தேடுக !

ஞாயிறு, 14 நவம்பர், 2021

மலரும் நினைவுகள் (06) பொருள்களின் வகைப்பாடும்புதிய பதிவேடு பேணலும் !

                             (1966-ஆம் ஆண்டு நிகழ்வுகள்) 

பொறுப்புகளை முழுவதுமாகப் பெற்றுக்கொண்டபின், பண்டகத்தில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றிச் சிந்திக்கலானேன்ஒரே பொருள் இரண்டு அல்லது மூன்று பக்கங்களில் இருப்புக் கணக்கில் கொண்டுவரப் பட்டிருப்பதை முதலில் ஒழுங்கு படுத்தியாக வேண்டும். அவற்றை ஒருங்கிணைத்து ஒரே பக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும். இந்தப் பணியைத் தான் முதலில் எடுத்துக்கொண்டேன். இரண்டே நாள்களில் இராப் பகலாக முயன்று இப்பணியைச் செய்து முடித்தேன் !

 

அடுத்து, இருப்பிலிருந்த பொருள்களையெல்லாம் கீழ்க்கண்டபடி வகைப்படுத்தி, ஒவ்வொரு வகைப் பொருளும்  அகரவரிசையில் அமையுமாறு, பதிவேட்டுப் பக்க எண்களுடன், தனித்தாளில் பட்டியலிட்டேன்.

 

(01) அரியுருக்குக் கம்பிகளும் உருளைகளும் (M.S.Round Rods)

(02) அரியுருக்குப் பட்டைகள்  (M.S.Flats)

(03) அரியுருக்குக் கவைகள் (M.S.Angles)

(04) அரியுருக்கு மடைகள்  (M.S.Channels)

(05) அரியுருக்குத் தகடுகள் (M.S.Sheets and Plates)

(06) மிகைக் கரிம உருக்குக் கம்பிகள் (High Carbon Steel Rods)

(07) உளியுருக்குச் சவுக்கைகள் (High Speed Steel Squares)

(08) வார்ப்பிரும்புக் கட்டிகள் (Cast Iron Blocks)

(09) இரும்பல்லா மாழைக் கம்பிகள் (Non-Ferrous  Metal  Rods)

(10) இரும்பல்லா மாழைத் தகடுகள் (Non-Ferrous Metal Sheets)

(11) மின்வலி சார் பொருள்கள் (Electrical Goods)

(12) ஒருக்கியல் சார் பொருள்கள் (Welding Materials)

(13) ஒழிபியல் சார்பொருள்கள் (Miscellaneous Goods)

(14) எண்ணெய் வகைகள்  (Oils & Grease)

 

மேற்கண்ட 14 வகைப் பொருள்களையும்  புதிய பதிவேட்டில் எடுத்தெழுத  ஒவ்வொன்றும் 200 பக்கங்கள் கொண்ட 7 தொகுதிகளை அலுவலகத்தில் எழுதுபொருள் பிரிவிலிருந்து கோரிப் பெற்றேன் !

 

அரியுருக்குக் கம்பிகளின் குறுக்களவு (மில்லி மீட்டரில்)  ஏறு வரிசையில் அமையும்படி (Diameter  in Ascending order)  வகைப்படுத்திக் கொண்டு 6 ,10, 12, 16, 20, 25, 32, 36, 40, 45, 50, 62, 75, 100 மி.மீ (குறுக்களவுள்ள) கம்பிகளை / உருளைகளை புதிய பதிவேட்டின் முதல் தொகுதியில்  5 –ஆம் பக்கம் தொடங்கி எடுத்தெழுதத் தொடங்கினேன்.  ஒரு பக்கத்திலுள்ள இருப்பு, அந்தப் பக்கம் தீர்ந்தவுடன் அதற்கு அடுத்தடுத்தப் பக்கங்களிலேயே கணக்குத் தொடரும் வகையில்  போதுமான பக்கங்களை விட்ட பின்பே இரண்டாவது  கம்பியைக் கணக்கில் கொண்டுவருவேன் !

 

பக்கம் 5-ல் 6 மீ.மீ கம்பி கணக்கில் கொண்டுவரப்பட்டால் அடுத்து 10 மி.மீ கம்பியைக் கணக்கில் கொண்டு வருவேன். அடுத்ததாக 12 மி.மீ. கம்பி கணக்கில் கொண்டு வரப்படும். கம்பிகளின் குறுக்களவு ஏறுவரிசையில் அமையும் படி இவ்வாறு கணக்கில் கொண்டுவரப்பட்டது !

 

இந்தப் பதிவேட்டில் அரியுருக்குக் கம்பிகளுக்காக 125 பக்கங்களை ஒதுக்கிவிட்டேன். அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளுக்கான  வரவு செலவுக் கணக்குகள் இந்தப் பதிவேட்டில் மட்டுமே பதிவு செய்யப்படுவதற்கு  இது உதவியாக அமையும் !

 

இருப்பு மாழை  (Ferrous Metal) இனங்களான அரியுருக்குக் கவைகள் (M.S.Angles, ) அரியுருக்குக் மடைகள்  (M.S.Channels), மிகைக் கரிம உருக்குக் கம்பிகள் (High Carbon Steel Rods), உளியுருக்குச் சவுக்கைகள் (High Speed Steel Squares), வார்ப்பிரும்புக் கட்டிகள் (Cast Iron Blocks) ஆகியவற்றின் வழங்கல்கள்  (Issues)  குறைவாகவே நிகழும் என்பதால் அவற்றுக்கென 130 முதல் 200 வரையிலான பக்கங்களை ஒதுக்கிவிட்டேன்.  இந்த இனங்களையும் அவற்றின் அளவுகள் ஏறுவரிசையில்  அமையும் வகையில் வகைப்படுத்திக் கொண்டு, ஒவ்வொரு இனத்திற்கும் இடையில் போதுமான பக்கங்களை விட்டு, இருப்பெடுத்து எழுதத் தொடங்கினேன் !

 

இவ்வாறு தொகுதி 2 –ல் அரியுருக்குப் பட்டைகள் (M.S.Flats), அவற்றின் அகலமும் கனமும் (Breadth & Thickness)  ஏறு வரிசையில் அமையும் வகையில், இரண்டு இனங்களுக்கு இடையே போதுமான பக்கங்கள் விட்டு எடுத்து எழுதப்பட்டன.  இவையன்றி அரியுருக்குத் தகடுகள் (M.S.Sheets and Plates), வார்ப்பிரும்புக் கட்டிகள் (Cast Iron Blocks) ஆகியவையும் இதே தொகுதியில் எடுத்தெழுதப்பட்டன !

 

மூன்றாவது தொகுதியில் இரும்பல்லா மாழைக் கம்பிகளான பித்தளை, வெண்கலம், செம்புக் கம்பிகள் (Non-Ferrous  Metal  Rods), போன்றவையும், இரும்பல்லா மாழைத் தகடுகளான (Non-Ferrous Metal Sheets) பித்தளை (Brass), செம்பு (Copper),  காரீயம் (Lead), ஒளியுருக்கு (Stainless Steel) போன்றவையும் எடுத்தெழுதப்பட்டன !

 

நான்காவது தொகுதியில் மின்வலி சார்பொருள்களான (Electrical Goods)  மின்கம்பிச் சுருள்கள் (Electrical Wires), சுலவுக் கம்பிகள்,  (Winding Wires) ஆளிகள் (Switches), கோளிகள் (Holders), குமிழ் விளக்குகள் (Incandascent Bulbes), குழல் விளக்குகள் (Fluroscent Tube Lamps) தகரக் கண்ணிகள் (Tin Clips), ஏமநாடா (Insulation Tape) போன்ற அனைத்துச் பொருள்களும் எடுத்தெழுதப்பட்டன !

 

ஐந்தாவது தொகுதியில் ஒருக்கியல் பிரிவுக்கு (Welding Section) தேவையான பல்வகையான மின்குச்சிகள் (Different Kinds of Electrodes), வளிமப் பற்றவைப்புக்குத் தேவைப்படும்  பித்தளை நிரப்புக் கம்பிகள் (Brass Filler Rods), செப்பு நிரப்புக் கம்பிகள் (Copper Filler Rods), ஒளியுருக்கு நிரப்புக் கம்பிகள் (Stainless Steel Filler Rods), மணல வெண்கல நிரப்புக் கம்பிகள் (Silicon Bronze Filler Rods) செம்பு பூசிய இரும்புக் கம்பிகள் (C.C.M.S.Filler Rods), வளிம உருளைகள் (Gas Cylinders) போன்றவை இருப்பு எடுத்து எழுதப்பட்டன !

 

ஆறாவது தொகுதியில் நுகர்பொருள் (Consumable Goods) வகையை சேர்ந்த அறுவையலகு (Hacksaw Blade), கழிவு நூல் (Cotton Yarn Waste), சலவை உப்பு (Washing Soda ), சவர்க்காரம் (Washing Soap)), குருந்தத் தாள் (Emery Sheet), உப்புத் தாள் (Sand Paper), கவை நாடா (V.Belt),  மற்றும் இன்ன பிற நுகர்பொருள்களும் எடுத்தெழுதப்பட்டன !

 

ஏழாவது தொகுதியில் உயவு எண்ணெய் (Lubricating Oil), குளிரூட்டு எண்ணெய் (Coolant Oil) மண்ணெண்ணெய் (Kerosene) ஈருள் எண்ணெய் (Transformer oil), மசகு (Grease), கனிமக் களி (Minerak Jelly) போன்றவையும் எடுத்தெழுதப்பட்டன !

 

ஒவ்வொரு தொகுதியிலும் முதல் பக்கத்தில் பக்கச் சான்றுரை (Page Certificate) இடம்பெற்றிருக்கும். அதற்குக் கீழேஇப்பதிவேட்டில் என்னென்ன பொருள்கள் இடம்பெற்றிருக்கின்றனவோ அவற்றின் முந்தைய பதிவேட்டு முடிவிருப்பு அத்துணையும் முழுமையாக  இப்பதிவேட்டில்   பெயர்த்து எழுதப்பட்டுள்ளனஎன்னும் இருப்புப் பதிவுச் சான்றுரை இடம்பெற்றிருக்கும் !

 

மூன்றாம் பக்கத்திலும் நான்காம் பக்கத்திலும், தொடர் எண்,  பொருள்களின் பெயர், அவற்றுக்குரிய  பக்க எண் ஆகியவை  அடங்கிய அட்டவணை இடம்பெற்றிருக்கும் !

 

இவ்வாறு புதிதாக இருப்புப் பதிவேடுகளையும், அவற்றுக்கான அட்டவணைகளையும்  தயார் செய்துகொண்டு என் வழக்கமான அன்றாடப் பணிகளைத் தொடங்கினேன். 22 அகவையே  நிறைந்த  இளம்  பருவத்தில்  நான் எதிர்கொள்ள வேண்டியிருந்த அறைகூவலான அந்தச் சூழ்நிலை என் திறமைகளைக்  கூர்மைப்படுத்திக் கொள்ளப் பெரிதும் உதவியது என்பதை நான் ஒப்புக்கொள்வதில் எனக்குத் தயக்கம் ஏதுமில்லை !

 

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”வேதரெத்தினம்” வலைப்பூ.

[தி.: 2052, துலை (ஐப்பசி) 10]

{27-10-2021}

--------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக