தேடுக !

திங்கள், 20 டிசம்பர், 2021

மலரும் நினைவுகள் (41) சண்முகத்தின் வாளுக்கு இரையான பலியாடு !

(1992 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்)

சேலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய அலுவலகத்திற்கு 1992,  மே மாதம் 2-ஆம் நாள் வந்து இறங்கிய  திரு.சண்முகம் என்ன செய்தார் தெரியுமா ? முதல்வர் (பொ) திரு..இரத்தினம் அவர்களிடம், பணிமனை உதவியாளர்களுக்கான நேர்காணல் கோப்பினைக் கேட்டு வாங்கி ஐந்து நிமிடங்கள் ஆய்வு செய்தார் !

 

பின்பு முதல்வர் (பொ) அவர்களிடம் கீழ்க்காணும் கேள்விகளைக் கேட்டதாகத் தெரிகிறது !

 

(01) துணை இயக்குநர் / முதல்வர் பணி ஓய்வு பெறும் நாளில் நேர்காணலை ஏற்பாடு செய்திருந்தது அவர் சொந்த முடிவா அல்லது வேறு யாரும் சொல்லிச் செய்த ஏற்பாடா ?

 

(02) தேர்வு செய்யப்பட்ட மூவருக்கும் அலுவலகத்தில் உள்ள யாருடனாவது தொடர்பு உண்டா ?

 

(03) பணி விதிகளைப் பற்றிய செய்திகளை அவர்களுக்குத் தந்து உதவியது யார் ?

 

(04) தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்து தடையாணை பெறுவதற்கு அவர்களுக்கு உதவியது யார் ?

 

மேற்கண்ட கேள்விகளுக்கு திரு.இரத்தினம் அவர்கள் அளித்த மறுமொழியின் பிழிவு  எனத் தெரிய வருபவை:-

 

(01) தேர்வு செய்யப்பட்ட மூவரில் ஒருவர் ஓய்வு பெற்ற ஆட்சி அலுவலர் திரு.முகமது கனி யூசூப்பின் மகன்.

 

(02) திரு.முகமது கனி யூசூப் பணி விதிகள் பற்றிய செய்திகளை அறிந்தவர் தான்.

 

(03) ஆனால் அவருக்கு பணிவிதிகள் புத்தகத்தை (SERVICE RULES BOOK)  கொடுத்து அதை ஒளிப்படி (XEROX) எடுத்துக்கொள்ள உதவியது அலுவலகத்தில் உள்ள ஒருவராகத் தான் இருக்கக் கூடும்.

 

(04) தேர்வு பெற்றாலும் அதை வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், திரு.ஜவஹர், திரு.அங்குசாமி இருவரது முகவரியையும் திரு.கனி யூசூப்பிற்குக் கொடுத்து உதவியது அலுவலகத்தில் உள்ள யாரோ ஒருவராகத்தான் இருக்க முடியும். 

 

(05) பணி விதிகள் மட்டுமல்லாது அனைத்து விதிகள் பற்றியும் நன்கு அறிந்து வைத்திருப்பவர் பணியமைப்புப் பிரிவு அலுவலக மேலாளர் திரு.வை.வேதரெத்தினம்.

 

(06) திரு.முகமது கனி யூசூப்பும் திரு.வேதரெத்தினமும் ஒரே ஊர்க்கார்கள்நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள்.

 

முதல்வர் (பொ) திரு.இரத்தினம் அவர்களின் மறுமொழியை கேட்ட திரு.சண்முகம்,


விதிமுறைகளில் வல்லவர் என்று அடையாளம் காட்டப்பட்ட அலுவலக மேலாளராகிய நான் தான் இதற்குக் காரணமாக இருக்க வேண்டும் என்று  ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் !

 

திரு.சண்முகம் ஏனோ என்னை அழைத்துப் பேச முன்வரவில்லை. சற்றுநேரத்தில் புறப்பட்டுச் சென்றுவிட்டார். பணிமனைப் பக்கம் கூட எட்டிப் பார்க்கவில்லை !

 

திரு.சண்முகத்திற்கு ஏற்பட்ட சினத்தின் வீச்சு  5-5-1992 அன்று காலை சேலத்தில் வெளிப்பட்டது. சேலத்திலிருந்து ஈரோட்டுக்கு என்னை இடமாற்றல் செய்யும் ஆணை அன்று வந்திருந்தது. இடமாற்றலாணையுடன்  பிற கடிதங்களும் இணைந்து   அட்டை மடிப்புக்குள் (Thapal Pad) வைத்து என் மேசைக்கு வந்து சேர்ந்தது. எடுத்துப் படித்துப் பார்த்தேன். என்னை ஈரோட்டுக்கு மாற்றிவிட்டு அந்த இடத்தில் (சேலத்தைச் சேர்ந்த) திரு.கு.பெ.நாகராசன்  பணியமர்த்தப் பட்டிருந்தார் !

 

முதல்வர் (பொ) திரு..இரத்தினம் களங்கமில்லாதவராக இருந்தால், இடமாற்றல் ஆணையைப் பார்த்தவுடன் என்னை அழைத்து அதுபற்றிய செய்தியை என்னிடம் சொல்லியிருக்க வேண்டும். அவ்வாறு அவர் செய்யவில்லை. குற்றம் செய்த மனது குறு குறுத்தது போலும். இயல்புக்கு மாறான அவரது முகத் தோற்றமே அவர்  கீழறுப்பு வேலைக்குச் சொந்தக்காரர் என்பதை அவரைச் சந்தித்த போது எனக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது !

 

இடமாற்றலாணையைப்  பார்த்த அடுத்த இரண்டாவது நிமிடம் நான் அவரிடம் சென்று இப்பொழுதே என்னைப் பணியிலிருந்து விடுவியுங்கள். இங்கு நான் தொடர்ந்து பணி புரிய விரும்பவில்லை என்றேன். சற்று அதிர்ந்துபோன அவர், ஏன் அவசரப்படுகிறீர்கள் ஒருவாரம்  கழித்துப் போகலாமே என்றார். முடியாது என்று மறுத்துவிட்டு, பணியமைப்புப் பிரிவு உதவியாளரிடம் ஆணையைத் தந்து, இன்று முற்பகல் என்னை பணியிலிருந்து விடுவித்து வரைவு எழுதி வாருங்கள் என்றேன் !

 

கோப்பு வரைவுடன் வந்தது. என்னிடமிருந்த பொறுப்புக்களை இன்னொரு அலுவலக மேலாளர் திரு.எம்.கோபாலகிருஷ்ணனை ஏற்றுக்கொள்ளச்  சொல்லி அவருக்கு விடுவிப்பு ஆணையின் படியொன்று  குறியீடு செய்யப்பட்டது !

 

கோப்பு முதல்வருக்குச் சென்றது. வரைவுக்கு ஒப்புதல் அளித்த அவர் 5-5-1992 முற்பகல் என்பதற்கு மாற்றாக பிற்பகல் என்று மாற்றியிருந்தார். மதியம் 2 - 00 மணிக்கு அமைச்சுப் பணியாளர்களின் சார்பில் தேநீர் விருந்து. 3-00 மணிக்கு வீட்டிற்கு வந்துவிட்டேன் !

 

மறுநாள் காலை 10-00 மணிக்கு ஈரோடு அரசினர் தொழிற் பயிற்சி நிலைய அலுவலகத்திற்குச் சென்று ஆட்சி அலுவலர் திரு.சோம.நடராசன் அவர்களைப் பார்த்துப் பேசினேன்; அடுத்து முதல்வர் திரு.இரா..தங்கவேலு அவர்களைப் பார்த்து  பணியேற்பு அறிக்கையைத் தந்தேன் !

 

அலுவலகத்தில் பணியமைப்புப் பிரிவு எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்னொரு மேலாளரான திரு.இரத்தினமூர்த்தி கணக்குப் பிரிவின் மேலாளரானார். அவர் மனைவி திருமதி பரிமளா தேவி பணியமைப்புப் பிரிவு உதவியாளர். திரு.பழனிச்சாமி (ROYAL ENFIELD RED COLOUR BIKE RIDER) , இராமசாமி என வேறு இரு உதவியாளர்கள் இருந்தனர். நினைவில் வாழும் திரு...பாலகிருஷ்ணன் (இயக்ககத் துணை இயக்குநர்) அவர்களின் மகன் திரு.சிவாஜி என்பவர் இளநிலை உதவியாளர். பிற அலுவலர்களின் பெயர்கள் நினைவில்லை !

 

அன்றாடம் சேலத்திலிருந்து ஈரோட்டுக்குப் பேருந்து மூலமே சென்று வந்துகொண்டிருந்தேன். பயணத்திலேயே ஏறத்தாழ இரண்டரை மணி நேரம் செலவிட நேர்ந்தது ! இதற்கான மாற்று வாய்ப்பு என்ன என்பது பற்றி முனைப்பாகச் சிந்திக்கலானேன் !

 

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”வேதரெத்தினம்” வலைப்பூ,

[தி.: 2052, சிலை (மார்கழி) 03]

{18-12-2021}

-------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சனி, 18 டிசம்பர், 2021

மலரும் நினைவுகள் (40) உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் விளைந்த பயன் !

  (1992 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்)

சேலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய அலுவலகத்திற்கு 1992, மே மாதம் 2-ஆம் நாள் வந்து இறங்கிய  திரு.சண்முகம் என்ன செய்தார் ? இதைப் பற்றி அடுத்து உங்களுக்குச் சொல்கிறேன். இப்போது பணிமனை உதவியாளர் தேர்வு பற்றிய சிக்கலைப்  பார்ப்போம் !

 

திரு.சிராஜ் முகமது, திரு.ஜவஹர், திரு.அங்குசாமி மூவரும் ஒன்றிணைந்து தமிழ்நாடு ஆட்சிமுறைத் தீர்ப்பாயத்தை வழக்குரைஞர் மூலம் அணுகி, இரண்டாவது நேர்காணலுக்குத் தடையாணை பெற்றதைப் பற்றிச் சொல்லியிருந்தேன். தீர்ப்பாயத் தடையாணையின் விளைவாக இரண்டாவது நேர்காணல் நடைபெறாமல் போயிற்று. தடையாணையைத் தந்த தீர்ப்பாயம், வழக்கினை ஆய்வு செய்யும் பணியை அடுத்து வந்த  மாதத்தில்  எடுத்துக்கொண்டது !

 

வழக்குத் தொடர்பாக தீர்ப்பாயத்தில் உறுதியுரையை (AFFIDAVIT) அளிப்பதற்கு அரசு வழக்குரைஞர் அலுவலகத்தில்  மிகவும் தாமதம் ஏற்பட்டது. முதல்வரின் பணியமர்த்த உரிமை வரம்புக்குள் இயக்குநர் ஏன் தலையிட்டார் என்பதை  ஞாயப்படுத்த அவரால் முடியாததே இதற்குக் காரணம் !

 

இயக்குநரின்  சார்பில் வாதிட வந்த அரசு வழக்குரைஞர், தீர்ப்பாயம் கேட்ட எந்தக் கேள்விக்கும் முறையாகப் பதிலளிக்க முடியவில்லை. திரு.சிராஜ் முகமது, திரு.ஜவஹர், திரு.அங்குசாமி மூவரும் நேர்காணலின் விளைவாக, முதல்வர் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது  உண்மைதான் என்பதை அரசு வழக்குரைஞர் மூலம் தீர்ப்பாயம் உறுதிப் படுத்திக் கொண்டது !

 

மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டது பணி விதிகளுக்கு முரண்பாடானது அல்ல என்பதையும் தீர்ப்பாயம் உறுதிப்படுத்திக் கொண்டது. மூவரும் தேர்வு செய்யப்பட்டது பற்றி மறுப்பு விண்ணப்பம் (புகார் ) ஏதும் இயக்குநருக்கு வரவில்லை என்பதையும் அரசு வழக்குரைஞர் ஒப்புக்கொண்டார்.  மறுப்புரை ஏதும் வராத நிலையில் இயக்குநர் தலையிட்டு மறுபடியும் நேர்காணல் நடத்துமாறு உத்தரவிட்டது உள்நோக்கம் கொண்டது என்பதையும் அரசு வழக்குரைஞரால் மறுக்க முடியவில்லை !

 

பணிமனை உதவியாளர், பண்டக உதவியாளர் என்று இரண்டு பணியிடங்கள் ஒரே ஊதிய நிரக்கில் (PAY SCALE) இருப்பதை அரசு வழக்குரைஞர் ஒப்புக் கொண்டார். பணிமனை உதவியாளர் பணியிடத்துக்கு, 9 –ஆம் வகுப்பில் தேர்ச்சியும் ஏதாவது ஒரு தொழில்மனையில் ஓராண்டு காலச்  செயலறிவும் (EXPERIENCE), பண்டக உதவியாளர் பணியிடத்துக்கு 9 –ஆம் வகுப்பில் தேர்ச்சியும் ஆறுமாத காலச் செயலறிவும் (EXPERIENCE) போதுமென்று தானே பணி விதிகள் கூறுகின்றன, என்னும் கேள்விக்கு அரசு வழக்குரைஞர் ஆம் என்று ஒப்புக்கொண்டார் !

 

நேர்காணலின் மூலம்  தேர்வு செய்யப்பெற்ற மூவரும் ஓராண்டு காலச் செயலறிவு (EXPERIENCE) பெற்றிருக்கையில் அந்த நேர்காணலை இயக்குநர் எப்படி நீக்கம் செய்ய முடியும் என்ற வினாவுக்கு அரசு வழக்குரைஞர் மறுப்புச் சொல்ல முடியவில்லை !

 

பணிமனை உதவியாளர், பண்டக உதவியாளர் இரண்டுக்கும் ஒரே ஊதிய நிரக்கை வைத்துவிட்டு வெவ்வேறு தகுதிகளை வரையறை செய்திருப்பது சட்டப்படிச் செல்லுமா என்னும் கேள்வியை  தீர்ப்பாயம் முன்வைத்த போது, இதை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன் என்றார் அரசு வழக்குரைஞர் !

 

வழக்காய்வு முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு பின்னொரு நாளில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் இரண்டு கருத்துகளைத் தீர்ப்பாயம் குறிப்பிட்டிருந்தது (01) பணிமனை உதவியாளருக்கான நேர்காணலை நடத்தவும், தகுதியுள்ளவர்களை பணியமர்த்திக் கொள்ளவும் பணிவிதிகள் (Service Rules) முதல்வருக்கு உரிமை அளித்திருக்கிறது. அதன்படியே முதல்வர்  செயல்பட்டிருக்கிறார். அவர் மூவரைத் தேர்வு செய்ததில் எந்தத் தவறும் இல்லை. முதல்வரின்  செயலில் இயக்குநர் தலையிட்டது தேவையற்றது (UNWARRANTED); உள் நோக்கம் கொண்டதாகவும் அமைந்திருக்கிறது. எனவே வழக்குத் தொடுத்திருக்கும் மூவரும் பணியில் அமர்த்தப்பட உரிமை உள்ளவர்கள் ஆகிறார்கள் !

 

(02) எனினும், பணிமனை உதவியாளர், பண்டக உதவியாளர் ஆகிய இரு பணியிடங்களுக்கும் ஒரே ஊதிய நிரக்கு இருக்கையில் இருவேறு தகுதிகளை பணி விதிகளில் வரையறுத்திருப்பது ஏற்றத் தாழ்வு காண்பிக்கும் செயலாக உள்ளதால் இந்த விதிகள் செல்லத் தக்கதல்ல.  புதிய விதிகளை அரசு உருவாக்கி நடைமுறைக்குக் கொண்டு வருவதுடன் , அவ்விதிகளின்படிப் புதிதாக நேர்காணலை நடத்திடத் தீர்ப்பாயம் உத்தரவிடுகிறது !

 

வழக்குத் தொடுத்தவர்களின் ஞாயத்தைத் தீர்ப்பாயம் ஒப்புக்கொண்டாலும், ”பண்டக உதவியாளர்தகுதி பற்றிய வழக்கு எதுவும் எழாத நிலையில், தீர்ப்பாயத்தின் இரண்டாவது கருத்து  தேவையற்ற குழப்பத்தை உருவாக்கிவிட்டது ! வழக்குத் தொடுத்தவர்களுக்குத் தீர்வும் கிடைக்கவில்லை. இவர்கள் முன் இப்போது இருந்த ஒரே வாய்ப்பு உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கை எடுத்துச் செல்வது தான் !

 

இவர்களுக்குக் கைக்கொடுக்க, தீர்ப்பாயத்தில் வழக்கை நடத்திய வழக்குரைஞரே முன்வந்தார். போக்குவரத்துச் செலவும் நீதிமன்றக் கட்டணமும் தந்தால் போதும், எனக்குக் கட்டணம் எதுவும் தரவேண்டாம், உச்சநீதிமன்றத்தில் வழக்கை நானே நடத்துகிறேன் என்று உறுதியளித்தார்.  திரு.ஜவஹர், திரு,அங்குசாமி இருவரும் வட்டிக்குக் கடன்  வாங்கி திரு,கனி யூசூப் அவர்களிடம் ஒரு  குறிப்பிட்ட தொகையை அளித்தனர். எஞ்சிய செலவை எல்லாம்  திரு.கனி யூசூப் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார் !

 

வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது. நீதிமன்ற நடைமுறைகளையெல்லாம் நிறைவு செய்து வழக்கு ஆய்வுக்கு வருவதற்கு ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அரசு வழக்குரைஞருக்கு  உரிய வாய்ப்பளித்து அவரது வாதுரையைக் கேட்டபின் உச்சநீதி மன்றம் 1994 –ஆம் ஆண்டு மே மாதம் தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பின் விவரம் வருமாறு:-

 

As per Service Rules prescribed for the post of Workshop Assistant, the Principal is the competent Authority to conduct Interview, select qualified candidates  and appoint them in the so called vacancies. The Principal has rightly acted in accordance with existing Rules. So, the selection of the Petitioners is valid and they deserve appointment. The interference of the Director in this regards is against rules and unwarranted. The observation of the Tribunal regarding framing of fresh service Rules is not warranted at this juncture. Prayer of the Petitioners is admitted and direct the Government to appoint them within 15 days.

 

மிக ஏழ்மையான நிலைமையிலும் கூட மனம் தளராமல் உச்சநீதிமன்றம் வரை சென்ற திரு.ஜவஹர், திரு.அங்குசாமி இருவரின் விடாமுயற்சியும் திரு.கனி யூசூப் அவர்களின் உழைப்பும் இறுதியில் வென்றது. இவர்களின் முயற்சிகளைவிட, முதல்வர் திரு.தா.அரங்கநாதன் அவர்களின் நேர்மைக்கும் கருணையுள்ளத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகத் தான் நான் இதைப் பார்க்கிறேன்  !

 

வழக்கில் வெற்றி பெற்ற மூவரும் சேலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பணிமனை உதவியாளர்களாக 3-6-1994 அன்று பணியேற்றுக்கொண்டார்கள். இவர்களுள் திரு.ஜவஹர், திரு.அங்குசாமி இருவரும் காலப்போக்கில் இளநிலைப் பயிற்சி அலுவலர், உதவிப் பயிற்சி அலுவலர் பதவிகளை அடைந்து அண்மையில் பணியிலிருந்து ஓய்வும் பெற்று நலமுடன் சேலத்தில் வாழ்ந்து வருகிறார்கள் !

 

திரு,சிராஜ் முகமது கிண்டி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சிப் பிரிவில் பயிற்றுநராகப் பணியாற்றி வருவதாகக் கேள்விப்படுகிறேன். திரு.முகமது கனி யூசூப் புகழுடம்பு எய்திவிட்டதாகச் செய்தி. 29 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த நிகழ்வுகள் அனைத்தும் பசுமரத்தாணி போல் என் நெஞ்சில் இன்றும் பதிந்திருக்கிறது !

 

பரிவு மனம் படைத்த திரு.தா.அரங்கநாதன் வென்றார்; பணத்திற்காக நெறி தவறி நடந்த திரு.சண்முகம் தோற்றார்; திரு.ஜவஹர், திரு.அங்குசாமி, திரு,சிராஜ் முகமது ஆகியோர் நெஞ்சில் திரு.அரங்கநாதன் அவர்களுடன் நானும் வாழ்கிறேன் !

 

{வழக்குரைஞருக்குத் தரும் பொருட்டு நான் எழுதிக் கொடுத்த வழிகாட்டிக் குறிப்பு, தீர்ப்பாயத்தின் தீர்ப்புரை, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூன்றையும் ஒப்பிட்டுப் பாருங்கள்; ஒரு உண்மை புரியும் ! }

 

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”வேதரெத்தினம்” வலைப்பூ,

[தி.: 2052, சிலை (மார்கழி) 02]

{17-12-2021}

-------------------------------------------------------------------------------------