(1993 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்)
பதினைந்து நாள்கள் அளவுக்கு மருத்துவமனையில் இருந்த
முதல்வர் திரு.இரா.அ.தங்கவேலு அவர்கள், போதிய ஓய்வுக்குப் பிறகு, திருப்பூர் மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்துக்கு இடமாற்றல் பெற்றுக்கொண்டு,
அங்கு பணிபுரிந்த நிலையிலேயே பணி ஓய்வும் பெற்றார் ! அவரது பணி ஓய்வுக்குப் பிறகு, இருமுறை அவரது இல்லத்துக்கும்
சென்றிருக்கிறேன் !
ஒரு மனிதரிடம் ஏற்படும் நட்போ, பழக்கமோ அதை இறுதிவரைக் கைவிடாமல் பற்றிக்கொள்வது என் வழக்கம். அந்த வகையில் திரு.தங்கவேலு அவர்களுடனான என் பழக்கம் ஏறத்தாழ 25 ஆண்டுகள் (நான் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் கூட) நீடித்தது !
ஆனால்
அவரது மறைவுச் செய்தியை சில ஆண்டுகளுக்குப் பிறகே தெரிந்துகொள்ள முடிந்தது.
முதல் தலைமுறையினர் உருவாக்கும் தொடர்புகள் அடுத்த தலைமுறையினரால் போற்றிப்
பாதுகாக்கப்படும் என்பது இக்காலத்தில் எதிர்பார்க்கக் கூடியதாக இல்லை !
ஈரோட்டில், திரு.தங்கவேலுவை அடுத்து திரு. ஜி.எல்.இராமமூர்த்தி பதவி உயர்வில் முதல்வராக வந்தார். அவர்
வந்த பிறகு குறுகிய காலமே நான் ஈரோட்டில் பணி புரிந்தேன். திரு.இராமமூர்த்தியின் அணுகுமுறை எனக்கு மனநிறைவு தருவதாக இல்லை. இருந்தாலும் அவருடன் உரசல் ஏதுமின்றி என் பணிகளை அங்கு செய்துவந்தேன்.
எல்லோரையும் மதித்து அரவணைத்துச் செல்லும் தன்மையில் அவர் மிக மிகப்
பின்தங்கி இருந்தார் !
ஈரோட்டில் பத்து மாதங்கள் பணி புரிந்த பிறகு, சேலத்துக்கு இடமாற்றல் பெறுவதற்கான
அடிப்படைப் பணிகளைச் செய்யலானேன். சேலத்தில் அலுவலக மேலாளர் பணியிடங்கள்
நான்கு. மூன்றாம் அணி (THIRD SHIFT) அலுவலகத்திற்கு
ஒன்று, சார்புரை மையத்திற்கு (R.I.CENTER) ஒன்று, ஆக மொத்தம் ஆறு பணியிடங்கள். இத்துணைப் பணியிடங்கள் இருந்தாலும், மூன்றாண்டுகள் பணி
நிறைவு செய்தவர்கள் யாருமில்லை. ஆகையால் சேலத்திற்கு இடமாற்றல்
பெறுவது எளிய செயலாக இல்லை!
இரண்டு மூன்று முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் அல்லவா ? மீண்டும் முயன்றேன். என் உறவினர் ஒருவர் அப்போது தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவின் முழுநேர உறுப்பினராக (NON-IAS) இருந்தார். K.V.பழனித்துரை என்பது அவர் பெயர் !
திருத்துறைப்பூண்டியில்
பள்ளியிறுதி வகுப்பு படிக்கும் போது என்னுடைய வகுப்புத் தோழர். இம்முறை எனது முயற்சி அவரிடமிருந்து தொடங்கியது. சென்னை
எழிலகத்தில் இருக்கும் அவரது அலுவலகத்திற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினேன்
!
அவர் மாநிலத் திட்டக் குழுவின் முழுநேர உறுப்பினராக இருந்தாலும் இந்திய ஆட்சிப் பணியை (I.A.S) சேர்ந்தவரன்று. அவர் மாநிலத் திட்டக் குழுவின் இன்னொரு உறுப்பினரான R.L.பாண்டா I.A.S, என்பவரிடம் செய்தியைச் சொன்னார் !
திரு. பாண்டா உடனே துழனி (PHONE) மூலம் இயக்குநரைத் தொடர்புகொண்டு பேசினார். இயக்குநர்
பெயர் நினைவில்லை. எனினும் அவர் திரு.எஸ்.பெத்தையா, இணை இயக்குநரிடம் சொல்லி இடமாற்றலாணை வழங்கப்
பணித்தார் !
புதிய பதவிகள் உருவாக்குதல், புதிய திட்டங்களை அனுமதித்தல் போன்றவற்றுக்கு மாநிலத் திட்டக் குழுவின் ஒத்திசைவு
தேவை என்பதால், அங்கிருந்து வரும் பரிந்துரையை எந்த அதிகாரியும்
புறக்கணிக்க மாட்டார்கள். என் இடமாற்றல் கோரிக்கையையும் புறக்கணிக்க
முடியாத சூழ்நிலையை திரு.பாண்டா அவர்களின் பரிந்துரை ஏற்படுத்திவிட்டது
!
இயக்ககத்தில் கோப்பு உருவாகி நகர்ந்து இணை இயக்குநரின் ஒப்புதலுக்குச் சென்றது. இணை இயக்குநர் திரு.பெத்தையா, இடமாற்றல் பற்றிய குறிப்புக்கு ஒப்புதல் தராமல் இரண்டு நாள் இழுத்தடித்தார். திரு.செல்லையாவிடம் சென்று நிலைமையைப் பற்றி உசாவினேன் !
“என்னை அணுகிக் கேட்டிருந்தால் இடமாற்றல்
தந்திருக்க மாட்டேனா ? வெளியிலிருந்து வந்த பரிந்துரை தானே ! ஆகட்டும் பார்க்கலாம்” என்று தன்னிடம் திரு.பெத்தையா சொன்னதாக திரு.செல்லையா சொன்னார். நீங்கள் திரு.பெத்தையாவைச் சென்று பார்ப்பது நல்லது என்று நினைக்கிறேன் என்றார் திரு.செல்லையா !
மனத்திற்குள் ஒரு முடிவோடு திரு.பெத்தையாவிடம் சென்றேன். வணக்கம் சொல்லிவிட்டு, முதலாவதாக நான் சொன்னது, “Sorry Sir. I should have come and represented my desire to the J.D. to get transfer to Salem. I have committed mistake by approaching outside Officers. I once again feel sorry“ !
திரு.பெத்தையா சொன்னார், “No, No,
Mr.Vedarethinam. I know about you. I shall not hesitate to help sincere
officials, like you. Today you will get the transfer order to Salem. Wait a few
hours and have a copy and proceed to Salem with pleasure”. மிகுந்த
மகிழ்ச்சியுடன் நான் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு கீழே வந்து திரு.செல்லையாவிடம் செய்தி சொன்னேன் !
ஈரோட்டிலிருந்து சேலத்திற்கு இடமாற்றல் செய்யப்படும் ஆணையின் படி (COPY) ஒன்று மாலை 4-00 மணியளவில் என்னிடம் தரப்பட்டது. சேலத்தில் இரண்டரை ஆண்டுகளாகப் பணி புரிந்து வந்த திரு.பழனிச்சாமி என்பவரை மாற்றிவிட்டு, அந்த இடத்தில் எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது !
திரு.பழனிச்சாமியை
மாற்றம் செய்வதற்கு திரு.பெத்தையா பதிவு செய்திருந்த காரணத்தை
காலம் மிகக் கடந்துவிட்டாலும் இப்போது நான் வெளிப்படுத்துதல் முறையன்று என்பதால் அதை
மட்டும் தவிர்க்கிறேன் !
--------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”வேதரெத்தினம்” வலைப்பூ,
[தி.ஆ: 2053, கும்பம்
(மாசி) 02]
{14-02-2022}
----------------------------------------------------------------------------