(1996 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்)
அரசு அலுவலர்களில் மூன்றடுக்குப் படிநிலை
உள்ளது. (01) களப்பணி அலுவலர்கள்
(02) கண்காணிப்பு நிலை அலுவலர்கள் (03) ஆளும் அலுவலர்கள்
அல்லது ஆட்சி செலுத்தும் அலுவலர்கள். முதல் வகையில் அலுவலக மேலாளர் / கண்காணிப்பாளர் நிலைக்குக் கீழுள்ள அனைவரும் அடங்குவர். இரண்டாவது வகையில் அலுவலக மேலாளர் / கண்காணிப்பாளர் ஆகியோர்
அடங்குவர் !
மூன்றாவது வகையில் ஆட்சி அலுவலரும் அவருக்கு
மேலுள்ள அதிகாரிகள் அனைவரும் அடங்குவர்
! தொழில்நுட்ப அலுவலர் வகையிலும் இதே போல் மூன்றடுக்குப் படிநிலை உண்டு
!
வேலை வாய்ப்புப் பயிற்சித் துறையின் பயிற்சிப்
பிரிவில் அலுவலக மேலாளர் /
கண்காணிப்பாளர் என்போர் கண்காணிப்பு நிலை அலுவலர்கள் ஆவர். இவர்கள் ஆட்சி அலுவலர் ஆகும் போது, ”கண்காணிப்பு”ப் பொறுப்பிலிருந்து விடுபட்டு,
தனக்குக் கீழுள்ள அலுவலர் குழுவை (ESTABLISHMENT) ஆள்கின்ற அதிகாரி ஆகிறார் !
ADMINISTRATION என்பதற்கு
OXFORD DICTIONARY கூறும் சில பொருள்களுள், THE GOVERNMENT IN POWER, THE MANAGEMENT OF
PUBLIC AFFAIRS என்பவையும் அடங்கும். தமிழில் இதை ”ஆட்சி செலுத்தும் அமைப்பு” அல்லது “ஆளும் அமைப்பு” என்று கூறலாம். இந்த வகையில் ADMINISTRATIVE OFFICER என்பவர் தனக்குக்
கீழுள்ள அலுவலர் குழுவை ஆள்கின்ற அதிகாரி ஆகிறார். இதனால் தான்
ADMINISTRATIVE OFFICER என்னும் பணியிடப் பெயரை “ஆட்சி அலுவலர்” என்று மொழியாக்கம் செய்கிறது பேரசிரியர்
திரு.மா.நன்னன் அவர்கள் பதிப்பித்து வெளியிட்ட
தமிழக அரசின் “ஆட்சிச் சொல் அகராதி” !
அரசின் கீழ் பணிபுரியும் அலுவலர்கள் (I.A.S, I.P.S., I.F.S. தவிர)
அனைவரும் TAMILNADU STATE AND SUBORDINATE SERVICES என்னும் விதியின் படி ஆளுமை செய்யப்படுகிறார்கள். அலுவலக
மேலாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர் ஆகியோர் SUBORDINATE SERVICES என்னும் வகையின் கீழ் வருகிறார்கள். ஆட்சி அலுவலர்,
துணை இயக்குநர், இணை இயக்குநர் ஆகியோர்
TAMILNADU STATE SERVICE என்னும் வகையின் கீழ் வருகிறார்கள்.
ஆட்சி அலுவலர் பணியிடம் TAMILNADU GENERAL SCERVICE என்னும் மாநிலப் பணி வகை சார்ந்தது. . அவர் யாருக்கும்
கீழ்நிலை அலுவலர் (SUBORDINATE OFFICER) அல்லர் என்பதை இப்போது
பணியில் இருக்கும் ஆட்சி அலுவலர்கள் அனைவரும் உணர வேண்டும் !
இயக்குநருக்கு அடுத்தடுத்த நிலையில் இணை
இயக்குநர், துணை
இயக்குநர், உதவி இயக்குநர், முதல்வர்,
ஆட்சி அலுவலர் ஆகியோர்
இருக்கின்றனர். இவர்கள் எல்லாம் முதல் நிலை அதிகாரி, இரண்டாம் நிலை அதிகாரி, மூன்றாம் நிலை அதிகாரி,
என்னும் தர வரிசை அதிகாரிகளே தவிர, இயக்குநருக்குக்
கீழ்நிலை அதிகாரி (SUBORDINATE OFFICER) அல்லர் !
பணி விதிகளின் படி இவர்கள் எல்லாம் மாநில
நிலை அதிகாரிகள் (STATE SERVICE
OFFICERS) ஆவார்கள். மாநில நிலை அதிகாரிகளை அரசு
பணியமர்வு செய்கிறது. கீழ்நிலை அலுவலர்களைத் துறைத் தலைவர் பணியமர்த்தம்
செய்கிறார். மாநில நிலை அதிகாரி என்னும் தகுதி பெற்றவர்கள் யாரும்,
யாருக்கும் கீழ்நிலை அதிகாரி (SUBORDINATE) அல்லர்
!
ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட ஆட்சிச் சொல் அகராதி “ஆட்சி அலுவலர்” என்னும் அழகிய பெயரைச் சூட்டி இருக்கும் போது, “நிர்வாக அலுவலர்” என்னும் பாதி வடமொழி, பாதி தமிழ் கலந்த பெயரை ஏன் நம் நண்பர்கள் இன்னும் விடாப்பிடியாகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை !
ஆட்சி அலுவலராக நான் ஓசூரில் 27-11-1996 அன்று பணியேற்றேன்.
பொறுப்பில் அமர்ந்ததும் முதல் வேலையாக என் அறை வாயிலில் பொருத்தியிருந்த
“நிர்வாக அலுவலர்” என்னும் பெயர்ப் பலகையை
“ஆட்சி அலுவலர்” என்று மாற்றி எழுதச் செய்தேன்.
அடுத்ததாக ”நிர்வாக அலுவலர்” என்னும் பெயரிலிருந்த பயினச்சுகளை (RUBBER STAMPS) நீக்கிவிட்டு
“ஆட்சி அலுவலர்” என்னும் பெயருடைய பயினச்சுகளைச்
செய்யச் செய்தேன் !
“ஆட்சி அலுவலர்” என்பவர் ஆள்கின்ற அதிகாரி (GOVERNING OFFICER) தானே தவிர “கண்காணிப்பு
அலுவலர்” (SUPERVISORY OFFICIAL) அல்லர் ! ஆகையால் தன் விருப்பப்படி அலுவலகக் கட்டமைப்பை மாற்றியமைக்கும் உரிமை அவருக்கு
உண்டு. யாருடைய இசைவும் இதற்குத் தேவையில்லை !
ஒவ்வொரு அலுவலரும் உயர் பதவியில் அமர வேண்டும்
என்று விழைவு கொள்வதில் தவறில்லை;
அவர்கள் விருப்பம் இயல்பானது தான். ஆனால் விதிமுறைகளைப் பற்றிய போதிய
அறிவை அடையாமல், அடைவதற்குச் சிறிது கூட முயலாமல் உயர் பதவியில்
அமர்வதால் அவருக்கு மதிப்புக் கிடைத்துவிடாது !
“எனக்கு ஒன்றும் தெரியாது”
என்று நெற்றியில் எழுதி ஒட்டிக் கொள்வதைப் போல, உயர் அலுவர்கள் முன்னிலையில் “தேமே” என்று விழித்துக் கொண்டு நின்றால், அலுவலகத்தில் எலி
பிடிக்க வரும் பூனை கூட அவர்களை மதிக்காது. தன்னைப் பிறர் மதிக்க
வேண்டும் என்று நினைக்கும் அலுவலர்கள், முதற்பணியாக அரசு ஆணைகளைப்
பற்றிய அறிவிலும், விதிமுறைகளைப் பற்றிய அறிவிலும் நன்கு தேர்ச்சி
பெறவேண்டும் !
கணக்குத் தேர்வுக்கு (ACCOUNT TEST FOR SUBORDINATE
OFFICERS) பயிற்சி தரும் தனியார் நிறுவனம் ஒன்று ACCOUNT TEST
INSTITUTE என்னும் பெயரில் முன்பு சென்னை எழும்பூரில் இயங்கி வந்தது.
இப்போது அந்நிறுவனம் இருக்கிறதா என்பது தெரியவில்லை. அவர்கள் விதிமுறைகளைச் சாறு பிழிந்து தருவது போல் சில புத்தகங்களை முன்பு வெளியிட்டு
வந்தனர். இப்போது அது போன்ற புத்தகங்கள் கிடைத்தால் வாங்கிப்
படியுங்கள்; அவை உங்கள் அறிவுத் திறனையும் மதிப்பையும் உயர்த்திக்கொள்ள
உதவும் !
இயன்றவரை அரசாணைகளை, 50 ஆண்டுகளுக்கு முற்பட்டவையானாலும்
கூட அவற்றைச் சேகரியுங்கள். ஒரு மாதத்திற்கு 100 அல்லது 150 என்று இலக்கு வைத்துக்கொண்டு சேகரித்து,
தைத்து புத்தகம் போலாக்கி வைத்துக்கொள்ளுங்கள். அவற்றுக்கு அட்டவணையும் உருவாக்கி வைத்துக் கொள்ளுங்கள். நேரம் கிடைக்கும் போது அவற்றைப் புரட்டிப் பார்த்துப் படித்து அறியுங்கள்.
அலுவலகப் பணிகளில் முடிவெடுக்க அது உங்களுக்கு உதவும் !
அலுவலக மேலாளர் / ஆட்சி அலுவலர் ஆகியோர்
விதிமுறைகளைத் திறம்படவும் சரியாகவும்
எடுத்துக்காட்டி
வழிநடத்தினால் முதல்வர்கள் அவர்களை மதிக்கும் நிலை உருவாகும்.
வெள்ளறிவு (NIL KNOWLEDGE) கொண்டவர்களாக இருந்தால்,
முதல்வர்களின் முன்னால் அகத்திய முனிவர் போலக் குறுகித் தான் காட்சியளிக்கும்
நிலை ஏற்படும் !
மதிப்பான பதவிகளில் அமர்ந்து, அப்பதவிகளுக்கு உரிய மதிப்பில்லாமல்
செய்துவிடக்கூடாது ! தேடுங்கள் ! தேடுங்கள்
! அரசாணைகளைத் தேடிச் சேகரியுங்கள் ! அதுவொன்றே உங்கள் மதிப்பை உயர்த்தும்;
உங்களை மிக உயரத்தில் எந்நாளும் நிலை நிறுத்தும் !!
----------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”வேதரெத்தினம்” வலைப்பூ,
[தி.ஆ: 2053, கும்பம் (மாசி) 08]
{20-02-2022}
-------------------------------------------------------------------------------------