(1995 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்)
மறைமலை நகரிலிருந்து
சேலத்திற்குத் திரும்பி வந்து நான்கு நாள் ஆயிற்று. தலைவனை இழந்து தவிக்கும் அந்தக் குடும்பத்திற்கு ஓய்வூதியம் முதலிய பணப்
பயன்களை விரைவில் கிடைத்திடச் செய்ய இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்று
என் மனம் குரலெழுப்பிக் கொண்டே இருந்தது !
திரு.செல்லையாவின்
குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணம் படைத்த நண்பர்கள் இயக்ககத்தில் சிலர்
இருந்திருக்கக் கூடும். ஆனால் சேப்பாக்கத்திற்கும் மறைமறை
நகருக்கும் இடையில் உள்ள தொலைவு, பயண நேரம் ஆகியவை இயல்பாகவே
காலத் தாழ்வுக்கு வழி வகுத்துவிடும் என்று அஞ்சினேன் !
அதுவுமல்லாமல் காலையில் எழுந்ததும் அடித்துப் பிடித்துக்கொண்டு
அலுவலகத்திற்கு ஓடும் எந்திர வாழ்க்கைக்கு இலக்காகிப் போன சென்னை நண்பர்களுக்கு, தொலைவில் இருக்கும் மறைமலை நகருக்கு அடிக்கடி சென்று வருதல் என்பதும், அதற்காக
விடுப்பு எடுத்தல் என்பதும் மலையேற்றம்
போன்ற மலைப்புத் தரும் செயல். ஆர்வமிருந்தாலும் உதவுவதற்கு
நேரம் கிடைத்தல் அரிது என்னும் நிலையில் இருப்பவர்கள் !
ஆகையால், சென்னை
நண்பர்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுச் செயல்படுவார்கள் என்று நம்பி வாளாவிருப்பதைவிட,
நானே செய்திட வேண்டும்
என்று உறுதியாக முடிவெடுத்தேன். அதனால் அதற்கான பணிகளில் ஈடுபடலானேன் !
தொலைபேசி மூலம்
மறைமலை நகருக்குத் தொடர்பு கொண்டு திரு.செல்லையாவின் துணைவியார் பெயர் உள்பட சில
அடிப்படைச் செய்திகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அத்துடன் இறப்பைப் பதிவு
செய்தல், இறப்புச்சான்று பெறுதல், வாரிசுச் சான்று பெறுதல் போன்ற
பணிகளையும் தொடங்குமாறு கேட்டுக்கொண்டேன் !
அந்தக்
குடும்பத்திற்குக் கீழ்க்காணும் பணப்பயன்களும் பிற நலத்திட்ட உதவிகளையும் உரிய
அதிகாரிகளிடமிருந்து கோரிப் பெற்றாக வேண்டும் !
(01) இறப்பு நாள் வரையிலான ஊதியமும் பிற படிகளும் ( SALARAY ARREARS).
(02) குடும்ப ஓய்வூதியம் (FAMILY PENSION).
(03) பணிக்கொடை (GRATUITY).
(04) வைப்பு நிதித் தொகை (G.P.F).
(05) சிறப்பு
வைப்பு நிதி (S.P.F).
(06) வீட்டு வசதிக் கடன் தள்ளுபடி (WAIVAL OF HOUSING LOAN).
(07) கருணையடிப்படையில் அரசுப் பணி (COMPASSIONATE APPOINTMENT).
சேர வேண்டிய பணப்பயன்களை வழங்கக் கோரி, முதலில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன், இறப்புச்சான்று, வாரிசுச் சான்று போன்றவற்றையும் இணைத்திட வேண்டும். எனவே இதற்கான விண்ணப்பங்களை என் வீட்டில் வைத்து எழுதினேன். அவற்றை எடுத்து வந்து தட்டச்சர் திருமதி ஆர்.பி.அன்னபூரணியிடம் தந்து 1 + 1 தட்டச்சு செய்யச் சொன்னேன் !
காலஞ்சென்ற
திரு.செல்லையாவுக்குச் செய்ய வேண்டிய 15 -ஆம் சடங்குகள் மறைமலை நகரில் சனவரி
1995 –ல் நடைபெற்றது. சடங்கு நடைபெறும் நேரம் நாள் பற்றிய செய்திகள் எனக்குத்
தெரிவிக்கப்பட்டிருந்தன. தட்டச்சு செய்து வைத்திருந்த அனைத்து விண்ணப்பங்களையும்
எடுத்துக்கொண்டு, குறிப்பிட்ட நாளில் மறைமலை நகருக்குச்
சென்றேன். இயக்ககத்திலிருந்து சில நண்பர்கள்
வந்திருந்தனர். தஞ்சாவூரிலிருந்து திரு.த.மாணிக்கம் (ஓய்வு பெற்ற ஆட்சி அலுவலர்) வந்திருந்தார் !
அவர்கள் குடும்ப
வழக்கப்படி 15 -ஆம் நாள் சடங்குகள் முடிந்த பிறகு
நானும் தஞ்சாவூர் திரு.த.மாணிக்கம் அவர்களும், திரு.செல்லையாவின் மூத்த மகன் திரு.சுப்ரமணியனை அழைத்து, அருகில் அமர வைத்துக்கொண்டு, அடுத்து அவர்கள் செய்ய வேண்டிய
செயல்களைப் பற்றி எடுத்துரைத்தோம். அரசிடமிருந்து பெறக்கூடிய பணப் பயன்கள்
தொடர்பாக உரிய விண்ணப்பங்களைத் தட்டச்சு செய்துகொண்டு வந்திருப்பதாக நான்
தெரிவித்தேன் !
அவரது தாயாரையும்
அழைத்து அவரிடமும் விவரங்களைச் சொன்னோம். கொண்டுவந்திருந்த விண்ணப்பங்கள்
அனைத்திலும் திரு.செல்லையாவின் துணைவியாரைக் கையொப்பமிடச் செய்தோம்.
கருணையடிப்படையில் பணி வாய்ப்புக் கோரும் விண்ணப்பத்தில் மட்டும் திரு.சுப்ரமணியனைக் கையொப்பமிடச் செய்தேன் !
ஒவ்வொரு
விண்ணப்பத்துடனும் என்னென்ன இணைக்கப் பட்டுள்ளன என்று விண்ணப்பத்தின் இறுதியில்
குறிப்பிட்டிருந்தேன். அதை திரு. சுப்ரமணியனிடம் காட்டி, அவற்றையெல்லாம் படித்துப் பார்த்து இணைக்க வேண்டியவற்றை ஒவ்வொன்றாக எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து, விண்ணப்பத்தின் இடப்பக்க மேல் மூலையில் ஊசி நூல்கொண்டு தைத்துப்
பிணைத்திடச் சொன்னேன் !
ஒவ்வொரு விண்ணப்பமும் 1 + 1 ஆகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றை
இயக்குநரிடம் தந்து விட்டு இன்னொன்றை வீட்டில் உங்கள் பார்வைக்காக
வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன். வேறு ஏதாவது ஐயமிருப்பின் என்னுடன் தொடர்பு
கொள்ளச் சொல்லி திரு.சுப்ரமணியனிடம் என் துழனி (PHONE)
எண்ணைத் தெரிவித்தேன் !
நானும்
திரு.மாணிக்கம் அவர்களும் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில், இயக்கக நண்பர்கள் சிலரும் எங்களைச் சூழ அமர்ந்திருந்தனர்.
திரு.இரெ.நடராசன் (வேட்டி நடராசன்) என்னிடம் வந்து செல்லமாகக் கோபித்துக்கொண்டார். “அண்ணா ! இந்த வேலையை இயக்ககத்தில்
இருக்கும் நாங்கள் செய்யமாட்டோமா ? சேலத்திலிருந்து வந்திருக்கும் நீங்கள் எங்கள் வாய்ப்பைப் பறித்துக் கொண்டீர்களே ?” என்றார் !
“யார் செய்தால் என்ன ? அடிப்படை வேலைகளை நான் செய்திருக்கிறேன். இயக்ககத்தில் அடுத்துத் தொடர வேண்டிய நடவடிக்கைகளை நீங்கள் விரைவு படுத்துங்களேன் ! “என்றேன். ”கண்டிப்பாகச் செய்வோம் அண்ணா !” என்று
நெகிழ்ச்சியுடன் கூறினார் திரு.இரெ.நடராசன். அமைச்சுப் பணியாளர்களுக்கு N.C.T.V.T அளவு கோலின் படி அலுவலக மேலாளர் உள்படப்
பல பணியிடங்களையும் எண்ணற்ற ஆட்சி அலுவலர் பணியிடங்களையும் பெற்றுத் தந்ததில் திரு செல்லையாவுடன்
தோளோடு தோள் நின்று உழைத்த தளபதிகள் அல்லவா, திரு.மு.பால்ராஜும் திரு.இரெ.நடராசனும் !
மறைமலை நகரிலிருந்து
சேலத்துக்குப் புறப்படுகையில் மன நிறைவோடு திரும்பினேன் - என் கடமையை நிறைவாகச்
செய்த பொந்திகையோடு (SATISFACTION) !
------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”வேதரெத்தினம்” வலைப்பூ,
[தி.ஆ: 2053, கும்பம் (மாசி) 05]
{17-02-2022}
-----------------------------------------------------------------------------------