தேடுக !

நினைவுகள்.1984.32 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள்.1984.32 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 டிசம்பர், 2021

மலரும் நினைவுகள் (32) அரசாணைக் கோப்புகள் தொகுப்பு - ஆனைப் படை போல எனக்கு வலு சேர்ப்பு !

(1984 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்) 

நாகையில் பண்டகக் காப்பாளராகப் பணி புரிந்த போது  அன்னிலைத் தட்டச்சர் (Temporaray Typist) திரு.பத்மனாபனுக்கு, பணி நீட்டிப்புக் கிடைக்க நான் உதவியது பற்றி மலரும் நினைவுகள்  பகுதி (24) –ல் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா ? நான் அன்று செய்த உதவிக்காக,  திரு.பத்மநாபன் எனக்கு வேறொரு வகையில் உதவி செய்யத் தொடங்கினார் !

 

அலுவலகத்திற்கு வருகின்ற அரசாணைகள் அனைத்தும் பணியமைப்பு, கணக்கு, பயிற்சி, கொள்முதல், எழுது பொருள் போன்ற பிரிவுகளிலிருந்து உரிய மேற்குறிப்புடன் (Endorsement)  தட்டச்சுப் பிரிவுக்குச் செவ்வைப்படி (Fair Copy)  எடுப்பதற்கு அனுப்பப்படுவது வழக்கம்.  திரு.பத்மநாபன் அந்த அரசாணைகளைச் செவ்வைப்படி எடுக்கையில் கூடுதலாக ஒரு படி எடுத்து எனக்குத்  தரத் தொடங்கினார் !

 

நான் எந்த ஊரில் பணிபுரிந்தாலும், தான் கூடுதலாகத் தட்டச்சுப் படி  எடுத்த அரசாணைகளை – 50 எண்ணிக்கை அளவுக்குச் சேர்ந்தவுடன் -  தன் சொந்தச் செலவில், அஞ்சல் வழியாக எனக்கு அனுப்பி வைப்பார்.  இவ்வாறு அவர் அனுப்பிய அரசாணைகள் ஆயிரத்துக்கும் மேல் என்னிடம் சேர்ந்துவிட்டன !

 

அவற்றை என்ன செய்வது என்று சிந்தித்தேன். அரசாணைகள் என்றைக்கும் எனக்கு உதவும் என்பதால், அவற்றை ஒழுங்கு படுத்திப் புத்தக வடிவில் தைத்து அட்டையிட்டுப் பாதுகாப்பது என்று முடிவு செய்தேன்; முடிவைச் செயல்படுத்தவும் தொடங்கினேன் ! பண்டகக் காப்பாளராக இருக்கும் போதே இந்தப் பணிகள் தொடங்கிவிட்டன !

 

நாகையில் அலுவலக மேலாளராகப் பணியேற்றதும், எனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில், பதிவறையிலிருந்து இருப்புக் கோப்புகளை (Stoch File) எடுத்து அதிலுள்ள அரசாணைகள், அரசுக் கடிதங்கள் போன்றவற்றை ஆய்வு செய்து எவை முகாமையானவை (Important) என்று எனக்குத் தோன்றுகிறதோ அவற்றில் கொடி (Flag) வைத்து அடையாளமிடுவேன் !

 

மாலையில் அலுவலகப் பணி நேரம் முடிந்த பிறகு, அடையாளக் கொடி வைத்தவற்றைத் தட்டச்சு மூலம் நானே படி எடுக்கலானேன்.  ஆங்கில வழித் தட்டச்சில் கீழ்நிலைப் பிரிவில் (English – Lower) தேர்ச்சி பெற்று   இருந்தமையால்  அரசாணைகளைப் படியெடுப்பது  எனக்கு அத்துணைக் கடினமானதாகத் தோன்றவில்லை !

 

நாகையில் ஏற்பட்ட இந்தப் பழக்கம், பின்பு சேலத்துக்குச்   சென்ற பிறகும் தொடர்ந்தது. அலுவலக மேலாளராக நான் பணியாற்றிய பன்னிரண்டரை ஆண்டுகளும்  அரசாணைகளைத் திரட்டுவதில் முனைப்பாக  என்னை  ஈடுபடுத்திக் கொண்டேன். நான் விரும்பித் திரட்டத் தொடங்கிய   அரசாணைகள் எனக்கு மூன்று வழிகளில் கிடைக்கலாயின. (01) பழைய இருப்புக் கோப்புகளைப் பார்த்து நானே தட்டச்சு செய்து கொண்டவை  (02)  அலுவலக மேலாளருக்கென்று  பிரிவு அலுவலர்களால் படி இடப்படுபவை (Copies marked to O.M. by section Assistants)  (03) பல்வேறு அலுவலகங்களிலிருந்து திரு.பத்மநாபன் எனக்குத் திரட்டித் தருபவை !

 

நாகையில் நான் திரட்டியவை மிக அதிகம் என்பதால், அங்கு அலுவலக மேலாளராக நான் பணிபுரிகையில் என்னிடம்  7 தொகுதிகள் (7x500=3500) அளவுக்கு அரசாணைகள் புத்தக வடிவில்  சேர்ந்திருந்தன.  அரசாணைகளின் தலைப்பில் அந்த ஆணை பற்றிய  ஒரு வரி / இரண்டு வரிக்  குறிப்பினை சிவப்பு மையில் எழுதி வருவேன். அத்துடன் அதற்கு அட்டவணையும் புத்தக வடிவில் உருவாக்கி வரலானேன் !

 

அட்டவணையில்  இடம் பெறும் செய்திகளை அகர வரிசைப்படி அமைத்துக் கொண்டேன். எடுத்துக் காட்டாக பழகு பருவம் பற்றிய அரசாணைகள் என்றால் அதற்கான அட்டவணைக் குறிப்பு கீழ்க்காணும் வகையில் இடம்பெற்றிருக்கும்.

 

 

Probation – Declaration.................15/1,  25/2,  35/3,  47,4,  56/ 5

Probation – Extension......................98/1, 156/2, 23/3,

 

 

15/1 என்னும் குறிப்பில் 15 என்பது பக்கத்தையும், 1 என்பது என்னுடைய அரசாணைக் கோப்புத் தொகுதி எண்ணையும் குறிக்கும்.  இவ்வாறே 7 தொகுதிகளில் உள்ள அரசாணைகளும், அட்டவணையில் இடம் பெற்றிருந்தன !

 

அட்டவணை மட்டுமல்லாமல், அரசாணைகளுக்கான குறிப்பேடு ஒன்றும் பேணி வரலானேன்.  என் அரசாணைக் கோப்பில் இடம் பெற்றிருந்த அரசாணைகளை (தலைமைச் செயலக) துறைவாரியாக  (Finance, P&AR, Home, Employment Services, Employment and Training, Transport etc.) பகுத்து, ஒவ்வொரு துறைக்கும் தனித் தனிப் பக்கங்களை ஒதுக்கி, அதில் பதிவு செய்து  வந்தேன். எடுத்துக்காட்டுக்காக ஒரு குறிப்பின் விவரம் வருமாறு:-

 

(01)   G.O.Ms.No.,222,Finance , Dated 20-09-1978. (Second Pay Commision Pay Scale Revision)

(02)   G.O.Ms.No.450,Finance,  Dated10-02-1979. (Special Pay to Store Keepers).

 

அரசாணைக் கோப்புகள்  ஏழு தொகுதிகளும் என் சொந்த உடைமைகள். நானே முயன்று உருவாக்கியவை. அலுவலக மேலாளர் என்ற முறையில் என் பணிகள் அரசாணைகளின்படி  / விதிகளின்படி  அமைவதற்கு இவை எனக்கு உதவின. அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களோ, உதவியாளர்களோ அரசு ஆணைகளை  /  விதிகளை அறிந்து  அதன்படிக் கோப்பில் நடவடிக்கை எடுப்பதற்கு  அவர்களுக்குவிதிக்கோவைஎதுவும் துறையால் உருவாக்கி வழங்கப்படவில்லை !

 

வேலை வாய்ப்பு பயிற்சித் துறை தமிழ்நாட்டில் உருவாகி 60 ஆண்டுகளுக்கு  மேலாகிவிட்டன.  துறையின் விதிகள் அடங்கியவிதிக்கோவைஒன்றை உருவாக்கி அமைச்சுப் பணியாளர்களுக்கும், ஆட்சித்துறை அதிகாரிகளுக்கும்  வழங்கப் பட்டால்  அல்லவோ அவர்களால் தங்கள் பணிகளைச் செவ்வையாகச் செய்ய முடியும் !

 

இப்போதைய நிலையில் ஒவ்வொரு இளநிலை உதவியாளரும், உதவியாளரும்,  தமது கோப்புப் பணியை எப்படித் தொடங்குகிறார்கள் தெரியுமா ? “திரு.மாயவன், தனது ஈட்டிய விடுப்பிலிருந்து 9 நாள்களை அரசுக்கு ஒப்படைக்கவும் அதற்கு ஈடாக உரிய ஊதியம் மற்றும் படிகளைப் பெறவும்  இசைவு கோருகிறார். ஆணைக்காக !”

 

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”வேதரெத்தினம்” வலைப்பூ,

[தி.: 2052, நளி (கார்த்திகை) 20]

{06-12-2021}

--------------------------------------------------------------------------------------