தேடுக !

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

மலரும் நினைவுகள் (60)ஆட்சி அலுவலரின் அதிகாரங்கள் !

 (1998 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்) 

மிகப் பழமையான இரண்டு மூன்று தொழிற் பயிற்சி நிலையங்கள் தொடக்கத்தில் தமிழ்நாடு அரசின் தொழில் வணிகத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ்  செயல்பட்டு வந்தன. தொழில் வணிகத் துறையிலிருந்து வேலை வாய்ப்பு, பயிற்சித் துறை 1958 அல்லது 1959-ஆம் ஆண்டு பிரிந்ததாக எனக்கு நினைவு. தனித் துறை உருவாக்கப்பட்ட பிறகே பல்வேறு தொழிற்பயிற்சி நிலையங்கள் தமிழ் நாட்டில் தோன்றின !

 

நான் பணியில் சேர்ந்த 1966-ஆம் ஆண்டு தொழிற் பயிற்சி நிலையங்களின் எண்ணிக்கை 28 ஆக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் திருச்சி, மதுரை, கிண்டி ஆகிய மூன்று நிலையங்களில் ஆட்சி அலுவலர் பணியிடங்கள் இயங்கி வந்திருக்கின்றன. அப்பொழுது இந்தப் பணியிடங்களின் பெயர் முதல்வரின் நேர்முக உதவியாளர். (P.A.TO PRINCIPAL). பின்பு இந்தப் பெயர் GAZETTED ASSISTANT என்று மாறியது ! மேலும் சில காலம் சென்ற பின் ADMINISTRATIVE OFFICER என்று பெயர் மாற்றம் பெற்றது !

 

அப்போதைய ஆட்சி அலுவலர்களுக்கு அதிகாரங்களைத் தொகுத்தளித்து  ஆணை எதுவும் வெளியிடப்படாத நிலை இருந்தது. பட்டியல்கள் மூலம் கருவூலத்திலிருந்து பணம் எடுத்து உரியவர்களுக்குக் கணக்கர் மூலம் தருகின்ற செயலை மட்டுமே அவர்கள் கவனித்து வந்தனர் !

 

இதன் மூலம் அவர்கள் எடுப்பு அலுவலர் (DRAWING OFFICER), மற்றும் கொடுப்பு அலுவலர் (DISBURSING OFFICER) ஆகிய  இரண்டு உரிமைகள் மட்டுமே அளிக்கப் பெற்றவர்களாகத் திகழ்ந்து வந்தனர். ஆனாலும் உதிரியாக ஓரிரண்டு செயல்களுக்கு ஆட்சி அலுவலர்களுக்கு அதிகாரம் உண்டு என்பதாக இயக்குநர் அலுவலகத்திலிருந்து குறிப்பாணை வெளியிடப் பெற்றிருந்தன.  இவற்றின் படிகள் என்னிடம் இருந்தன !

 

ஆட்சி அலுவலராக ஓசூரில் பொறுப்பு ஏற்ற சில மாதங்களில், அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்த திரு.பால்ராஜ் அவர்களுக்கு நான் தனிப்பட்ட முறையில் (NOT IN OFFICIAL CAPACITY) ஒரு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்துடன்,  திருச்சி, மதுரை, கிண்டி நிலைய ஆட்சி அலுவலர்களின் அதிகார உரிமை தொடர்பாக இயக்குநர் வெளியிட்டிருந்த  குறிப்பாணைகளை இணைத்திருந்தேன் !

 

இந்த ஆணைகளைப் பார்வையிட்டு, ஆட்சி அலுவலர்களின் அதிகார உரிமை தொடர்பாக, கூடுதலாகச் சில உரிமைகளையும் அளித்து, எல்லாவற்றையும் தொகுத்து புதிய ஆணை  வெளியிடச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டிருந்தேன் !


நான் அனுப்பியிருந்த ஆணையின் படிகளை (COPIES) இணைத்து, ஆட்சி அலுவலருக்குக் கூடுதல் அதிகார உரிமைகளை அளித்து ஆணை வழங்குமாறு சங்கத்தின் சார்பின் இயக்குநருக்குக் கோரிக்கை ஒன்றை திரு.பால்ராஜ் அவர்கள் முன்வைத்தார் !

 

மாநிலச் சங்கத் தலைவரின் தொடர் முயற்சியின் விளைவாக, தொழிற் பயிற்சி நிலைய ஆட்சி அலுவலர் என்னென்ன அதிகாரங்களைச் செயற்படுத்தலாம் என்று இயக்குநரால் அலுவலக ஆணை (OFFICE ORDER) ஒன்று 1998-ஆம் ஆண்டு வெளியிடப் பட்டது !


அலுவலர்களுக்கு, பயண முன்பணம், பண்டிகை முன்பணம், கைத்தறியாடை முன்பணம், ஊதிய முன்பணம் மற்றும் வேறு சிலவகை  முன்பணங்களை  ஒப்பளித்தல், ஈட்டிய விடுப்பு ஒப்பளித்தல்,  விடுப்பு ஒப்படைப்பை ஏற்றல் (SANCTION OF EARNED LEAVE SURRENDER) போன்ற வேறு சில அதிகாரங்களும் வழங்கப்பெற்றிருந்தன !

 

முதல்வர் விடுப்பில் இருக்கையில் அல்லது அவர் வெளியூர் சென்றிருக்கையில் பயிற்சி நிலையத் தலைமைப் பொறுப்பு அதிகாரியாக ஆட்சி அலுவலர் செயல்படுவார் என்றும் அதில் அதிகாரம் அளிக்கப்பட்டு இருந்தது. அளிக்கப்பட்ட பிற அதிகாரங்கள் பற்றி 24 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், பணியிலிருந்து ஓய்வு பெற்று 21 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இப்போது எனக்கு நினைவு இல்லை !

 

முதல்வர் விடுப்பில் இருக்கையில் அல்லது வெளியூர்ப் பயணத்தில் இருக்கையில் ஆட்சி அலுவலரே முதல்வர் பொறுப்பு என்னும் நிலையில் அலுவலர்களுக்கு வைப்புநிதி முன்பணம் (G.P.F.ADVANCE) ஒப்பளித்துச் செயல்முறை ஆணை வழங்கிருக்கிறேன். ஊதிய உயர்வுகள் ஒப்பளித்திருக்கிறேன். பணிப் பதிவேட்டில் செய்யப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் சான்றொப்பம் இடும் உரிமை ஆட்சி அலுவலருக்கு வழங்கப்பட்டிருப்பதால், அந்தப் பணியை முழுமையாகச் செய்திருக்கிறேன் !

 

ஆட்சி அலுவலர் என்பவர் ஒரு அலுவலக மேலாளர் போல் செயல்பட்ட நிலை மாறி அவருக்கென்று அதிகாரங்கள் அளிக்கப் பெற்றமைக்கு நான் அடித்தளம் இட்டேன். திரு.பால்ராஜ் அந்த அடித்தளத்தின் மீது மாளிகையே கட்டிவிட்டார் ! அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் சாதனைகளில் இதுவும் ஒன்று என்பதை இப்போதைய அமைச்சுப் பணி அலுவலர்கள் உணர வேண்டும் ! ஒன்றுபட்டு ஒரே சங்கமாகச் செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும் !

 

இயக்குநராக திரு.கணேசன் இ... இருந்த போது ஆட்சி அலுவலர்களின்  அதிகாரங்களைத் தொகுத்து, கூடுதல் அதிகாரங்களும் வழங்கி  ஆணை வெளியிடப் பெற்றதாக எனக்கு நினைவு. இயக்குநர் அளித்திருந்த அதிகாரங்களை நான் முழுமையாகச் செயல்படுத்தினேன் !

 

பிற நிலைய முதல்வர்களுக்குத் தேவைப்பட்ட நேரங்களில்  நேர்முகக் கடிதங்கள்  எழுதினேன். பிற நிலைய ஆட்சி அலுவலர்களுக்கும் நேர்முகக் கடிதங்கள் நிரம்ப எழுதினேன். நேர்முகக் கடிதம் எழுதும் உரிமை  ஆட்சி அலுவலருக்கும் உண்டு என்பதை மெய்ப்பிக்கும் வகையில் என் செயல்பாடுகள் அப்போது இருந்தன ! இப்போது பணியில் இருக்கும் ஆட்சி அலுவலர்கள் நேர்முகக் கடிதங்கள் எழுதுகிறார்களா என்பது எனக்குத் தெரியாது !

 

நான் நேர்முகக் கடிதங்களை நிரம்ப எழுதி வந்த சூழ்நிலையில், ஒரு ஆட்சி அலுவலர் என்னிடம் துழனி (PHONE) வழியாகத் தொடர்பு கொண்டு  ஒரு தெளிவுரை கேட்டார். முதல்வர் பயிற்சி நிலையத்  தலைவராக (HEAD OF INSTITUTION) இருக்கையில் ஆட்சி அலுவலர் இவ்வாறு நேர்முகக் கடிதம் எழுதலாமா, கோப்புகளில் உத்தரவுகளை வழங்கலாமா என்பதே அவரது ஐயம். செய்யலாம்; உரிமையுண்டு என்பதே அவருக்கு நான் அளித்த மறுமொழி. அதற்கு ஒரு விளக்கத்தையும் தந்தேன் !

 

இயக்ககத்தில், எல்லாக் கோப்புகளும் இயக்குநரின் ஆணைக்குச் செல்கின்றனவா ? சில கோப்புகளில் அங்குள்ள ஆட்சி அலுவலர் இறுதி உத்தரவைப் பிறப்பிக்கிறார். வேறு சில கோப்புகளில் அங்குள்ள துணை இயக்குநர் ஆணை பிறப்பிக்கிறார். இணை இயக்குநரின் பார்வைக்கும் ஆணைக்கும் முகாமையான சில கோப்புகள் செல்கின்றன !


அவ்வாறே அரசுடன் கடிதத் தொடர்பு போன்ற மிக மிக முகாமையான புலனங்கள் (MATTERS) தொடர்பான கோப்புகளே இயக்குநரின் ஆணைக்குச்  செல்லும் ! அனைத்துக் கோப்புகளும் இயக்குநரின் ஆணைக்குச் செல்லும் என்றால் ஒவ்வொரு நாளும் அவர் பல ஆயிரக் கணக்கான கோப்புகளையன்றோ பார்க்க வேண்டியிருக்கும் ?

 

அதுபோன்று தான், ஆளுமை (ADMINISTRATIVE MATTERS) தொடர்பான கோப்புகளில் ஆட்சி அலுவலர் இறுதி உத்தரவு பிறப்பிக்கலாம்; நேர்முகக் கடிதங்கள் எழுதலாம். சேர்க்கை (ADMISSION), பயிற்சி (TRAINING), தொழிற் தேர்வு (TRADE TEST), கொள்முதல் (PURCHASE), தொழில் நுட்பம் (TECHNICAL MATTERS)  தொடர்பான கோப்புகள் முதல்வரின் பார்வைக்கு அனுப்பப்பட வேண்டும் !

 

இத்தகைய கோப்புகள் ஆட்சி அலுவலரின் பார்வைக்கு அனுப்பப்பட வேண்டியதில்லைமேலாளரிடமிருந்து  நேராக முதல்வருக்கு அனுப்பப்பட வேண்டும் !

 

ஒரு கோப்பில் ஆட்சி அலுவலர் சுருக்கொப்பம் இட்டு அந்தக் கோப்பு முதல்வருக்கு அனுப்பப்படுகிறது என்றால், ஆட்சி அலுவலர் என்பவர் அங்கு இன்னொரு மேலாளர் என்ற  நிலைக்குத் தகுதி இறக்கம் செய்யப்படுகிறார். இன்னொரு அலுவலக மேலாளரை உருவாக்கவா அரசு அங்கு ஆட்சி அலுவலர் பணியிடத்தை ஒப்பளித்திருக்கிறது ?

 

மாநிலப் பணி அதிகாரி (STATE SERVICE OFFICER) என்னும் தகுதி அளிக்கப்பட்டு இருப்பது, அதிகாரங்களையும் பணிகளையும் பரவலாக்குவதற்காகவே தவிர, கண்காணிப்பு நிலை அதிகாரிகளின் எண்ணிக்கையைப் பெருக்குவதற்காக அல்ல !

 

என் விளக்கத்தைக் கேட்ட அந்த ஆட்சி ஆலுவலர், தனது ஐயப்பாடு தீர்ந்தது என்றும், இனி தங்களைப் போல் நானும் செயல்படுவேன் என்றும் மகிழ்ச்சியுடன் கூறினார் !

 

இப்போது பணி புரிந்து வரும் ஆட்சி அலுவலர்களில் எத்தனை பேர் கோப்புகளில் இறுதி உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றனர், எத்தனை பேர் பிற அலுவலர்களுக்கு நேர்முகக் கடிதங்களை எழுதுகின்றனர் என்பது எனக்குத் தெரியாது.  சில நிலையங்களில் ஆட்சி அலுவலர்கள், அலுவலக மேலாளர் இருக்கையிலேயே அமர்ந்து கொண்டு ஆட்சி அலுவலர், அலுவலக மேலாளர் இருவரது பணியையும் சேர்த்துச் செய்து வருவதாகக்  கேள்விப்படுகிறேன்இது தவறு !

 

ஆட்சி அலுவலர் என்பவர் ஆளுமை செய்யும் அதிகாரியே தவிர கண்காணிப்பு அலுவலர் அல்லர் என்பதை அவர்கள் உணர வேண்டும் ! அரும்பாடுபட்டு முன்னோர்கள் பெற்றுத் தந்த ஆட்சி அலுவலர் பணியிடங்களுக்குப் பெருமை சேர்க்க வேண்டுமேயன்றி, அதன் தகுதியைக் குறைத்து இழுக்கு சேர்த்திடக் கூடாது !

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

வேதரெத்தினம்வலைப்பூ,

[தி.ஆ: 2053 கும்பம் (மாசி) 15]

{27-02-2022}

--------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

சனி, 26 பிப்ரவரி, 2022

மலரும் நினைவுகள் (59) மேலாளர் நடராசனின் முறை தவறிய செயல் !

(1998 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்) 

பணியமைப்புப் பிரிவுக்கு (ESTABLISHMENT SECTION)  ஒரு குறிப்பு அனுப்பினேன். அதில், அலுவலக மேலாளர் திரு.ஆர்.நடராசன், இன்று (அடைப்புக் குறிக்குள் நாள் குறிப்பிட்டு) வருகைப் பதிவேட்டில் சுருக்கொப்பம் இட்டுவிட்டு, முறையான இசைவின்றி வெளியில் சென்றவர், அலுவலகத்திற்குத் திரும்ப வரவில்லை. சொந்த ஊரான சென்னைக்குச் சென்று விட்டதாக அலுவலக உதவியாளர் மற்றும் இன்னொரு மேலாளரிடம் உசாவியதில் தெரிகிறது !

 

அவர் செயல், தமிழ்நாடு அரசு அலுவலர்கள் நடத்தை விதி (20) (1)- க்கு முரணானது. எனவே அவர்மீது தமிழ்நாடு குடிமைப் பணிகள் விதி 17() வின் படி -ஏன் ஒழுங்கு நடவக்கை எடுக்கக்கூடாது என்பதற்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை வைக்கவும், என்று குறிப்பிட்டிருந்தேன். திரு.நடராசன் திங்கள் கிழமை பணிக்கு வந்ததும், அவரிடம் விளக்கம் கேட்கும் குறிப்பாணை வழங்கப்பட்டது !

 

திருநடராசன், இதை எதிர்பார்க்கவில்லை. முன்பு நான் அளித்திருந்த நயப்பின் (சலுகை) படி நண்பகல் 1-00 மணிக்கு அலுவலகம் வந்தவர் 15 நிமிடம் போலும் அப்படியே அமர்ந்துவிட்டார். பின்பு சற்றுத் தயக்கத்துடன் என்னிடம் வந்தவர், “SORRY SIR, நான் அப்படிச் செய்திருக்கக் கூடாது. நான் செய்தது தவறு தான்என்றார் !

 

எவ்வளவு பெருந்தன்மையுடன் உங்களுக்கு வாரத்திற்கு இரண்டு அரைநாள் சிறப்பு இசைவு அளித்திருக்கிறேன். அதை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் என்னை ஏமாற்றி விட்டீர்களே. பிற அலுவலர்களுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ வேண்டிய நீங்கள், இப்படி செய்தால் உங்களுக்குக் கீழுள்ளவர்கள் உங்களை எப்படி மதிப்பார்கள். உங்கள் மதிப்பை நீங்களே கெடுத்துக் கொண்டீர்கள்என்றேன் !

 

தலை குனிந்து நின்று கொண்டிருந்தார். “கொடுக்கப்பட்ட குறிப்பாணைக்கு உங்கள் விளக்கத்தைக் கொடுங்கள். இனி நீங்கள் நடந்துகொள்ளும் முறையை வைத்து அடுத்து என்ன செய்வதென்று அப்புறம் முடிவு செய்கிறேன். இப்பொழுது நீங்கள் செல்லலாம்என்றேன் !

 

இது நடந்தது திங்கள் கிழமை. வெள்ளிக் கிழமைக்குள் 50 தணிக்கைத் தடைப் பத்திகளுக்கு அவரே சீரறிக்கை தயார் செய்து கோப்பினை அனுப்பினார். நான் இசைவளித்திருந்தபடி வெள்ளிக்கிழமை பிற்பகல் 02-00 மணிக்கு என்னிடம் வந்து சொல்லிவிட்டு அவர் சென்னை செல்ல வேண்டும் !


ஆனால், 03-00 மணியாகியும் ஊருக்குச் செல்லாமல் அலுவலகத்திலேயே அமர்ந்திருந்தார். அவரை அழைத்து, ”நான் கொடுத்த வாக்கினை மீறமாட்டேன். அலுவலகம் முடியும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டாம்; சென்னைக்குப் புறப்படுங்கள்என்றேன் !

 

சென்னைக்குப் புறப்படும் முன் மாலை 03-15 மணி வாக்கில் என்னிடம் வந்து சொல்லிவிட்டுச் சென்றார். சென்னை சென்றவர் அப்போது அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்த திரு.பால்ராஜ் அவர்களைச்  சந்தித்து என் மீது நிரம்பப் புகார்களைக் கூறியிருக்கிறார் !


புகார் கூறியவர், திங்கள் கிழமை அரைநாள் தாமதமாக வருவதற்கும், வெள்ளிக்கிழமை அரை நாள் முன்னதாகச் செல்வதற்கும் நான் அளித்திருந்த சிறப்பு நயப்பு (சலுகை) பற்றிக் கூறாமல் மறைத்திருக்கிறார் !

 

நான் மிகவும் “TERROR” ஆக இருக்கிறேன் என்றும் அலுவலர்களை மதிப்புக் குறைவாக நடத்துவதாகவும்  கூறியிருக்கிறார். இதுபோல் எத்தனை பேரிடம் என் மீது புகார் சொன்னாரோ தெரியாது. ஒரு மாதம் கழித்து திரு.பால்ராஜ் அவர்களிடம் நான் எழினி (MOBILE) மூலம் தொடர்பு கொண்டு பிற செய்திகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது, இந்தச் செய்தி பற்றியும் தெரிய வந்தது !

 

திரு.நடராசனுக்குத் தரப்பட்ட குறிப்பாணைக்கு, அவர் உரிய விளக்கம் தராமல், காலம் தாழ்த்தி வந்தார். இரண்டு மாதங்கள் கழித்து அவருக்கு நினைவூட்டுக் குறிப்பாணையைத் தந்தபோதுதான், சிக்கல் இன்னும் தீரவில்லை என்பதை அவர் உணர்ந்தார் ! 


அலுவலகத்தில் இருந்த சில நடுநிலை நண்பர்கள் அவரிடம் பேசி, குற்றத்தை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்து விளக்கக் கடிதத்தைக் கொடுங்கள். ஆட்சி அலுவலர் யாரையும் தண்டிக்கும் குணமுடையவர் அல்லர். உங்களுக்குச் சிக்கல் இல்லாதபடி நல்ல முடிவு எடுப்பார் என்று அவரிடம் கூறியிருக்கிறார்கள் !

 

மிகுந்த தயக்கத்திற்குப் பிறகு, அவர்கள் கூறியபடியே, தனது குற்றத்தை ஒப்புக்கொள்வதாகவும், தனது செயலுக்கு மிகவும் வருந்துவதாகவும், இனிமேல் இவ்வாறு நிகழாது என்றும் உறுதியளித்து விளக்கக் கடிதத்தை எழுதிவந்து என்னிடம் தந்தார். அதை வாங்கிப் படித்துப் பார்த்துவிட்டு, ”சென்ற வாரம் தான் திரு.பால்ராஜ் அவர்களிடம் பேசினேன்” !

 

நீங்கள் அவரைச் சந்தித்தது பற்றியும், என் மீது புகார்ப் பட்டியல் படித்தது பற்றியும்  என்னிடம் அவர் தெரிவித்துஉங்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்; ஆகையால் நான் திரு.நடராசன் சொன்னதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லைஎன்று என்னிடம் அவர் கூறியதாகவும் தெரிவித்தேன் !

 

இன்னும் எத்தனை பேரிடம் என் மீது புகார்ப் பட்டியல் படித்தீர்கள் என்று கேட்டேன். இந்த நேரடித் தாக்குதலை அவர் எதிர்பார்க்கவில்லை. திரு.நடராசன் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றுவிட்டார். இதைவிட வேறு என்ன தண்டனை நான் அவருக்குக் கொடுக்க முடியும் ?

 

பணியமைப்புப் பிரிவு உதவியாளரை அழைத்து, திரு.நடராசனிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்பட்ட கோப்பினைக் கொண்டுவரச் சொன்னேன். அதில் அவரது விளக்கக் கடித்ததை இணைத்து மேல்நடவடிக்கை பற்றி ஆணை கோருமாறு தெரிவித்தேன் ! 


அவர் அவ்வாறே ஆணை கோரி, குறிப்பு எழுதிக் கொண்டு வந்தவுடன், பணிக்கு வராத ஒருநாளைத் தற்செயல் விடுப்பாக முறைப் படுத்திடவும், வேறு மேல் நடவடிக்கை எதுவும் தேவையில்லை என்றும்  கோப்பில் பதிவு செய்தேன். திரு.நடராசன் முன்னிலையிலேயே இவ்வளவும் நடந்தது !

 

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு ? (குறள்.987)

 

சில மனிதர்கள் இப்படித்தான் மேலதிகாரிகளின் புறத் தோற்றத்தைப் பார்த்துத் தப்புக் கணக்குப் போடுகிறார்கள். மேலதிகாரிகள் துணிச்சல் அற்றவர்களாக இருந்தால், இவர்கள் எகிறுகிறார்கள்; துணிச்சலும் நேர்மையும், விதிமுறைகள் பற்றிய நிறைந்த அறிவும் உள்ளவர்களாக இருந்தால், ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டுக் கால் சேற்றில் மாட்டிக்கொண்ட பின் பின்னர்ஐயோ ! அம்மா !” என்று அலறுகிறார்கள் !

 

வினை வலியும் தன்வலியும் மாற்றான் வலியும்,

துணைவலியும் தூக்கிச் செயல்” (குறள்.471)

 

என்பது வள்ளுவர் வாக்கு ! தன்செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே எந்த மனிதனும் ஒரு செயலில் ஈடுபட வேண்டும். இல்லையேல் தன்மதிப்பை இழந்து அடுத்தவர் முன் தலைகுனிந்து தான் நிற்க வேண்டும் !

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

வேதரெத்தினம்வலைப்பூ,

[தி.ஆ: 2053, கும்பம் (மாசி) 14]

{26-02-2022}

-------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

மலரும் நினைவுகள் (58) மேலாளருக்குத் தந்த சிறப்பு இசைவு !

 (1998 -ஆம் ஆண்டு நிகழ்வுகள்) 

பட்டியல்களைக்  கருவூலத்திற்கு அனுப்புகின்றபோது, பட்டியல் எண், நிகரத் தொகை ஆகியவற்றை, என்னிடமிருந்த  தனிப்பதிவேடு ஒன்றில் குறித்து வைத்துக் கொள்வது  வழக்கம். பட்டியல் ஏற்கப்பட்டுக் காசாகி வரும்போது, காசான நாளை என் பதிவேட்டில்  குறிப்பிட்டு, அந்தப் பட்டியலுக்குரிய தொடர் எண்ணைச் சுழித்துவிடுவேன் !

 

மாலையில்  கணக்குப் பதிவுகளைச் சரிபார்க்கையில், என்னிடம் இருக்கும்   தனிப் பதிவேட்டின் குறிப்புகளின்படி, காசாக்கப் பெற்ற  அனைத்துத் தொகையும் பெறுபணப் பதிவேட்டில் (U.D.P.R) விடுபடல் இல்லாமல்  கொண்டுவரப் பட்டுள்ளனவா என்பதை ஒப்பிட்டுச் சரிபார்க்க என் பதிவேடு உதவியது !

 

சிலநேரங்களில் கருவூலச் சுவடி (T.N.T.C.70)  இல்லாமலேயே கணக்கு எழுத வேண்டிய சூழ்நிலை, கணக்கருக்கு ஏற்படும். அதுபோன்ற நேர்வுகளில் காசாக்கப்பட்ட ஒரு பட்டியல் தொகையைக் கணக்கில் கொண்டுவராமல் தவறுதலாக கணக்கர் விட்டிருந்தால், ஆய்வின்போது அது என் கவனத்துக்கு உறுதியாக வந்துவிடும். இதன்மூலம் அப்போதே தவறு களையப்படும் வாய்ப்பு கிடைத்துவிடுகிறது !

 

அரசின் கருவூலத்திலிருந்து தேவைப்படும் பணத்தைப் பட்டியல் மூலம் எடுத்துக்கொள்ள ஆட்சி அலுவலருக்கு அரசு உரிமை வழங்கி இருக்கிறது. எடுக்கப்படும் பணத்திற்கு உரிய கணக்கினை முறையாகப் பேணி வர வேண்டியதும் அவரின் கடமை !


இந்தக் கடமையை நிறைவேற்றுவதில் தவறு நிகழ்ந்தால், அதற்கு அவரே பொறுப்பு என்பதை ஆட்சி அலுவலர்கள் உணரவேண்டும் ! கணக்கர் மீதோ, அலுவலக மேலாளர் மீதோ பழியைப் போட்டுவிட்டுத் தப்பிக்க முயலக் கூடாது !

 

சில அலுவலர்களுக்குக் கதுமென (திடீரென) பணமுடை ஏற்படும். அப்பொழுது அவர்கள் நம்புவது தமது வைப்புநிதியைத் தான். தனது வைப்பு நிதியிலிருந்து  அன்னிலை முன்பணம் (TEMPORARY ADVANCE) – அதாவது கடன் - கோரி சில அலுவலர்கள் விண்ணப்பம் எழுதி வந்து முதல்வரிடம் தருவார்கள் !


முதல்வர் அதில் சுருக்கொப்பம் இட்டதும் அதை எடுத்து வந்து என்னிடம் தந்து, ஒரு செலவுக்குப் பணம் தேவைப்படுகிறது, பணம் இன்றே கிடைத்தால் மிகவும் நலமாக இருக்கும் என்று கோரிக்கை வைப்பதுண்டு !

 

இப்படிப்பட்ட நேர்வுகளில், கணக்குப் பிரிவு உதவியாளரையும் கணக்கரையும் அழைத்துக் கலந்துரையாடுவேன். இவருக்கு  உடனடியாகப் பணம் தேவைப்படுவதாகத் தெரிவிக்கிறார்,  ஆகையால், நம்மாலான  உதவியைச்  செய்வோம் என்று தெரிவித்துவிட்டு, விண்ணப்பத்தைச் சரிபாருங்கள் !


அவர் கோரும் தொகையை வழங்கிடத் தகுதி இருந்தால் வைப்புநிதி முன்பணம் ஒப்பளிப்பு ஆணையை  1 + 2 தட்டச்சு செய்து வாருங்கள் என்று கணக்குப் பிரிவு உதவியாளரிடம் சொல்வேன். தொகை விவரத்தையும்  ஒப்பளிப்பு ஆணை எண்ணையும் முன்னதாகவே கணக்கரிடம் தெரிவிக்கச் சொல்வேன் !,

 

அடுத்து, கணக்கரிடம், பட்டியல் தயாரித்து வரச் சொல்வேன். அனைத்தும் அடுத்த அரைமணி நேரத்தில் நிறைவேறும். கருவூலத்திற்கு அன்றே பட்டியல் அனுப்பப்படும். குறிப்பிட்ட அலுவலர், கருவூலத்திற்குச் சென்று, அங்குள்ள அலுவலர்களிடம் பேசி, பட்டியலை அனுமதிக்க ஏற்பாடு செய்வார். அவ்வளவு தான் !  அளகையிலிருந்து (BANK) அன்றே பணம் பெறப்பட்டு, அவருக்குப் பட்டுவாடா செய்யப்பட்டுவிடும் !

 

இத்தகைய அணுகுமுறையால் அனைத்து அலுவலர்களும் என்னிடம் இணக்கமான முறையில் பழகத் தொடங்கினர். அலுவலர்களுக்குச் சேரவேண்டிய பணப்பயன் தொடர்பான எந்தக் கோரிக்கையும், அலுவலகத்தில் நிலுவையில் இல்லை என்னும் நிலையை உருவாக்கினேன் !


நான் சொந்தமாக உருவாக்கி வைத்திருந்த 15 தொகுதி அரசாணைக் கோப்புகள், அலுவலர்களின் பணிசார்ந்த நலன்களுக்கு மிகவும் உதவியாக அமைந்தன. அலுவலர்கள் பணிவிதிகள் (SERVICE MSTTERS) தொடர்பான ஐயங்களுக்கு என்னை அணுகித் தெளிவு பெறத் தயக்கமின்றி முன்வந்தனர்!

 

சுருங்கச் சொன்னால், என்மீது குறைசொல்லும் வாய்ப்பே எந்த அலுவலருக்கும் இல்லை என்னும் நிலையே ஓசூர் பயிற்சி நிலையத்தில் நிலவியது. இந்தச் சூழ்நிலையில் அலுவலக மேலாளர் ஒருவர் இயக்கக நண்பர்கள் பலரிடமும் என் மீது குறை சொல்கின்ற நேர்வு ஏற்பட்டது !


அவர் சென்னையைச் சேர்ந்தவர். பெயர் R.நடராசன். (வேட்டி நடராசன் அல்லர்)  இயக்ககத்தில் தணிக்கைப் பிரிவிலும் பணியற்றியவர். பதவி உயர்வில் அலுவலக மேலாளராக ஓசூரில் பணியமர்வு செய்யப்பட்டவர் !

 

திங்கட்கிழமை காலையில் சென்னையிலிருந்து புறப்பட்டு ஓசூர் வருவார். வெள்ளிக்கிழமை மாலை சென்னைக்குச் செல்வார். அவர் என்னிடம் வந்து தனது நிலையைச் சொல்லி, திங்களன்று காலையிலும், வெள்ளியன்று மாலையிலும் நேரத் தளர்வு கேட்டார் !

 

சென்னையில் அவர் வீடு எங்கிருக்கிறது, வீட்டிலிருந்து எத்தனை மணிக்குப் புறப்படுகிறார், பயண நேரம் எவ்வளவு, என்பதையெல்லாம் கேட்டறிந்த பிறகு, நேரத் தளர்வு எந்த அளவுக்குத் தேவை என்று கேட்டேன் !


அரைநாள் அளவுக்குத் தேவைப்படும் என்று கூறினார். வாரத்தில் இரண்டு அரைநாள் தளர்வு தந்தால், அதை ஈடு செய்ய தணிக்கைக் கோப்புகளில் கவனம் செலுத்தி சீரறிக்கைத் தயாரிக்க முடியுமா என்று கேட்டேன். சரி என்று ஒப்புக்கொண்டார் !

 

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மதியம்  1-00 மணிக்கு அலுவலகம் வருவதற்கும், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2-00 மணிக்கு அலுவலகத்திலிருந்து புறப்பட்டுச் செல்வதற்கும் அவருக்குச் சிறப்பு இசைவு அளித்தேன். இன்னொரு மேலாளரிடம் சொல்லி, திங்கட் கிழமை மட்டும் மதியம் 1-00 மணிக்கு வருகைப்பதிவை முடித்திட நெறியுரை தந்தேன் !

 

சில வாரங்கள் என் சிறப்பு இசைவை முறையாகப் பின்பற்றிய அவர், பின்னர் எனக்குத் தெரியாமல் அதை உடைக்க முற்பட்டார். ஒரு குறிப்பிட்ட வெள்ளிக்கிழமை காலை 10-30 மணியளவில், அலுவலக உதவியாளரை அழைத்து அலுவலக மேலாளர் திரு.நடராசனை வரசொல் என்று பணித்தேன் !


அவர் வரவில்லை. திரும்பவும் அலுவலக உதவியளரை அழைத்து மேலாளரை வரச் சொல்லிச் சொன்னேனே, அவரிடம் சொல்லவில்லையா, என்று கேட்டேன் !

 

அலுவலக உதவியாளர் தயங்கித் தயங்கி, அவர் காலை 10-00 மணிக்கெல்லாம்  புறப்பட்டுச் சென்னைக்குச் சென்றுவிட்டதாகக் கூறினார். நான் 9-45 மணியளவில் அலுவலகம் வந்திருக்கும் சூழ்நிலையில், என்னிடம் சொல்லாமல் 10-00 மணிக்கு எப்படிச் சென்றிருக்க முடியும் என்று எண்ணினேன் ! 


இன்னொரு மேலாளரை அழைத்து விவரம் கேட்கையில் அவர் செய்தியை உறுதிப்படுத்தினார். வருகைப்பதிவேட்டில் அவர் சுருக்கொப்பம் இட்டுவிட்டு, என்னிடமும் சொல்லாமல் சென்னை சென்றுவிட்டது உறுதியானது !

 

தவிர்க்கவியலாப் பணியின் நிமித்தம் சென்னை செல்ல வேண்டியிருந்தால் விடுப்பு விண்ணப்பம் தந்துவிட்டுச் சென்றிருக்கலாம். அல்லது நான் இசைவளித்திருந்தபடி பிற்பகல் 2-00 மணிக்கு என்னிடம் வந்து சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாம். இரண்டையும் தவிர்த்துவிட்டு, வருகைப் பதிவேட்டில் சுருக்கொப்பம் இட்டுவிட்டு, 10-00 மணிக்கெல்லாம் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றது என்னை ஏமாற்றும் செயலாக உணர்ந்தேன் !


வருகைப் பதிவேட்டை வரவழைத்து  அவர் இட்டிருந்த சுருக்கொப்பத்தைப் பச்சை மையினால் சுழித்துவிட்டுஎன்ற குறிப்பை அதனருகில் எழுதினேன் !

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

வேதரெத்தினம்வலைப்பூ,

[தி.ஆ: 2053, கும்பம் (மாசி) 12]

{24-02-2022}

------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

மலரும் நினைவுகள் (57) அலுவலர்களின் ஓய்வூதியக் கருத்துரு அனுப்புதல் !

 (1997-ஆம் ஆண்டு நிகழ்வுகள்) 

பல்லாண்டுகளாக முயன்று நான் தொகுத்து வைத்திருந்த அரசாணைக் கோப்புகள் எனக்கு ஆனை (யானை) விலங்கினைப் போன்று போன்ற அளப்பரிய வலிவைக் கொடுத்தன. பணி ஓய்வு பெறும் அலுவலர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஓய்வூதியம் போன்ற பணப் பயன்களைத் துல்லியமாகக் கணக்கிட்டு  மாநிலக்கணக்காயருக்கு (ACCOUNTANT GENERAL, CHENNAI) கருத்துரு அனுப்புவதற்கு மிகவும் துணை புரிந்தன !

 

ஓசூர் தொழிற் பயிற்சி நிலைய  அலுவலகத்தில் சில திறமையான உதவியாளர்களும் இளநிலை உதவியாளர்களும் இருக்கவே செய்தனர். ஆனால் அவர்களுக்கு வழிகாட்டி அழைத்துச் செல்லத் தகுதி படைத்த அலுவலக மேலாளர்கள் ஒருவரும் அப்போது இல்லை. ஆட்சி அலுவலர் பணியிடத்தில் யாரையும் பொறுப்பில் அமர்த்தாமல் வெட்புலமாக வைக்கப் பெற்றிருந்தது !

 

திருவாளர்கள் பஞ்சநதன், நடேசன், லலிதா, வசந்தா, ஜெயம், கோபால கிருஷ்ணன் ஆகியோர் உதவியாளர்கள். வஹிதா ரகுமான், தேவி, பிரசன்னையா, ஆகியோர் இளநிலை உதவியாளர்கள். திரு.கதிர்வேலு கணக்கர்; திரு.இரவிச்சந்திரன் பண்டகக் காப்பாளர். திருமதி வசந்தா, தொழில்நுட்ப அலுவலர் பணியமைப்பையும், திரு.நடேசன், தொழில் நுட்பம் சாரா அலுவலர்கள் பணியமைப்பையும் கவனித்து வந்தனர் !

 

இருவருமே திறமையான அலுவலர்கள் என்றாலும், வழிகாட்டி அழைத்துச் செல்ல, பொறுப்பான அலுவலக மேலாளர்கள் அப்போது இல்லை. இந்நிலை மூன்றாம் பிறை நிலவொளியை நம்பிக் காட்டில் பயணம் செய்வதற்கு ஒப்பாக அவர்களைத் தடுமாற வைத்தது ! ஆட்சி அலுவலராக நான் பொறுப்பு ஏற்றதும் ஒருசில அலுவலர்களுக்கு ஓய்வூதியக் கருத்துரு அனுப்பவேண்டி இருந்தது. திருமதி வசந்தாவும், திரு.நடேசனும் ஓய்வூதியக் கருத்துரு கோப்பு ஒவ்வொன்றை என் பார்வைக்கு அனுப்பியிருந்தனர் !

 

அவர்கள் அனுப்பியிருந்த கருத்துருவில் 60% அளவுக்குச் சரியாக இருந்தது. எஞ்சிய 40% பிழையாக அமைந்திருந்தது. பிழைகளை நீக்கி, திருந்திய வடிவில் கருத்துருவைச் சீரமைத்தேன். அவர்கள் இருவரையும் அழைத்து, தகுதியுள்ள பணிக்காலம் கணக்கீடு, ஓய்வூதியம் கணக்கீடு, பணிக்கொடை கணக்கீடு ஆகியவற்றில் அவர்கள் செய்திருந்த பிழைகளை எடுத்துச் சொல்லி, திருத்தி அமைக்கப் பெற்ற  ஓய்வூதியத் தொகை, திருத்தி அமைக்கப் பெற்ற பணிக்கொடைத் தொகை ஆகியவற்றுக்கான காரணத்தையும் எந்த அரசாணைகளின் அடிப்படையில் அவ்வாறு திருத்தியமைத்தேன் என்பதையும்  எடுத்துச் சொன்னேன் !

 

எங்களுக்கு இவ்வாறு எடுத்துரைக்கவும், உரிய வழிகாட்டவும் யாருமில்லை. அலுவலக மேலாளர்கள் இருவரும் எங்களுக்கு உதவக் கூடியவர்களாகவும் இல்லை. ஏதோ எங்களுக்குத்  தெரிந்த அளவில் இதுவரைக் கருத்துருக்களை அனுப்பி வந்தோம். மாநிலக் கணக்காயர் அலுவலகத்திலிருந்து ஒப்பளிப்பு ஆணை வரும்போது பார்த்தால் கருத்துருவின் தொகையிலிருந்து  மாறி வேறு தொகை குறிப்பிடப்பட்டு இருக்கும். இனி எங்களுக்கு வழிகாட்ட நீங்கள் இருக்கிறீர்கள் !

 

நாங்கள் உங்களிடமிருந்து நிறையக் கற்றுக்கொள்ள விரும்புகிறோம். நாங்கள்  தவறு செய்யும் போது  சுட்டிக்காட்டி எங்களைத் திருத்துங்கள். அடுத்தடுத்த மேற்பதவிகளுக்கு நாங்கள் உயர்வடையும்  போது, முழுமையான திறமை படைத்த அலுவலர்களாகத் திகழவேண்டும். அதற்கு உங்கள் ஆதரவை எங்களுக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டர் !

 

இவர்களுள் திரு நடேசன், பதவி உயர்வைத் துறந்ததால், உதவியாளராகவே பணியிலிருந்து ஓய்வு பெற்றார். திருமதி.வசந்தா, அலுவலக மேலாளர், ஆட்சி அலுவலர் இரண்டு நிலைகளுக்கும் உயர்ந்து பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இன்றும் கூட அவர்கள் இருவரும் என்னைச் சந்திக்கும் போது, “நீங்கள் ஆட்சி அலுவலராகப் பொறுப்பிலிருந்த காலம் எங்களுக்குப் பொற்காலமாக இருந்தது. உங்கள் பணி ஓய்வுக்குப் பிறகு ஓசூர் அலுவலகத்தில் நிலைமையே முற்றிலும் மாறிவிட்டதுஎன்று தங்கள் மன வருத்தத்தைத் தெரிவிக்கத் தவறுவதில்லை !

 

ஓய்வூதியத்தில் 40% வரை விட்டுக்கொடுத்துவிட்டு, அதற்கு ஈடாக உரிய தொகையைத் தொகுத்துப் பெறலாம் என்னும் அரசாணை 1998-ஆம் ஆண்டு வந்ததாக எனக்கு நினைவு. இதை அறியாத ஓய்வு பெறும் நிலையிலுள்ள அலுவலர்கள் ஓய்வூதியத்தில் 1/3 பங்கு விட்டுக் கொடுத்துவிட்டு உரிய தொகையைத் தொகுத்துப் பெற விருப்பம் தெரிவிப்பதைக் கண்ணுற்றேன் !

 

பணி ஓய்வுக்குப் பின் அவர்கள் பெறவிருக்கும் ஓய்வூதியத் தொகை எவ்வளவு, பணிக்கொடைத் தொகை எவ்வளவு என்பதைக் கணக்கிட்டு, அவர்களை அழைத்துத் தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அத்துடன் 33% ஓய்வூதியத்தை விட்டுக்கொடுப்பதால் எவ்வளவு தொகை கிடைக்கும், அதற்கு மாறாக 40% விட்டுக்கொடுத்தால் எவ்வளவு கிடைக்கும் என்பதையும் அவர்களிடம் தெரிவித்து, அவர்கள் தந்த விண்ணப்பத்தில், தேவைப்பட்டால் திருத்தம் செய்யச் சொல்வேன் !

 

இறுதியாக, அவர்களுக்குத் தகுதியுள்ள ஓய்வூதியத் தொகை (ELIGIBLE MONTHLY PENSION), கிடைக்கவுள்ள பணிக்கொடைத் தொகை (GRATUITY), கிடைக்கவுள்ள ஓய்வூதியம் தொகுத்துப் பெறுகை (COMMUTATION) தொகை, தொகுத்துப் பெற்ற பின் மாதாமாதம் கிடைக்கவுள்ள எஞ்சிய ஓய்வூதியம் (REDUCED PENSION) ஆகியவற்றை ஒரு தாளில் எழுதி அவர்களிடம் கொடுப்பேன் !

 

ஓய்வு பெற்ற பின் கிடைக்கும் தொகை எத்தனை இலட்சம் என்பதைக்  கணக்கிட்டு நான்  சீட்டில் எழுதிக் கொடுத்து விடுவதால், அவர்கள் தங்கள் மகள் / மகன் திருமணம், புதிய வீடு கட்டுதல் போன்ற செலவுகளுக்கு முன்னதாகவே திட்டமிட முடிந்தது. எந்தச் செலவுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கலாம் என்பதை அவர்கள் தம் மனைவி மக்களுடன் கலந்துபேசி முடிவு செய்ய முடிந்தது!

 

நான் கொடுக்கும் சீட்டினைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பணம் கிடைக்கும் போது இந்தச் சீட்டிலுள்ள  தொகையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். 100% சரியாக இருக்கும் என்பது என் நம்பிக்கை. சென்று வாருங்கள், நல்வாழ்த்துகள், என்று சொல்லி அவர்களை தம் இருக்கைக்குத்  அனுப்பி வைப்பேன். என் நடவடிக்கைகள் அலுவலர்கள் இடையே பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், என் மீது  அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் பலமடங்கு உயர்த்தியது !

 

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின். (குறள்.666)

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

வேதரெத்தினம்வலைப்பூ,

[தி.ஆ: 2053, கும்பம் (மாசி) 17]

{01-03-2022}

------------------------------------------------------------------------------------