தேடுக !

வியாழன், 17 பிப்ரவரி, 2022

மலரும் நினைவுகள் (47) ஈரோட்டில் விடுவிப்பு ! சேலத்தில் பணியேற்பு !

     (1993 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்)

இடமாற்றல் ஆணையைப் பெற்றுக்கொண்டு  (சேலம்) வீட்டிற்கு வந்த நான், குளித்து உணவருந்திவிட்டு, சற்று நேரத்தில் ஈரோட்டுக்குப் புறப்பட்டேன்.  ஈரோட்டில் அலுவகத்திற்கு நான் போய்ச் சேர்ந்த அதே நேரத்தில், இயக்ககத்திலிருந்து அனுப்பப் பெற்ற மாற்றலாணை அடங்கிய கடித உறையும்  முதல்வருக்குக் கிடைத்தது. ஆட்சி அலுவலர், முதல்வர் இருவரையும் பார்த்து, அன்று மாலையே என்னைப் பணியிலிருந்து விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டேன் !

 

ஆட்சி அலுவலர் திரு.சோம.நடராசன் அவர்கள் என்னைப் பார்த்துஇனிய தமிழ் என்னைவிட்டு விலகிச் செல்கிறது; அப்படி விலகிச் சென்றாலும் எனக்கு மகிழ்ச்சியேஏனெனில் இல்லத்தாருடன் இணைந்து வாழ்வது வாழ்க்கையில் பெரும் பேறல்லவா” ? என்று தன் உணர்வுகளைச் சொற்களால் வெளிப்படுத்தினார் !

 

இந்த நேரத்தில் அவரைப் பற்றிய ஒரு பழைய நினைவைநிகழ்வை -  உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் அவர் தணிக்கைக் குழுவில் பணியாற்றுகையில் ஒருமுறைப் பார்த்திருக்கிறேன்எந்த நிலையத்தில் என்பது இப்போது நினைவில்லை. அவர் எழுப்பும் தணிக்கைத் தடைகளில் ஞாயம் இருக்கும்அத்துடன் அந்தப் பத்திகளில் தமிழ் மணமும் கலந்து விருந்து படைக்கும் !

 

நான் முந்திய பதிவு ஒன்றில் குறிப்பிட்டது போல புதுவைக் குயில் பாவேந்தர் பாரதி தாசனின் உறவினர் என்பதால், தமிழ் அவரிடம் விரும்பி வந்து குடி புகுந்து கொண்டது போலும் ! இயக்ககத்தில் பணிபுரிகையில் “பூங்கொடிஎன்னும் கையெழுத்து இதழையும் அதற்கு முன்னதாக இன்னொரு இதழையும், பணி ஓய்வுக்குப் பிறகு “செங்கோலரசு” என்னும் திங்களிதழையும்   நீண்ட காலம் நடத்திப் புகழ் பெற்ற பொன்மனச் செம்மல் அல்லவா அவர் !

 

தமிழ்ப் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் மதிப்பிற்குரிய ஔவை நடராசன் அவர்களின் நெறியாள்கையில்இராணிவார இதழில்ஆக்க வாரீர் அறிவியல் தமிழ்என்னும் பகுதி 1986 ஆம் ஆண்டு தொடங்கப் பெற்றது. அதற்கு என்னுடைய படைப்பு ஒன்றை அனுப்பியிருந்தேன் !

 

ஏதோவொரு பணியின் நிமித்தம் சென்னை சென்றுவிட்டு நாகைக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு மணி 2-00 இருக்கும். நான் பயணம் செய்த பேருந்து  திண்டிவனம் அரசுப் பேருந்து நிலையத்தில் வந்து நின்றது.  நிலையத்துக்குள் இருந்த பெட்டிக்கடை ஒன்றில் அப்போது  வந்து இறங்கிய கட்டிலிருந்து பிரித்து இராணிவார இதழைக் கம்பியில் தொங்கவிட்டுக் கொண்டிருந்தனர் !

 

மனத்தில் ஒரு குறு குறுப்புடன்  இறங்கிச் சென்று 23-11-86  நாளிட்ட அந்த இராணிஇதழைக் கையில் வாங்கிப்  பிரித்துப் பார்த்தேன். நான் அனுப்பிய படைப்பு அதில் வெளியாகி இருந்தது. ”ஆக்க வாரீர் அறிவியல் தமிழ்வெளிவரும்  முதல் இதழில் முதல் பக்கத்தில் என் படைப்பு ! மனத்தில் பொங்கிய மகிழ்ச்சியுடன்  பேருந்தில் அமர்ந்து வெளியான பகுதியை முழுவதுமாகப் படித்தேன், படித்தேன், படித்தேன், படித்துக் கொண்டே இருந்தேன் !

 

இதற்கு முன்னதாக 1964 –ஆம் ஆண்டு நேரு மறைந்த போது எனது 20 –ஆம் அகவையில் நான் எழுதிய இரங்கல் கவிதை ஒன்று. சுதேசமித்திரன் நாளிதழில் நேரு இறந்த இரண்டொரு நாளில் வெளியாகி இருந்தது. ஊடகத்தில் வெளிவந்த எனது முதல் படைப்பு அது !

 

அடுத்ததாக, அண்ணாவின் மறைவுக்குப் பின்பு அவரது நினைவைப் போற்றும் வகையில், “தமிழரசுஇதழ் செய்வோம் சிறந்தபல தொண்டுஎன்பதை ஈற்றடியாக வைத்து  அறிவித்த வெண்பாப் போட்டிக்காக  நான் எழுதிய வெண்பாக்கள் சில , “தமிழரசுஇதழில் 1968 ஆம் ஆண்டு வெளிவந்தன !

 

இப்போது மூன்றாவது தடவையாக எனது படைப்புஇராணிஇதழில் 1986 –ஆம் ஆண்டில் வெளி வந்திருக்கிறது. ஒவ்வொரு படைப்பாளியும் தனது படைப்பு அச்சு ஊடகத்தில் வெளி வருவதை மகிழ்ச்சியுடன் வரவேற்பது இயல்பு தானே !

 

நாகப்பட்டினம் அரசு தொழிற்பயிற்சி நிலைய அலுவலக மேலாளர், வை. வேதரெத்தினம் படைத்துள்ள அறிவியற் தமிழ்ச் சொற்கள்என்னும் தலைப்பில் 23-11-86 நாளிட்டஇராணிஇதழில் வெளியாகியஆக்கவாரீர் அறிவியல் தமிழ்என்னும் பகுதியை, நமது துறை நண்பர்கள் எத்தனையோ பேர்  பார்த்திருக்கக் கூடும் !


ஆனால், அவர்கள் யாருக்கும் தோன்றாத ஒரு பெருமகிழ்ச்சி, செங்கற்பட்டில் பணி புரிந்த ஒருவருக்குத் தோன்றியது ! எடுத்தார் உள்நாட்டு உறை (INLAND LETTER) ஒன்றை !  வரைந்தார் அழகுத் தமிழில் பாராட்டுப் பாமாலை ஒன்று !  விடுத்தார் என் முகவரிக்கு !

 

மறுநாள் எனக்குக் கிடைத்த அந்தக் கடிதத்தை படித்துப் பார்த்து மிகவும் திகைப்பும் நெகிழ்ச்சியும் அடைந்தேன். கடிதத்தை எழுதியிருந்தவர்  செங்கற்பட்டு அலுவலக மேலாளர் திரு.சோம.நடராசன் அவர்கள் ! நானும் அவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்ததில்லை !


எனக்கும் அவருக்கும் அத்துணைப் பழக்கமுமில்லை; இருந்தாலும் திறமை எங்கிருந்து வெளிப்பட்டாலும் அதைப் பாராட்ட வேண்டும் என்னும் அவருடைய உயரிய கொள்கை, உயரிய பண்பாடு என்னை மிகவும் நெகிழச் செய்தது !

 

இத்தகைய பண்பாளருடன் ஓராண்டு காலம் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு ஈரோட்டில் எனக்குக் கிடைத்தது என்னுடைய நற்பேறே என்று கருதுகிறேன்.  சேலத்திற்கு இடமாற்றலானதைத் தொடர்ந்து 10-06-1993 அன்று பிற்பகல் அவரிடமிருந்து பிரியா விடைபெற்றேன் !

 

முகநூல் தளத்தில் கடந்த ஈராண்டுகளாக நாங்கள் இருவரும் உரையாடுகிறோம்; எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் ஈரோட்டிலிருந்து விடைபெற்ற    10-06-1993 –க்குப் பிறகு  28 ஆண்டுகள் கடந்தும் அமராவதி ஆற்றங் கரையில் அமைந்துள்ள அழகிய கரூர் நகரில்  வாழ்ந்து வரும் அவரை நேரில் பார்த்துப் பேசும் வாய்ப்பு மட்டும் இன்று வரை எனக்குக் கிடைக்கவில்லை. இதை ஒரு பெரும் குறையாகவே கருதுகிறேன் !

 

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

வேதரெத்தினம்வலைப்பூ,

[தி.ஆ: 2053 கும்பம் (மாசி) 03]

{15-02-2022}

-----------------------------------------------------------------------------------