தேடுக !

புதன், 1 டிசம்பர், 2021

மலரும் நினைவுகள் (27) சேலத்தில் மணம் பரப்பிய தமிழ்ப் பெயர்ப் பலகைகள் !

 

(1982 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்) 

சேலம் தொழிற் பயிற்சி நிலையப் பணிமனை,  பண்டகம், வகுப்பறை, அலுவலகம் போன்றவற்றுக்குத் தமிழில் பெயர் சூட்டும் முன், அவற்றை வகைப்படுத்திக் கொள்ளவும்,  ஒவ்வொரு வகைக்கும்  பெயர்களைப் பட்டியலிட்டுக் கொள்ளவும் விரும்பினேன் !

 

அவற்றைக் கீழ்க்காணும் வகையில் முதலில் வகைப்படுத்திக் கொண்டேன் (01) பணிமனை (02) பண்டகம் (03) அலுவலகக் கட்டடத்தின் மேல் தளம் (04) அலுவலகக் கட்டடத்தின் தரைத் தளம்  (05) கணித வகுப்பறை (Mathas Class Room)  (06) வரைபட வகுப்பறை (Drawing Class Room)  (07) தெரிவியல் வகுப்பறை (Theory Class Room) மற்றும் பிற !

 

வகைப்பாட்டுக்கு முன்னதாக, இல்லம் என்பதற்கு ஈடான சொற்களைச் சூடாமணி நிகண்டிலிருந்து தெரிவு செய்தேன். அகம், மனை, வளமனை, அரங்கம், களரி, மாடம், குடில், இல்லம், நிலையம், மாளிகை, வீடு, என்பன ஒருபொருட் பன்மொழியாகும்.  ஒவ்வொரு அறையும் தனித்தனி  இல்லங்கள்தானே !

 

ஒற்றை  அறையையே இல்லமாகக் கொண்டு  வாழ்ந்துவரும் ஏழைகளின் வாழ்விடம் தமிழ்நாட்டில் பல்லாயிரக் கணக்கில் இருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே அறையை இல்லமென அழைத்தலில்  தவறேதுமில்லை ! அகம், இல்லம், குடில்  போன்ற  பின்னொட்டுகளைக் கொண்டு, கீழ்க்காணும் வகையில் பெயர்களை இறுதி செய்தேன் !

 

சேலத்தில் இரண்டு பணிமனைகள் (Workshops) இருக்கின்றன. அவற்றுக்கு இரண்டு பெயர்களை இறுதி செய்தேன்.  (01) பாரதியார் பணிமனை (02) பாவேந்தர் பணிமனை !

 

பணிமனைக்கு ஒன்றாக  இரண்டு பண்டகங்கள் சேலத்தில் இருக்கின்றன.  பொருள்களைச்சேமித்து வைக்கும்  பெரிய அறைகளுக்குகளரிஎன்னும் சொல்லை சூடாமணி நிகண்டு குறிப்பிடுகிறது. எனவே நுகர்பொருள் பண்டகத்துக்கு “மறைமலை நுகர்பொருள் களரிஎன்னும் பெயரையும், கருவிகள் பண்டகத்துக்கு “திரு.வி.க.கருவிகள் களரிஎன்னும் பெயரையும் இறுதி செய்தேன் !

 

அடுத்து அலுவலகம் அமைந்துள்ள முதன்மைக் கட்டடத்தின் மேல் தளத்தில் , முதல்வர் அறை, ஆட்சி அலுவலர் அறை, அலுவலக அறைகள், 3-ஆம் அணி துணைமுதல்வர் அறை, எழுது பொருள் வைப்பகம்  போன்ற பல அறைகள் அமைந்துள்இந்த அறைகளுக்குத் “தமிழ்” என்னும் முன்னொட்டுடன்  (01) தமிழ்க் கடல், (02) தமிழருவி, (03) தமிழ்ச் சுனை, (04) தமிழ்ப் பொழில், (05) தமிழ் முகில்,  (06) தமிழ்ப் புனல்,  (07) தமிழ்ப் பொய்கை, (08) தமிழ் மணம்  ஆகிய பெயர்களைத் தேர்வு செய்தேன் !

 

தரைத் தளத்தில்  சார்புரை மைய உதவி இயக்குநர் அறை, சார்புரை மைய அலுவலகம் (R.I.Center Office), துணை முதல்வர் அறை, சில வகுப்பறைகள் போன்றவை இருந்தன. இந்த அறைகளுக்கு மலர்களின் பெயர்களைத் தெரிவு செய்து, அத்துடன் “குடில்” என்னும் பின்னொட்டைச் சேர்த்து (01) அல்லிக் குடில், (02) ஆம்பற்  குடில், (03) குவளைக் குடில் (04) குறிஞ்சிக் குடில் (05) ல்லிகைக் குடில் (06) முல்லைக் குடில் (07) முளரிக்  குடில்  (08) சாமந்திக் குடில்  என்னும் பெயர்களைத் தேர்வு செய்தேன் ! (முளரி என்றால் தாமரை என்று பொருள்) !

 

கணித வகுப்பறைகள் மூன்று இருந்தன. அவற்றுக்கு ஒளிமணி (GEMS) வரிசையில்  (01) செம்மணியகம் (02) வெண்மணியகம் (03) பொன்மணியகம் என்னும் பெயர்களைத் தெரிவு செய்தேன்.  வரைபட வகுப்பறைகள் (Drawing Class Rooms)  மூன்று இருந்தன. மூவேந்தர்களின் நினைவாக அவற்றுக்கு (01) சேரன் இல்லம் (02) செழியன் இல்லம் (03) செம்பியன் இல்லம் ஆகிய மூன்று பெயர்களையும் இறுதி செய்தேன் (செம்பியன் என்றால் சோழன் என்று பொருள்) !

 

இவையல்லாமல்  தெரிவியல் (Theory) வகுப்பறை மற்றும் பிற அறைகளுக்கு  பண்டைய தமிழ்ப் புலவர்களின் நினைவாக (01) இளங்கீரன் மனை (02) இளங்கோ மனை (03) ஔவை மனை (04) கம்பர் மனை (05) கபிலர் மனை (06) பரணர் மனை (07) புகழேந்தி மனை (08) பூங்குன்றன் மனை (09) நக்கீரன் மனை என ஒன்பது  பெயர்களைத் தெரிவு செய்தேன் !

 

பயிற்சி நிலையத்தின் முதன்மைக் கட்டடத்தில்  முதல்வர் அறைக்கு மேலதாக இரண்டாம் தளத்தில்   அகலறை  (Large Room) ஒன்று விருந்தினர் தங்குமிடமாகப் பயன்பட்டு வந்தது. விருந்தினர் அறை (Guest Room) என்னும் பெயருடன் அழைக்கப்பட்டு வந்த அதை  துச்சில்என்று பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்தேன் !

 

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு” என்பது திருக்குறள் (குறள் 340). ”தூதுணம் புறவொடு துச்சில் சேக்கும்” என்பது பட்டினப்பாலை வரி.(பட்.58). ”துச்சில் இருந்து துயர் கூரா மாண்பினிதே” என்று சொல்கிறது இனியவை நாற்பது என்னும் நூல்.  (இனி.39) துச்சில் என்னும் சொல்லுக்கு “தங்குமிடம்”, “ஓய்வு எடுக்குமிடம்” என்று பொருள் . ஆகையால் “துச்சில்” என்னும்சிறிய சொல் “விருந்தினர் அறை” என்னும் நீண்ட சொல்லுக்கு மாற்றாக அமைவது பொருத்தம் தானே !

 

பயிற்சி நிலையக் கட்டடங்களுக்கு மையமாக அமைந்துள்ள  ஒரு சதுக்கத்தில்  (Square) பெரிய அரசமரத்தின் கீழ் பிள்ளையார் சிலை ஒன்றை மேடை கட்டி வைத்து வழிபட்டு வந்தனர். பெயரில்லாமல் வழிபட்டு வந்த அந்தப் பிள்ளையாருக்கு  முத்தமிழ்ப் பிள்ளையார்என்ற பெயரைத் தெரிவு செய்தேன் !

 

மொத்தத்தில் 37  பெயர்களைப் பட்டியலிட்டு முதல்வரிடம் தந்து, அவற்றுக்கான விளக்கமும் தந்தேன். பட்டியலை ஆழ்ந்து படித்துப் பார்த்த முதல்வர் திரு.இரா..தங்கவேலு, மகிழ்ச்சியுடன் ஒப்புதல் தந்ததோடு,  பேணற்பணி மேற்பார்வையாளர் திரு.எம்.கிருஷ்ணன் அவர்களை அழைத்து அவரிடம் தன் நோக்கத்தை விவரித்தார் !

 

பண்டகத்திலிருந்து தேவையான அரியுருக்குத் தகடுகளையும்  (M.S.Sheet)  ஈர்மக் கலன்களையும்   (Paints) தூரிகைகளையும் (Brushes) தேவைச் சீட்டு மூலம் எடுத்து, தேவையான நீள அகலத்தில் தகடுகளை  வெட்டி, பெயர்ப் பலகைகளைத் தயார் செய்து, பெயர்களை ஈர்மத்தினால் எழுதி  உரிய இடங்களில் பொருத்துங்கள். கடைசற் பிரிவில் பயிலும்  ஒரு பயிற்சியாளர் பெயர்ப்பலகை எழுதுவதில் வல்லவராக இருக்கிறார். அவரை இதற்குப் பயன் படுத்திக் கொள்ளுங்கள் என்று  தக்க நெறியுரை வழங்கினார் !

 

திரு.கிருஷ்ணனின் துடிப்பான செயல்திறனால், ஒரே மாதத்தில், பணிமணை, பண்டகம், வகுப்பறை, முதல்வர் அறை, அலுவலகம் அனைத்து இடங்களிலும்  தமிழ்ப் பெயர்ப் பலகைகள் சொலிக்கத் தொடங்கின !

 

----------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”வேதரெத்தினம்” வலைப்பூ,

[தி.: 2052, நளி (கார்த்திகை) 15]

{01-12-2021}

----------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக