(1994 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்)
சேலத்தில் பணி புரிகையில், சேலம், அய்யந்திருமாளிகை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 246 ஆம் இலக்க வீட்டில் வாழ்ந்து வந்தேன். ஈரோட்டுக்கு மாற்றலானதைத் தொடர்ந்து, அந்தக் குடியிருப்பை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது !
பிள்ளைகளின் படிப்புத் தொடர்ச்சியைக் கருத்திற்கொண்டு சேலத்திலேயே தொடர்ந்து குடியிருக்க வேண்டிய தேவையை என்னால் புறந்தள்ள முடியவில்லை. உரிய இசைவாணை இன்றி தொடர்ந்து அங்கு நான் குடியிருக்கவும் முடியாது. காரணங்களைச் சொல்லி இசைவு கேட்டாலும் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் தரமாட்டார்கள். இந்த இக்கட்டான நிலையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் திணறிப் போனேன் !
அப்போது எனக்கு உற்றுழி உதவத் தானாகவே முன் வந்தார் சேலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத் தட்டச்சர் திருமதி ஆர்.பி.அன்னபூரணி. வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சராக அப்போது திருச்செங்கோடு திரு.செல்வ கணபதி அவர்கள் பொறுப்பு வகித்து வந்தார். திருமதி அன்னபூரணியும் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர். என்னிடமிருந்து விண்ணப்பம் பெற்று மேலும் ஒரு ஆண்டுக்கு தொடர்ந்து அதே குடியிருப்பிலேயே வாழ்ந்துவர இசைவளித்து அமைச்சரிடம் ஆணை பெற்றுத் தந்தார் !
பிறருக்கு
நம்மாலான உதவிகளைச் செய்தால் நமக்குத் தேவைப்படும் நேரத்தில் நம்மைத் தேடி யாராவது
வந்து உதவி செய்வார்கள் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. என் வாழ்க்கைப் பாதை நெடுகிலும் இதற்குப் பல எடுத்துக் காட்டுகள் உள்ளன.
அவற்றை விவரிக்கத் தொடங்கினால் அதுவே பெரிய தொடர்கதையாக நீண்டுவிடும்.
எனவே அந்த இழையை விட்டுவிடுகிறேன். அரசுப் பணியில் சேர்ந்தது முதல் நான்
பிறருக்குச் செய்த உதவிகளே திருமதி அன்னபூரணி வடிவில் வந்து எனக்கு உதவி இருக்கிறது
என்பது என் கருத்தும் நம்பிக்கையும் !
ஈரோட்டில்
ஓராண்டு காலம் பணி புரிந்த பின், இடமாற்றலைப் பெற்று 10-06-1993 அன்று பிற்பகல் விடுவிக்கப்
பெற்ற நான், மறுநாளே சேலத்தில் பணியில் சேர்ந்துகொண்டேன்.
சேலம் அலுவலகத்தில் அப்போது திரு. கு.பெ.நாக ராஜன், திரு எம்..மாரியப்பன், எம்.கோபால கிருஷ்ணன்
ஆகியோர் அலுவலக மேலாளர்களாகப் பணிபுரிந்து வந்தனர் !
அப்போது சேலத்தில் துணை இயக்குநர் / முதல்வராக திரு.பி.வி.சேதுநாதன் இருந்ததாக நினைவு. ஆட்சி அலுவலராக திரு,இரா.சீனிவாசன் (FORMER MAGISTRATE) இருந்தார் என்று நினைக்கிறேன் ! பயிற்சி நிலையத்தில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதாக அப்போது வேறு சிறப்பு நிகழ்வுகள் ஏதுமில்லை ! பயிற்சி நிலையம் தொடர்பில்லாத வேறொரு நிகழ்வைப் பற்றி இப்போது உங்களுக்குச் சொல்லப்போகிறேன் !
திரு.ஆர்.நடேசன் நாகர் கோவிலைச் சேர்ந்தவர். தங்கப் பல் நடேசன் என்றே அவரை அனைவரும் குறிப்பிடுவார்கள். நான் புதுக்கோட்டையில் பணியாற்றுகையில் அவர் பொருத்துநர் பிரிவு மேற்பார்வைப் பயிற்றுநராக (SUPERVISORY INSTRUCTOR) இருந்தவர். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் செங்கற்பட்டு அருகிலுள்ள மறைமலை நகரில் சொந்த வீடு வாங்கி அதில் வாழ்ந்து வந்தார். திரு.செல்லையாவும் மறைமலை நகரில் சொந்த வீடு வாங்கி அதில் இல்லத்தினருடன் வாழ்ந்து வந்தார் !
திரு.நடேசன் அவர்களின் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்ப்பது தொடர்பாக அவர் தன் மனைவியுடனும்
திரு.செல்லையாவுடனும் சேலம் வந்திருந்தார். சேலம் வீட்டு வசதி வாரியச் செயற் பொறியாளரின் மகனை மாப்பிள்ளை பார்ப்பதற்காக
அவர்கள் வந்திருந்தனர் !
அவர்கள் அழைத்ததன் பேரில் அவர்களுடன் நானும் சேர்ந்து, செயற்பொறியாளர் இல்லத்திற்குச் சென்று மாப்பிள்ளையை நேரில் பார்த்தோம்; பேசினோம். மாப்பிள்ளை அவர்களுக்குப் பிடித்தமாக இருந்ததால், அடுத்த சில மாதங்களில் திருமணம் நடந்ததாக நினைவு. திரு.செல்லையா திரு.நடேசனுடன் சேலம் வந்து சென்றது 1994 -ஆம் ஆண்டு என்றும் எனக்கு நினைவு !
திரு.செல்லையா சேலத்துக்கு
வந்து சென்ற குறுகிய காலத்திற்குள் – ஒரு துன்பச் செய்தி
- காற்றில் பறந்து வந்து என் காதுகளில் விழுந்தது – திரு.செல்லையா காலமாகிவிட்டார் என்று சொல்லிவிட்டு என்
கண்ணீர்த் துளிகளில் அது கரைந்து போயிற்று. ஆம் ! 1994
-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 -ஆம் நாள்- அவர்
காலமாகிவிட்டார் என்று துழனி வழியாக எனக்குச் செய்தியை சொன்னவர் வீட்டு வசதி வாரியச்
செயற்பொறியாளர் – திரு.நடேசனின் சம்பந்தி
!
அமைச்சுப்
பணியாளர்களுக்கு N.C.T.V.T அளவுகோலின்படி 21 அலுவலக மேலாளர்
பணியிடங்கள் உள்பட அறுபதுக்கும் மேற்பட்ட பணியிடங்களைப் பெற்றுத் தந்த வரலாற்று நாயகன் காலமாகிவிட்டார் என்னும் செய்தி,
என்னையும் என்னருகில் சூழ்ந்திருந்த சேலம் நண்பர்களையும் அதிர்ச்சியில்
உறைய வைத்துவிட்டது !
அனைத்துத் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் ஆட்சி அலுவலர் பணியிடங்களைப் பெற்றுத் தந்த எங்கள் பாசப்பறவை தன் பயணத்தை முடித்துக்கொண்டு பறந்து சென்றுவிட்டது என்னும் ‘பகீர்’ செய்தி எங்கள் இதயத்தில் எண்ணெய்யை ஊற்றி எரிசுடரையும் அதில் கொளுத்திப் போட்டு விட்டது !
நம்ப முடியவில்லை ! நம்பக் கூடியதாகவும் இல்லை ! இடியென வந்து இறங்கிய செய்தியை நெஞ்சில் ஏந்திக்கொண்டு சேலத்திலிருந்து மறைமலை நகருக்குப் புறப்பட்டேன். என்னுடன் திரு.கு.பெ.நாகராசன், திரு.ம.மாரியப்பன், திரு.அல்லா பக்ஷ், திரு.சா.இராமமூர்த்தி ஆகியோர் இணைந்து கொண்டனர். வேறு யார் யார் வந்தனர் என்பது இப்போது நினைவில்லை; இருப்பினும் ஏழு பேருக்கு மேல் சென்றதாக நினைவு !
மறைமலை நகரில் NH3 பகுதியிலுள்ள அவரது வீட்டிற்கு அனைவரும் சென்றோம். மறைந்த தலைவருக்கு மாலை அணிவித்து வணங்கிய பின், இறுதிவரை இருந்து எரியூட்டும் நிகழ்வுக்குப் பின் கனத்த இதயத்துடன் அவர் வாழ்ந்த இல்லத்திற்கு அவரது பிள்ளைகளுடன் திரும்பினோம். அவரது பிள்ளைகள் திரு.சுப்ரமணியன், திரு இராஜூ இருவரிடமும் சில செய்திகளைச் சொல்லிவிட்டு நானும் மற்றவர்களும் சேலம் திரும்பினோம் !
பெரும்பாலான மனிதர்கள் வரலாற்றைப் படிப்பதற்காகப் பிறக்கிறார்கள்; ஒரு சிலர் மட்டுமே வரலாற்றைப் படைப்பதற்காகப் பிறக்கிறார்கள்; அந்த ”ஒருசிலர்” என்னும் வகையில் இடம் பிடித்தவர் திரு.செல்லையா. நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பிறந்து உயிரூட்டும் மூச்சுக் காற்றை உள்வாங்கிக் கொண்டு கண் விழித்து உலகை உற்று நோக்கிய அந்த எளிய குழந்தை, வளர்ந்து சாதனைகள் பல படைத்து தன் இறுதி மூச்சை 24-12-1994 அன்று மறைமலை நகரில் விட்டுவிட்டுக் கண்களை மூடிக் காற்றில் கலந்து விட்டது !
திரு.செல்லையாவின் பூதவுடல் மறைந்துவிட்டாலும், அவரை அன்போடு நேசித்த பலநூறு நண்பர்களின் இதயத்தில் சிரித்த முகத்தோடு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ! “ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியமில்லை உயிர்க்கு ” என்று வள்ளுவர் காட்டிய வழியில் வாழ்ந்து மறைந்த திரு.செல்லையாவின் புகழ் என்றென்றும் நிலைபெற்றிருக்கும் !
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”வேதரெத்தினம்” வலைப்பூ,
[தி.ஆ: 2053, கும்பம் (மாசி) 04]
{16-02-2022}
-------------------------------------------------------------------------------------
திரு.சு.செல்லையா |