(2001-ஆம் ஆண்டு நிகழ்வுகள்)
”சில மாதங்கள் முன்பு ஓய்வு பெற்ற திரு.இராம ரெட்டிக்கு
நாம் எந்த வகையில் விழா எடுத்தோமோ அந்த வகையில் தான் ஆட்சி அலுவலருக்கும் விழா எடுக்க
வேண்டும். காலமெல்லாம் நம்முடன் ஒன்றிணைந்து நின்ற நம்மவரில்
ஒருவர் – நம் ”தொழில் நுட்ப அலுவலர்”
வகையைச் சார்ந்த ஒருவர் ஓய்வு பெற்ற போது விழாவைத் தடபுடலாக நடத்தினோமா
? இல்லையே ?
அப்படி
இருக்கையில், நம் தொழில் நுட்ப வகையைச் சாராத ஆட்சி அலுவலருக்கு
மட்டும் ஏன் விழாவைப் பகட்டாக நடத்த வேண்டும் ?” இது தான் திரு.மாதவனின் வாதம். அவரது பேச்சைக் கேட்டு அங்கு குழுமியிருந்த
அனைவரும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். ஓரிருவர் அவரிடம் எதிர்வாதம்
செய்ய, அங்கு அமைதி விடைபெற்று அனல் பறக்கத் தொடங்கியது !
என் மீது அன்பு கொண்ட தொழில் நுட்ப அலுவலர் ஒருவர் என்னிடம் வந்து நடந்த நிகழ்ச்சிகளை விவரித்தார். அதைக் கேட்டதும் என் மனத்தில் சூறாவளி மையம் கொண்டது. மனம் கொந்தளித்தாலும் முகத்தில் அதைக் காட்டிக் கொள்ளாமல் அன்று மாலை வரை அமைதி காத்தேன் !
மாலை 4-45 மணியளவில் முதல்வரிடம்
சென்று மறுநாளான ஏப்ரல் 21 – முதல், பணி
ஓய்வு பெறும் ஏப்ரல் 30 வரை ஈட்டிய விடுப்புக் கேட்டு விண்ணப்பம்
தந்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன் !
முதல்வருக்கு ஒன்றும் புரியவில்லை. குழப்பத்துடனேயே அவரும் வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார். மறு நாள் நான் அலுவலகம் வரவில்லை என்றதும் பயிற்சி அலுவலர் திரு.கைலாசம் அவர்கள் முதல்வரிடம் வந்து ஆட்சி அலுவலர் ஏன் அலுவலகம் வரவில்லை என்று கேட்டிருக்கிறார். அவர் பணி ஓய்வு பெறும் நாள் முடிய விடுப்புக் கேட்டு விண்ணப்பம் தந்துவிட்டுச் சென்று விட்டார் !
எனக்கும்
காரணம் புரியவில்லை என்று முதல்வர் சொன்னதும்
பயிற்சி அலுவலர் திரு.கைலாசத்திற்கு அனைத்தும் புரிந்து விட்டது. முந்திய நாள்
நிகழ்வுகளை திரு.கைலாசம் முதல்வரிடம் எடுத்து உரைத்திருக்கிறார். !
உதவி இயக்குநர் திரு.இரவிச்சந்திரன் அவர்களை வரச் சொல்லி அவருடனும் முதல்வர் திரு. அப்துல் அமீது கலந்து பேசியிருக்கிறார். கலந்துரையாடலில் திரு.கைலாசமும் பங்கேற்று, ”திரு,மாதவனின் கருத்துகள் ஆட்சி அலுவலரின் மனத்தைப் புண்படுத்தி இருக்கும் என்று கருதுகிறேன் !
திரு.மாதவன் ஏன் எப்படிச் சிறுபிள்ளைத் தனமாக நடந்துகொண்டார் என்பதை எண்ணினால் எனக்கும்
வருத்தமாக இருக்கிறது. முப்பத்து ஐந்து ஆண்டுகள் அப்பழுக்கில்லாமல்
பணியாற்றிய ஒருவரை இவ்வாறு அவர் பண்பாடில்லாமல் சொற்களால் நோகடித்திருப்பது ஏற்க முடியாத செயல்”, என்று
தன் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் !
சற்று நேரத்திற்குள், பயிற்சி நிலையம் எங்கும் இதுவே பேசு பொருள் ஆகிவிட்டது. திரு.மாதவனின் கருத்தை எந்த அலுவலரும் ஏற்கவில்லை. மாறாக அவர் மீது குறை சொல்லி அவரைக் கடிந்து கொள்ளும் நிலை உருவாகியது!
பயிற்சி அலுவலர் திரு.கைலாசம் உள்பட பணிமனை
அலுவலர்களில் முகாமையான சிலரையும், அலுவலகத்தில் சிலரையும் முதல்வர்,
அழைத்து, அடுத்து என்ன செய்வது என்று அவர்களிடம்
கருத்தைக் கேட்டிருக்கிறார் !
முடிவில் திரு.கைலாசம், திரு.துரைசாமி, திரு.நமசிவாயம் உள்பட ஐந்து பேர் என் வீட்டிற்கு வந்து என்னைச் சந்தித்துச் சமாதானம் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அன்று (21-04-2001) மாலையே தொழில் நுட்ப அலுவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட குழு என் வீட்டிற்கு வந்து என்னைச் சந்தித்துப் பேசினர் !
விடுப்பை விலக்கிக் கொண்டு அலுவலகம்
வரவேண்டும், 30-04-2001 அன்று அவர்கள் அளிக்கும் பணி ஓய்வுப்
பாராட்டு விருந்தில் பங்கேற்க வேண்டும் என்பதை மையமாக வைத்து அவர்கள் பேச்சு அமைந்தது
!
நான்
வர இயலாது என்று மறுத்துவிட்டேன். திரு.மாதவனின் பேச்சு என்னைக் களங்கப்படுத்திவிட்டது. பாகுபாடு
பாராமல் அனைவருடனும் நட்புரிமையுடன் பழகி வந்த எனக்கு அவரது பேச்சும் செயலும் என் முகத்தில்
அழுக்கைப் பூசுவதாக அமைந்திருக்கிறது. உங்கள் அனைவருக்கும் மிக்க
நன்றி ! சென்று வாருங்கள் ! என்று சொல்லி
விடாப்பிடியாக என் நிலையில் உறுதியாக நின்றேன் !
அவர்கள்
தொலைபேசி மூலம் முதல்வரிடம் தங்கள் முயற்சி பயனளிக்கவில்லை என்று விளக்கியிருப்பார்கள்
போலும்
! அன்று பின் மாலைப் பொழுதில் முதல்வர் திரு.அப்துல்
அமீது அவர்கள் என் வீட்டிற்கு வந்து என்னைச் சமாதானப்படுத்தினர். ”சிந்தித்து முடிவு சொல்கிறேன்” என்று அவரிடம் மறுமொழி
தந்து அவரை அனுப்பி வைத்தேன் !
மறுநாள் பணிமனையில் பல்வேறு அலுவலர்கள் ஒன்று கூடி, ஆட்சி அலுவலர் மனம் புண்பட்டுப் போயிருக்கிறார். நாம் என்ன சமாதானம் சொன்னாலும் அது அவர் மனத்திற்கு மருந்தாகவில்லை. இதை இப்படியே விட்டுவிட முடியாது !
பணி ஓய்வு பெறும் ஒரு அலுவலர், பாராட்டு விழாவின்றி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுதல் நம் நிலையத்திற்கே கேவலம்.
இதற்கு ஒரே வழி திரு.மாதவன் நேரில் சென்று அவரிடம்
பேசுவது தான் என்று அனைவரும் முடிவு செய்து திரு.மாதவனிடம் சென்று
உரையாடியிருக்கிறார்கள் !
மறுநாள் (23-04-2001) திரு.மாதவன், திரு.கைலாசம், உதவியாளர் திரு.கோபாலகிருஷ்ணன் மூவரும் என் வீட்டிற்கு வந்தனர். அவர்களை வரவேற்று அமரவைத்துவிட்டு, தேநீர் கொடுத்தேன் !
தேநீர் அருந்திய பின் திரு.மாதவன் எழுந்து என் கைகளைப் பிடித்துக்கொண்டு, “என்னை
மன்னித்து விடுங்கள். நான் தங்களைப் பற்றி அலுவலர்களிடம் அப்படிக்
கருத்துச் சொன்னது தவறு தான். தங்கள் முடிவை மாற்றிக்கொண்டு,
அலுவலகம் வரவேண்டும், பணி ஓய்வுப் பாராட்டு விழாவிலும்
கலந்து கொள்ள வேண்டும். இது எங்கள் அன்பு வேண்டுகோள்”
என்றார் !
------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”வேதரெத்தினம்” வலைப்பூ,
[தி.ஆ: 2053, கும்பம் (மாசி) 29]
{13-03-2022}
-------------------------------------------------------------------------------------