(1999 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்)
நடந்த நிகழ்வுகளை நேர்முகக் கடிதம் மூலம் இணை இயக்குநர் திரு.வேலுச்சாமி அவர்களுக்கு சார்புரை மைய (R.I.CENTER) உதவி இயக்குநர் தெரிவித்திருந்தார். அத்துடன், தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு நடந்தவற்றை விவரித்தார். தன்னை வந்து நேரில் சந்திக்குமாறு உதவி இயக்குநரை திரு.வேலுச்சாமி அழைத்தார். வரும்போது முதல்வர் ஆட்சி அலுவலர் இருவரையும் அழைத்து வாருங்கள் என்றும் தெரிவித்திருந்தார் !
உதவி
இயக்குநர், முதல்வர் திரு.அப்துல்
அமீது, நான் மூவரும் சென்னை சென்று இணை இயக்குநரைச் சந்தித்தோம்.
அவர் உதவிப் பயிற்சி அலுவலரை இடைநீக்கம் செய்வதற்கு உங்களுக்கு அதிகாரமில்லை;
நீங்கள் எப்படி இதைச் செய்தீர்கள் என்று உதவி இயக்குநரை வினவினார்
!
உதவி
இயக்குநரும் முதல்வரும் திகைத்துப் போனார்கள்; இருவரும் என்னைப்
பார்த்தனர். நான் சற்று விழிப்புணர்வுடன் எடுத்துச் சென்றிருந்த தமிழ்நாடு குடிமைப் பணி விதிப் புத்தகத்தை
எடுத்துக் காட்டினேன் !
அதில்
விதி
“14(a)(i) – THE AUTHORITY WHICH MAY IMPOSE SUSPENSION REFERRED TO IN RULE 17 (e) ON A MEMBER OF A
SUBORDINATE SERVICE SHALL BE HIS IMMEDIATE SUPERIOR OFFICER OF THE STATE
SERVICE” என்று இருக்கும் சொற்றொடரை எடுத்துக் காட்டினேன் !
குறிப்பிட்ட
விதியைப் படித்துப் பார்த்த இணை இயக்குநர், உரிய மேல் நடவடிக்கையை
இங்கு இயக்ககத்தில் எடுக்கிறோம், கோப்பினை இங்கு அனுப்பி வையுங்கள்
என்று தெரிவித்தார். சரி என்று உதவி இயக்குநர் சொன்னதும் நாங்கள்
மூவரும் விடைபெற்று ஓசூருக்குத்
திரும்பினோம் !
இடைநீக்கம்
செய்ய யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதைக் கூட அறியாத இணை இயக்குநரின் ஆளுமையின்
கீழ் வேலை வாய்ப்பு, பயிற்சித் துறை என்ன முன்னேற்றத்தை
கண்டுவிட முடியும் என்று என் மனத்தில் தோன்றியது. மூவருக்கும்
இதே கருத்து தான் நிலவியது !
துறையின்
வளர்ச்சி பற்றிச் சிந்திக்காமல், தனது வளர்ச்சி பற்றி மட்டுமே
வாழ்நாளெல்லாம் சிந்தித்து ஒவ்வொரு நாளும் விடிந்தவுடன் அமைச்சர் வீட்டு வரவேற்பறையில்
காத்துக் கிடந்த இத்தகைய பெரிய மனிதர்கள் சிலரின்
தன்னல நடவடிக்கைகளின் காரணமாகவே கீழ் நிலையிலுள்ள அலுவலர்கள் இன்றும் கூட பதவி உயர்வின்றித்
துன்பத்தில் உழன்றுகொண்டு இருக்கிறார்கள்!
போராட்டத்தில்
ஈடுபட்ட பழகுநர் பயிற்சி உதவிப் பயிற்சி அலுவலருக்கு தமிழ்நாடு குடிமைப் பணி விதி 17
(ஆ) வின்படி குற்றச் சாட்டுக் குறிப்பாணை இயக்ககத்திலிருந்து
வழங்கப்பட்டது. பின்பு அவர் மீதான குற்றச் சாட்டுகளை விசாரிக்க
கோவை மண்டலப் பயிற்சித் துணை இயக்குநர் திரு.சி.இராமன் அவர்களை அமர்வு செய்து இயக்ககத்திலிருந்து ஆணை வழங்கப்பட்டது
!
திரு.இராமன், ஓசூருக்கு வருகை தந்து, குற்றம் சாட்டப் பெற்றிருக்கும் அலுவலரையும், உதவி இயக்குநர்,
முதல்வர், ஆட்சி அலுவலர், பழகுநர் பயிற்சி இளநிலை துணை நெறியாளர் திரு.துரைசாமி
ஆகியோரையும் விசாரித்துப் பதிவு செய்துகொண்டார். அத்துடன்,
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களையும் விசாரித்துப் பதிவு செய்துகொண்டார்
!
இறுதியில், குற்றம் சாட்டப் பெற்றிருந்த அலுவலர் மீதான குற்றச் சாட்டுகள் ஒவ்வொன்றும் மெய்ப்பிக்கப் பட்டனவா அல்லவா என்பதையும் பதிவு செய்து,
கோப்பினை இயக்ககத்திற்கு அனுப்பி வைத்தார் !
இயக்ககத்தில், கோப்பு ஆய்வு செய்யப் பெற்று குற்றம் சாட்டப் பெற்ற பழகுநர் பயிற்சி உதவிப்
பயிற்சி அலுவலரின் ஆண்டு ஊதிய உயர்வினை திரள் விளைவின்றி (WITH OUT
CUMULATIVE EFFECT) இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்து இணை இயக்குநரின்
பெயரால் செயல்முறை ஆணை வெளியாகியது !
அந்த
ஆணையைப் படித்துப் பார்த்தேன். ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கென்று
சில நடைமுறைகள் உள்ளன. அந்த நடைமுறைகள் பின்பற்றப்படாமல் அந்தச்
செயல் முறை ஆணை வழங்கப்பட்டிருப்பதைக் கண்ணுற்றேன் !
சார்நிலை
அலுவலகங்களுக்கு வழிகாட்ட வேண்டிய நிலையில் இருக்கும் மைய அலுவலகத்திலிருந்து இப்படிப்பட்ட
தவறான ஆணை வழங்கப் பெற்றிருப்பது எனக்கு வியப்பாகவும் வருத்தமாகவும் இருந்தது !
விதி 17(அ) வின் கீழ் நடவடிக்கை எடுக்கையில் குற்றச்சாட்டு போதுமான
ஆதரங்களுடன் மறுக்கப்படாவிட்டால், குற்றம் இழைத்தவருக்கு
(01) கண்டனம் (CENSURE) அல்லது (02) அடிப்படை ஊழியராயின் தொகைத் தண்டம் (FINE) அல்லது (03) ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பு
(WITH HOLDING OF INCREMENTS) அல்லது (04) அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருந்தால்
தொகைத் தண்டல் (RECOVERY OF AMOUNT) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று
விதிக்கப்படலாம் ! இவை நான்கும் சிறு தாக்கத் தண்டனைகள்
(MINOR PUNISHMENTS) எனப்படும் !
விதி 17(ஆ) வின் கீழ் நடவடிக்கை எடுக்கையில், குற்றம் மெய்ப்பிக்கப் பட்டால் (01) முன்மைப் பட்டியலில்
அல்லது வகிக்கும் பதவியிலிருந்து இறக்கம் செய்தல் (REDUCTION IN SENIORITY
OR TO A LOWER RANK) அல்லது (02) கட்டாயப் பணி
ஓய்வு (COMPULSORY RETIREMENT) அல்லது (03) பதவியிலிருந்து அகற்றுதல் (REMOVAL FROM SERVICE) அல்லது
(04) பதவியிலிருந்து நீக்கப்படுதல் (DISMISSAL FROM SERVICE)
ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றை விதிக்கலாம் ! இவை நான்கும்
பெருந் தாக்கத் தண்டனைகள் (MAJOR PUNISHMENTS) எனப்படும் !
விதி 17
(அ) வின் கீழ் நடவடிக்கை எடுத்துவிட்டு விதி 17
(ஆ) வுக்குரிய தண்டனையை வழங்க முடியாது.
அதுபோல் விதி 17 (ஆ) வின்
கீழ் நடவடிக்கை எடுத்துவிட்டு 17 (அ) வுக்குரிய
தண்டனையை வழங்க முடியாது !
பழகுநர்
பயிற்சி உதவிப் பயிற்சி அலுவலர் மீது விதி 17 (ஆ)
வின் கீழ் நடவடிக்கை தொடரப்பட்டது. ஆனால் அவருக்கு
வழங்கப்பட்டது, விதி 17 (அ) வுக்குரிய தண்டனையான ஊதிய உயர்வு நிறுத்தம் ! இந்த முரண்பாடு,
குறிப்பிட்ட செயல்முறை ஆணையையே செல்லாதபடி ஆக்க வல்லது !
----------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”வேதரெத்தினம்” வலைப்பூ,
[தி.ஆ: 2053, கும்பம் (மாசி) 25]
{09-03-2022}
--------------------------------------------------------------------------