப் பயிற்சி அலுவலர் சென்ற இடம் தெரியவில்லை ! 


முதல்வர் அறையில் முதல்வர் , உதவி இயக்குநர், நான், பழகுநர் பயிற்சி இளநிலைத் துணை நெறியாளர் திரு.துரைசாமி, பயிற்சி அலுவலர் திரு.கைலாசம் ஆகியோர் அமர்ந்து, அடுத்து என்ன செய்வது என்பது பற்றிக் கலந்துரையாடினோம்!

 

அனைவரும் என் கருத்தைச் சொல்லுமாறு கேட்டுக்கொண்டனர். சார்புரை மைய அலுவலகத் தலைவரான உதவி இயக்குநரின் ஆளுமைத் திறன்  பற்றிய நிலை கேள்விக்குள்ளாகி இருக்கிறது. அவர் இன்றைய நிகழ்வு பற்றி உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்து வரும் நாள்களில் அவரால் எந்த அலுவலரையும் கட்டுப்படுத்த முடியாமற் போகலாம் !

 

மாணவர்கள் போராட்டம் நடத்தலாம்; ஆனால் அதை ஒரு அலுவலரே தலைமை தாங்கி நடத்துவது விதிகளை மீறிய செயல். ஆகவே, போராட்டத்தில் ஈடுபட்ட உதவிப் பயிற்சி அலுவலரை தமிழ் நாடு குடிமைப் பணி விதி 17 () யின்படி இடைநீக்கம் (SUSPENSION) செய்ய வேண்டும். பின்பு அவர் மீது  விதி 17 (பி) யின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தேன் !

 

பழகுநர் பயிற்சி இளநிலைத் துணை நெறியாளர் திரு.துரைசாமி என் கருத்தை வழிமொழிந்தார். பயிற்சி அலுவலர் திரு.கைலாசமும் என் கருத்தை வரவேற்பதாகக்  கூறினார். உதவி இயக்குநரோ முதல்வர் திரு.அப்துல் அமீது அவர்களின் முடிவுக்காகக் காத்திருந்தார். இறுதியில் நான் சொன்ன படி நடவடிக்கை எடுப்பதென்று முடிவு செய்யப்பட்டது !

 

இடைநீக்கம் செய்யும் படிவத்தை என்னிடமிருந்த அரசாணைக் கோப்பிலிருந்து எடுத்துக் கொடுத்தேன். உதவி இயக்குநர் அவரது அலுவலகத் தட்டச்சரை அழைத்து, அந்தப் படிவத்தில் ஐந்து படிகள் தட்டச்சு செய்து வருமாறு  பணித்தார். சிறிது நேரத்தில் படிவம் தயாராகி வந்ததும், அதில் உள்ள சில நிரல்களை உதவி இயக்குநரின் கையெழுத்தில் நிறைவு செய்யுமாறு கேட்டுக் கொண்டேன் !

 

இடைநீக்க ஆணை உதவி இயக்குநரின் கையொப்பத்துடன், அவரது அலுவலக செய்திப் பலகையில் முதலில் ஒட்டப்பட்டது. அடுத்த சில விநாடிகளில் உதவிப் பயிற்சி அலுவலரின் இடைநீக்கச் செய்தி பயிற்சி நிலைய வளாகமெங்கும் பரவி ஒரு பரபரப்பை உருவாக்கியது. இந்த நேரத்தில் அந்த உதவிப் பயிற்சி அலுவலர் எங்கிருந்தோ பணிமனைக் கட்டடத்துக்கு வந்தார். அலுவலக உதவியாளர் மூலம் இடைநீக்க ஆணை அவரிடமும் வழங்கப்பெற்றது !

 

அவரிடம் முன்பிருந்த சினமும் முரட்டுத் தனமும் ஏனோ இப்பொழுது காணாமற் போயிருந்தது. யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொண்டது போல, பழகுநர் பயிற்சி உதவிப் பயிற்சி அலுவலர் தனக்குத் தானே குழி தோண்டிக் கொண்டு அதில் விழுந்திருக்கிறார் ! 


முதல்வர் மற்றும் உதவி இயக்குநர் அல்லாமல்விதிமுறைகளில் வித்தகரான ஆட்சி அலுவலரையும் இவர் பண்பாடின்றிப் பேசி, உதவி இயக்குநருக்கு உதவ வைத்து விட்டார். இனி இவர் சிக்கலிலிருந்து  மீண்டு எழுந்து வருவது எளிதானதல்ல என்று கூறி பிற அலுவலர்கள் ஒதுங்கிக் கொண்டனர்.  பழகுநர் பயிற்சி உதவிப் பயிற்சி அலுவலர் தனிமைப்பட்டுப் போனார் !

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

வேதரெத்தினம்வலைப்பூ,

[தி.ஆ: 2053, கும்பம் (மாசி) 24]

{08-03-2022}

--------------------------------------------------------------------------------------