தேடுக !

நினைவுகள்.1966.03 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள்.1966.03 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 நவம்பர், 2021

மலரும் நினைவுகள் (03) ஏந்தில் காணப்படாத இரும்புப் பட்டைகள் !

 

 (1966 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்) 

மூலப் பொருள்களில்  அரியுருக்குப் பட்டை (Mild Steel Flat) , உருளை (M.S.Round Rod), கம்பி( M.S.Rod) . சவுக்கை (M.S.Square), கோணம் (M.S.Angle), பகரம் (M.S.Channel), தகடு (M.S.Sheets) ஆகியவையும் அடங்கும்.  அரியுருக்குப் பட்டைகளை எடைபோட்டுச் சரிபார்க்கையில் அதன் அளவுக் குறிப்புகளை பட்டைக்குத் தகுந்தவாறு  மில்லி மீட்டரில் 25 x 3;  50 x 6;  50 x 12;  65 x  6;   என்று நீரில் நனைத்த சுண்ணக் காம்பினால் (Chalk Piece)   ஒவ்வொரு பட்டையின் முனையிலும் எழுதி வைத்தேன் !

 

இவ்வாறே உருளை போன்ற பிற அரியுருக்குப் பொருள்களிலும் (M.S.Goods) எழுதி வைத்தேன். பயிற்சிக்குத் தேவைச் சீட்டுகள் மூலம் வழங்கும் போது ஒன்றுக்குப் பதிலாக  இன்னொன்றைத் தவறுதலாக வழங்கக் கூடிய நேர்வுகளை இதன் மூலம் தவிர்க்க முடிந்தது. பார்த்தவுடன் தெரிந்து கொண்டு  அதற்கு ஏற்றாற் போல்  தேவைச் சீட்டு (Indent) தயாரிக்கப் பயிற்றுநர்களுக்கும் இது வசதியாக இருந்தது !

 

எடைபோட்டுச் சரிபார்க்கும் பணியில் எனக்குச் சலிப்பின்றி  உதவிய அலுவலர்கள்  இப்போது எங்கிருக்கிறார்களோ தெரியாதுஆனால் இன்றும் என் நினைவில் வாழ்கிறார்கள்பயிற்றுநர்கள் திரு.எம்.ஜி.ஜேக்கப்ராஜ் (Fitter), திரு.முத்துராமலிங்கம் (Fitter), திரு.கல்யாணம் (Fitter), திரு.எம்.பழனியாண்டி (Turner), திரு.சிவசிதம்பரம்,(Turner),  திரு.என்.கிருஷ்ணமூர்த்தி (Wireman), திரு.என்.லூக்காஸ் (Welder), திரு.டி..சுவாமி (I.M), திரு.ஜே.சம்பத்  (Machinist) போன்று இன்னும் பலர் இந்தப் பட்டியலில் இருக்கின்றனர் . 55 ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டாலும் இந்த அலுவலர்களின் அன்பு முகம் பசுமையாக என் நினைவில் நிற்கவே செய்கிறது !

 

இவ்வாறு அனைத்து வகை மூலப்  பொருள்களையும், நுகர்பொருள்களையும் எடைபோட்டுச் சரிபார்த்து, அவற்றின் அளவுக் குறிப்புகளுடன், பதிவேட்டுப் பக்க எண்ணையும்  சுண்ணக் காம்பினால்  எழுதி  அல்லது அட்டையில் மையினால் எழுதித் தொங்கவிட்டு அடுக்கி வைப்பதற்கு எனக்கு ஏறத்தாழ 30 நாள்களுக்கு மேல் ஆகிவிட்டன !

 

சரிபார்த்து அடுக்கி வைக்கும் அதே நேரத்தில், பதிவேட்டிலும்சரிபார்க்கப்பட்டதுஎன்று எழுதிச் சுருக்கொப்பம் இட்டு வந்தேன்.அனைத்துப் பொருள்களையும் சரிபார்த்தபிறகு, பதிவேடுகளைப் புரட்டிப் பார்த்து வருகையில், ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் சரிபார்த்தமைக்கான எனது குறிப்பு காணப்படவில்லை !

 

குறிப்பிட்ட அந்தப் பக்கத்துக்கு உரிய பொருள், அரியுருக்குப் பட்டை 50 x 12 மி.மீ. (M.S.Flat 50 x 12 mm) 450 கிலோ ஆகும்.  அரியுருக்குப் பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த  ஏந்தினை (M.S. Metal Rack) ஆய்வு செய்தேன். அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 50 x 12 மி.மீ. பட்டைகள் இருப்புப் பதிவேட்டின் வேறொரு பக்கத்திற்கு உரியவை. ஆனால் என்னால் சரிபார்க்கப்படாத பக்கத்திற்கு உரிய 50 x 12 மி.மீ பட்டைகள் 450 கிலோ ஏந்தில் (M.S.Metal Rack) காணப்படவில்லை. எனக்குத் தூக்கி வாரிப்போட்டது !

 


----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”வேதரெத்தினம்” வலைப்பூ.

[தி.: 2052, துலை (ஐப்பசி) 04]

{21-10-2021}

-----------------------------------------------------------------------------------