(1984 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்)
துப்புரவுப் பணியாளர் திரு.ஏழுமலையிடம்
சில தவறான பழக்கங்கள் இருந்தன.
(01) மது அருந்துதல் (02) உயர்
அலுவலர்கள் உள்பட யாரையும் பார்க்கையில் வணங்காமை (03) முன்றிலில் (PORTICO) அமர்ந்துகொண்டு, யார்
வந்தாலும் எழுந்திராமை
(04) சொன்ன வேலையைச் செய்ய மறுத்தல் !
துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் காவலர்களின் தலைவனாக, தன்னை
நினைத்துக்கொண்டு மிதப்புடன் செயல்பட்டதால் பயிற்சி நிலைய அலுவலர்கள் அனைவருமே அவர்
மீது மன வருத்தத்திலும் எரிச்சலிலும் இருந்தனர். யாருக்கும் வணக்கம் செலுத்தும்
பணிவு இல்லாததால் அவருக்கு “வணங்காமுடி” என்றொரு குறியீட்டுப் பெயரும்
அலுவலர்களிடையே உண்டு. தவறான
சூழ்நிலையும், மேலதிகாரிகளின் கண்டிப்பும் இன்மையுமே சில அலுவலர்களைத் தடம்
மாறிச் செல்ல வைத்துவிடுகிறது. இவ்வாறு தடம் மாறிச் சென்றவர்தான் திரு.ஏழுமலை !
தட்டச்சர் திரு.ஸ்டாலின்
நான் கேட்டிருந்த படிவத்தை, 5 படிகள் தட்டச்சு செய்து கொண்டு வந்து என்னிடம் கொடுத்தார். அந்தப்
படிவம் வேறொன்றுமன்று – இடைநீக்கம் (Suspension) செய்வதற்கான ஆணை தான். தட்டச்சு
செய்து கொண்டிருக்கையிலேயே சில அலுவலர்கள் அதைக் கவனித்து வெளியிலும் கசிய வைத்து விட்டனர்!
இடைநீக்கல் ஆணைப் படிவத்தை என்னிடம் கொடுத்த தட்டச்சரிடம் வேறொரு கடித வரைவைக் கொடுத்து 1 + 2 தட்டச்சு
செய்து கொண்டு வருமாறு தெரிவித்தேன் – நாகூர் காவல் நிலையத்திற்கு
முகவரியிடப் பெற்ற திரு.ஏழுமலை மீதான புகார்க் கடிதம் அது . இந்தச்
செய்தியும் வெளியில் கசிந்துவிட்டது !
சில அலுவலர்கள் திரு.ஏழுமலையை
அழைத்து, நிலைமை கைம்மீறிப் போய்க்கொண்டிருக்கிறது, இடைநீக்கல்
ஆணை முதல்வரின் கையெழுத்துக்குக் காத்திருக்கிறது, உன் மீதான
புகார்க்கடிதம் காவல் நிலையத்துக்குச் செல்லப் போகிறது. உன் வேலைக்கு
நீயே உலை வைத்துக் கொண்டிருக்கிறாய், உடனடியாக மேலாளரிடம் சென்று
மன்னிப்புக் கேட்டு, சிக்கலிலிருந்து தப்பிக்கப் பார் என்று அறிவுரை கூறியிருக்கின்றனர் !
அடுத்த ஐந்தாவது நிமிடம் துப்புரவுப் பணியாளர்கள், காவலர்கள்
அனைவரும் ஒன்று சேர்ந்து என்னிடம் வந்தனர். அவர்களில்
முதலாவதாக திரு.ஏழுமலை நின்றுகொண்டிருந்தார். அவர்
என்னைப் பார்த்து, “தெரியாமல் தப்புசெய்துவிட்டேன், என்னை
மன்னித்து விடுங்கள்” என்று கூறினார். ”நீ என்ன
தப்பு செய்தாய், எதற்காக என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்றேன். ”நேற்று
இரவு முதல்வரிடமும் அவர் வீட்டாரிடமும் நான் நடந்து கொண்ட முறை, மிகத்
தவறானது என்று உணர்கிறேன், அதற்காக என்னை மன்னித்து விடுங்கள்” என்றார் !
”நீ மன்னிப்புக்
கேட்க வேண்டியது முதல்வரிடம்” என்று சொல்லி அவர்களை முதல்வரிடம் அனுப்பினேன். அவர்கள்
அலுவலகத்திலிருந்து வெளியேறி முதல்வர் அறைக்குச் செல்லும் முன் நான் உழலைக் கதவை (Wicket Door) திறந்து கொண்டு முதல்வர் அறைக்குச் சென்று முதல்வருடன் அமர்ந்து கொண்டேன். திரு.ஏழுமலையும்
அவரது உடன் பணியாளர்களும் முதல்வர் அறைக்குள் வந்தனர். திரு.ஏழுமலை, முதல்வரிடம் ”நேற்று
இரவு நான் நடந்துகொண்ட முறை தவறு என்பதை உணர்கிறேன். அதற்காக
மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார் !
அப்போது நான் குறுக்கிட்டு, “முதல்வர்
உன்னை மன்னிக்கலாம், அவர் வீட்டுப் பெண்டிர் உன்னை மன்னிப்பார்களா ?” என்று
கேட்டேன். திரு.ஏழுமலையுடன் வந்திருந்த ஒருவர், “அவன்
தெரியாமல் செய்துவிட்டான், இந்த முறை மன்னித்து விட்டுவிடுங்கள்” என்று
கேட்டுக்கொண்டார். ”பாதிக்கப்பட்டது உங்கள் வீட்டுப் பெண்டிர் என்றால் அப்போதும்
இப்படித்தான் வந்து மன்னிக்கச் சொல்வீர்களா” என்றேன். அவரால்
பேசமுடியவில்லை !
அலுவலக உதவியாளரை அழைத்து, என் மேசை
மீது வைத்திருக்கும் தாள்களை எடுத்துவரச் சொன்னேன். எடுத்து
வந்தவுடன் முதல்வரிடம் கொடுத்தேன். அவ்வளவு தான் ! திரு.ஏழுமலை
எங்கள் இருவரது கால்களிலும் (சாஷ்டாங்கமாக) விழுந்து, ”என்னை
இந்த முறை மன்னித்து விடுங்கள். இனிமேல் நான் எந்தத் தவறு செய்தாலும் நீங்கள் என்ன தண்டனை
கொடுத்தாலும் ஒப்புக் கொள்கிறேன்” என்று சொல்லிக்
கண்ணீர் சிந்தினார் ! “வணங்காமுடி”யின் கர்வம் அந்த நொடியில்
நொறுங்கிப் பொடிப் பொடியாகிப் போனது !
”சரி ! நேற்று
என்ன நடந்தது, நீ என்ன செய்தாய் என்று குறிப்பிட்டு, மன்னிப்புக்
கேட்டு எழுதிக் கொ0ண்டு வா” என்றேன். அனைவரும் வெளியில் சென்று, கலந்துரையாடினர். அவர்கள்
சொன்னபடி திரு.ஏழுமலை எழுதிக் கொண்டு உள்ளே வந்தார். அவருடன் ஏனையோரும் வந்தனர். எழுதிக்கொண்டு
வந்த விண்ணப்பத்தை என்னிடம் தந்தனர். படித்துப் பார்த்துவிட்டு, அவர்களிடம்
சில கருத்துகளைச் சொன்னேன் !
”முதல்வர்
மிகவும் வருத்தத்தில் இருப்பதால், அவர் பேச விரும்ப வில்லை. அவர்
சார்பாக நான் சில செய்திகளை உங்களுக்குத் தெரிவிக்கிறேன். இடைநீக்கம்
செய்யும் முடிவு இப்போதைக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. காவல்
துறைக்குப் புகார்க் கடிதம் அனுப்பப்படும்; ஆனால்
மேல்நடவடிக்கை எடுப்பதை இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வையுங்கள் என்று கேட்டுக்கொள்ளப்படும் !”
”ஏழுமலை
இனிமேல் மது அருந்தக் கூடாது. பயிற்சி நிலைய அலுவலர்கள் அனைவருமே ஏழுமலையை விடப் பதவியில்
உயர்ந்தவர்கள். பலர் அகவையில் மூத்தவர்கள். ஆகையால்
அவர்களை ஏழுமலை மதிக்க வேண்டும். மதிப்பதற்கு அடையாளம் வணக்கம் சொல்லுதல். அதைப்
பின்பற்ற வேண்டும். முன்றிலில் (PORTICO) உட்காரக் கூடாது !
துப்புரவு என்பது கட்டடத்துக்கு உள்ளே மட்டுமல்ல; வெளியிலும் - விளையாட்டுத்
திடல், அலுவலர் குடியிருப்பு உள்பட எல்லா இடங்களையும் துப்புரவாக வைத்திட வேண்டும். பணி நேரம்
போக எஞ்சிய நேரத்தில் பூந்தோட்டம் உருவாக்க வேண்டும் ! இது ஏழுமலைக்கு
மட்டுமல்ல, காவலர்கள் உள்பட அனைவருக்குமே பொருந்தும் !”
”ஏழுமலை
எழுதித் தந்திருக்கும் மன்னிப்புக் கடிதம் கோப்பில் இருக்கும் கோப்பு இன்னும் ஓராண்டுக்கு
முடிக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்படும். இடையில்
ஏழுமலையின் நடத்தையில் குறை கண்டு பிடிக்கப்பட்டால், அப்போது
இந்தக் கோப்புக்கு உயிர் வந்துவிடும். நடவடிக்கையும் பாயும். இப்போதைக்கு
வேறு நடவடிக்கை இல்லை. நீங்கள் போகலாம்” என்று
கூறி ஏழுமலை உருவாக்கிய சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன் !
இந்த நிகழ்வுக்குப் பிறகு திரு.ஏழுமலையிடம்
நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. மது அருந்துவதை
விட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. பணிவு அவரிடம் குடியேறிக் கொண்டது. துப்புரவுப்
பணிகள் சீராக நடைபெறத் தொடங்கின !
-------------------------------------------------------------------------------------
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டுபவர் (குறள்.562)
-------------------------------------------------------------------------------------
[ நல்ல
ஆட்சியை (நிர்வாகத்தை) விரும்புபவர், மிகக்
கடுமையாகத் தண்டிப்பது போல் நடவடிக்கையைத் தொடங்க வேண்டும்; ஆனால், வழங்கும்
தண்டனை மிக மென்மையானதாக இருக்க வேண்டும் ]
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் +
இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”வேதரெத்தினம்” வலைப்பூ,
[தி.ஆ:
2052, நளி (கார்த்திகை) 22]
{08-12-2021}
-------------------------------------------------------------------------------------