(1999 -ஆம் ஆண்டு நிகழ்வுகள்)
ஒரு அலுவலர் மீது தமிழ்நாடு குடிமைப்பணிகள் விதி 17 (ஆ) வின் கீழ் குற்றச் சாட்டுகள் சுமத்தப் பெற்று, விசாரணையின் போது அவை மெய்ப்பிக்கப்பட்டு இருந்தால், விதி எண் 8-ல் பெருந் தாக்கத் தண்டனை (மிகக் கடுமை) என வகைப்படுத்தப் பெற்றிருக்கும் தண்டனைகளில் (MAJOR PUNISHMENTS) ஏதேனும் ஒன்றை மட்டுமே தண்டனை வழங்கும் அதிகாரி குற்றமிழைத்த அலுவலருக்கு அளிக்க முடியும் !
ஆனால்
அவர் விரும்பினால் விதி 17 (ஆ) வுக்குரிய கடுமையான தண்டனைக்கு மாற்றாக விதி 17 (அ) வுக்குரிய மென்மையான தண்டனையை வழங்கமுடியும்
!
எப்படி ? குறிப்பிட்ட அலுவலரின் கடந்தகால அப்பழுக்கற்ற ஒழுகலாறு, அவரது அகவை, அவரது எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்திற்
கொண்டு, அவர் மேல் பரிவுகாட்டி , விதி
17 (ஆ) வின் கீழான குற்றச் சாட்டு விதி 17 (அ)
வின் கீழான குற்றச் சாட்டாக மாற்றப்படுகிறது எனத் தெளிவாகச் செயல்முறை ஆணையில் பதிவு செய்ய வேண்டும்.
!
விதிகளின்படியான
இத்தகைய நடைமுறையைப் பின்பற்றாமல், விதி
17 (ஆ) வின் கீழ் குற்றம் சுமத்தம் பெற்ற பழகுநர்
பயிற்சி உதவிப் பயிற்சி அலுவலருக்கு, அவர் மீது சுமத்தப் பெற்ற குற்றங்கள் மெய்ப்பிக்கப்பட்டிருப்பதால் “ஈராண்டுகள் ஊதிய உயர்வு நிறுத்தம்”
செய்து ஆணை வழங்கப்படுகிறது என்று
இணை இயக்குநரின் செயல் முறை ஆணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது முற்றிலும் தவறான செயல் ! கைகள் அழுக்கானால் காவிரியில் கழுவலாம்; காவிரியே அழுக்கானால்
எங்கு போய்க் கழுவுவது ?
ஒழுங்கு
நடவடிக்கை எடுப்பது என்பது எளிமையான செயலல்ல. சட்ட விதிமுறைகள்
என்னும் நேரிய பாதையிலிருந்து சற்றும் வழுவாமல் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு நடவடிக்கை. இ.பி.கோ பிரிவு 302 –ன்படி கொலைக் குற்றம் சாட்டப் பெற்ற ஒருவரை,
குற்றச் சாட்டு மெய்ப்பிக்கப் பட்டிருக்கிறது என்று சொல்லிவிட்டு,
ஒரு நீதிபதி, தூக்குத் தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ
விதிக்காமல் 3 மாதச் சிறைத் தண்டனை விதிக்கிறேன் என்று சொன்னால்
அது எப்படிச் சரியல்லவோ அப்படித்தான் இணை இயக்குநரின் செயல்முறை ஆணையும் அமைந்திருந்தது
!
குறிப்பிட்ட
அலுவலருக்குக் கடுமையான தண்டனை வழங்கப் பெற்றிருக்க வேண்டும் என்பதல்ல என் வாதம்; நடைமுறைகளைச் சரியானபடிப் பின்பற்றி, காரணங்களைச் செயல்முறை
ஆணையிலேயே தெளிவாகப் பதிவு செய்துவிட்டு மென்மையான
தண்டனையை வழங்கி இருக்க வேண்டும் !
இன்னொரு
விதிமீறலும் இணை இயக்குநரின் செயல்முறை ஆணையில் காணப்படுகிறது. செயல்முறை ஆணையின் சொற்றொடர்கள் மூன்றாவது ஆளின் குரலாக (NARRATION
OF A THIRD PERSON) ஒலிக்காமல் இணை இயக்குநரே நேரடியாகச் சொல்வது போல்
அமைந்திருக்க வேண்டும். இதை ஆங்கிலத்தில்
SPEAKING ORDER என்பார்கள் !
ORDERS
ARE ISSUED WITHHOLDING THE ANNUAL INCREMENTS OF THE INDIVIDUAL FOR TWO YEARS
WITH OUT CUMULATIVE EFFECT என்று செயல்முறை ஆணையின் உத்தரவில் உள்ளது.
இந்த உத்தரவு ” I HEREBY ORDER WITHHOLDING…..”…என்று பேசும் உத்தரவாக (SPEAKING ORDER) இருந்திருக்க
வேண்டும். ”…..இவருடைய ஆண்டு ஊதிய உயர்வுகளை ஈராண்டு காலத்திற்குத்
திரள் விளைவின்றி நிறுத்தி வைத்து உத்தரவிடுகிறேன்” என்பதே
சரியான சொல்லாட்சியாக இருக்க முடியும்
!
செயல்முறை ஆணையின் தலைப்பில் முன்னிலை (PRESENT) என்ற சொல் தான் இடப்படுகிறது. இது போதுமானதல்ல. தண்டனை வழங்கி உத்தரவிடுகையில், உத்தரவு வழங்குபவர் யார் என்பது ஆணையிலேயே உள்ளடங்கியதாகச் சொல்லப்பட வேண்டும். எப்படி ?
”பழகுநர் பயிற்சி உதவிப் பயிற்சி அலுவலர்,
திரு……………………………… மீது தமிழ்நாடு குடிமைப்பணி
விதி 17 (ஆ) வின் கீழ் சுமத்தப் பெற்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஐயத்துக்கு இடமின்றி மெய்ப்பிக்கப்
பட்டிருக்கின்றன. இதற்காக அவருக்கு விதி 8 -ல் குறிப்பிடப் பெற்றிருக்கும் பெருந் தாக்கத் தண்டனைகளில் (MAJOR
PUNISHMENTS) ஒன்றை வழங்க வேண்டும்” !
”எனினும் அவர் கடந்த காலத்தில் தண்டனைகள் ஏதுமின்றி நேர்மையாகத் தன் பணிகளை ஆற்றி வந்திருப்பதாலும், அவரது இளம் அகவையைக் கருத்திற் கொண்டும், அவர் மீது பரிவு காட்டி, விதி 17 (ஆ) வின் கீழான குற்றச் சாட்டுகள், விதி 17 (அ) வின் கீழானதாக மாற்றப்படுகின்றன” !
”குற்றச்
சாட்டுகள் அனைத்தும் மெய்ப்பிக்கப்பட்டு இருப்பதால், தமிழ்நாடு
குடிமைப் பணி விதி 8-ன்படி இவருடைய அடுத்த ஊதிய உயர்வினை ஈராண்டு
காலத்திற்குத் திரள் விளைவின்றி (WITHOUT CUMULATIVE EFFECT) நிறுத்தி வைத்து, வேலை வாய்ப்பு பயிற்சித் துறை இணை இயக்குநராகப் பொறுப்பு வகிக்கும் இரா. வேலுச்சாமியாகிய நான் உத்தரவிடுகிறேன்” !
”இந்தத் தண்டனை இவரது ஓய்வூதியத்தில் எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும், இந்தத் தண்டனை இவருக்குத் தேவைதான் என்பதையும் உணர்ந்து ஐயத்திற்கிடமின்றி மனநிறைவு கொண்டு
இந்த உத்தரவைப் பிறப்பிக்கிறேன்” என்னும்
சொற்றொடர்கள் இணை இயக்குநரின் உத்தரவில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் !
ஒரு அதிகாரி
தண்டனை வழங்கி ஒரு உத்தரவைப் பிறப்பிகிறார் என்றால், அதில்
நீதிமன்றம் தலையிட்டு அதை நீக்க முடியாதபடி அந்த உத்தரவு இருக்க வேண்டும். தமிழ்நாடு குடிமைப் பணி விதிகளையும், அவ்வப்போது அரசினால்
வழங்கப் பெறும் ஆணைகளையும், தெளிவுரைகளையும், நீதி மன்றத் தீர்ப்புகளையும் நன்கு படித்தறிந்த ஒரு அலுவலர் தான் ஒழுங்கு நடவடிக்கைக்
கோப்புகளைத் திறமையுடன் கையாள முடியும் !
அமைச்சுப்
பணியாளர்களானாலும் சரி, ஆட்சி அலுவலர், முதல்வர், உதவி இயக்குநர், துணை இயக்குநர், இணை இயக்குநர் போன்ற அதிகாரிகளானாலும் சரி, ஒழுங்கு நடவடிக்கை
பற்றிய தமது அறிவாற்றலை இற்றைப்படுத்திக் கொண்டே (UPDATION) வரவேண்டும். இல்லையெனில் அவர்கள் தம் பணிகளைச் செம்மையாகச் செய்வதில் தோற்றுப் போவார்கள் என்பதை 100% உறுதியாகச் சொல்ல முடியும் !
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”வேதரெத்தினம்” வலைப்பூ,
[தி.ஆ: 2053, கும்பம் (மாசி) 26]
{10-03-2022}
-------------------------------------------------------------------------------------