(1992 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்)
ஒவ்வொரு மாதத்திலும் 20 நாள் பணி 10 நாள் விடுப்பு என்னும் கொள்கையை ஈரோட்டில்
பணிபுரிகையில் கடைப்பிடித்தேன். பகல் முழுவதும் இல்லத்தினரைப்
பிரிந்து வெளியூரில்
இருக்கவேண்டிய சூழ்நிலை எனக்கு அமைந்து போனதால், இல்லத்தினரின்
தேவைகளையும் பிற பணிகளையும் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் நான் இருந்தேன். ஆகையால் மாதந்தோறும் 10 நாள் அளவுக்கு ஈட்டிய விடுப்பு
/ மருத்துவ விடுப்பு எடுப்பதை
என்னால் தவிர்க்க இயலவில்லை !
முதல்வர் திரு.இரா.அ.தங்கவேலு அவர்கள் சேலத்தில் பணிபுரிகையில் எனக்குப்
பழக்கமானார். அவர் மனைவி திருமதி. பாலாமணி
சேலம் மகளிர் கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசியை. மகன்கள் கார்த்திகேயன்,
நித்தியானந்தம் இருவரும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர்.
சேலம் அய்யந்திருமாளிகை வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் அவர்
“அ” வகைக் குடியிருப்பில் வாழ்ந்து வந்தார். நான் “ஆ” வகைக் குடியிருப்பில்
வாழ்ந்துவந்தேன். இரு குடும்பத்தினருக்கும் ஓரளவு பழக்கமிருந்தது
!
என்னிடமிருந்த தமிழ் அவருடன் என்னை இணைத்து வைத்தது. உயர்
அலுவலர்களுடன் ஏதோவொரு வகையில் இது போன்ற பிணைப்பு நமக்கு இருந்தால், நமது பணி பதமையாக (SMOOTH) செல்வதுடன் தேவையற்ற மன இறுக்கம்
(TENSION) தவிர்க்கவும் உதவும்!
ஈரோட்டில் நான் பணிபுரிகையில் அகத் தணிக்கைக் குழுவினர் தங்கள் தணிக்கைப் பணியை மேற்கொண்டிருந்தனர். ஒரு குறிப்பிட்ட கோப்பு – அது எதைப் பற்றியது என்பது இப்போது நினைவில்லை – ஆனால் அது பண இழப்பு தொடர்பானது அன்று என்பதை உறுதியாக என்னால் சொல்லமுடியும் - என் பார்வைக்குப் பிறகு அதை முதல்வர் மேசைக்கு அனுப்பி வைத்தேன் !
அன்று ஆட்சி அலுவலர் விடுப்பில் இருந்ததாக நினைவு. தணிக்கைக் குழுவினர் அதைப் பார்த்தால் உறுதியாக தணிக்கைத் தடை எழுப்பக் கூடியதாக
இருக்கும். முந்தைய முதல்வர் ஓரிருவர் சிக்கலுக்கு உள்ளாகும்
வாய்ப்பும் அதில் இருந்தது !
மறுநாள் தொடங்கி 10 நாள்கள் நான் விடுப்பு எடுத்திருந்தேன் என்பதால் அலுவலகத்துக்குச் செல்லவில்லை. எனினும் காலையில் 10-00 மணி வாக்கில் சேலத்திலிருந்து முதல்வரிடம் துழனி (PHONE) மூலம் தொடர்புகொண்டேன் !
அவர் மேசையிலிருக்கும் குறிப்பிட்ட கோப்பினை எடுத்து உள்ளே வைத்துவிடும்படியும்,
தணிக்கை குழுவினரின் ஆய்வுக்கு அது சென்றால் முந்தைய முதல்வர்கள் ஓரிருவர்
சிக்கலுக்கு உள்ளாவார்கள் என்றும் தெரிவித்தேன். செய்தியைத் தெரிந்து கொண்ட அவர்,
அவ்வாறே அந்தக் கோப்பினை தன் மேசையறையில் வைத்துக் கொண்டார்
!
சற்று நேரத்தில் இன்னொரு அலுவலக மேலாளரான திரு.இரத்தினமூர்த்தி முதல்வரிடம் வந்து குறிப்பிட்ட கோப்பு தணிக்கைக் குழுவுக்குத் தேவைப்படும், அது அலுவலகத்தில் இல்லை, முதல்வர் மேசையில் இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார் !
அந்தக் கோப்பு
எதைப்பற்றியது, என்று முதல்வர் வினவியிருக்கிறார். நான் விடுப்பிலிருக்கும் காலத்தில் திரு.இரத்தின மூர்த்தியின்
பார்வைக்கு அந்தக் கோப்பு வருவதுண்டு என்பதால், கோப்பின் முழு
விவரமும் அவருக்குத் தெரியும் !
அதைத் தணிக்கை குழுவினர் கேட்கிறார்களா என்று முதல்வர்
கேட்டிருக்கிறார். இதுவரைக் கேட்கவில்லை, இன்றில்லாவிட்டாலும் நாளை கேட்கக் கூடும் என்று திரு.இரத்தினமூர்த்தி சொல்லியிருக்கிறார். அப்படியானால் குறிப்பிட்ட
இருக்கை அலுவலரிடம் கோப்பினைக் கேளுங்கள் என்று முதல்வர் அவரைத் திருப்பியனுப்பிவிட்டார்
!
அன்று மாலை இருப்பூர்தியில்
(TRAIN) அவர் கோவை செல்கையில், அதே வண்டியில் பயணம்
செய்த சேலம் துணை முதல்வர் ஒருவரிடம், ஒரு மேலாளர் முந்தைய முதல்வர்களுக்குச் சிக்கல்
வந்துவிடக் கூடாது என்று கவலை கொண்டு எனக்குத் துழனி மூலம் செய்தி சொல்லி விழிப்படைய
வைக்கிறார்; இன்னொரு மேலாளர் முந்தைய முதல்வர்களைச் சிக்கலில்
ஆழ்த்த என்னிடம் வந்து கோப்பினைக் கேட்கிறார். இரண்டு பேருக்கும்
தான் எத்துணை வேறுபாடு, என்று சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்
!
அலுவலகப் பணியாளர்களுக்கு விடுப்புத் தொடர்பாக நான் நயப்பு (சலுகை) காட்டியது விதிகளுக்குப் புறம்பானது, என்றாலும் அதனால் விளைந்த நன்மைகள், அலுவலகத்தில் பணிமுடிப்புத் திறனை மேம்படுத்தி இணக்கமான சூழ்நிலையை உருவாக்கியது !
அதுபோன்றே, ஓரிரு முன்னாள் முதல்வர்களைச் சிக்கலிலிருந்து காப்பாற்றும் என்பதால் குறிப்பிட்ட
ஒரு கோப்பினைத் தணிக்கைக் குழுவின் பார்வையிலிருந்து மறைத்தது தவறு தான் என்றாலும்,
அலுவலகத்திலும் அலுவலர்கள் இடையேயும் நல்லிணக்கத்தை பேணுதலும் ஒரு அலுவலக
மேலாளரின் தலையாய கடமை என்பதால் முதல்வரிடம் சொல்லிக் கோப்பினை மறைத்து வைத்தது ஞாயமே
!
சேலம் துணை முதல்வருடன் இருப்பூர்தியில் அமர்ந்து
பேசிக்கொண்டு சென்ற திரு.இரா.அ.தங்கவேலு அவர்கள், கோவை சந்திப்பில் இறங்கி அங்கிருந்து
நகரப் பேருந்து மூலம் கோவை, இராமநாதபுரத்தில் இறங்கி ஒரு கிலோ
மீட்டர் தொலைவில் இருக்கும் அவருடைய வீட்டிற்கு நடந்து செல்லும் வழியில் நெஞ்சு வலிக்கு
ஆளாகி சாலையிலேயே அமர்ந்துவிட்டார். அவர் நிலையை ஊகித்த நல்லோர்
சிலர் அவரை அருகிலிருந்த குகன் மருத்துவமனையில் சேர்த்தனர் !
மருத்துவமனையில் கடுங்கவனிப்புப் பிரிவில் (I.C.U.) சேர்க்கப்பட்டிருந்த அவர் நெஞ்சுவலிக்கு ஆளானதும், கண்விழிக்க இரண்டு நாளாயிற்று என்பதும் மூன்றாவது நாள் தான் சேலத்திலிருந்த எனக்குத் தெரியவந்தது !
நான்காம் நாள் காலையில் சேலத்திலிருந்து
புறப்பட்டுக் கோவையில் உள்ள குகன் மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு கோவை மண்டலத் துணை இயக்குநர் திரு.சி.இராமன், திருப்பூர் அரசினர் மகளிர் தொழிற் பயிற்சி நிலைய
முதல்வர் திரு. இராமதுரை இருவரும் இருந்தனர் !
நான் சென்றபோது கடுங்கவனிப்புப் பிரிவிலிருந்து (I.C.U) சிறப்பு அறைக்கு அவரை மாற்றி இருந்தனர். மெல்லிய குரலில் பேச முடிந்தது. விடுப்பு விண்ணப்பம் தரமுடியுமா என்று திரு.சி.இராமன் கேட்டார் !
மருத்துவ மனையில் அக நோயாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் செய்தியுடன் மருத்துவச்
சான்றும் பெற்று 58 நாள் மருத்துவ விடுப்புக் கோரி விண்ணப்பத்தை
நான் எழுதி அவரிடம் கையொப்பம் பெற்று மண்டலப் பயிற்சித் துணை இயக்குநரிடம் தந்தேன்
!
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”வேதரெத்தினம்” வலைப்பூ,
[தி.ஆ: 2052, சிலை
(மார்கழி) 03]
{18-12-2021}
------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக