(1979 -ஆம் ஆண்டு நிகழ்வுகள்)
அப்போது நாகப்பட்டினம் தொழிற் பயிற்சி நிலையத்தின் முதல்வர்
பதவியை, திருச்சி தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் திரு.N.R.சுப்ரமணியன்
அவர்கள் கூடுதல் பொறுப்பாகக் கவனித்து வந்தார். குறிப்பிட்ட
மாதம் 25 ஆம்
நாள் (தேதி)
அவர் நாகப்பட்டினத்தில் பணியில் இருந்ததால் அவரிடம் ஒப்புதல்
பெற்று பணிநீக்க ஆணையைத் திரு.பத்மநாபனுக்கு வழங்க முடிந்திருக்கிறது !
மறுநாள் திரு.N.R.சுப்ரமணியன் திருச்சிக்குச்
சென்றுவிட்டார். பணிநீக்கம்
ஆகிவிட்டதால் திரு.பத்மநாபன் அலுவலகத்திற்கு வரவில்லை. 27 –ஆம்
நாள் (தேதி)
அரசிடமிருந்து வேறொரு உத்தரவு வந்திருந்தது. அதில், அன்னிலைப்
பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு
(Temporay Personnels) ஒரு மாதத்திற்குப் பணி நீட்டிப்புச் செய்வதாக அரசு உத்தரவிட்டிருந்தது. நாகை
சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த இந்த ஆணையின் சான்றிட்ட படியொன்றை (Attested Copy) வாங்கிக்கொண்டு திரு. பத்மநாபன்
என்னிடம் வந்தார் !
அவரை மாலையில் வீட்டுக்கு வரச் சொல்லி ஒரு விண்ணப்பம் எழுதச்
செய்தேன். ஒருமாதம் பணி நீட்டிப்பு வழங்கும் அரசாணையைக் குறிப்பிட்டு, தனக்கும்
பணி நீட்டிப்பு வழங்குமாறு அதில் கோரியிருந்தார். 28-ஆம்
நாள் (தேதி)
அவரையும் அழைத்துக்கொண்டு திருச்சிக்குச் சென்றேன். வந்த
நோக்கத்தை முதல்வர் திரு.N.R.சுப்ரமணியன் அவர்களிடம் எடுத்துரைத்தேன். திருமண
அழைப்பிதழை அவரிடம் காட்டினேன்.
பணிநீக்க ஆணை வழங்கிய பின்பு என்ன செய்ய முடியும் என்று கேட்டார் !
அரசின் இரண்டாவது உத்தரவைக் குறிப்பிட்டு, முன்பு
வழங்கப்பெற்ற பணிநீக்க ஆணை நீக்கம்
(இரத்து) செய்யப்படுவதாகவும், திரு.பத்மநாபனுக்கு
மேலும் ஒருமாதம் பணி நீட்டிப்பு தரப்படுவதாகவும், இடைப்பட்ட
நாள்களை ஊதியமில்லா விடுப்பாக முறைப்படுத்துவதாகவும் புதிய ஆணை வங்கினால் போதும் என்றேன். நான்
மீண்டும் நாகை வர சில நாள் ஆகுமே என்றார் !
திரு.பத்மநாபனின் விண்ணப்பத்தில், நாகை
அலுவலக மேலாளருக்கு நீங்கள் ஒரு குறிப்பு எழுதுங்கள். அதில், ”திரு.பத்மநாபனுக்கு
முன்பு வழங்கிய பணிநீக்க ஆணையை நீக்கிடுக, மேலும்
ஒரு மாதம் பணி நீட்டிப்பு வழங்கி ஆணை வழங்குக, இடைப்பட்ட நாள்களை ஊதியமில்லா விடுப்பாக முறைப்படுத்துக, நான் அங்கு வந்த பிறகு அந்த ஆணைக்கு பின் ஒப்புதல் (Post
Arrroval) அளிக்கிறேன்” என்று குறிப்பிடுங்கள் என்றேன் !
முதல்வர் திரு.பத்மநாபனின் விண்ணப்பத்தில்
அவ்வாறே குறிப்பு எழுதி என்னிடம் தந்தார். நன்றி
சொல்லி வாங்கிக் கொண்டு உடனே நாகை திரும்பினேன். பிற்பகல் 2-00 மணி
வாக்கில் அந்த விண்ணப்பத்தை அலுவலக மேலாளர் திரு.ப.பாலசுப்ரமணியம்
அவர்களிடம் தந்து, உரிய ஆணை வழங்கக் கேட்டுக்கொண்டேன். அவர்
பணியமைப்புப் பிரிவு உதவியாளரிடம் தந்து, ஆணையைத் தயாரிக்கச்
சொன்னார். ஒருமணி
நேரம் காலத் தாழ்வு செய்து பார்த்தார்; எனினும் அவருக்கு
வேறு வழியில்லை !
பணிநீட்டிப்பு ஆணையை வாங்கி திரு.பத்மநாபனிடம்
கொடுத்துவிட்டு வருகைப்பதிவேட்டில் கையொப்பமிட அவரை அனுமதியுங்கள் என்று அலுவலக மேலாளரிடம்
கேட்டுக்கொண்டேன். பிற்பகலில்
பணியில் சேர்வதாக ஒரு அறிக்கை எழுதி மேலாளரிடம் தந்துவிட்டு, தாமத வருகைப் பதிவேட்டில் பிற்பகல் 1-30 மணி
என்று எழுதிக் கையொப்பமிட்டார்
!
அன்று அவர் முகத்தில் நான் பார்த்த மகிழ்ச்சியும் நிம்மதியும்
இன்றும் என்
மனத் திரையில் திரைப்படம் போல் ஓடுவதைக் காண முடிகிறது. துன்பப்படுவோருக்கு உதவி செய்யாவிட்டால், மனிதப்
பிறவிக்குப் பொருளே இல்லாமற் போய்விடுகிறது . இந்தக்
கோட்பாட்டை மையமாக வைத்தே,
உடுக்கை இழந்தவன் கை போல இடுக்கண் களைவதை என் வாழ்க்கையின்
குறிக்கோளாக இன்று வரைக் கடைப்பிடித்து வருகிறேன் !
பணியில் நீட்டிப்புப் பெற்ற மகிழ்ச்சியுடன் திரு.பத்மநாபன்
திருமண நாளை எதிர்கொண்டார்.
அரசு வெளியிடுகின்ற சட்டங்களிலும் விதிகளிலும் மக்கள் நலனுக்கு உதவுகின்ற வகையில் என்னென்ன கூறுகள் (Points) உள்ளன
என்று அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டுமே
தவிர, மக்கள் நலனுக்கு எதிராக உள்ள கூறுகளை (Points) தேடி
அலைவது என்பது கெடுமதியாளர்களின் (Cruel Minded People)
அடையாள வெளிப்பாடு ஆகும் !
அன்னிலைப் பணியாளர்களுக்கு முதன்முறையாக ஒருமாதம் பணி நீட்டிப்புத்
தந்த தமிழக அரசு, அதன் பின் ஒவ்வொரு மாதமாக நீட்டித்துக்கொண்டே வந்தது. திரு.பத்மநாபனும் ஒவ்வொரு
மாதமாக மேலும் பல மாதங்கள் நீட்டிப்புப் பெற்று, இறுதியில் 996 அரசாணைப்படி நாகை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நிலைப்பணியில் தட்டச்சராக
அமர்வு பெற்றார். காலப்
போக்கில் இரண்டு பதவி உயர்வுகளையும் பெற்ற அவர், பத்தாண்டுகளுக்கு
முன் இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் பதவியிலிருந்து ஓய்வு பெற்று மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் !
காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது (குறள்)
(உற்ற
நேரத்தில் ஒருவர்க்குச் செய்யும் உதவி (நன்மை), அளவில் சிறியதாயினும் அதன் தன்மையை ஆராய்ந்தால் உலகத்தைவிட மிகப் பெரிதாக இருக்கும் !)
--------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.ஆ: 2052, நளி (கார்த்திகை) 12]
{28-11-2021}
--------------------------------------------------------------------------------------