(1992- ஆம் ஆண்டு நிகழ்வுகள்)
அலுவலக மேலாளராகப் பிற அலுவலர்களிடம் வேலை வாங்குதல் என்பது ஒரு தனிக் கலை ! இந்தக் கலை தெரிந்தவர்கள் தம் கடமையில் வெற்றி பெறுகிறார்கள்; தெரியாதவர்கள் தோல்வி அடைகிறார்கள். கீழ்நிலை
அலுவலர்களிடம் சினத்தை வெளிப் படுத்துவதிலோ, கடுகடுத்த
முகத்துடன் தோற்றமளிப்பதிலோ, விதி முறைகளைப் பின்பற்ற
அறிவுறுத்துவதிலோ வேலை நடந்து விடாது !
அலுவலர்கள் வெளியில் சென்று வர அல்லது
முன்னதாகவே இல்லத்திற்குச் செல்ல விரும்புகையில் விண்ணப்பம் தருக என்று கேட்காமல் இசைவு (Permission) தருவதை நான் வழக்கமாகக் கொண்டிருந்தேன். விதிகளுக்குப்
புறம்பானது என்றாலும், அவர்களது நல்லெண்ணத்தைப் பெறுவதற்கு
இது பெரிதும் உதவியது. இந்த நல்லெண்ணம் அவர்களின்
செய்பணியளவில் (Quantum of Work
done) செயல் திறனில்
நேர்மறையாக எதிரொளிக்கும் !
திரு.இராமசாமி என்பவர் உதவியாளர்.
இவரிடம் இருந்த ஒரு வழக்கம் – ஆண்டு தொடங்கி
மூன்று அல்லது நான்கு மாதங்களிலேயே தற்செயல் விடுப்பு அவ்வளவையும் துய்த்துத்
விடுவார். அதன் பிறகு விடுப்பு தேவைப்படுகையில் ஈட்டிய
விடுப்பு ஒரு நாள் தருமாறு கோரி விண்னப்பம் தருவார். ஒருநாள்
அவரை அழைத்து ஈட்டிய விடுப்பினைச் சேமித்து வைப்பதன் இன்றியமையாமையை விளக்கினேன்
!
தான் இவ்வாறே பழகிவிட்டதாகவும், இனிமேல் இந்த வழக்கத்தைக் கைவிடுவது மிகவும் கடினம் என்றும் தெரிவித்து, அலுவலக
மேலாளரின் அறிவுரையைப் பின்பற்ற இயலாமைக்குத் தன்னை மன்னித்துவிடுமாறும்
கேட்டுக்கொண்டார். சரி ! இனிமேல்
விடுப்பு தேவைப்படுகையில் ஒருநாள் முன்னதாகவே என்னிடம் தெரிவியுங்கள் என்று
அவரிடம் கூறினேன்; காரணம் புரியாமல் தடுமாறிப் போனார்
!
1992 சூன் மாத இறுதியில் ஒரு நாள். திரு.இராமசாமி என்னிடம் வந்து, மறு நாள் ஒரு திருமணத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் தனக்கு ஒரு நாள் ஈட்டிய விடுப்பு வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். ஒரு நாளில் எத்தனைக் கோப்புகளில் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று கேட்டேன். ஏறத் தாழ 15 முதல் 20 கோப்புகளில் நடவடிக்கை எடுப்பேன் என்றார் !
சரி ! இன்று இரவு அலுவலகத்திலேயே தங்கி
நீங்கள் சொல்கிறபடி 20 கோப்புகளில் நடவடிக்கை எடுத்து என் மேசையில்
வையுங்கள். காலையில் எழுந்து வருகைப் பதிவேட்டில் சுருக்கொப்பம்
இட்டுவிட்டு, ஒருநாள் விடுப்புக் கோரி விண்ணப்பம் ஒன்றையும் எழுதி என் மேசையில் வைத்திடுங்கள்.
திருமணத்திற்குச் சென்றுவிட்டு மறுநாள் அலுவலகம் வந்ததும், விடுப்பு விண்ணப்பத்தை உங்களிடமே தந்துவிடுகிறேன்; அதை
நீங்களே கிழித்துப் போட்டுவிடுங்கள் என்றேன் !
திரு.இராமசாமி திகைத்துப் போனார்.
அளவில்லா மகிழ்ச்சி. என் கைகளைப் பிடித்துக் கண்களில்
ஒற்றிக்கொண்டு, “ஐயா, நானும் எத்தனையோ மேலாளர்களைப்
பார்த்திருக்கிறேன். அலுவலர்களின் மனம் கவரும் கலையை அவர்களிடம்
கண்டதில்லை. இன்று முதன் முதலாக அதை உங்களிடம் காண்கிறேன்.
20 கோப்புகள் அல்ல, 25 கோப்புகளில் நடவடிக்கை எடுத்து
உங்கள் மேசையில் வைக்கிறேன்” என்று உணர்ச்சி மேலிடக் கூறினார்
!
இதே நயப்பினை (சலுகை)
அலுவலகத்தில் பிற அலுவலர்களுக்கும் நீட்டித்தேன். எந்தக் கோப்பும் நிலுவையில் வைக்கப்படாமல் காலத் தாழ்வின்றி உரிய நடவடிக்கை
எடுக்கும் நிலை அலுவலகத்தில் உருவானது. நான் சொல்வதை மறுக்காமல்
செய்கின்ற – நிறைவேற்றுகின்ற – நிலை அலுவலர்களிடம்
மலர்ந்தது. பணிமனை அலுவலர்களோ, காவலர்,
துப்புரவாளர் போன்ற பணியாளர்களோ தங்கள் கோரிக்கை நிலுவையில் இருக்கிறது
என்று புகார் கூறும் நிலையே இல்லை என்பதை அங்கு உருவாக்கினேன் !
அரசு அலுவலகங்களில் விரைவாக வேலை நடக்கிறது என்னும்
நிலையை உருவாக்குவதே கண்காணிப்பு அதிகாரிகளின் கடமையாக இருக்க வேண்டும்; மாறாக வேலை மெதுவாகத்தான் நடைபெறும் – ஆனால்,
ஒழுங்கும் கட்டுப்பாடும் நிலவும் என்னும் நிலையை ஏற்படுத்துவதால் எவ்விதப்
பயனுமில்லை !
தன் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் அலுவலர்களுக்கு இடையூறுகளைக் களைந்து, நயப்புகளை (சலுகைகள்) தந்தால்,
அவர்களிடம் செய்பணித் திறன் கூடும். இந்த உளவியலைப்
புரிந்துகொண்டு அலுவலக மேலாளர் போன்ற கண்காணிப்பு நிலை அலுவலர்கள் செயல்பட்டால்,
கீழ்நிலை அலுவலர்கள் மனத்தில் எளிதில் இடம்பிடிக்கலாம் !
-----------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”வேதரெத்தினம்” வலைப்பூ,
[தி.ஆ: 2053, சுறவம் (தை)
30]
{12-02-2022}
----------------------------------------------------------------------------------