தேடுக !

ஞாயிறு, 6 மார்ச், 2022

மலரும் நினைவுகள் (64) நிதி நிலைச் செய்திப் பலகை உருவாக்கம் !

(1998-ஆம் ஆண்டு நிகழ்வுகள்)     

பயிற்சி நிலையத்தில் பணிபுரியும் அத்துணை அலுவலர்களுக்கும் சம்பளம் பெற்றுத் தரும் அலுவலராக (PAY DRAWING OFFICER)  செயல்படுவது ஆட்சி அலுவலரின் கடமைப் பொறுப்புகளுள் தலையாயது  ஆகும் ! “சம்பளம் பெற்றுத் தருதல்என்று மூன்று சொற்களில் அடக்கிவிட்டாலும், சம்பளம் பெற்றுத் தருவதுடன் ஆட்சி அலுவலரின் கடமைப் பொறுப்புகள் முடிந்துவிடுவதில்லை !

 

ஒரு பயிற்சி நிலையம்  தடங்கலின்றி இயங்கிட  அலுவலர்கள் தேவை. அலுவலர்கள் தம் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றுவதற்கு  ஈடாக  அவர்களுக்குச் சம்பளம் வழங்கியாக வேண்டும். சம்பளத்துடன் அகவிலைப்படி, வீட்டுவாடகைப் படி, மலைவாழ் படி, நகர ஈட்டுப்படி, குளிர்காலப் படி, போன்று எத்தனையோ  வகையான படித் தொகையும் பெற்றுத் தரப்படுகிறது !

 

இடமாற்றலாகி வந்தால் பயணப்படி,  அலுவல் சார்பு உலாவுக்காகப் பயணப்படி போன்றவையும் பெற்றுத் தருதல் ஆட்சி அலுவலரின் கடமை  வரம்புக்குள் வருகிறது. இஃதன்றி முன்பண வகையில் வைப்புநிதி முன்பணம், பயண முன்பணம், சம்பள முன்பணம், மற்றும் இன்ன பிற முன்பணங்கள் பெற்றுத் தரும்  கடமைப் பொறுப்பும் ஆட்சி அலுவலருக்கு இருக்கிறது !

 

பணியிலிருந்து ஓய்வுபெறுவோர்க்கு பணிக்கொடைத் தொகை, ஓய்வூதியத்திலிருந்து ஒரு பகுதி விட்டுக்கொடுத்து ஈடாக உரிய தொகையை தொகுத்துப் பெறுகையில் அவற்றைப் பெற்றுத் தரவேண்டிய கடமையல்லாமல் வைப்புநிதிக் கணக்கிலுள்ள தொகை போன்றவற்றையும் பெற்றுத் தரவேண்டியது ஆட்சி அலுவலரின் பொறுப்பாகிறது !

 

 

பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் பயிற்சி உதவித் தொகை (STIPEND) பெற்றுத் தருதல், நிறுவனங்கள் வழங்கும் பொருள்களுக்கு உரிய பணத்தை அளகை வரைவாக  (BANK DRAFT)  பெற்றுத் தருதல், போன்ற கடமைகளையும் அவர் நிறைவேற்ற வேண்டியுள்ளது !

 

கருவூலத்திலிருந்து பணத்தைப் பெற்றுத் தருதல் தொடர்பான அனைத்துப் பணிகளையும் செய்திடக் கணக்கரும் கணக்குப் பிரிவு உதவியாளரும் இருந்தாலும்,  இதற்கான கடமைப் பொறுப்பினை ஆட்சி அலுவலருக்கு மட்டுமே அரசு அளித்துள்ளது. ஆகையால் பயிற்சி நிலையத்தின் ஒரு தூணாக முதல்வர் விளங்கினாலும் இன்னொரு தூணாக  ஆட்சி அலுவலர் விளங்குகிறார் !

 

பயிற்சி நிலையத்திற்கு ஒரு நிதியாண்டுக்குத் தேவையான செலவினங்களை எல்லாம்  முன்னதாகவே கணக்கிட்டு துறைத் தலைமைக்கு  அனுப்பி, அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு பெறுவதற்கான கருத்துருவை (BUDGET PROPOSAL) முன்னதாகவே அனுப்ப வேண்டிய கடமைப் பொறுப்பு ஆட்சி அலுவலருக்கு இருக்கிறது. நிதி ஒதுக்கீடு பெறப்பட்ட பின்பு, அதை முறையாகவும், கட்டுப்பாடுகளை மீறாமலும் செலவு செய்வதை உறுதிப்படுத்துவதும் ஆட்சி அலுவலரே !

 

ஒரு பயிற்சி நிலையத்தின் உருவளவு (SIZE) அந்நிலையத்திற்கு  ஒப்பளிக்கப் பெற்ற பயிற்சியாளர்களின் எண்ணிக்கையை வைத்தே, கணிக்கப் படுகிறது.  சிறிய பயிற்சி நிலையம், பெரிய பயிற்சி நிலையம் என்பதெல்லாம் இந்த அடிப்படையிலேயே கணிக்கப்படுகிறது !

 

சிறிய நிலையமாயின் அதற்கான ஆண்டு நிதி ஒதுக்கீடு 1998 –ஆம் ஆண்டுக் கணக்கின்படி உருபா 75 இலட்சம் வரை இருக்கும். பெரிய நிலையமாயின் அதற்கான நிதி ஒதுக்கீடு ஒன்றரை முதல் இரண்டு கோடி வரை இருக்கும் !

 

ஒரு ஆண்டுக்கு எவ்வளவு தொகை தேவை, எந்தெந்த இனங்களுக்கு எவ்வளவு தொகை தேவை என்பதைக் கணிப்பது முதல் அதைக் கோரிப் பெற்று, முறையாகச் செலவு செய்வது வரை அனைத்துப் பொறுப்புகளும் ஆட்சி அலுவலரையே சார்ந்தது !

 

இத்தனைப் பொறுப்பு வாய்ந்த ஆட்சி அலுவலர் பதவியிலிருந்து ஆளுமை செய்வதென்பது  எளிமையான செயலன்று. ஆண்டு வரவு செலவு மதிப்பீடு (BUDGET ESTIMATE), திருத்தப்பெற்ற  வரவு செலவு மதிப்பீடு (REVISED ESTIMATE) வரவு செலவு இறுதி மதிப்பீடு (FINAL MODIFIED APPROPRIATION), செலவாகாத் தொகையைத் திருப்பித் தரும் கருத்துரு (SURRENDER PROPOSAL) ஆகியவை பற்றியெல்லாம் ஆட்சி அலுவலருக்குப் போதிய செயலறிவு  கட்டாயம் தேவை!

 

இத்துணைப் பொறுப்பு வாய்ந்த ஆட்சி அலுவலர் பதவியில் ஒருவர் ஒளிர வேண்டுமென்றால், அரசினால்  ஒதுக்கீடு செய்யப் பெற்றுள்ள நிதியளவு, அவ்வப்போது செலவு செய்யப்படும் தொகை போக  இருப்பிலுள்ள எஞ்சிய தொகை போன்ற செய்திகள் ஆட்சி அலுவலருக்கு விரல்நுனியில் இருக்க வேண்டும் !

 

ஒரு அலுவலர் தனது மாறுதல் பயணப்பட்டியல் (TRANSFER T.A. BILL) பல மாதங்களாக நிலுவையில் உள்ளது, அதற்குரிய பணத்தைப் பெற்றுத் தாருங்கள் என்று  ஆட்சி அலுவலரிடம் கோரிக்கை வைத்தால், அவருக்கு உடனடியாக மறுமொழி தரும் வகையில் ஆட்சி  அலுவலரிடம்  போதிய புள்ளி விவரங்கள் இருக்க வேண்டும் !

 

எந்தவொரு அலுவலர் இத்தகைய கோரிக்கையுடன் வந்தாலும், அப்போதெல்லாம் கணக்கரை அழைத்து அவரிடம்  நிதியிருப்பு விவரம் கேட்டு அந்த அலுவலருக்கு மறுமொழி சொல்வதென்பது  ஆளுமைத் திறனுக்கு அழகாகாது !

 

இத்தகைய நிலைகளையெல்லாம் எதிர்கொள்வது எப்படி ? சிந்தித்தேன் ! விளைவு, என் அறையில்,  நிதிநிலையைக்   காட்டும் நிதி நிலைச் செய்திப் பலகை ஒன்றை உருவாக்கி வைப்பது என்று முடிவு செய்தேன். அந்தப் பலகை என் பார்வையில் படும்படியாக, எனக்கு எதிரில் சுவரில் இருந்தால்  நல்லது என்று கருதினேன். விளம்பரப் பலகை எழுதும் ஈர்மக் கலைஞர் (PAINTING ARTIST) ஒருவரை ஏற்பாடு செய்து  ஈர்மம்  (PAINT) கொண்டு  நிதி நிலைச் செய்திப் பலகையை  உருவாக்கச் செய்தேன் !

 

நான் பணியிலிருந்த போது, பயிற்சி நிலயத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும்  நிதியானது, வேலை வாய்ப்பு பயிற்சித் துறைக்கான  முதன்மைக் கணக்குத் தலைப்பில் சில துணைத் தலைப்புகளின் கீழ்  ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். (01). Pay and Allowances (02) Travelling Allawances (04) Office Contingencies  என்பவை அவற்றுள் சில. (01) Pay and Allowances  என்பதன்  கீழ் உட்தலைப்புகளாக  (1) Pay (2) Dearness Allowance (3) H.R.A. (4) C.C.A. (5) Winter Allowance (6) Hill Allowance போன்ற சிறு தலைப்புகளும் இருக்கும். அவையெல்லாம் இப்போது அவற்றின் வரிசை நிரல்படி என் நினைவில் இல்லை !

 

ஓசூர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பெற்ற  மொத்த நிதி, அவ்வப்போது ஆகியுள்ள செலவுகளின் தொகுமொத்தம்,   கணக்கிலுள்ள எஞ்சிய தொகை ஆகியவை  நிதி நிலைச் செய்திப்  பலகையில் இடம்பெறும் வகையில் நிரல்களை (COLUMNS) அமைத்தேன். அவை செய்திப் பலகையில் கீழ்காணும் வகையில் காட்சியளிக்கும் !

 

 

.……...…….நிதி நிலைச் செய்திப்  பலகை……….....

……………….(தொகையளவு ஆயிரத்தில்)……………..

-------------------------------------------------------------------------------------

.எண்.      | இனம்     |     ஒதுக்கீடு    | செலவு     |   மீதம்

-------------------------------------------------------------------------------------

01.சம்பளம்                            7500                 6500              1000

02.அகவிலைப்படி              3500                 2800                700

03.வீட்டு வாடகைப்படி     2200                 1800                400

04………….                           

05………….

-------------------------------------------------------------------------------------

 

தொகை அளவை அவ்வப்போது அழித்து எழுதும் வகையில் அவற்றுக்குரிய இடத்தை வெட்புலமாக (VACANT) விட்டுவிட்டு தலைப்புகளை மட்டும் ஈர்மத்தால் (PAINT) எழுதச் செய்தேன். தொகையளவுகள் சுண்ணக் காம்பினால் (CKALK PIECE) அவ்வப்போது எழுதப்படும். ஒரு பட்டியல் கருவூலத்திற்கு அனுப்பும் நிலையில் செலவான தொகை, எஞ்சிய தொகை இரண்டும் புதுப்பித்து எழுதப்படும் !

 

இந்த ஏற்பாட்டின்படி, ஒவ்வொரு கணக்குத் தலைப்பிலும் ஒதுக்கீடு, செலவு, எஞ்சியுள்ள தொகை  ஆகிய மூன்று விவரங்களும் அன்றாடம் என் விரல் நுனியில் இருக்கும். கணக்கரை அழைத்துக் கேட்கவேண்டிய தேவையில்லை ! என் பயணப் பட்டியலுக்குரிய தொகை  எப்போது கிடைக்கும் என்று கேட்கும் அலுவலருக்கு நிதி நிலைச் செய்திப்  பலகைப் பார்த்து உடனே மறுமொழி சொல்ல முடியும் !

 

வேலை செய்வது மட்டுமல்ல, அதைத் திட்டமிட்டு எளிமையாகச் செய்து முடிப்பதில்தான் ஒரு அலுவலரின் திறமை வெளிப்படும். அதுபோன்றே, விரல் நுனியில் அனைத்துச் செய்திகளையும் வைத்திருக்கும் ஒரு ஆட்சி அலுவலர் தான் ஆளுமை மிக்கவராகத் திகழ முடியும் !


-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

வேதரெத்தினம்வலைப்பூ,

[தி.ஆ: 2053, கும்பம் (மாசி) 21]

{05-03-2022}

-------------------------------------------------------------------------------------