(1985 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்)
தனது அலுவலர்களுக்கும், குடிமக்களுக்கும்
நலத்திட்டங்களைக் கொண்டு போய்ச் சேர்க்க அரசு ஏற்படுத்தியுள்ள களப்பணி நிலையங்களே ”அரசு
அலுவலகங்கள்”. அரசின் நோக்கத்தை நிறைவேற்ற அமர்வு செய்யப்பட்டுள்ள களப்
பணியாளர்களே “அரசு அலுவலர்கள்” !
ஆனால் அரசு அலுவலர்கள் பின்பற்றும் வழிமுறைகள் அரசின் நோக்கத்தைச்
சிதைப்பதாகவே அமைந்துள்ளன. அரசு வெளியிட்டுள்ள குறிப்பிட்ட ஒரு ஆணையைப் பயன்படுத்தி, யார்
யாருக்கு என்னென்ன நன்மைகளைச் செய்ய முடியும், யார்
யாருக்கு என்னென்ன பணப் பயன்களை அளிக்க முடியும் என்று சிந்திக்கும் அலுவலர்கள் எண்ணிக்கை
மிகவும் குறைந்துகொண்டே வருகிறது !
”இந்த
அரசாணை உனக்குப் பொருந்தாது, நீ கேட்கும் பயன்களை இதன் மூலம் வழங்க முடியாது” என்று
எதிர்மறை உரைகளைத் தான் அரசு அலுவலகங்களில் கேட்கமுடிகிறது. “இந்த
அரசாணை உனக்கு உறுதியாக நலம் பயக்கும், நீ கேட்கும் உதவிகளை இதன்
மூலம் உனக்குச் செய்து தருகிறேன்” என்னும் நேர்மறை உரைகளை எந்த அலுவலகத்திலும் கேட்க முடிவதில்லை !
“முடியாது” என்னும்
விடையைச் சொல்வதற்கா மக்கள் வரிப்பணத்தில் தமிழ்நாட்டில் இத்தனை (அரசு) அலுவலகங்கள்
இயங்கிவருகின்றன ? “முடியாது” என்னும் விடையைச் சொல்வதற்காகவா அரசு தன் அலுவலர்களுக்குச்
சம்பளம் கொடுக்கிறது ? பொதுநல உணர்வு மறைந்து, “நான்
மாட்டிக்கொள்ளக் கூடாது” என்னும் தன்னல உணர்வு மிகும்போது “முடியாது” என்னும்
குரல்கள் அரசு அலுவலகங்களில் ஓங்கி ஒலிக்கத் தொடங்குகின்றன !
1985 -ஆம் ஆண்டு. நாகப்பட்டினத்தில், அலுவலக
மேலாளர் இருக்கையில் (ஒரு நாள்) நான் அமர்ந்திருக்கிறேன். 65 அகவை மதிக்கத் தக்க பெரியவர் ஒருவர் என்னிடம் வந்து ,”ஐயா ! வணக்கம் ! என் பெயர்
நாகராசன். உங்கள் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணி புரிந்து 20 நாள்களுக்கு
முன்னர் காலமான சாமிநாதனின் தாய் மாமா ! சாமிநாதன் என் தங்கை மகன். அவர்
குடும்பம் மிகவும் ஏழ்மையில் தவிக்கிறது. அவர் குடும்பத்திற்கு அரசின் உதவி ஏதாவது கிடைக்குமா என்பதை அறிந்துகொள்வதற்காக நேற்று வந்திருந்தேன். நீங்கள்
நேற்று விடுப்பு என்பதாகச் சொன்னார்கள் !”
”அலுவலத்தில்
பணியமைப்புப் பிரிவில் உசாவினேன். சாமிநாதன் அன்னிலைப் பணியாளர் (10-A.1) என்பதால்
அவருக்கு அரசின் உதவி எதுவும் கிடைக்காது என்று தெரிவித்தனர். வேறு
சிலரும் இதையே தெரிவித்தனர். ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கையில், வெளியில்
நின்ற ஒருவர் என்னிடம் வந்து “ நாளை நீங்கள் வந்து மேலாளரைப் பாருங்கள். அவர்
உங்களுக்கு உதவி செய்யக் கூடும்” என்று சொன்னார். அதனால்
உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன் என்றார் !”
அவரை என் எதிரில் இருந்த இருக்கையில் அமர வைத்துவிட்டு, அலுவலக
உதவியாளரை அழைத்து எனக்கும் அவருக்குமாக இரண்டு குளம்பி ((Coffee) வாங்கி
வருமாறு அனுப்பினேன். பணியமைப்புப் பிரிவிலிருந்து, திரு.சாமிநாதனின்
பணிப்பதிவேட்டைக் கேட்டு வாங்கி ஆய்வு செய்தேன். அன்னிலைப்
பணியில் (10-A.1) அமர்வு செய்யப்பட்டு பன்னிரண்டரை மாதங்கள் தொடர்ச்சியாகப்
பணியாற்றியுள்ளார். இடையில் ஊதியமில்லா விடுப்போ, பணிமுறிவோ
ஏதுமில்லை !
பெரியவரிடம் சொன்னேன், ” முதலில்
இந்தக் குளம்பியை அருந்துங்கள். அடுத்து
உங்கள் துன்ப உணர்வைத் துடைத்து எறியுங்கள். சாமிநாதனின்
தாயாருக்கு நான் குடும்ப ஓய்வூதியம் வாங்கித் தருகிறேன். சாமிநாதனின்
இறப்புச் சான்றும், மரபுரிமையர் (வாரிசு) சான்றும்
வட்டாட்சியரிடமிருந்து வாங்கி வாருங்கள். தேவையான தொடர் நடவடிக்கை
எடுத்து குடும்ப ஓய்வூதியம் கிடைக்கச் செய்வது என் பொறுப்பு” என்றேன் !
பெரியவர், இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். “ஐயா ! நடப்பிலுள்ள
அரசு ஆணையின் படி அன்னிலைப் பணியானாலும் தொடர்ச்சியாக ஓராண்டுகள் பணி நிறைவு செய்து, காலமாகி
இருந்தால், காலமான ஊழியரின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் (Family Pension)
தரலாம். உங்கள்
தங்கை மகன் தொடர்ச்சியாக பன்னிரண்டரை மாதங்கள் பணி புரிந்திருக்கிறார். ஆகையால், (அவர்
திருமணமாகாதவர் என்பதால்,) அவரது தாயாருக்குக் குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும். அத்துடன்
பணிக்கொடையாக (DCRG) இரண்டு மாத அடிப்படை ஊதியமும் கிடைக்கும்” என்றேன் !
பெரியவர் எழுந்து நின்று இரு கைகளையும் கூப்பி, ”நீங்கள்
நன்றாக இருப்பீர்கள். இறைவன் உங்களுக்கு எல்லா வளங்களையும் கொடுப்பார்” என்று
வாழ்த்தினார் !
உணர்ச்சி வயப்பட்டிருந்த
அவர் சற்று சமநிலைக்கு வந்த பிறகு அவரிடம், “ஐயா ! நீங்கள்
என்ன செய்கிறீர்கள் ?” என்றேன். “நான் ஆசிரியராகப் பணி புரிந்தவன், இப்போது
ஓய்வூதியர்”. ”என் பெயர் நாகராசன் என்பதை முன்பே சொல்லியிருக்கிறேன்” என்றார். ”ஓய்வு
பெற்ற ஆசிரியர் - பெயர் நாகராசன்” என்ற
அவரது வரலாற்றைக் கேட்டதும் என் மூளையில் சிறு பொறி எழுந்தது. “நீங்கள்
ஆயக்காரன்புலம் கழக உயர்நிலைப்பள்ளியில் பணி புரிந்திருக்கிறீர்களா ? கடிநெல்வயல்
திரு.மீனாட்சி சுந்தரம், மருதூர்
திரு.ஏ.இராதாகிருஷ்ணன் ஆகியோரைத் தெரியுமா?” என்றேன் !
“ஆமாம் ! ஆயக்காரன்புலத்தில்
பணிபுரிந்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட இருவரும் என்னுடன் பணிபுரிந்த ஆசிரியர்களாயிற்றே ! மறக்க
முடியுமா ? ஆமாம் ! அவர்களை உங்களுக்குத் தெரியுமா ? உங்களைப்
பற்றி நான் தெரிந்துகொள்ளலாமா ?”என்றார் !
இப்போது நான் இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றேன் ! ஆம் ! எதிரிலிருந்த
பெரியவர் திரு.நாகராசன் என் ஆசிரியர். 6 –ஆம் வகுப்பில் எனக்கு ஆங்கிலப்பாடமும் சமூகப் பாடமும் சொல்லித்
தந்த ஆசிரியர்! 40 ஆண்டுகளுக்குப் பின்பு அவரைச் சந்திக்கும் வாய்ப்பும் அவருக்கு
உதவி செய்கின்ற வாய்ப்பும் எனக்குக் கிடைத்ததை என்னவென்று சொல்வேன் !
அவரிடம் சொன்னேன், “ஐயா ! நான்
உங்களிடம் படித்த மேனாள் மாணவன். ஆயக்காரன்புலத்தில் படித்தவன். எனக்கு 6-ஆம் வகுப்பு
ஆசிரியராக இருந்து ஆங்கிலமும் சமூகப்பாடமும் கற்பித்தவர் நீங்கள். உங்களுக்கு
உதவி செய்ய நான் மிகவும் கொடுத்து வைத்திருக்கிறேன். நிம்மதியாகச்
சென்று நான் கேட்ட இரண்டு சான்றுகளையும் வாங்கி வாருங்கள். உங்கள்
தங்கைக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டியது என்னுடைய பொறுப்பு” என்றேன் !
எழுந்து நின்று மகிழ்ச்சியில் மீண்டும் கைகூப்பி, “உங்கள்
உருவத்தில் இன்று இறைவனைக் காண்கிறேன்” என்று நா தழுதழுத்தார். ”ஐயா ! நீங்கள்
என்னை வணங்கக் கூடாது . வேண்டுமானால் வாழ்த்துங்கள் ” என்று கூறி கைகூப்பி அவருக்கு விடைகொடுத்தேன் !
அவர் என் தலையில் கை வைத்து, ”இறைவன்
அருளால் நீங்கள் எல்லா வளங்களும் பெற்று நலமோடு வாழ்வீர்கள்” என்று
மகிழ்ச்சியோடு என்னை
வாழ்த்தி விடைபெற்றார் !
--------------------------------------------------------------------------------------
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் (குறள்.02)
--------------------------------------------------------------------------------------
[ தூய அறிவு
வடிவாக விளங்கும் ஆசிரியரது திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால் அவர் கற்ற கல்வியினால்
ஆகிய பயன் என்ன ? ]
--------------------------------------------------------------------------------------
{ பின்
குறிப்பு: திரு.நாகராசன் அவர்களின் தங்கைக்குக் குடும்ப ஓய்வூதியம் மாநிலக்
கணக்காயரால் இரண்டு
மாத அளவில் ஒப்பளிக்கப்பட்டது – இரண்டு மாத அடிப்படை ஊதியமும் பணிக்கொடையாக வழங்கப்பட்டது – இது படிப்பவர்களின்
செய்திக்காக !
--------------------------------------------------------------------------------------
ஆக்கம்
+ இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”வேதரெத்தினம்” வலைப்பூ,
[தி.ஆ:
2052, நளி (கார்த்திகை) 23]
{09-12-2021}
------------------------------------------------------------------------------------