(1998 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்)
பணியமைப்புப் பிரிவுக்கு (ESTABLISHMENT SECTION) ஒரு குறிப்பு அனுப்பினேன்.
அதில், அலுவலக மேலாளர் திரு.ஆர்.நடராசன், இன்று (அடைப்புக் குறிக்குள் நாள் குறிப்பிட்டு) வருகைப் பதிவேட்டில்
சுருக்கொப்பம் இட்டுவிட்டு, முறையான இசைவின்றி வெளியில் சென்றவர்,
அலுவலகத்திற்குத் திரும்ப வரவில்லை. சொந்த ஊரான
சென்னைக்குச் சென்று விட்டதாக அலுவலக உதவியாளர் மற்றும் இன்னொரு மேலாளரிடம் உசாவியதில்
தெரிகிறது !
அவர் செயல், தமிழ்நாடு அரசு அலுவலர்கள்
நடத்தை விதி (20) (1)- க்கு முரணானது. எனவே
அவர்மீது தமிழ்நாடு குடிமைப் பணிகள் விதி 17(அ) வின் படி -ஏன் ஒழுங்கு நடவக்கை எடுக்கக்கூடாது என்பதற்கு
விளக்கம் கேட்டு குறிப்பாணை வைக்கவும், என்று குறிப்பிட்டிருந்தேன்.
திரு.நடராசன் திங்கள் கிழமை பணிக்கு வந்ததும்,
அவரிடம் விளக்கம் கேட்கும் குறிப்பாணை வழங்கப்பட்டது !
திரு. நடராசன், இதை எதிர்பார்க்கவில்லை.
முன்பு நான் அளித்திருந்த நயப்பின் (சலுகை)
படி நண்பகல் 1-00 மணிக்கு அலுவலகம் வந்தவர்
15 நிமிடம் போலும் அப்படியே அமர்ந்துவிட்டார். பின்பு சற்றுத் தயக்கத்துடன் என்னிடம் வந்தவர், “SORRY SIR, நான் அப்படிச் செய்திருக்கக் கூடாது. நான் செய்தது தவறு
தான்” என்றார் !
”எவ்வளவு பெருந்தன்மையுடன்
உங்களுக்கு வாரத்திற்கு இரண்டு அரைநாள் சிறப்பு இசைவு அளித்திருக்கிறேன். அதை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் என்னை ஏமாற்றி விட்டீர்களே.
பிற அலுவலர்களுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ வேண்டிய நீங்கள்,
இப்படி செய்தால் உங்களுக்குக் கீழுள்ளவர்கள் உங்களை எப்படி மதிப்பார்கள்.
உங்கள் மதிப்பை நீங்களே கெடுத்துக் கொண்டீர்கள்” என்றேன் !
தலை குனிந்து நின்று கொண்டிருந்தார். “கொடுக்கப்பட்ட குறிப்பாணைக்கு
உங்கள் விளக்கத்தைக் கொடுங்கள். இனி நீங்கள் நடந்துகொள்ளும் முறையை
வைத்து அடுத்து என்ன செய்வதென்று அப்புறம் முடிவு செய்கிறேன். இப்பொழுது நீங்கள் செல்லலாம்” என்றேன் !
இது நடந்தது திங்கள் கிழமை. வெள்ளிக் கிழமைக்குள் 50 தணிக்கைத் தடைப் பத்திகளுக்கு அவரே சீரறிக்கை தயார் செய்து கோப்பினை அனுப்பினார். நான் இசைவளித்திருந்தபடி வெள்ளிக்கிழமை பிற்பகல் 02-00 மணிக்கு என்னிடம் வந்து சொல்லிவிட்டு அவர் சென்னை செல்ல வேண்டும் !
ஆனால், 03-00 மணியாகியும் ஊருக்குச் செல்லாமல்
அலுவலகத்திலேயே அமர்ந்திருந்தார். அவரை அழைத்து, ”நான் கொடுத்த வாக்கினை மீறமாட்டேன். அலுவலகம் முடியும்
வரை நீங்கள் காத்திருக்க வேண்டாம்; சென்னைக்குப் புறப்படுங்கள்”
என்றேன் !
சென்னைக்குப் புறப்படும் முன் மாலை 03-15 மணி வாக்கில் என்னிடம் வந்து சொல்லிவிட்டுச் சென்றார். சென்னை சென்றவர் அப்போது அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்த திரு.பால்ராஜ் அவர்களைச் சந்தித்து என் மீது நிரம்பப் புகார்களைக் கூறியிருக்கிறார் !
புகார் கூறியவர், திங்கள்
கிழமை அரைநாள் தாமதமாக வருவதற்கும், வெள்ளிக்கிழமை அரை நாள் முன்னதாகச்
செல்வதற்கும் நான் அளித்திருந்த சிறப்பு நயப்பு (சலுகை)
பற்றிக் கூறாமல் மறைத்திருக்கிறார் !
நான் மிகவும் “TERROR” ஆக இருக்கிறேன்
என்றும் அலுவலர்களை மதிப்புக் குறைவாக நடத்துவதாகவும் கூறியிருக்கிறார். இதுபோல் எத்தனை பேரிடம் என் மீது புகார் சொன்னாரோ தெரியாது. ஒரு மாதம் கழித்து திரு.பால்ராஜ் அவர்களிடம் நான் எழினி
(MOBILE) மூலம் தொடர்பு கொண்டு பிற செய்திகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த
போது, இந்தச் செய்தி பற்றியும் தெரிய வந்தது !
திரு.நடராசனுக்குத் தரப்பட்ட குறிப்பாணைக்கு, அவர் உரிய விளக்கம் தராமல், காலம் தாழ்த்தி வந்தார். இரண்டு மாதங்கள் கழித்து அவருக்கு நினைவூட்டுக் குறிப்பாணையைத் தந்தபோதுதான், சிக்கல் இன்னும் தீரவில்லை என்பதை அவர் உணர்ந்தார் !
அலுவலகத்தில் இருந்த சில நடுநிலை நண்பர்கள் அவரிடம் பேசி, குற்றத்தை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்து விளக்கக் கடிதத்தைக் கொடுங்கள்.
ஆட்சி அலுவலர் யாரையும் தண்டிக்கும் குணமுடையவர் அல்லர். உங்களுக்குச் சிக்கல் இல்லாதபடி நல்ல முடிவு எடுப்பார் என்று அவரிடம் கூறியிருக்கிறார்கள்
!
மிகுந்த தயக்கத்திற்குப் பிறகு, அவர்கள் கூறியபடியே,
தனது குற்றத்தை ஒப்புக்கொள்வதாகவும், தனது செயலுக்கு
மிகவும் வருந்துவதாகவும், இனிமேல் இவ்வாறு நிகழாது என்றும் உறுதியளித்து
விளக்கக் கடிதத்தை எழுதிவந்து என்னிடம் தந்தார். அதை வாங்கிப்
படித்துப் பார்த்துவிட்டு, ”சென்ற வாரம் தான் திரு.பால்ராஜ் அவர்களிடம் பேசினேன்” !
“நீங்கள் அவரைச் சந்தித்தது
பற்றியும், என் மீது புகார்ப் பட்டியல் படித்தது பற்றியும் என்னிடம் அவர் தெரிவித்து, ”உங்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்;
ஆகையால் நான் திரு.நடராசன் சொன்னதைப் பெரிதாக எடுத்துக்
கொள்ளவில்லை” என்று என்னிடம் அவர் கூறியதாகவும் தெரிவித்தேன்
!
இன்னும் எத்தனை பேரிடம் என் மீது புகார்ப்
பட்டியல் படித்தீர்கள் என்று கேட்டேன்.
இந்த நேரடித் தாக்குதலை அவர் எதிர்பார்க்கவில்லை. திரு.நடராசன் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றுவிட்டார்.
இதைவிட வேறு என்ன தண்டனை நான் அவருக்குக் கொடுக்க முடியும் ?
பணியமைப்புப் பிரிவு உதவியாளரை அழைத்து, திரு.நடராசனிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்பட்ட கோப்பினைக் கொண்டுவரச் சொன்னேன். அதில் அவரது விளக்கக் கடித்ததை இணைத்து மேல்நடவடிக்கை பற்றி ஆணை கோருமாறு தெரிவித்தேன் !
அவர் அவ்வாறே ஆணை கோரி,
குறிப்பு எழுதிக் கொண்டு வந்தவுடன், பணிக்கு வராத
ஒருநாளைத் தற்செயல் விடுப்பாக முறைப் படுத்திடவும், வேறு மேல்
நடவடிக்கை எதுவும் தேவையில்லை என்றும்
கோப்பில் பதிவு செய்தேன். திரு.நடராசன் முன்னிலையிலேயே இவ்வளவும் நடந்தது !
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு ? (குறள்.987)
சில மனிதர்கள் இப்படித்தான் மேலதிகாரிகளின்
புறத் தோற்றத்தைப் பார்த்துத் தப்புக் கணக்குப் போடுகிறார்கள். மேலதிகாரிகள் துணிச்சல்
அற்றவர்களாக இருந்தால், இவர்கள் எகிறுகிறார்கள்; துணிச்சலும் நேர்மையும், விதிமுறைகள் பற்றிய நிறைந்த
அறிவும் உள்ளவர்களாக இருந்தால், ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டுக்
கால் சேற்றில் மாட்டிக்கொண்ட பின் பின்னர்
“ஐயோ ! அம்மா !” என்று அலறுகிறார்கள்
!
“வினை வலியும் தன்வலியும்
மாற்றான் வலியும்,
துணைவலியும் தூக்கிச் செயல்” (குறள்.471)
என்பது வள்ளுவர் வாக்கு ! தன்செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே எந்த
மனிதனும் ஒரு செயலில் ஈடுபட வேண்டும். இல்லையேல் தன்மதிப்பை இழந்து அடுத்தவர் முன்
தலைகுனிந்து தான் நிற்க வேண்டும் !
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”வேதரெத்தினம்” வலைப்பூ,
[தி.ஆ: 2053, கும்பம் (மாசி) 14]
{26-02-2022}
-------------------------------------------------------------------------------------