(1992 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்)
அன்றாடம் சேலத்திலிருந்து ஈரோட்டுக்கு நான் சென்று வந்ததைப் போல, முதல்வர் திரு. இரா.அ.தங்கவேலு அவர்களும் கோவையிலிருந்து ஈரோட்டுக்கு இருப்பூர்தி (TRAIN) மூலம் வந்து சென்றுகொண்டிருந்தார் !
ஆட்சி அலுவலர் திரு.சோம நடராசன் அவர்கள் ஈரோட்டிலேயே குடும்பத்துடன் தங்கியிருந்தார்.
”ஆசிரியர் வளவு” (TEACHER’S COLONY) என்று அழைக்கப்படும்
குடியிருப்புத் தொகுதியில் அவர் தன் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார் !
முதல்வர், ஆட்சி அலுவலர் இருவருமே தமிழுணர்வு
மிக்கவர்கள்; தமிழ்ப்பற்று மிக்கவர்கள்; தமிழில் ஈடுபாடு மிக்கவர்கள். தமிழில் என்னுடைய ஈடுபாடு
பற்றி முகநூல் நண்பர்கள் நன்கு அறிவார்கள் !
தமிழார்வம் மிக்க மூவர் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்தாலும், ஈரோடு தொழிற் பயிற்சி நிலையத்தில் “பளிச்”சென்று தெரியும் வகையில் ஓரளவுக்கு மேல் எங்களால் அங்கு தமிழ்ப் பணியை ஆற்ற
முடியவில்லை!
அலுவலகப் பணிகளில் நூறு விழுக்காடு தமிழைப் புகுத்துவதற்கு
எங்களால் முடிந்தது. அதற்கு அப்பால் தமிழ்ப் பெயர்ப்
பலகைகளை உரிய இடங்களிலெல்லாம் நிறுவுவதற்கு எங்களால் நேரம் ஒதுக்கிச் செயற்படுத்த முடியவில்லை
!
காரணம், முதல்வரும் நானும் அன்றாடம் இருப்பூர்திப்
பயணத்தைத் தவிர்க்க முடியாமற் போனதேயாகும். என்றாலும் ஆட்சி அலுவலர்
தந்த ஊக்கத்தினால் அலுவலகப் பணிகளில் தமிழ் மணம் கமழச் செய்வதில் மட்டும் வெற்றிபெற
முடிந்தது !
ஆட்சி அலுவலர் திரு.சோம நடராசன் அவர்களும் நானும் கலந்து பேசி ஒரு முகாமையான முடிவு எடுத்தோம்.
இயக்குநரகம் உள்பட பிற அலுவலகங்களுக்கு அனுப்பப் பெறும் கடிதங்கள் அனைத்திலும் கீழ்க்காணும் சொற்றொடர்களில் ஏதேனும்
ஒன்றை அதன் தலைப்பில் கட்டாயம் இடம் பெறச் செய்வது என்பது நாங்கள் எடுத்த முடிவு
!
- தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல்வேண்டும் !
- யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் !
- சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்
- தமிழுக்கும் அமுதென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !
- தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர் !
- தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் !
- தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் ! – இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் !
- தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் ! – இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ !
- எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு !
ஆட்சி அலுவலரும் நானும் கலந்துரையாடி முடிவெடுத்த பின்னர் முதல்வர் திரு.இரா.அ.தங்கவேலு அவர்களிடம் செய்தியைச்
சொன்னோம். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே தெரிவித்த மறுமொழி
“ கரும்பு தின்னத் தடை சொல்ல மாட்டேன் ” என்பதே.
தணியாத தமிழ்த் தாகம் கொண்ட முதல்வர் அவர்களின் இசைவுடன் எங்கள் திட்டத்தை
வெற்றிகரமாகச் செயல்படுத்தத் தொடங்கினோம் !
ஆட்சி அலுவலர் திரு.சோம.நடராசன்
அவர்கள் பாவேந்தர் பாரதிதாசன் மீதும் அவரது பாடல்கள் மீதும் மிகுந்த பற்றுக்கொண்டவர்.
மேற்கண்ட ஒன்பது சொற்றொடர்கள் தேர்வு செய்ததில் அவரது பங்கு முதன்மையானது
!
பாரதிதாசனின் உறவினர் என்பதாலோ என்னவோ, இவருக்கும்
தமிழ் மீது அளப்பரிய காதல் இருந்தது. பள்ளிப் பருவத்திலேயே மலர்ந்த
தமிழ்ப் பற்று, இன்றும் அவரிடம் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கிறது
! அவரது முகநூல் பதிவுகள் / கருத்துரைகளில் அவரது
தமிழின் வலிமையை இன்றும் நீங்கள் காணலாம் !
தட்டச்சருக்குத் தக்க நெறியுரை தந்திருந்தமையால். கடிதங்களைச் செவ்வைப்படி எடுக்கையில், ஒவ்வொரு கடிதத்தின்
தலைப்பிலும் மேற்காணும் சொற்றொடருள் ஒன்றைத் தட்டச்சு செய்வதைத் தவறாமல் செய்து வந்தார்!
தமிழ்நாட்டில் தமிழை ஆட்சி மொழியாக அறிவித்துச் சட்டம் இயற்றி 64 ஆண்டுகள் ஆகிவிட்டன. அரசு அலுவலர் ஒவ்வொருவரும் தன்னால்
இயன்ற வகையில் தமிழை அரசு அலுவலில் புகுத்தினால், தமிழ் நாட்டில்
தமிழ்தான் ஆட்சி மொழி என்பது 100% உண்மையாகும் !
இப்போது பணியில் இருக்கும் அலுவலர்களும் எங்களைப்போல் தமிழ் வளர்ச்சிக்குப்
பாடுபடலாம்; அதற்கு யாரும் தடை சொல்ல முடியாது !
தேவைப்படுவது தமிழ் மீது அளப்பரிய ஆர்வம் !
எங்கள் தமிழ்ப் பணியின் இன்னொரு பகுதியாக அலுவலகம், பணிமனை இரண்டிலும் வருகைப் பதிவேட்டில் (மாணவர்கள் வருகைப்
பதிவு உள்பட) அனைத்து அலுவலர்கள், மாணவர்கள்
பெயர்கள் தலைப்பெழுத்து உள்படத் தமிழில் எழுதப்
பெற்றன. அலுவலர்கள் தம் சுருக்கொப்பத்தைத் தமிழிலேயே இட்டனர்
!
ஆனால் இன்றைய நிலைமை நெடுந் தொலைவு பின்னோக்கிச்
சென்றுவிட்டது. இதற்குக் காரணம் ஊக்கவுணர்வு இல்லாத அலுவலர்களே
! பள்ளி, கல்லூரி அளவில் தமிழுணர்வை ஊட்டி வளர்க்கும்
ஆசிரியர்கள் அருகிப் போனமையும் இதற்கொரு காரணம் !
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”வேதரெத்தினம்” வலைப்பூ,
[தி.ஆ: 2053, சுறவம்
(தை.30]
{11-02-2022}
----------------------------------------------------------------------------------