தேடுக !

சனி, 5 மார்ச், 2022

மலரும் நினைவுகள் (63) குடிகாரத் துப்புரவாளர் திருந்திய கதை !

(1998 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்)     

தருமபுரி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்  பணி புரிந்து வந்த துப்புரவுப் பணியாளர் ஒருவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். உயர் அலுவலர்களை நேருக்கு நேர் ஒருமையில் திட்டும் அளவுக்கு அவரது அன்றாட நடவடிக்கைகள் வரம்பு மீறிப் போய்க் கொண்டிருந்தன ! அவர் பெயர் இப்போது நினைவில்லை என்பதால் பெயரைக் குறிப்பிட முடியவில்லை !

 

சேற்றில் புரண்ட பன்றியைக் கண்டால் ஒவ்வொருவரும் விலகிச் செல்வது போல், பயிற்சி நிலைய அலுவலர்கள் அவரைக் கண்டு விலகிச் சென்றார்களே தவிர, அவரது அட்டூழியங்களுக்கு முடிவு காண யாரும் முன்வரவில்லை !

 

கலிங்க நாட்டு மன்னனின் பெயரையுடைய அந்நிலைய முதல்வரால் துப்புரவுப் பணியாளரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவரைக் கட்டுப்படுத்துவதற்குப் பதில் வேறு ஊருக்கு அவரை இடமாற்றல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். அதன் விளைவாக அந்தத் துப்புரவுப் பணியாளர் ஓசூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கிருந்து விடுவிக்கப்பட்டார் !

 

ஓசூருக்கு வந்து பணியேற்க வேண்டிய நாள்.  அன்று ஓசூர் பயிற்சி நிலையத்தில் முதல்வர் திரு..அப்துல் அமீது விடுப்பில் இருந்தார். எனவே அந்தத் துப்புரவுப் பணியாளர் என்னிடம் வந்து பணியேற்பு  அறிக்கையைத் தந்தார் !

 

அவரைப் பற்றி முன்னதாகவே நான் கேள்விப் பட்டிருந்தேன். பணியேற்பு அறிக்கையைப் பெற்றுக்கொண்டு, அவரிடம், “இது தருமபுரி அல்ல; ஓசூர். உன்னுடைய அலம்பல்களையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு ஒழுங்காக உன் வேலையைச் செய்யவேண்டும். வரம்பு மீறினால் நான் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டேன். உன் வேலைக்கே அது உலை வைப்பதாக அமைந்துவிடும். எனவே ஒழுங்காக நடந்துகொள்என்று எச்சரித்து அனுப்பினேன் !

 

பணி நேரத்தில் மது அருந்தாமல்  இரண்டு மாதங்கள் ஒழுங்காக இருந்தார். பின்பு அவரது  அலம்பல் மெல்லத் தொடங்கியது. என் அறிவுரையின்படி, சம்பள நாளன்று, அவர் மனைவியிடம் தான் சம்பளப் பணம் தரப்பட்டு வந்தது. ஒருநாள், அலுவலகத்திற்குள் அவரது குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது !

 

அலுவலக உதவியாளரை அழைத்துஉள்ளே என்ன நடக்கிறதுஎன்று கேட்டேன். அவர் அந்த துப்புரவுப் பணியாளர் கணக்கரிடம் கத்திக் கொண்டிருக்கிறார்  என்று   அங்கு நடைபெறுவதை விவரித்தார் !

 

முதல்வர் திரு.அப்துல் அமீது,  புத்தாக்கப் பயிற்சியின் பொருட்டுக் கல்கத்தாவுக்குச்  சென்றிருந்தார். முதவர் பொறுப்பைக் கவனித்து வந்த சார்புரை மைய உதவி இயக்குநர், அவரது அலுவலகத்தில் இருந்தார்.  துப்புரவுப் பணியாளரின் கூச்சலைக் கேட்டு வெகுண்ட  நான் முதல்வர் அறைக்குச் சென்று, தொலைபேசி மூலம் மத்திகிரி காவல் ஆய்வாளரை அழைத்து செய்தியைச் சொன்னேன் !

 

குடித்துவிட்டு வந்து கூச்சலிடும்  துப்புரவுப் பணியாளரின் அட்டூழியத்தைக் காவல் ஆய்வளரிடம்  விவரித்தேன். முறையான புகார் விண்ணப்பம்  தட்டச்சு ஆகிக் கொண்டிருக்கிறது, நீங்கள் வரும்போது  அதை நேரில் தருகிறேன் என்று சொல்லி அவரை உடனே வருமாறு அழைத்தேன் !

 

இதற்கிடையில் அலுவலக மேலாளரை அழைத்து, புகார் விண்ணப்பத்தைத் தட்டச்சு செய்து கொண்டு வருமாறு தெரிவித்தேன். தட்டச்சுப் பணி நடந்துகொண்டு இருக்கையில், நடப்பவற்றை மோப்பம் பிடித்துவிட்ட  பிற துப்புரவுப் பணியாளர்கள், “குடிகாரரை வெளியே தள்ளிக் கொண்டு போய் தொலைவான ஒரு இடத்தில் பதுக்கி வைத்துவிட்டனர் !

 

காவல் ஆய்வாளர் இரண்டு காவலர்களுடன் வந்துவிட்டார். அவர்களை முதல்வர் அறையில் அமர வைத்து என்ன நடந்தது என்பது பற்றி விவரித்து. புகார்க் கடிதத்தையும் அவரிடம் தந்தேன். புகாரின் மீது நடவடிக்கை எதுவும் வேண்டாம் என்றும், நடவடிக்கை எடுத்தால் அந்த ஆளின் வேலை பறிபோய்விடும் என்பதையும் மிகவும் கமுக்கமாக (ரகசியமாக) சொல்லி, அந்த ஆள் திருந்துவதற்கு உதவி செய்யுங்கள் என்றும் கேட்டுக்கொண்டேன். நான் இவ்வாறு கேட்டுக்கொண்டது வேறு யாருக்கும் தெரியாது !

 

இதற்கிடையில் உதவி இயக்குநரும் அவரது அலுவலகத்தில்  இருந்து வந்துவிட்டார் ! அவரிடம் நடந்த நிகழ்வுகளை எடுத்துச் சொல்லி, காவல் ஆய்வாளரிடம் நான் விடுத்த வேண்டுகோள் பற்றியும் சொல்லி, இது வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் என்றும்  கேட்டுக்கொண்டேன் !

 

ஏனைய துப்புரவுப் பணியாளர்களையும் பயிற்சி நிலையக் காவலரையும்  காவல் ஆய்வாளர் அழைத்து,  குறிப்பிட்ட அந்த துப்புரவுப் பணியாரை அழைத்து வருமாறு பணித்தார். அவர் எங்கோ ஓடி ஒளிந்துவிட்டதாக  அவர்கள் தெரிவித்தனர்!

 

உங்களில் யார் யார் அவரை வெளியில் அழைத்துச் சென்றீர்கள் என்பது எனக்குத் தெரியும், 15 நிமிடங்களில் நீங்கள் அவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்து  வராவிட்டால், உங்களை எல்லாம் தளைப்படுத்த (கைது) வேண்டி இருக்கும் என்று எச்சரித்துவிட்டு அவர் புகார்க் கடிதத்தையும் பெற்றுக் கொண்டு காவல் நிலையம் சென்றுவிட்டார் !

 

குடிகாரரை வெளியில் தள்ளிக் கொண்டு போய்ப் பதுக்கி வைத்தவர்களுக்கு உதறல் ஏற்பட்டுவிட்டது. அரை மணி நேரத்திற்குள் அவரையும் அழைத்துக் கொண்டு அனைவரும் காவல் நிலயம் சென்றனர் !

 

நீங்கள் எல்லாம் அரசுப் பணியில் இருப்பதால், உங்கள் மீது கைவைக்கவில்லை !  இல்லையென்றால் நடப்பதே வேறு.  நீங்கள் யாரும் இந்த ஆளுக்கு உதவி செய்யக்கூடாது. நீங்கள் போகலாம் என்று, மற்றவர்களை எச்சரித்து அனுப்பிவிட்டார்!

 

குடிகாரரை மட்டும் நாள் முழுவதும் அங்கேயே உட்கார வைத்துவிட்டார். மாலையில் அவரை அழைத்து, “நீ வீட்டிற்குப் போய்விட்டு நாளைக் காலையில் 8-00 மணிக்கு  இங்கு வந்துவிட வேண்டும்என்று கடுமையாக எச்சரித்து அனுப்பினார் !

 

இதுபோல் மூன்று நாள்கள் அந்தத் துப்புரவுப் பணியாளர் வீட்டிற்கும் காவல் நிலையத்திற்குமாக அலைய நேரிட்டது. நான்காம் நாள் காவல் ஆய்வாளர், அவரிடம் ஒரு  ஒப்புதல் வாக்குமூலம் எழுதி வாங்கிக் கொண்டார். அதில், தான் மது அருந்திவிட்டு, அலுவலகத்தில் கணக்கரிடம் தகராறு செய்தது உண்மை தான் என்பதை ஒப்புக்கொண்டிருந்தார் !

 

காவல் ஆய்வாளர், நிலைய எழுத்தரை அழைத்து , இவர் மீது முதல் தகவல் அறிக்கை எழுதி, நீதிபதியிடம்  கொண்டு போய் நிறுத்தி, சிறைச்சாலைக்கு அனுப்புங்கள் என்று உரக்கச் சொல்லியிருக்கிறர். இதைக் கேட்ட துப்புரவாளர், நடு நடுங்கிப் போய், காவல் ஆய்வாளரின் கால்களில் விழுந்து கதறி இருக்கிறார் !

 

சரி ! தொலைந்து போ. நாளை முதல் காவல் நிலையத்துக்கு வந்து கையெழுத்துப் போட்டுவிட்டு நீ தொழிற் பயிற்சி நிலையத்துக்குச் சென்று உன் பணிகளைச் செய்.  இனி எந்தக் காலத்திலும் நீ குடிக்கவே கூடாது !


என் சொல்லை மீறி நீ குடித்தாலோ அல்லது அலுவலகத்தில் யாரிடமாவது  சச்சரவு செய்தாலோ, உன்னைத் தூக்கிச் சிறைக்கு அனுப்பிவிடுவேன். இப்பொழுது நீ செல்லலாம்என்று கடுமையாக எச்சரித்ததுடன், ”உன் மீதான புகார் நிலுவையில் இருக்கும். முடிக்க மாட்டேன்என்றும்  அச்சமூட்டும் வகையில் பேசி அனுப்பியிருக்கிறார் !

 

இது நடந்தது 1998 –ஆம் ஆண்டு  பிற்பகுதியில் என்று நினைக்கிறேன். இந்த நிகழ்ச்சிக்குப்  பிறகு ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் நான் அங்கு ஆட்சி அலுவலராகப் பொறுப்பில் இருந்து இருக்கிறேன்.  2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 –ஆம் நாள் பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை, இந்தத் துப்புரவாளர், பயிற்சி நிலைய வளாகத்திற்குள்  குடிபோதையில் இருந்து  யாரும் பார்த்ததே இல்லை. ”பெட்டிப் பாம்பாகஅடங்கிச் சுருண்டு கிடந்தார் என்றே சொல்லலாம் !!

 

2001- ஆம் ஆண்டு ஒரு சம்பள நாள். நான் விரைவில் பணியிலிருந்து ஓய்வு பெறவிருப்பதைத் துப்புரவாளரின் மனைவி தெரிந்து கொண்டார் போலும் ! என்னிடம் வந்து தன் கணவர் (அந்தத் துப்புரவாளர்) குடிப்பழக்கத்தை  அறவே விட்டுவிட்டதாகவும்  என் உத்தரவின் படி சம்பள நாளன்று  தான் வந்து சம்பளத்தைப் பெற்றுச் செல்வதாகவும்  கூறிவிட்டு, என் குடும்பத்தை அழிவிலிருந்து  காப்பாற்றிய  நீங்கள் எங்கிருந்தாலும் நன்றாக இருப்பீர்கள் என்றும் கூறி இரு கைகளையும் கூப்பிக் கண்களில் நீர் மல்க   வாழ்த்திச் சென்றார் !

 

என் பணி ஓய்வுக்குப் பிறகு அந்தத் துப்புரவாளரின்  திருந்திய வாழ்க்கை நீடித்ததா, அவர் மனைவி தான் வந்து சம்பளத்தை வாங்கிச் சென்றாரா  என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. என்றாலும்  ஒரு ஏழைக் குடும்பத்தை அழிவிலிருந்து மீட்ட மனநிறைவு இன்றும் எனக்கு இருக்கிறது ! நான் ஆற்றிய பணிக்கு இதைவிட வேறு என்ன பரிசு எனக்கு வேண்டும் ?

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

வேதரெத்தினம்வலைப்பூ,

[தி.ஆ: 2053, கும்பம் (மாசி) 20]

{04-03-2022}

------------------------------------------------------------------------------------