தேடுக !

நினைவுகள்.1966.05 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள்.1966.05 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 நவம்பர், 2021

மலரும் நினைவுகள் (05) பண்டகத்தில் கண்டுபிடித்த உண்மை இருப்பும் போலி இருப்பும் !

 

(1966 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்) 

ஒரு குறிப்பிட்ட நாளில் கொள்முதல் செய்யப்பெற்ற அரியுருக்குப் பட்டைகள் 50 x 12 மி.மீ. 800 கிலோ   ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் இருப்பில் கொண்டு வரப்பெற்று முதல்வரால் சான்றொப்பம் இடப்பட்டிருந்தது !

 

இந்த இருப்பிலிருந்து, பயிற்சிப் பிரிவுகளுக்கு பலதடவைகளாக  வழங்கப்பெற்ற  300 கிலோ எடை, கணக்கிலிருந்து கழிக்கப்பெற்று அந்தப் பக்கத்தின் கடைசி வரியில் நிகர இருப்பாக  500 கிலோ  காட்டப்பட்டிருந்தது.  அந்தப் பக்கத்தில்  மேற்கொண்டு பதிவுகள் செய்ய இடமின்மையால்,  வேறொரு தொகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் 500 கிலோ எடை இருப்பு எடுத்து எழுதப்பட்டிருந்தது !

 

இவ்வாறு இருப்பினை எடுத்து எழுதும் போது  இரண்டு  குறிப்புகள் கட்டாயம் இடம்பெற்றிருக்க  வேண்டும். அவை:- (01) இப்பக்கத்தில் இருப்புக் கணக்கிலுள்ள 500 கிலோ எடை தொகுதி............பக்கம்............-க்குக் கொண்டு செல்லப்படுகிறது (Carry over entry)  (02) தொகுதி.........பக்கம்.........-ல் இருப்பிலிருந்த எடை 500 கிலோ இப்பக்கத்திற்குக் கொண்டு வரப்படுகிறது (Brought forward Entry) !

 

ஆனால் பிரச்சனைக்குரிய இந்த நேர்வில் இருப்பிலிருந்த 500 கிலோ  50 x  12 மி.மீ. பட்டைகள்  வேறொரு தொகுதில் ஒரு குறிப்பிட்ட  பக்கத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட செய்தி (Carry over message)  இப்பக்கத்தில் பதிவு செய்யப்படாமல் விடுபட்டுப் போய் விட்டது !

 

இதன் விளைவாக  பதிவேட்டின்  இரண்டு வெவ்வேறு தொகுதிகளில்/பக்கங்களில்   கீழ்க்காணும் வகையில் பதிவுகள் அமைந்து, உண்மை இருப்பான 500 கிலோவை இரட்டிப்பாக்கி போலி இருப்பாக (False Stock) 1000 கிலோ இருப்பதாகத் தோற்றமளிக்கச் செய்துவிட்டது !

 

(குழப்பமின்றி விளங்கிக் கொள்வதற்காக தொகுதி 1 பக். 50 & 70, தொகுதி 2. பக்.99.  என்று எடுத்துக் காட்டுக்காக இங்கு சொல்லப் பட்டுள்ளன.)

 

தொகுதி.1.பக்.50...அரியுருக்குப் பட்டை 50 x12 மி.மீ .........500 கிலோ கிராம்.

தொகுதி.2.பக்.99...அரியுருக்குப் பட்டை  50 x12 மி.மீ.........500 கிலோ கிராம்.

 

இவற்றுள் முதலில் காண்பிக்கப்பட்டிருக்கும் தொகுதி.1. பக்கம் 50-ல் இருந்த 500 கிலோ  இருப்பு சில நாள்  கழித்து அதே தொகுதியில் பக்கம் 70-ல் எழுத்தெழுதப்பட்டிருக்கிறது. ஆனால் பக்கம் 50-ல் இருந்த  அந்த 500 கிலோ  இருப்பு  தொகுதி 2. பக்கம் 99 -ல் முன்பே எடுத்து எழுதப்பட்டுவிட்டது என்பதை இங்கு  கவனிக்க வேண்டும்.  இவ்வாறு ஒரே இருப்பு இருமுறை வெவ்வேறு பக்கங்களில் எடுத்தெழுதப்பட்டதால், உண்மை இருப்பான 500 கிலோ என்பது போலியாக உயர்ந்து 1000 கிலோவாகிவிட்டது !

 

முதலில் சொல்லப்பட்டிருக்கும் 500 கிலோ என்பது  சில வழங்கல்களுக்குப் பிறகு (After few Issues) நிகர இருப்பு  200 கிலோ எனக் குறுகிவிட்டது. பொறுப்பு ஒப்படைப்பு / ஏற்பின் போது  இதை நான் பெற்றுக் கொண்டிருக்கிறேன் (Actually I received it). அதற்கு அடையாளமாக ஒப்படைத்தவர், பெற்றுக்கொண்டவர் இருவருமே ஒப்பமிட்டிருக்கிறோம் !

 

இரண்டாவதாகச் சொல்லப்பட்டிருக்கும் உண்மையில் இருப்பே இல்லாத 500 கிலோவில் 50 கிலோ எப்படியோ (?) வழங்கப்பட்டு நிகர இருப்பாக 450 கிலோ காட்டப்பட்டிருக்கிறது. இந்த எடைதான் என்னிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படாத  இனமாகும் !

 

இரண்டாவதாகச் சொல்லப்பட்ட  500 கிலோ என்பது இருமுறை செய்த தவறுதலான  பதிவு (Double Entry) என்பதை எடுத்துரைத்து, அதைப் பதிவேட்டிலிருந்து நீக்க வேண்டும். ஆனால் அதற்கு இடையூறாக நிற்பது தேவைச் சீட்டு மூலம் வழங்கப் பெற்ற 50 கிலோ எடை.  கள ஆய்வின் போது கணக்கில் இல்லாமல்  மிகையாகக் காணப்பட்ட எடை 50 கிலோ என்பதாக முதல்வரைப் பதிவு (Record) செய்யச் சொல்லி வழங்கப் பெற்ற 50 கிலோவை  ஞாயப்படுத்தி, தவறுதலாகக் கணக்கில் ஏற்றப்பட்ட  500 கிலோ கணக்கிலிருந்து நீக்கப்பட்டது !

 

கணக்கிலிருந்து நீக்கிவிட்டதால், இந்தப் பக்கத்திற்கான இருப்பை என்னிடம் ஒப்படைக்கவில்லை என்னும் பிரச்சனை இப்போது  நீங்கிவிட்டது. எனக்கு ஏற்பட்டிருந்த கவலையுணர்வும் நீங்கியது. செய்தி கேள்விப்பட்ட திரு.சுந்தர்ராஜன், மருத்துவ விடுப்பினை இடையில் முறித்துக்கொண்டு நன்னலச் சான்றுடன் (Fitness Certificate) பணிக்கு வந்து சேர்ந்தார் !

 

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”வேதரெத்தினம்” வலைப்பூ.

[தி.: 2052, துலை (ஐப்பசி) 08]

{25-10-2021}

--------------------------------------------------------------------------------------