(1997-ஆம் ஆண்டு நிகழ்வுகள்)
வரவு செலவுக் கணக்கை, கணக்கர் திரு.கதிர்வேலு அன்றாடம் முடித்து மாலை
04-00 மணிக்கு பணக்குறிப்பேடு மற்றும் இதர பதிவேடுகளை என் மேசைக்கு
அனுப்பி வைக்கும் வழக்கம்
தடங்கலின்றி நடைமுறைக்கு வந்தது. ஒவ்வொரு பதிவையும் சரிபார்த்து,
பச்சை மையில் சுருக்கொப்பம் இடுவதை நான் பின்பற்றத் தொடங்கினேன்
!
கணிகை (CALCUATOR) உதவியுடன் வரவு செலவுப் பதிவு ஒவ்வொன்றையும்
சரிபார்க்காமல் நான்
ஒப்பம் இடுவதில்லை. தாராபுரத்தில் அறிமுகப்படுத்தியது போல் ஒவ்வொரு பற்றுச் சீட்டின்
அடிக்கட்டையிலும், பணக்குறிப்பேட்டின் (CASH BOOK) பக்க எண்ணைக் குறிக்கத் தொடங்கினேன். பட்டியல் காசாக்கப்பட்டவுடன்,
அதில் காசாக்கப்பட்ட நாள் என்று கணக்கர் குறிப்பிடுவது வழக்கம்.
கூடுதலாக நான் பெறுபணப் பதிவேட்டின் (UN-DISBURSED PAY
REGISTER) தொடர் எண்ணையும் குறிப்பிடத் தொடங்கினேன் !
கருவூலச் சுவடியின் கடைசிப் பத்தியிலும்
பெறுபணப் பதிவேட்டின்
(UN-DISBURSED PAY REGISTER) தொடர் எண்ணைக் குறிப்பிடத் தொடங்கினேன்
! இவ்வாறு குறிப்பிடுவதன் நன்மைகளைக் கணக்கர் திரு. கதிர்வேலுவிடம் எடுத்துச் சொன்னதும்,
அவரே இவற்றைப் பின்பற்றலானார் !
பணக்குறிப்பேட்டில் பதிவு செய்யப்படும் வரவு
மற்றும் செலவுகளின் தொகுமொத்ததில்
(GRAND TOTAL) இரண்டு
முறை பிழைகள் ஏற்பட்டிருந்தன. கணக்கரை அழைத்து,
பிழையைச் சுட்டிக்காட்டியபோது, அவர் வருத்தம் தெரிவித்துவிட்டு,
பிழைகளை நீக்கித் திருத்தம் செய்து கொண்டு வந்தார். நானே அதை அடித்துத் திருத்தி பச்சை மையில் எழுதினால், கணக்கருக்கு அது தலைக்குனிவைத் தரும் என்பதால், நான்
திருத்தம் செய்வதைத் தவிர்த்தேன் !
இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு ஐயம் எழலாம். கணக்கர் வரவு செலவுக் கணக்கை எழுதி, அதை அலுவலக மேலாளர் சரிபார்த்த பிறகு அதில் எப்படிப் பிழைகள் வரும் என்று நீங்கள் நினைக்கலாம். சுருக்கமாகச் சொன்னால் “மொட்டைக் கையெழுத்து”ப் போடும் மேலாளர் இருக்கும் அலுவலகங்களில் இவ்வாறு நேர்வதுண்டு. ஆட்சி அலுவலரும் ஒரு மொட்டைக் கையெழுத்தைப் போட்டு, பதிவேடுகளைத் திருப்பியனுப்பினால், கணக்கரின் நிலை என்ன ஆகும் ?
இதில் வருந்தத் தக்க செய்தி என்னவென்றால், நான் அங்கு ஆட்சி அலுவலராகப்
பொறுப்பிலிருந்த போது கூசாமல் மொட்டைக் கையெழுத்துப் போடும் வழக்கமுள்ள சேலத்தை சேர்ந்த
அலுவலக மேலாளர் ஒருவரும் அங்கிருந்தார். பணப் பட்டியலாக இருந்தாலும்
சரி, சம்பளப் பட்டியலாக இருந்தாலும் சரி, கோப்பு களாக இருந்தாலும் சரி, எதையுமே சரிபார்க்காமல், சுருக்கொப்பம் இடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார் !
அடுத்துவரும் சில ஆண்டுகளில் அவர் ஆட்சி
அலுவலர் ஆகும் நிலையில் அவரது முன்மை நிலை
(SENIORITY) இருந்ததால், அவரது பதவி உயர்வுக்குப்
பாதிப்பு வரக் கூடாது என்பதற்காக அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தவிர்த்தேன்
!
ஆனால் அவரை அழைத்து, பணக்குறிப்பேட்டில் கணக்கில்
இவ்வாறு தவறு நேர்ந்திருக்கையில், அதைச் சரி பார்க்காமல் எப்படிச்
சுருக்கொப்பம் இட்டீர்கள் என்று கேட்கத் தவறுவதில்லை. கூனிக்
குறுகி நிற்பார்; சரி செல்லுங்கள், இனி
இவ்வாறு மொட்டைக் கையெழுத்துப் போடுவதை நிறுத்திவிட்டுக் கணக்குகளைச் சரிபார்த்து அனுப்புங்கள்
என்று சொலியனுப்புவேன் !
கடைசிவரை அவர் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை.
இப்போது அவர் உயிருடன் இல்லை என்பதால் பெயர் குறிப்பிடுவதைத்
தவிர்க்கிறேன் ! அவரை நம்பி நானும் மொட்டைக் கையெழுத்துப் போட்டு
வந்திருந்தால், கணக்கர் வீட்டுக்குப் போக வேண்டிய நிலை வந்திருக்கும். அன்றாடம் கையிருப்புத் தொகையைக் கணக்கர்
சரிபார்த்திருந்தால், பணக்குறிப்பேட்டில் கூட்டல் கழித்தலில்
நேர்ந்த பிழை அவருக்கே தெரியவந்து, தக்கபடித் திருத்தம் செய்திருப்பார்
!
ஆட்சி அலுவலராகப் பொறுப்பேற்ற சில மாதங்களில் நிகழ்ந்த இந்தச் செயலுக்குப் பிறகு, அன்றாடம் கையிருப்புத் தொகையை நானே எண்ணிச் சரிபார்க்காமல், ”கையிருப்புத் தொகைச் சரிபார்ப்புச் சான்றினை”ப் பணக்குறிப்பேட்டில் பதிவு செய்வதில்லை !
ஆட்சி அலுவலராக நான் பொறுப்பிலிருந்த நான்கரை
ஆண்டுகளும், எந்தப் பதிவையும் சரிபார்த்துதான் சுருக்கொப்பம்
/ கையொப்பம் இட வேண்டும் என்னும் கொள்கையைப் பின்பற்றி வந்ததால்,
கணக்கர் ஒறுப்புக்கு (தண்டனை) ஆளாகும் வாய்ப்புகளிலிருந்து தப்பித்தார். அலுவலக மேலாளரும்
ஒறுப்புக்கு ஆளாகாமல் தப்பித்தார். நானும் தலைக்குனிவுக்கு ஆளாகாமல்
தப்பித்தேன் !
இன்னொரு மேலாளருக்கு – அவரும் கணக்குப் பிரிவைக்
கவனிக்க பின்னொரு சமயத்தில் அமர்வு செய்யப்பட்டவர் தான் – மதுவுக்கு
அடிமையாகி உடல் நலத்தைக் கெடுத்துக் கொண்டவர் - மூன்றாண்டு காலத்திற்குச்
சம்பள நிலுவை வரவேண்டியிருந்தது. நிலுவைப் பட்டியலைத் தயார் செய்யச் சொல்லிக் கணக்கரிடம் கேட்டிருக்கிறார்
!
அவர் செய்வதாகச்
சொல்லிக் காலம் கடத்தி வந்திருக்கிறார். ஏன் அப்படிக் காலம் கடத்த வேண்டும் ? காரணமுண்டு.
36 மாத நிலுவை என்றால் சம்பளப்
பட்டியலில் 36 வரிகளில் பதிவுகள் இருத்தல் இயல்பு. இந்த மேலாளருக்கு நிலுவைப் பட்டியல் தயார் செய்தால் 36 வரிகள் அல்ல 360 வரிகள் அளவுக்கு வரும் !
ஏன் அப்படி என்கிறீர்களா ? அந்த அளவுக்கு ஒரு நாள்,
இரண்டு நாள் என்று எண்ணிலடங்கா
நேர்வுகளில் ஊதியமில்லா விடுப்பு எடுத்திருக்கிறார். கணக்கருக்கு
இருக்கும் பணிப்பளுவில் இவருக்கு நிலுவை ஊதியப் பட்டியல் தயார் செய்வது என்பது அத்துணை
எளிதன்று !
ஒருநாள் இந்த மேலாளர் என்னிடம் வந்து தனக்கு
நிலுவை ஊதியம் வாங்கித் தர மறுக்கிறார் என்று கணக்கர் மீது புகார் கூறினார், அவரிடம் நான் என்ன சொன்னேன்
தெரியுமா ? “கணக்கருக்கு அன்றாடப் பணிகளே நிரம்ப இருக்கின்றன.
அவருக்கு நேரம் கிடைப்பது அரிது. ஆகையால் நீங்களே
நிலுவை ஊதியப் பட்டியலைத் தயார் செய்துகொண்டு வாருங்கள்” !
அவ்வளவு தான் ! அவர் குழையத் தொடங்கினார்.
வேலையே தெரியாமல், முன்மை (SENIORITY) அடிப்படையில் மேலாளராகிவிட்ட இவரைப் போன்று ஒருசிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவருக்கு அப்போது இருந்த பணத் தட்டுப்பாட்டு நிலையைக் கருதி,
அவருடையை நிலுவை ஊதியப் பட்டியலை நானே தயார் செய்தேன் – பக்கத்தில் அவரது பணிப்பதிவேட்டை வைத்துக்கொண்டு !
ஐந்தாறு பக்க அளவுக்கு நீண்ட அந்த நிலுவை
ஊதியப் பட்டியல், முழுக்க முழுக்க பச்சை மையில் எழுதப் பட்டிருக்கும். ஓசூருக்குச் சென்று 1998 –ஆம் ஆண்டு ஊதியப்பட்டியலை யாராவது
பதிவறையிலிருந்து எடுத்துப் பார்த்தால், அந்த மேலாளரின் அவல முகத்தை
அதில் காணலாம் !
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”வேதரெத்தினம்” வலைப்பூ,
[தி.ஆ: 2053, கும்பம் (மாசி)11]
{23-02-2022}
-------------------------------------------------------------------------------------