தேடுக !

திங்கள், 29 நவம்பர், 2021

மலரும் நினைவுகள் (25) நாகையிலிருந்து சேலத்திற்கு இடம் மாறினேன் !


(1981 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்) 

நாகப்பட்டினத்தில்  தணிக்கைத் தடைகளுக்குச் சீரறிக்கை எழுதி எழுதிச் சலிப்படைந்து போயிருந்தேன். அப்படிப்பட்ட நேரத்தில் காலமுறை இடமாற்றலுக்கு அலுவலர்களிடம் விருப்பம் கேட்டு  இயக்ககத்திலிருந்து  ஆணை வந்திருந்தது.  எந்த ஊருக்கு விருப்பம் தரலாம் என்று ஆய்வு செய்துகொண்டிருந்த போது, நாகைக்கு வருகை தந்திருந்த அகத் தணிக்கைக் குழுவினரிடம்  ஒரு கேள்வியை முன்வைத்தேன் !

 

பல நிலையங்களுக்குத் தணிக்கைக்குச் சென்று வந்திருப்பீர்கள், உங்கள் அனுபவத்திலிருந்து, எந்தப் பயிற்சி நிலையத்தில்  பண்டகம் தொடர்பான தணிக்கைத் தடைகள்  மிகக் குறைவாக இருக்கும் என்பதை எனக்குச் சொல்லுங்கள்என்பதே என் கேள்வி. ”சேலத்தில்  மிகக் குறைவுஎன்பதாக அவர்கள் தெரிவித்தனர்.  உடனே, காலமுறை இடமாற்றலில் சேலம் செல்ல விரும்புவதாக எழுதிக் கொடுத்தேன். அப்போது என் ஊரான திருத்துறைப்பூண்டிக்கும் சேலத்திற்கும்  இடைப்பட்ட தொலைவு  268 கி.மீ !

 

நான் கேட்டபடியே சேலத்துக்கு இடமாற்றல் ஆணை கிடைத்தது. நாகையிலிருந்து  14-07-1981 அன்று விடுபட்டு சேலத்தில் பணியில் சேர்ந்தேன் ! சேலத்தில் இரண்டு பண்டகக் காப்பாளர் பணியிடங்கள்.  திரு..முத்துசாமி கருவிகள் பண்டகத்தையும், திரு.இப்ராகிம் நுகர்பொருள் பண்டகத்தையும் கவனித்து வந்தனர். திரு.இப்ராகிம் மதுரைக்கு மாற்றப்பட்டு, அவரது இடத்துக்கு நான் அமர்வு செய்யப்பட்டிருந்தேன் !

 

திரு.இப்ராகிமிடமிருந்து நுகர் பொருள் பண்டகப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டேன். அவர் இடமாற்றலான பிறகு அவரைப் பற்றிய செய்திகள்  எதுவும் இன்றுவரை எனக்குத் தெரியவில்லை. சேலத்தில் பகுப்பலகீடு (Unitization) செய்திருந்தாலும், நான் அதிலும் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தது. 96 எண் ஒருமுனை ஆளி (Single pole Switch) கணக்கில் இருந்தால் அவற்றை, பத்துப் பத்தாகக் கட்டி, (10 x 9 = 90  + 6 = 96) பொருள்விவரச் சீட்டு எழுதி இணைப்பது தான் பகுப்பலகீடு. 96 எண்களையும்  ஒரே கட்டாகக் கட்டி, பொருள் விவரச் சீட்டு எழுதி இணைப்பதன்று ! ஆனால் இரண்டாவது  முறைதான் அங்கு பின்பற்றப்பட்டிருந்தது !

 

எனவே நான் அங்கும் பகுப்பலகீட்டை  முதலிலிருந்து தொடங்கிச் செய்யவேண்டி இருந்தது. அண்மையில் நான்  ITI என்னும் முகநூலைத் தொடங்கிய நேரம். அப்போது பணியில் இருந்த அலுவலர்கள் ஒவ்வொருவருடனும் எழினி (Mobile) மூலம் தொடர்பு கொண்டு பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அந்த வகையில் ஒருநாள் சேலம் மாவட்டத் திறன் வளர்ச்சி அலுவலக மேலாளர் திரு.கிருஷ்ண மூர்த்தியுடன் அறிமுகப்படுத்திக் கொண்டு உரையாடினேன் !

 

உரையாடலுக்கிடையே, அவர், “ஐயா, உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்;  அலுவலர்கள் பலரும் உங்களைப் பற்றி இன்றும் பெருமையாகப் பேசுகிறார்கள்.  நீங்கள் இங்கு பண்டகக் காப்பாளராகப் பணியாற்றிய போது பொருள்களைப் பகுப்பலகீடு (Unitization) செய்து உங்கள் கைப்பட எழுதித் தொங்கவிட்ட பொருள்விவர அட்டை சில பொருள்களில் இன்றும் தொங்கிக் கொண்டிருக்கிறது. நான் இங்கு பண்டகக் காப்பாளராக இருந்ததால், அவற்றைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததுஎன்றார் !

 

அவர் சொல்லிய செய்தி  எனக்கு மிகவும் வியப்பைத் தந்தது. 39 ஆண்டுகளுக்கு முன்பு  சேலத்தில்  நான் செய்த   பகுப்பலகீட்டின் (Unitization) எச்சம் (Remainder) இன்றும் அங்கு என் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறது என்றால் என் உழைப்புக்குக் கிடைத்த அறிந்தேற்பாகவே  (Recognition) அதைக் கருதுகிறேன் !

 

சேலத்தில் பண்டகக் காப்பாளராக  கிட்டத்தட்ட இரண்டேமுக்கால் ஆண்டுகள் பணியாற்றினேன். இந்தக் காலத்தில் இணை இயக்குநர் திரு.வி.யு.புருஷோத்தமன் அவர்கள் சேலத்திற்கு வருகை தந்திருந்தார். முதல்வர் அறையில் இருந்த அவரிடம் சென்று அறிமுகப்படுத்திக்கொண்டு, பணடகத்திற்கு வருமாறு அழைத்தேன். பண்டகத்திற்கு வருகைதந்து ஆய்வு செய்ய உயர் அலுவலர்களை அழைப்பது என்பதை நான் பதுக்கோட்டையில் பணியாற்றிய காலத்திலிருந்து பின்பற்றி வருகிறேன் !

 

நான் அழைத்த சற்று நேரத்தில் திரு.வி.யு.புருஷோத்தமன் பண்டகத்திற்கு முதல்வருடன் வந்தார். வந்தவர் வாயிலின் உட்புறமாக  நின்றபடியே  ஏறத்தாழ ஐந்து  நிமிடங்கள் பண்டகத்தை நோட்டமிட்டார். பகுப்பலகீடும் அவற்றில் தொங்கிய அட்டைகளும் அவர் கண்களில் பட்டன. அவருக்கு முழு மன நிறைவு ஏற்பட்டது போலும் ! பண்டகத்தை விட்டு வெளியேற முனைகையில், நான் அவரிடம் சென்று உள்ளே வந்து அமர்ந்து சில பொருள்களையாவது  பார்வை ஆய்வு (Test Check) செய்யச் சொன்னேன் !

 

வேண்டாம். எல்லாம் சரியாக இருக்குமென்று தோன்றுகிறது. இன்னொரு முறை வரும்போது பார்க்கிறேன்என்று சொல்லிவிட்டுப் பணிமனைப் பக்கம் நகரத் தொடங்கினார்.  நகர்வதற்கு  முன் சொன்னார்,”You have unitized everything and keeping well. Keep it up” !

 

சேலத்தில் பண்டகக் காப்பாளராக  நான் பணியாற்றுகையில்  வெவ்வேறு முதல்வர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர் திரு.இரா..தங்கவேலு. கோவை இராமநாதபுரத்தைச் சேர்ந்த  அவர், தமிழார்வம் மிக்கவர். எதையாவது புதுமையாகச் செய்ய வேண்டும் என்ற ஆவல்  அவரிடம் எப்போதும் உண்டு. அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்துவிட்டார் என்னும் செய்திகேட்டு மிகவும் வருந்தினேன் !

 

அவரும் நானும் சேலத்தில் பணியாற்றிய அதே காலத்தில்  நாகர்கோயிலைச் சேர்ந்த திரு.எம்.கிருஷ்ணன் என்பவர்  பேணற்பணி மேற்பார்வையாளராக  (Maintenance Supervisor) பணிபுரிந்து வந்தார். மிகத் திறமைசாலி. மிகுந்த ஈடுபாட்டுடன் உழைக்கக் கூடியவர். !

 

நானும் முதல்வர் திரு.தங்கவேலு அவர்களும் ஒருநாள் அலுவலகத்தில் ஓய்வாகப் பேசிக்கொண்டிருந்த போது அவரிடம் ,” பயிற்சி நிலையத்தில்  வகுப்பறைகள், வரைபட அறைகள், பயிற்சி அலுவலர் அறை, அலுவலக அறைகள், முதல்வர் அறை, மருந்தகம் என நிரம்ப அறைகள் இருக்கின்றன. அவற்றுக்குத் தமிழில் பெயர் சூட்டி, அறைவாயிலில் எழுதி வைத்தால் நன்றாக இருக்கும்என்றேன் !

 

முதல்வர் நிமிர்ந்து உட்கார்ந்தார். முகத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன், எந்தெந்த அறைகளுக்கு என்னென்ன பெயர்கள் வைக்கலாம் என்பதற்கு ஒரு பட்டியல் கொடுங்கள்  என்றார் ! செயலில் இறங்கினேன் !

 

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”வேதரெத்தினம்” வலைப்பூ.

[தி.: 2052, நளி (கார்த்திகை) 14]

{30-11-2021}

------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக