தேடுக !

செவ்வாய், 15 மார்ச், 2022

மலரும் நினைவுகள் (74) ஆட்சி அலுவலராக என் கடைசி நாள் காட்சி !

                    

                       (2001-ஆம் ஆண்டு  நிகழ்வுகள்)


படிப்பை முடித்துவிட்டுக் கவலையுடன் பணியைத் தேடியலையும் துன்ப நிலை  இளைய குமுகாயத்திற்கு முன்பும் இருந்தது; இப்போதும் இருக்கிறதுஇனியும் இருக்கத்தான் போகிறது ! இயற்கையின் இந்தத் திருவிளையாடலை மாற்ற வல்ல அரசியல் வல்லார்  இந்த நாட்டில் இதுவரை யாருமே தோன்றவில்லை !

 

பொட்டல் வெளியில் சுட்டெரிக்கும் வெயிலில் ஒற்றைப் பனைமரத்தில் அருநிழலில் நின்று கொண்டு, கண்களுக்கு மேல் நெற்றியில், உள்ளங்கையின் விளிம்பை வைத்து, எங்கேனும் நீர் நிலை தென்படுகிறதா என்று உற்று நோக்கும் வழிப்போக்கனைப் போல், என்ன வேலை கிடைக்கும் எப்போது கிடைக்கும் என்று கவலையுடன்  விழிகளை விரித்துப் பார்த்துக் கொண்டிருந்த துய்ப்பு (அனுபவம்) என்னையும் விட்டு வைக்க வில்லை !

 

என் ஏக்கத்துக்கு இரக்கப்பட்ட ஒரு நல்லவரின் பரிந்துரையின் பேரில் 1964 –ஆம் ஆண்டு ஆகத்து மாதம் கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் இளநிலை ஆய்வாளராக அன்னிலைப்பணி (TEMPORARY APPOINTMENT) கிடைத்தது !

 

பின்பு கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் நிலையமர்வாக (REGULAR APPOINTMENT) இளநிலை எழுத்தர் (LOWER DIVISION CLERK) பணி ! அடுத்து தேர்வாணைக் கழகத் தெரிவின் மூலம்  1966 –ஆம் ஆண்டு ஏப்ரல் 21 –ஆம் நாள் புதுக்கோட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பண்டகக் காப்பாளராகப் பணியில் அமரும் வாய்ப்பு !

 

புதுக்கோட்டையில் பணியில் இணைவதற்கு முன்னதாக ஏறத்தாழ ஒன்றேமுக்கால் ஆண்டு அரசுப் பணியில் சேர்ந்து அதன் மணத்தை நுகர்ந்த துய்ப்பு (அனுபவம்) இருந்ததால், புதுக்கோட்டையில் எனக்கு முதல் நாள் துய்ப்பு என்று சிலிர்ப்படையும் வகையில் குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஏதுமில்லை ! திருமணமாகிக் கணவன் வீட்டுக்குச் செல்லும் புதுமணப் பெண் போலத் திகைப்பும், மெல்லிய அச்சமும், மிரட்சியும் எனக்கு அப்போது ஏற்படவில்லை !

 

பணியில் சேர்ந்த முதல் நாள் எனக்கு பிற நாள்களைப் போல இயல்பாகவே அமைந்திருந்தது. அதைப் போன்றே அரசுப் பணியில் இணைந்திருக்கும் கடைசி நாளான 2001 – ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 –ஆம் நாள்அரசுப் பணியில் என் கடைசி நாள்இயல்பாகவே இருக்கும் என்ற எண்ணத்துடன் ஆட்சி அலுவலர் அறையில் என் இருக்கையில் சென்று அமர்ந்தேன் ஒன்பது நாள் ஈட்டிய விடுப்புக்குப் பிறகு  !


அலுவலக உதவியாளர் திரு.காட்வின் @ கோவிந்தன் உள்ளே வந்து வணக்கம் சொல்லிவிட்டுச் சில நிமிடங்கள் அங்கேயே நின்றார்அவரை நிமிர்ந்து பார்த்தேன். கண்களின் கடைவிழியோரம் நீர் துளிர்த்திருந்தது. என்ன காட்வின் என்றேன். இன்றுடன் எங்களை விட்டுப் பிரியப் போகிறீர்கள். உங்களைப் போன்ற பரிவு மிகுந்த ஒரு அதிகாரியை இனி நாங்கள் காண்பது இயலாது என்று சொல்லிவிட்டுத் தேம்பத் தொடங்கினார் !

 

ஓ ! இன்றைய நாளை இயல்பாகக் கழிக்கலாம் என்றல்லவோ அலுவலகம் வந்தேன். அஃது இயலாமற் போய்விடுமோ ? திரு.காட்வினுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கையில் அலுவலக உதவியாளர் திரு.மல்லையா வந்து என் கைகளைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டு விசும்பலானார் ! என்ன இதுஅவர்களும் உணர்ச்சிப் பிழம்பாகி, என்னையும் அதில் இறக்கி விட்டு விடுவார்கள் போலிருக்கிறதே ?

 

என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு, அவருக்கும் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கையில் அலுவலகத்திலிருந்து ஒருவர் பின் ஒருவராக வரத் தொடங்கினர். உதவியாளர்கள், கணக்கர், பண்டகக் காப்பாளர்,  தட்டச்சர், இளநிலை உதவியாளர்கள், அலுவலக மேலாளர் என்று அனைவருமே வந்து வணக்கம் சொல்லிவிட்டுக் கண்கள் கலங்க நின்றனர் !

 

அதுவரைக் கட்டுப்பாட்டுடன் இருந்த என் கண்கள் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் சட்டென்று  நீர்த் துளிகளைச் சுரந்தன. என் கண்களில் நீரைக் கண்டதும் மகளிர் சிலர் முகத்தைப் பொத்திக்கொண்டுக் கேவலாயினர் !

 

நான் என்ன அப்படிப் பெரிதாக இவர்களுக்குச் செய்துவிட்டேன் ? ஏன் இப்படி என் மீது அன்பு கொண்டு கண்களில் நீர் வழிய நின்று கொண்டிருக்கிறார்கள் ? ஊருக்குச் செல்லும் உறவினரைப் பிரியும் சிறு குழந்தை போல் அல்லவோ கண்கள் குளமாக அனைவரும் ஆற்றாமையால் தவிக்கிறார்கள் ?

 

நானும் அவர்களைப் பார்த்து விட்டு என் அகவையில் ஐம்பதை இழந்து எட்டு அகவைக் குழந்தையாக மாறி அல்லவோ உணர்வுகளின் சுழலில் அகப்பட்டுக் கொண்டு உருகிப் போகிறேன் ?

 

எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, எப்படியெல்லாமோ இடர்பட்டு அரசுப் பணியில் இணைகிறோம். அங்கங்கே சில நாள் பழகுகிறோம், பின்னர் பிரிகிறோம், மறுபடியும் எங்காவது கூடுகிறோம். இந்தத் தொடர் வினையில் தூக்கணாங்குருவி போல இதயத்தின் ஆழத்தில் அன்பு என்னும் ஓலை கொண்டு கூட்டினைப் பின்னி அதில் நம்மையறிமலேயே குடியிருக்கத் தொடங்குகிறோம் !

 

செல்கின்ற இடமெல்லாம் உடன் பணி புரியும் அலுவலர்களுக்கு அன்பை வாரி வழங்கி வந்திருக்கிறேன்என்னை அறியாமலேயே ! அதுதான் இவர்கள் கண்களில் துளிர்க்கும் நீருக்கு அடையாளமோ ?

 

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும் (குறள். 71)

 

என்னும் வள்ளுவரின் வாக்கு இன்று என் முன்னதாக அணிவகுத்து நிற்கும் அன்பு நெஞ்சங்களின் கண்ணீர்த் துளிகளில் எதிரொலிக்கிறது ! இத்தகைய அன்பு மலர்களின் மணத்தை நான்கரை ஆண்டுகளாக நான்  நுகர்ந்து வந்திருப்பது நான் பெற்ற நற்பேறு அன்றி  வேறில்லை !

 

அலுவலகப் பணியாளர்களை அடுத்து பயிற்சி அலுவலர்கள் திரு.கைலாசம், திரு.மாதவன் இருவரும் வந்தனர். பணிக்காலத்தில் அவர்களுக்கு நான் செய்த நன்மைகளைப் பட்டியலிட்டு இருவரும் தங்கள் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர் !

 

காவலர்கள், துப்புரவாளர்கள், தொழில் நுட்ப அலுவலர்கள்  உள்பட அனைத்து அலுவலர்களும், நண்பகலுக்குள் ஒருவர் மாற்றி ஒருவராக வருகை தந்து தங்கள் அன்பையும் நல்வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துச் சென்றனர் !

 

பிற்பகலில் முதல்வர் என் அறைக்கு வந்து என்னுடன் பல செய்திகளையும்  பகிர்ந்து கொண்டு தன் வாழ்த்துகளையும் பதிவு செய்தார். மாலை மணி 5-00. அலுவலகத்திற்குள் சென்றேன். அனைவரும் எழுந்து நின்று என்ன சொல்லப் போகிறேன் என்று காத்திருந்தனர் !

 

கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல (குறள்.1100) என்கிறார் வள்ளுவர் வேறொரு சூழ்நிலையில். இன்று உணர்ச்சியலைகளால் உந்தப் பெற்றிருந்த நானும், வாயைத் திறந்து பேசும் ஆற்றலை இழந்து, கண்களில் துளிர்த்த நீருடன் கைகளை அசைத்துசென்று வருகிறேன்என்று சொல்லாமற் சொல்லிவிட்டு, என் வண்டியில் ஏறி அமர்ந்தேன். வழக்கம் போல் அது என்னைச் சுமந்து கொண்டு வீடு நோக்கி விரையத் தொடங்கியது !

 

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப்படும் (குறள். 114)

 

என்னும் பொய்யா மொழியாரின் கூற்றுக்கு இன்று தான் என்னால் பொருள் உணர முடிந்தது !


------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

வேதரெத்தினம்வலைப்பூ,

[தி.ஆ: 2053, மீனம் (பங்குனி) 01]

{15-03-2022}

------------------------------------------------------------------------------------