(1982 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்)
ஒவ்வொரு அறை முகப்பிலும் தமிழ்ப் பெயர்ப் பலகைகள் பொருத்தப்
பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்க்கத் தொடங்கியது. அந்தக்
காலக் கட்டத்தில் திரு.மயில்சாமி
என்பவர் சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார். பட்டதாரிகள் தொகுதியிலிருந்து தேர்வு பெற்றவர் என்பதாக நினைவு !
அவர் ஒரு நாள் ஏதோவொரு வேலை நிமித்தம் பயிற்சி நிலைய அலுவலர்
ஒருவரைச் சந்திக்க வந்திருந்தார். அவர் கண்களில் இந்தப் பெயர்ப் பலகைகளில் சில பட்டிருக்கின்றன. உடனே
அவர் தான் பார்க்க வந்த அலுவலரிடம் இது பற்றிக் கேட்டிருக்கிறார். அவரிடமிருந்து
அனைத்துச் செய்திகளையும் கேட்டறிந்த திரு.மயில்சாமி, அந்த
அலுவலரை அழைத்துக் கொண்டு அனைத்து இடங்களுக்கும் சென்று எல்லாப் பெயர்ப் பலகைகளையும்
பார்த்திருக்கிறார் !
பின்பு, நேராகப் பண்டகத்திற்கு வந்து, அங்கிருந்த
என்னிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, பெயர்ப் பலகைகளுக்குப்
பெயர் தெரிவு செய்த நேர்த்தி பற்றித் தான் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகச் சொல்லி எனக்குத் தன் பாராட்டுரைளைத் தெரிவித்தார் ! அடுத்து
பேணற்பணி மேற்பர்வையாளர் திரு கிருஷ்ணனைச் சந்தித்து அவருக்கும் தன் பாராட்டுகளைத்
தெரிவித்திருக்கிறார் !
தான் வந்த வேலை முடிந்த பிறகு முதல்வர் திரு.இரா.அ.தங்கவேலு
அவர்களை சந்தித்து, அறைகளுக்குத்
தமிழில் பெயர் வைத்தமைக்காகத் தன் பாராட்டுகளை மிகவும் மகிழ்ச்சியுடன் பதிவு செய்திருக்கிறார். பிற அலுவலகங்களுக்குத்
தான் செல்ல நேர்கையில் அந்த அலுவலகத் தலைவர்களிடம் தங்கள் முயற்சியைக் குறிபிட்டு, அவர்களும் அவ்வாறே செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப் போவதாகவும் தெரிவித்து
விடைபெற்றுச் சென்றார் !
திரு.மயில்சாமி அவர்களின் பாராட்டுரையால் மிகவும் மகிழ்ச்சியும்
ஊக்கமும் அடைந்த திரு.கிருஷ்ணன், என்னிடம் ,” அண்ணா ! வேறு
ஏதாவது ஒன்று புதுமையாகச் செய்யலாம் ! ஏடல் (Idea) ஏதாவது
சொல்லுங்களேன்” என்றார். அப்போது தோன்றிய கருத்து தான் பயிற்சி நிலைய வளாகத்தில் நிழல்தரும்
மரங்கள் நட்டுப் பசுமைப்படுத்தல் !
முதல்வர் திரு.இரா.அ.தங்கவேலு, திரு.கிருஷ்ணன், நான்
ஆகிய மூவர் கூட்டணியின் கலந்துரையாடல் விளைவாக வனத்துறை அலுவலர்களை அணுகி ஐந்நூற்றுக்கும்
மேற்பட்ட பல்வேறு
வகை நிழல்மர நாற்றுகளை வாங்கி வந்து பயிற்சி நிலைய வளாகம் முழுவதும் நட்டு, பயிற்சியாளர்களின்
உதவியால் அன்றாடம் நீர் விடச் செய்து பேணி வந்தோம். இப்பொழுது நீங்கள் சேலம் செல்ல நேர்ந்தால், அங்குள்ள
பசுமைத் தோற்றத்தைக் கண்டு களிக்கலாம் !
எந்த ஊரில் இருந்தாலும், அங்கு
எந்தப் பணியைச் செய்தாலும், அதில் எனது முத்திரை இருக்க வேண்டும் என்பது என் நெடுநாள்
இலக்கு; நோக்கம். அதைத்தான் இன்று வரை இயன்ற அளவுக்குப் பின்பற்றி வருகிறேன் ! எந்த
இலக்கும் இல்லாத வாழ்க்கை பாலைவனத்து மணல்வெளிகளில் பயணம் செய்வதற்குச் சமம்
என்பது என் கருத்து !
ஈராண்டுகள் முன்பு, சேலத்தில்
பணிபுரியும் அலுவலர் ஒருவரிடம் எழினி வழியாகப் பேசுகையில், தமிழ்ப்
பெயர்ப் பலகைகள் பற்றிக் கேட்டேன். சுவர்களுக்கு வண்ணம் தீட்டிய வேலையாட்கள், பெயர்ப் பலகைகள் மீதும் வண்ணச்
சுண்ணாம்பைப் பூசி, மறைத்துவிட்டதால், அனைத்தும்
அழிந்து போய்விட்டன என்று கூறி
வருத்தப்பட்டார் !
அதைக் கேட்டு என் மனம் மிகவும் வருந்தியது. அப்போது
எனக்குத் தோன்றிய எண்ணம், “வேலையாட்கள் பெயர்ப் பலகைகள் மீது வண்ணச் சுண்ணாம்பைப் பூசுகையில், எல்லா அலுவலர்களும் பார்த்துக் கொண்டா இருந்தார்கள் ? ஒருவர்
கூட அதைத் தடுக்கவில்லையா ? தமிழர்களிடம் தமிழுணர்வு அற்றுப் போய்விட்டதா ?”
சில மனிதர்கள் சேர்ந்து பூந்தோட்டம் ஒன்றை அமைக்கிறார்கள்.
தோட்டமெங்கும் வண்ண வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. தோட்டத்திற்கு வருவோர்
போவோர் எல்லாம் பூக்களின் அழகில் மயங்கிக் களிக்கிறார்கள். தோட்டப் பொறுப்பாளர்களாக
அடுத்து வருவோர், தோட்டத்தின் நேர்த்தி கெடாமல் பாதுகாக்க வேண்டாவா ? ஏன் அந்தப் பொறுப்புணர்ச்சி
அவர்களுக்கு இல்லை ? அவர்கள் மனிதர்கள் இல்லையா ? சம்பளத்திற்காக மட்டுமே வேலை செய்யும்
எந்திரங்களா ?
சேலத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பெயர்ப் பலகைகள், மேனாள்
முதல்வர், நினைவில் வாழும் திரு.இரா.அ.தங்கவேலு அவர்களின் பெயரை நினைவுகூர்வன அல்லவா
? அவரது பின்னவர்களுக்கு (Successors) திரு.தங்கவேலு அவர்களின் முத்திரையை அழிப்பதில் அப்படி என்ன
வேணவா ? தாமாக எந்தப் பணியையும் செய்வதற்கு முனைப்பில்லாத இவர்கள், தம் முன்னவர்கள்
(Predecessors) செய்திட்ட பணிகளையாவது அழியாமல்
பாதுகாக்கலாம் அல்லவா ? கூறுகெட்டவர்கள் என்று குமுகாயம் குறிப்பிடுவது இவர்களைத் தானா
?
------------------------------------------------------------------------------------
ஆக்கம்
+ இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”வேதரெத்தினம்” வலைப்பூ,
[தி.ஆ:
2052, நளி (கார்த்திகை) 16]
{02-12-2021}
------------------------------------------------------------------------------------