தேடுக !

நினைவுகள்.1971.14 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள்.1971.14 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 14 நவம்பர், 2021

மலரும் நினைவுகள் (14) புதுக்கோட்டையில் விடுவிப்பு ! திருச்சியில் பணியேற்பு !

 

(1971 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்)

என் நம்பிக்கை என்னும் கப்பல் கவிழ்ந்துவிட்டது. சேர்த்து வைத்திருந்த 60 நாள் ஈட்டிய விடுப்பும்  கிட்டத்தட்டக் கரைந்துவிட்டது. இனி என்ன செய்ய முடியும் ? ஏமாற்றத்துடன்  ஊருக்குத் திரும்பினேன். சில நாள் சிந்தனைக்குப் பின் திருச்சியில் பொறுப்பு ஏற்கும் போது பின்பற்ற வேண்டிய  நடைமுறைகள் பற்றிச் சில முடிவுகளை எடுத்தேன் !

 

தெளிவான மனத்துடன் 01-11-1971 அன்று முற்பகல் திருச்சிக்குச் சென்று பணியில் இணைவதற்கான அறிக்கையை முதல்வரிடம் தந்தேன். அவர் பண்டகக் காப்பாளர் திரு.இரத்தின சாமியை அழைத்து என்னை அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு, பண்டகப் பொறுப்பை ஏற்கும் பணியைத் தொடங்குமாறு கூறினார் !

 

அதற்கு முன்னதாக அலுவலகத்திற்குச் சென்று ஆட்சி அலுவலர் திரு.விநாயக்ராவ், அலுவலக மேலாளர் திரு..பம்பையன்  ஆகியோருடன் அறிமுகப்படுத்திக் கொண்டேன். பின்பு அலுவலகப் பணியாளர்கள் அனைவருடனும்  அறிமுகப் படுத்திக் கொண்டு திரு.இரத்தினசாமியுடன் பண்டகத்திற்குச் சென்றேன் !

 

பண்டக உதவியாளர் திரு.மு.இராமலிங்கம் என்னை வரவேற்றார். “நாளை பொறுப்பு ஏற்புப் பணிகளைத் தொடங்குகிறேன். அதற்கு வேண்டிய முன்னேற்பாடுகள் சிலவற்றை இன்று செய்ய வேண்டும்என்று பண்டகக் காப்பாளர் திரு.இரத்தினசாமிடம் தெரிவித்தேன்.  அவர் ஒப்புக் கொண்டார் !

 

பண்டக உதவியாளர் திரு.இராமலிங்கத்திடம்  உருபா 100 தந்து, சற்று வழுவழுப்பான அட்டைத் தாள்கள் (Card board Sheets) இருபதும், முப்பட்டை ஊசி இரண்டும், முறுக்கு நூல் (Twine Thread)  இரண்டு பந்துகளும் வாங்கி வரச் சொன்னேன். வாங்கி வந்தவுடன் அட்டைத் தாள்களை 75 X 75 மி.மீ அளவுள்ளவையாக நறுக்கி, அதன் ஒரு மூலையில் ஊசியால் துளையிட்டு முறுக்கு நூலை அதில் முடிச்சிட்டு 150 மி.மீ விட்டு நூலை நறுக்கச் சொன்னேன்!

 

பண்டக உதவியாளர்,திரு.இராமலிங்கம்  பயிற்சியாளர்கள் சிலரைத் துணைக்கு வைத்துக் கொண்டு அந்தப் பணியை விரைவாகச்  செய்து முடித்தார்.  அடுத்ததாக, சுவர் மாடங்கள் (Wall Racks)  அனைத்துக்கும் A,B,C,D.E...........  என்றும், மாடங்களின் அறைகளுக்கு (Compartments) 1, 2, 3, 4 என்றும் சிவப்பு மையினால்  இலக்கங்கள் இடச் செய்தேன். இலக்கங்கள் இட்ட பின் சுவர்மாடத்தின் A வரிசையில் உள்ள 1, 2, 3, 4, ஆகிய நான்கு அறைகளையும் வெட்புலமாக்கச் சொல்லி அவற்றில் இருந்த  பொருள்களை எல்லாம் தரையில் ஒரு ஓரமாக வைக்கச் சொன்னேன் !

 

அதே போல் ஒரு நிலைப்பேழையை (Almirah)  திறந்து அதிலிருந்த பொருள்களை எல்லாம்  தரையில் ஒரு ஓரமாக வைக்கச் சொன்னேன் ! அந்த நிலைப் பேழைக்குநி.பே.1” என்று நீரில் நனைத்த சுண்ணக் காம்பினால் இலக்கமிடச் செய்தேன். நிலைப்பேழையின் அறைகளுக்கு (Compartments)  1, 2, 3, 4   என மேலிருந்து கீழாக   இலக்கமிடச் செய்தேன்.  பிற நிலைப்பேழைகளுக்கும்நி.பே.2”, “நி.பே.3” என இலக்கமிடச் செய்தேன்; அவற்றிலிருந்த பொருள்களை தேவையெழுகையில் எடுத்துக் கீழே வைத்துவிட்டு வெட்புலம் செய்யலாம் என்று சொல்லிவிட்டேன் !

 

மறுநாள் காலையில், முதலாவதாக கருவிகளின் இருப்பைப் பெற்றுக் கொள்ளத் தொடங்கினேன். குறிப்பிட்ட பக்கத்துக்கு உரிய கருவியைக் கொண்டு வந்து மேசை மீது வைத்ததும், எண்ணிக்கை மற்றும் அளவைச் சரிபார்த்துவிட்டு,  முதல்நாள் தயார்செய்து வைத்திருந்த அட்டை நறுக்கில், கருவியின்  பெயர் (Name of Tool), அதன் அளவுக் குறிப்பு (Specification) , எண்ணிக்கை (Quantity) ஆகிவற்றுடன், பதிவேட்டுப் பக்க எண்ணையும்  குறிப்பிட்டேன் !

 

அத்துடன், பதிவேட்டில், பெறப்பட்டது என்று எழுதி நாள் குறிப்பிட்டுச் சுருக்கொப்பமும் இட்டேன். பெறப்பட்ட கருவி சிறியதாக இருந்தால் நிலைப்பேழையிலும், பெரியதாக இருந்தால் சுவர்மாடத்திலும் நானே கொண்டு போய் வைத்துவிட்டுத் திரும்பி வந்து பதிவேட்டில்வைப்பிடம்பற்றிய குறிப்பையும் தவறாது வன்னிகையினால் (Pencil) எழுதி வந்தேன் !

 

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”வேதரெத்தினம்” வலைப்பூ.

[தி.: 2052, துலை (ஐப்பசி) 26]

{12-11-2021}

-------------------------------------------------------------------------------------