(1995 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்)
எனது மலரும் நினைவுகளைத் தொடர்ந்து
படித்து வருபவர்களுக்கு ஒரு ஐயம் எழுந்திருக்கலாம். எனக்கும் திரு.செல்லையாவுக்கும்
இடையே உணர்வுகளைக் குழைத்து
உருவாக்கிய இத்துணைப் பிணைப்பு ஏற்பட்டது எப்படி
என்று ! எங்கள் நெருக்கத்திற்கான விதை நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் நேருக்கு நேர் சந்தித்துப்
பழகுவதற்கு முன்னதாகவே ஊன்றப்பட்டுவிட்டது !
நான் நாகப்பட்டினத்தில் பண்டகக் காப்பாளராகப் பணியாற்றி வந்த போது இயக்ககத்தில் திரு.ப.மணி தணிக்கை உதவியாளராகவும் பின்னர் சில ஆண்டுகள் கழித்து இன்னொரு பிரிவில் கண்காணிப்பாளராகவும் பணியாற்றி வந்தார் !
அவர் தேவகோட்டை அருகிலுள்ள அமராவதி புதூர் என்னும்
ஊர்க்காரர். நாங்கள் இருவரும் புதுக்கோட்டையிலும் இணைந்து பணியாற்றி
இருக்கிறோம்; திருச்சியிலும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம்
! இருவரது குடும்பமும் ஒன்றோடொன்று நட்பால் இணைந்த குடும்பம்
!
திரு.மணி இயக்ககத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய போது அவரது பிரிவில் திரு.செல்லையா உதவியாளர். திரு.செல்லையாவைப் பற்றி திரு.மணி என்னிடம் நிரம்பவும் சொல்லியிருக்கிறார் !
அவரது செயல் திறமை பற்றியும், நட்பினைப் போற்றும் குணம் பற்றியும், பிறரை அரவணைத்துச் செல்லும் உயரிய குணம் பற்றியும் அமைச்சுப் பணியாளர் சங்கத்தை இன்னும் வலுப்படுத்த வேண்டிய தேவை பற்றிய அவரது தொலைநோக்குப் பார்வை பற்றியும் திரு.மணி என்னிடம் வியப்புடன் நிரம்பக் கூறியிருக்கிறார் !
திரு.மணியின் பார்வையில் பழுதிருக்காது என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் திரு.மணிக்கும் எனக்கும் இடையிலான நட்பு அத்துணைக் களங்கமற்றது; உண்மையானது. வாழ்க்கையில் நிரம்பவும் அடிபட்டவர். அவர் நாவிலிருந்து உண்மையைத் தவிர வேறொன்றும் உதிராது என்பதைப் பலமுறை மெய்ப்பித்த மாமனிதர் !
அவர் நற்சான்று அளிக்கும் மனிதர் தவறான ஒருவராக இருக்க முடியாது என்பது
எனது நம்பிக்கை; அது உண்மையும்கூட ! இதன்
விளைவாக திரு.செல்லையா மீது என்னையறியாமலேயே ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது
!
திரு.செல்லையா, அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைமைப் பொறுப்புக்கு நிற்க முடிவெடுத்து
1982 –ஆம் ஆண்டு தேர்தலைச் சந்தித்த போது, நாகப்பட்டினத்திலிருந்து
என் சொந்தச் செலவில் பல அறிக்கைகளை அச்சிட்டு, அனைத்து நிலையங்களுக்கும்
அனுப்பி அவரையும் அவரது அணியையும் ஆதரிக்கச் சொல்லிப் பரப்புரை செய்திருந்தேன்.
அவரை நேரில் பாராமலேயே அவரது வெற்றிக்காக முனைப்பாக முயன்றேன்
!
தேர்தலில் திரு.செல்லையாவின் அணி வென்றது. மாநிலத் தலைவராக அவர் பொறுப்பேற்ற பிறகு ஒரு மாதம் கழித்து இயக்ககம் சென்றிருந்தேன். அப்போது திரு.மணி, என்னை திரு.செல்லையாவிடம் “இவர் தான் நாகப்பட்டினம் வை.வேதரெத்தினம்” என்று சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தார் !
இன்ப அதிர்ச்சியடைந்த
திரு.செல்லையா
என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டார்; அன்று என் கைகளை பற்றிக் கொண்ட திரு.செல்லையா, அவரது இறுதிக் காலம் வரை என்னைத் தன் அன்புப்
பிடிக்குள் வைத்திருந்தார். சங்கம் தொடர்பான செயல்பாடுகளில் என்னைக்
கலந்து கொள்ளாமல் அவர் தன்விருப்பாக எந்த முடிவையும் எடுத்ததே இல்லை !
எங்கள் நட்பு அத்துணைத் தூய்மையானது. நட்பினால் இறுக்கப்பட்டிருந்த
எங்கள் உறவு அவரது இறப்பினால் துண்டிக்கப்பட்டுத் துவண்டு போயிற்று ! வேறு எவரையும் விட திரு.செல்லையாவின் இறப்பு என்னை மிகவும்
உடைத்து நொறுக்கிவிட்டது. இந்த இடத்தில் திரு.மணி பற்றியும் இரண்டொரு செய்திகளைச் சொல்லியாக வேண்டும் !
திரு.மணி சில ஆண்டு காலம் தணிக்கைப் பிரிவில் பணியாற்றியதால், பல நிலையங்களுக்கும் தணிக்கைக்காகச் சென்றிருக்கிறார். ஆகையால் பணி ஓய்வு பெற்ற நண்பர்கள் பலருக்கும் அவர் நன்கு அறிமுகமானவர் !
பின்னர் உதவிக் கணக்கு அலுவலராகப் பணி
மாற்றம் பெற்று கருவூலக் கணக்குத் துறைக்குச் சென்ற அவர், சென்னை
உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில் ஆய்வுக்குச் சென்றுவிட்டு இல்லம் திரும்பும்
போது, பாரிமுனையில் கடுமையான மாரடைப்பின் காரணமாக சாலையோரத்தில்
அமர்ந்தபடியே இறந்துபோனார் !
என் மீது அன்பு பூண்ட உண்மை நண்பர்கள் இத்துணை விரைவாக – முதிரா அகவையில் – மடிந்து போவார்கள் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. சிலருக்கு நோயால் நலிவடைந்த உடம்பிருக்கும்; வேறு சிலருக்கு ஆட்கொல்லி நோயின் பீடிப்பு இருக்கும். இத்தகையவர்களின் மறைவு என்பது ஓரளவு எதிர்பார்க்கக் கூடியது !
ஆனால், நலிவடையா உடம்பு படைத்தவர்களின் மறைவு யாராலும் எதிர்பார்க்க முடியாதது.
திரு.செல்லையாவும், திரு.மணியும் வலிமையான உடல் பெற்றவர்கள். அவர்களும்
– எதிர்பாரா வேளையில் – மடிந்து போவாரர்கள் என்றால்
இயற்கையை என்னவென்பது ?
”அடடா ! நேற்றுத்தானே அவரைப் பார்த்தேன். நன்றாக இருந்தாரே
! இன்று இறந்துவிட்டாரா ? என உலகமப்பா இது
”? எதிர்பாரா இறப்புச் செய்தி கேட்டு மக்கள் ஆற்றும் எதிர்வினையின் வடிவம்
இது !
இதைத் தான் நம் ஆசான் வள்ளுவப் பெருந்தகை
கூறுகிறார், “நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு” (குறள்.336) !
நம் வாழ்க்கை நிகழ்வுகள் ஒவ்வொன்றையும்
எதிரொலிக்கும் திருக்குறளையும் நாம் புரிந்து கொள்ளவில்லை; திருவள்ளுவரின் பெருமைகளையும்
அறிந்து கொள்ளவில்லை ! நட்பின் மேன்மையையும் தெரிந்து கொள்ளவில்லை;
அகவையிற் பெரியோரின் அமுத மொழிகளையும் போற்றி மதிப்பது இல்லை
! இதுதான் இன்றைய உலகம் !
----------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”வேதரெத்தினம்” வலைப்பூ,
[தி.ஆ: 2053, கும்பம் (மாசி)
06]
{18-02-2022}
--------------------------------------------------------------------------------------
திரு.ப.மணி |