தேடுக !

நினைவுகள்.2001-(73) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள்.2001-(73) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 15 மார்ச், 2022

மலரும் நினைவுகள் (73) பாராட்டு விழாவில் பங்கேற்க இசைவு !

   

            (2001-ஆம் ஆண்டு  நிகழ்வுகள்)

 

தவறு செய்தவர் தன் நிலையிலிருந்து இறங்கி வந்துஎன்னை மன்னித்து விடுங்கள்என்று சொன்னதும்  பனிக்கட்டியாக உறைந்து போயிருந்த என் உறுதி இளகத் தொடங்கியது. சற்று நேரம் என் மனத்திற்குள்ளேயே சிற்றளவில் ஒரு பட்டிமன்றம் நடந்தது ! 


பின்பு சில நிமிடங்கள் கழித்து அவரிடம் சொன்னேன், “உங்கள் வேண்டுகோளை ஏற்கிறேன் ஆனால் சில கட்டுப்பாடுகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். 30-04-2001 அன்று காலை அலுவலகம் வருகிறேன். அன்று மாலை வழக்கம் போல் என் வண்டியிலேயே வீட்டிற்கு வருவேன்!”

 

என் வீடு வரை ஊர்தியில் அழைத்து வந்து என்னை இறக்கிவிட்டு சென்று வருகிறோம்என்று விடைபெற்றுச் செல்லத் தேவையில்லை. நான் ஓய்வு பெற்று விட்டதாக என்றும் நினைக்கப் போவதில்லை. நான் அமரும் நாற்காலி மாறலாம்; வாழும் ஊர் மாறலாம்; ஆனால் ஓய்வெடுக்கப் போவதில்லை. என் பணி ஏதோவொரு வகையில் இந்தக் குமுகாயத்துக்கு (சமுதாயத்துக்கு) தொடர்ந்துகொண்டே இருக்கும்” !

 

பணி ஓய்வுப் பாராட்டு விழாவுக்காக அலுவலர்களிடம் நிதி கேட்பதை நான் விரும்பவில்லை. அதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். 30-04-2001 அன்று பணி ஓய்வுப் பாராட்டு விழா நடத்துவதற்குப் பகரமாக 04-05-2001 அன்று நடத்துங்கள் !


கட்டாயம் வந்து கலந்து கொள்கிறேன்அலுவலர்களிடமிருந்து நல்வாழ்த்துகளை மட்டுமே நான் எதிர்பார்ப்பதாக அனைவரிடமும் சொல்லிவிடுங்கள் ! மகிழ்ச்சியுடன் செல்லுங்கள்”! என்று சொல்லியனுப்பினேன் !

 

திரு.மாதவன் உள்பட அனைவருக்கும் மனதில் ஒரு நிம்மதி ! ஒரு நிறைவு ! நன்றி சொல்லிவிட்டு விடைபெற்றுச் சென்றனர். முதல்வரிடம் சென்று செய்தியைச் சொன்னதும் அவருக்கும் மனத்தில் நிம்மதி வீச்சு


அலுவலர்களிடமிருந்து நல்வாழ்த்துகளை மட்டுமே நான் எதிர்பார்ப்பதாக அனைவரிடமும் சொல்லிவிடுங்கள்என்னும் என்னுடைய கூற்று அனைவர் மனத்திலும் விடை காண முடியாத ஒரு குழப்பத்தைத் தோற்றுவித்துவிட்டது !

 

ஓய்வு பெறும் அலுவலருக்கு அனைத்து அலுவலர்களின் சார்பாக நினைவுப் பரிசு அளிப்பது என்பது ஓசூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பின்பற்றி வந்த ஒரு வழக்கம். அதற்கு நன்றி சொல்லும் விதமாக பாராட்டு விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து அலுவலர்களுக்கும்  பிற துறை நண்பர்களுக்கும் ஓய்வு பெறும் அலுவலர் மதிய உணவு அளிப்பது என்பதும் அங்கு நடைமுறையில் இருந்து வரும் வழக்கம் ! 

 

மதிய உணவு அளிப்பதை நான் ஏற்றுக் கொள்கையில், அலுவலர்கள் அளிக்கும் நினைவுப் பரிசை நான் ஏற்பது தானே முறை என்ற சிந்தனையோட்டம் அலுவலர்களிடையே எழத் தொடங்கியது. இதற்கு விடை கண்டாக வேண்டும் என்று சிலர் கவலை கொண்டனர். நான் தொடர்ந்து விடுப்பில் இருந்ததால் என்னை அணுகிப் பேச முடியாமல் அவர்களிடையே ஒரு தேக்க நிலை ஏற்பட்டது !

 

இரண்டொரு நாள் கழித்து, வேறு சில அலுவலர்கள் என் வீட்டிற்கு வந்தனர். அவர்களில் திரு.கைலாசமும் இருந்தார். நினைவுப் பரிசை நான் ஏற்றுக் கொள்வது பற்றிய பேச்சு வந்தது. திரு.இராம ரெட்டிக்கு எந்த வகையில் விழா நடத்தினீர்களோ அதே வகையில் எனக்குப் பாராட்டு விழா நடத்தினால் போதும். எனக்கென்று சிறப்பு ஏற்பாடுகள் தேவையில்லை !


அவருக்குத் தங்க மோதிரம் ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினீர்கள். அதுபோன்ற நினைவுப் பரிசு எனக்கு அளிக்கத் தேவையில்லை. நினைவுப் பரிசை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினால் பாராட்டு விழாவுக்கு என்னால் வர இயலாது  என்று உறுதியாகச் சொன்னேன் !

 

திரு.கைலாசம் வேறொரு வாதத்தை முன் வைத்தார். ”நீங்கள் அளிக்கும் மதிய உணவு விருந்தை நாங்கள் ஏற்கையில், நாங்கள் அளிக்கும் நினைவுப் பரிசையும் நீங்கள் ஏற்பது தான் முறை. அதை மறுக்கக் கூடாதுஎன்றார்!

 

அப்படியென்றால் பாராட்டு விழா வேண்டாம். நிறுத்தி விடுங்கள்என்று அவர்களிடம் சொன்னேன். என் உறுதியைக் கண்டு அவர்கள் திகைப்படைந்ததுடன் கவலையும் அவர்களைத் தொற்றிக் கொண்டது. சற்று நேரம் அங்கு இறுக்கம் நிலவியது. பின்பு திரு.கைலாசம் என்னிடம், “அலுவலர்களிடம் நிதி திரட்டி நினைவுப் பரிசு அளிப்பதை நீங்கள் விரும்பவில்லை என்பது புரிகிறது. அதை நாங்கள் வலியுறுத்தமாட்டோம்” !

 

அதே நேரத்தில், உங்களுடன் நான் ஓசூரில் மட்டுமல்ல, சேலத்திலும் பழகி இருக்கிறேன். என் அன்பின் அடையாளமாக நான் ஏதாவது சிறு பரிசு அளித்தால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும், மறுக்கக் கூடாது என்றார். சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்தேன் !


அவர் சொல்வதிலும் ஒரு ஞாயம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். பின்பு அவரிடம் எந்தவொரு நண்பரும் தங்கள் அன்பின் அடையாளமாகத் தனிப்பட்ட முறையில் சிறு நினைவுப் பரிசு அளித்தால் அதை ஏற்றுக் கொள்கிறேன்என்றேன் !

 

சிக்கலான ஒரு வினாவுக்கு விடை கண்டுவிட்ட மன நிறைவுடன், அனைவரும் என்னிடமிருந்து விடைபெற்றுச் சென்றனர் !


-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

வேதரெத்தினம்வலைப்பூ,

[தி.ஆ: 2053, கும்பம் (மாசி) 30]

{14-03-2022}

------------------------------------------------------------------------------------