தேடுக !

சனி, 13 நவம்பர், 2021

மலரும் நினைவுகள் (04) பொறியில் மாட்டிக்கொண்ட எலியானேன் !

 (1966 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்) 

பண்டகத்தில் இருப்புப் பதிவேடுகளைப் பேணுவதில்  பண்டகப் பொறுப்பாளர்கள் சில நியதிகளைக்  கடைப்பிடிக்க வேண்டும்.  அவற்றுள் ஒன்று, ஒரு குறிப்பிட்ட பொருள் குறிப்பிட்ட ஒரே பக்கத்தில் மட்டுமே இருப்பில் காண்பிக்கப்படவேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களில்  அஃது இருப்பில் காட்டப்படலாகாது !

 

ஆனால் புதுக்கோட்டையில் நான் பணியேற்பதற்கு முன்பு பண்டகப் பொறுப்பினை ஏற்றிருந்தவர்கள் இந்த நியதியைப் பின்பற்றவில்லை. எடுத்துக் காட்டாக,  இரண்டு  தடவைகளாகக்  கொள்முதல் செய்யப்பெற்ற ஒரு பொருள்,  முதல் தடவை  ஒரு பக்கத்திலும், இரண்டாம் தடவை இன்னொரு பக்கத்திலும் கணக்கில் கொண்டு வரபட்டிருக்கும் !

 

இவ்வாறு பல பொருள்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களில் கணக்கில் கொண்டு வரப் பெற்றிருந்தன. நான் பண்டகப் பொறுப்பை ஏற்ற பின்பு எந்தெந்தப் பொருள்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களில் கணக்கில் காட்டப்பட்டிருந்தனவோ அவற்றை  ஒருங்கிணைத்து ஒரே பக்கத்தில் இருப்புக் காட்டி  ஒழுங்கு படுத்தினேன் !

 

பிரச்சனைக்குரிய அரியுருக்குப் பட்டை 50 x 12 மி.மீ. இவ்வாறு இரண்டு பக்கங்களில் கணக்கில் காட்டப்பட்டு, அவ்வப்போது நிகழும் வழங்கல்களும்  (Issues) இவ்விரண்டு பக்கங்களில் ஏதோவொன்றில் கணக்கிலிருந்து கழித்துக் காட்டப்பட்டிருந்தன !  இந்த இரண்டு பக்கங்களில்,  ஒரு பக்கத்திலிருந்த  இருப்பு என்னால் பெறப்பட்டிருந்தது; மற்றொரு பக்கத்திலிருந்த 450 கிலோ என்னால் பெறப்படவில்லை. இந்த 450 கிலோ என்னவாயிற்று என்பதுதான் பெரிய வினாக்குறியாக என்முன் உருவெடுத்து  எடுத்து நின்றது !

 

வினாவுக்கு விடை தெரியாததால் மன உளைச்சலுக்கு ஆட்பட்ட திரு.சுந்தர்ராசன் 15 நாள் மருத்துவ விடுப்பில் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். முதல்வரின் கவனத்திற்கு பிரச்சனையை எடுத்துச் சென்றேன். விடுப்பு முடிந்து திரு. சுந்தர்ராசன் வரட்டும், அவரிடம் கேட்போம் என்று முதல்வர் சொல்லி அப்போதைக்கு அந்தப் பிரச்சனையை  ஒத்தி வைத்துவிட்டார் !

 

எனக்கு மனம் குறு குறுத்துக் கொண்டிருந்தது. கூண்டுப் பொறியில் மாட்டிக் கொண்ட எலி போல் என் மனம் அச்சப்படலாயிற்று. அப்போதைய கொள்முதல் மதிப்பின்படி 450 கிலோ அரியுருக்குப் பட்டைக்காக  மூன்று மாதச் சம்பளத்தை நான் இழக்கவேண்டி வருமோ என்று மிகவும் கவலைப்படலானேன் !

 

குறிப்பிட்ட அரியுருக்குப் பட்டையின் கொள்முதல் (Purchase), வழங்கல்  (Issues) ஆகியவற்றைக் கடைசி 12 மாதங்களுக்குச் சரிபார்ப்பது (Self Audit) என்று முடிவு செய்து, அந்தப் பணியில் நானே ஈடுபட்டேன்.  கூட்டுறவுச் சங்கங்கத்  தணிக்கைப் பணியில் நான் பெற்றிருந்த பட்டறிவு இதில் எனக்குக் கைகொடுத்தது !

 

இவ்வாறு தணிக்கை  செய்து வருகையில், காணாமற் போனதாகக் கருதப்படும்  450 கிலோ அரியுருக்குப் பட்டை  என்னவாயிற்று என்பதற்கான விடை எனக்குக் கிடைத்தது !

 

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”வேதரெத்தினம்” வலைப்பூ.

[தி.: 2052, துலை (ஐப்பசி) 06]

{23-10-2021}

--------------------------------------------------------------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக