(1979 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்)
1978 –ஆம்
ஆண்டில் அரசு அலுவலர் ஒன்றியத்தின் நாகப்பட்டினம் கிளைக்குப் பொறுப்பாளர்கள் தேர்தல்
நடைபெற்றது. அப்போது அந்தக் கிளையின் தலைவராக A. ஆனந்த நடராசன் என்பவர் இருந்தார். வருவாய்த்
துறையில் இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்து, இளநிலை
உதவியாளராகவே பணி ஓய்வு பெற்ற ஈகச் செம்மல் (ஈகம் = தியாகம்) !
அரசு அலுவலர்களின் நலனுக்காகவே இறுதி வரை உழைத்தவர். பாதிக்கப்படும் அரசு அலுவலர்களுக்குச் சம்பளமில்லா வழக்குரைஞராக உயர் அலுவலர்களிடம் வாதாடியவர். எழுதி
எழுதியே விரல்கள் தேய்ந்து போனவர்.
நெல்லையில் பிறந்து நாகையில் வாழ்ந்து மறைந்தவர் !
அவரது அரசுப் பணிக் காலத்தில், மற்றவர்களுக்காக
ஊதியமில்லா விடுப்பினை வரைமுறையின்றி எடுத்தவர். இந்தக் காரணத்தாலேயே ஊதிய ஆணைக்குழுவின் பரிந்துரையால் ஊதியவீதம் மாற்றி அமைக்கப்படும்போதெல்லாம்
அவருக்கு மட்டும் ஊதிய வரையறை செய்யமுடியாமல் அதிகாரிகள் திணறி, ஊதியநிரக்கின் (Pay Scale) தொடக்கநிலை ஊதியமே
வழங்கப்பட்டு வந்தது !
இத்தகைய ஈகச் செம்மல், பணி
ஓய்வுக்குப் பின் ஓய்வூதியர்களுக்கென மாநிலச் சங்கத்தை நிறுவி அதன் தலைவராகச் செயல்பட்டு
அரும்பணிகள் ஆற்றியவர்;
இந்தப் பழுத்த மரம் கடந்த 10 ஆண்டுகளுக்கு
முன்பு காலப் புயலில் வீழ்ந்து போனது !
இத்தகைய மாமனிதர் தலைவராகப் பணியாற்றிய நாகப்பட்டினம் கிளையில்
அவருடன் பொதுப்பணியாற்ற விரும்பினேன். நாகை அரசினர் தொழிற்பயிற்சி
நிலையத்தில் அப்போது உதவிப் பயிற்சி அலுவலராகப் பணியாற்றி வந்த திரு.N.R.இராசரெத்தினம், எனக்காக
முழு உழைப்பையும் நல்கினார்.
இறுதியில், நாகைக் கிளையின் இணைச்
செயலாளராகக் கடும் போட்டிக்கிடையே தேர்ந்தெடுக்கப் பெற்று 3 ஆண்டுகள்
பணியாற்றினேன் !
திரு.ஆனந்த நடராசன் அவர்களுடன் இணைந்து நான் பணியாற்றிய அந்த மூன்றாண்டு
காலம் தான், பிறருக்காக உழைக்கும் மனவோட்டத்தை என்னுள் உருவாக்கியது. ”வேதரெத்தினம்” என்றால்
யார் என்பதை நாகைவாழ் அரசு அலுவலர்களிடையே வெளிச்சம் போட்டுக் காட்டியது ! நாகையில் அனைவருக்கும் அறிமுகமான தவிர்க்கவியலா அலுவலர்களுள்
ஒருவர் ஆனேன் ! திரு.சிவ.இளங்கோ பட்டுக்கோட்டையில் பிறந்தவர்; திருத்துறைப்பூண்டியில்
நான் படித்த அதே பள்ளியில் படித்தவர் என்பதால், அவருக்கும்
நெருக்கமானவன் ஆனேன் !
இந்த நிலையில் அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் மாநிலப் பொறுப்பாளர்களுக்கான தேர்தல்
1979 தொடக்கத்தில் நடைபெற்றதாக நினைவு. இந்தத்
தேர்தலில் திருச்சி மண்டலத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். மண்டலத் துணைத் தலைவர் பதவி தேவை என்ற தீர்மானத்தை திருப்பரங்குன்றம் செயற்குழுவில் முன்மொழிந்த நானே, திருச்சி
மண்டலத்தின் முதலாவது துணைத் தலைவராகத் தேர்வு பெற்றேன் !
இந்தக் காலக்கட்டத்தில், நாகப்பட்டினம்
அலுவலகத்தில் அன்னிலை (10.A1
Candidate) தட்டச்சராக திரு.கோ.பத்மநாபன்
என்பவர் பணி புரிந்து வந்தார்.
ஈராண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய நிலையில் அவருக்குத்
திருமணம் உறுதியாகி, அனைவருக்கும் அழைப்பிதழும் கொடுத்து வந்தார். அழைப்பிதழில் பயிற்சி நிலயத் தட்டச்சர் என்பதையும் குறிப்பிட்டிருந்தார் !
திருமணத்திற்கு 15 நாள் இருக்கும்
நிலையில், தமிழ்நாடு
முழுவதும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அன்னிலை (Temporary) அலுவலர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்யுமாறு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு பயிற்சி நிலைய அலுவலகத்திற்கு, குறிப்பிட்ட
மாதத்தில் 25 –ஆம் நாள்
(தேதி) வாக்கில்
கிடைத்தது. அலுவலகத்தில்
பணியமைப்புப் பிரிவை பார்த்து வந்த உதவியாளருக்கு திரு.பத்மநாபன்
மீது என்ன சினமோ (கோபமோ) தெரியவில்லை, அரசாணை
கிடைத்த அரை மணி நேரத்திற்குள் பணிநீக்க ஆணையை அவரே இரண்டு படிகள் (O.C & F.C)
கையால் எழுதி முதல்வரிடம்
ஒப்பம் பெற்று திரு.பத்மநாபனிடம் சேர்ப்பித்துவிட்டார் !
பணிநீக்க ஆணை திரு.பத்மநாபனுக்கு
இடியாய் நெஞ்சில் இறங்கியது.
என்னிடம் வந்து அழுது புலம்பினார்; திருமணம்
நடக்கவிருந்த நேரத்தில் பணியிழப்பு என்றால் தனக்கு மதிப்புக் குறைவாக (அவமானமாக) இருக்குமே
என்று அஞ்சினார். அரசு ஆணையை எதிர்த்து அரசு அலுவலர் ஒன்றியத்தின் நாகைக் கிளையும் , அதன் இணைச் செயலாளராகிய நானும் என்ன செய்ய முடியும் ?
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.ஆ: 2052, நளி (கார்த்திகை) 11]
{27-11-2021}
-------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக