(1984 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்)
நாகப்பட்டினம் நகரைப் பற்றி உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம்; சிலருக்குத்
தெரியாமலும் இருக்கலாம். தெரியாதவர்களுக்காக ஓரிரு செய்திகளை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன் !
நாகப்பட்டினம் – நாகூர் இரண்டையும் உள்ளடக்கியதே
நாகப்பட்டினம் நகராட்சி. நாகப்பட்டினம் நகரின் எல்லை முடிந்தவுடன் நாகூரின் எல்லை தொடங்கிவிடுகிறது. நாகை – நாகூர் – காரைக்கால் – மயிலாடுதுறை – கடலூர் – சென்னை
சாலையில் நாகூர்
எல்லை தொடங்குமிடத்தின் அருகில்தான்
நாகப்பட்டினம் தொழிற்பயிற்சி நிலையம் அமைந்துள்ளது !
நாகப்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கில் 5 கி.மீ தொலைவில்
நாகூர் தர்காவும் மேற்கில் 7 கி.மீ.தொலைவில் சிக்கல் சிங்காரவேலர் கோயிலும், தெற்கில் 18 கி.மீ தொலைவில் வேளாங்கண்ணி மாதா கோயிலும், அமைந்துள்ளன !
நாகப்பட்டினம் நகரில்தான் தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை
மறைமலையடிகள் பிறந்து வளர்ந்தார். பிறகு அவர் சென்னை, பல்லவபுரத்திற்கு (பல்லாவரம்) இடம்
பெயர்ந்து சென்னை, கிறித்தவக் கல்லூரியில்
தமிழாசிரியராகப் பணிபுரிந்து வந்தார் !
நாகூர் தர்காவின்
கந்தூரி திருவிழா அனைத்திந்திய அளவில் புகழ் பெற்றது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
கந்தூரி ஊர்வலம் நடைபெறும் நாளில் நாகை
நகரிலிருந்து, சுவடிக்கப்பட்ட ஒப்பனைத் தேரில் (ரதம்) வெள்ளிக்
குடத்தில் சந்தனக் குழம்பை வைத்து ஊர்வலமாக நாகூருக்கு எடுத்து வருவார்கள். மின்விளக்குகளால்
அழகுபடுத்தப்பட்ட 20 அடி உயரமுள்ள ஒப்பனைத்
தேர் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் !
சந்தனக் கூடு ஊர்வலம் நாகையில் மாலை நேரத்தில் தொடங்கி நாகூர்
சென்றடைய வைகறைப் பொழுது ஆகிவிடும். இந்த ஊர்வலம் நாகை தொழிற்
பயிற்சி நிலையம் வழியாகத் தான் கடந்து
செல்லும் !
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த நாகையில் இரண்டாவது முறையாகப்
பணியாற்ற எனக்கு வாய்ப்புக் கிடைத்தது மிக்க மகிழ்ச்சியான ஒரு நிகழ்வு. நாகப்பட்டினம் அலுவலகத்தில் கணக்குப்
பிரிவு மேலாளராகப் பணியாற்றி வந்த நான், திரு.ஆர்.ஜேக்கப்
இடமாற்றலானதைத் தொடர்ந்து, பணியமைப்புப் பிரிவின் மேற்பார்வைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். கணக்குப்
பிரிவு மேலாளராக திரு,க.இராமலிங்கம், பதவி உயர்வில் பணியமர்வு
செய்யப்பட்டிருந்தார் !
நாகை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் திரு.T.S.கோபாலன், பயிற்சி நிலைய அலுவலர் குடியிருப்பில் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். குறிப்பிட்ட ஆண்டில், ஒருநாள் நள்ளிரவு 12-00 மணி வாக்கில் தொழிற்பயிற்சி
நிலையப் பகுதிக்கு சந்தனக் கூடு ஊர்வலம் வந்து சேர்ந்தது. முதல்வரும் அவரது குடும்பத்தினரும் அருகிலுள்ள சாலைக்கு
வந்து சந்தனக்கூட்டைப் பார்த்து மகிழ்ந்து
கொண்டிருந்தனர் !
முதல்வர் குடியிருப்பிலிருந்து 100 அடி தள்ளி
வடக்கில் அமைந்துள்ள மேலாளர் குடியிருப்பில் நான் குடும்பத்துடன் வாழ்ந்து
வந்தேன். சந்தனக்கூடு ஊர்வலத்தை என் குடியிருப்புக்கு எதிரில் உள்ள
சாலைக்குச் சென்று நானும் என் குடும்பத்தினரும் பார்த்துக் கொண்டிருந்தோம் !
முதல்வர் குடும்பத்தினர் நிற்கும் பகுதியிலிருந்து 100 அடி தள்ளி
நானும் என் குடும்பத்தினரும் சந்தனக்
கூடு ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஊர்வலம்
எங்களைக் கடந்து சென்ற பின்னர் முதல்வர் குடும்பத்தினர் நின்றுகொண்டிருந்த பகுதியிலிருந்து
இரவுக் காவலரான திரு. பழனிவேல் நான் நிற்கும் பகுதிக்கு ஓடிவந்தார் !
நேராக என்னிடம் வந்து, துப்புரவுப்
பணியாளர் திரு.ஏழுமலை என்பவர், மது அருந்திவிட்டு
முதல்வரிடமும் அவர் குடும்பத்தினரிடமும் வம்பு செய்து கொண்டிருக்கிறார், அவர்களை
விட்டிற்குச் செல்லவிடாமல் மறித்து, தரம் தாழ்ந்த சொற்களால் வைதுகொண்டிருக்கிறார், நான்
எவ்வளவோ சொல்லியும் கேட்காமல்
போக்கிலித் தனமாக அவர் நடந்து கொள்கிறார். முதல்வர்
வீட்டுப் பெண்டிர் மேல் வேண்டுமென்றே போய் விழுகிறார். அவரை
அடக்கி வைக்க என்னால் முடியவில்லை. நீங்கள் உடனே அங்கு வரவேண்டும் என்று அழைத்தார் !
என் குடும்பத்தினரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, நிகழ்ச்சி
இடத்துக் சென்றேன். அதற்குள் இன்னொரு இரவுக் காவலரும், வேறு
சிலருமாக திரு.ஏழுமலையை வேறு பக்கமாகத் தள்ளிக்
கொண்டு போவதைப் பார்க்க முடிந்தது. விதிமுறைகளின்படி நடப்பதிலும், வேண்டுமென்றே
தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதிலும் நான் கண்டிப்பாக நடந்துகொள்வேன் என்பதை
அலுவலர்களுக்கு என் செயல்பாடுகள் மூலம் உணர்த்தி இருந்ததால், நான்
அங்கு செல்வதற்குள், திரு.ஏழுமலையைத் தள்ளிக் கொண்டு சென்றுவிட்டனர் !
முதல்வரிடம், வீட்டிற்குச் செல்லுங்கள்
என்று சொல்லிவிட்டு, நான் என் குடியிருப்புக்குத் திரும்பிவிட்டேன். மறுநாள்
அலுவலகம் திறந்தவுடன், பகல் நேரக் காவலரை, அழைத்து, இரவுப் பணிக் காவலர்களை
அழைத்து வரச் செய்தேன். இரவில் என்ன நடந்தது என்பதை அவர்களிடம் கேட்டறிந்தேன்; அத்துடன்
இருவரிடமும் விரிவாக அறிக்கை எழுதி வாங்கினேன் !
முதல்வர் அறைக்குச் சென்று அவரிடம் சற்று நேரம் கலந்து பேசிவிட்டு
வந்து, நான் வைத்திருக்கும் அரசாணைகள் அடங்கிய இருப்புக் கோப்பினை
எடுத்து, அதில் ஒரு பக்கத்தில் தாள் நறுக்கு (Cut Slip) வைத்துவிட்டு, தட்டச்சர் திரு.ஸ்டாலினை
அழைத்தேன் ! அவரிடம் என்னுடைய இருப்புக் கோப்பினைத் தந்து, குறிப்பிட்ட
படிவத்தை, ஐந்து படிகள் எடுக்கச் சொன்னேன். அதில்
பெயர், பதவி ஆகியன வரும் இடத்தை மட்டும் வெட்புலமாக (Vacant) விட்டு, படியெடுத்துக்
கொண்டு வருமாறு சொன்னேன் !
அதற்குள் ஊகங்கள் சிறகடித்துப் பறக்கத் தொடங்கின. பயிற்சி
நிலைய வளாகத்துக்குள் பரபரப்புத் தொற்றிக்கொண்டது !
--------------------------------------------------------------------------------------
ஆக்கம்
+ இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”வேதரெத்தினம்” வலைப்பூ,
[தி.ஆ:
2052, நளி (கார்த்திகை) 21]
{07-12-2021}
--------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக