தேடுக !

ஞாயிறு, 14 நவம்பர், 2021

மலரும் நினைவுகள் (10)சுவர்மாடங்களும் இலக்கமும் !

  (1967-ஆம் ஆண்டு நிகழ்வுகள்) 

மலரும் நினைவுகள் (09) ஆம் பகுதியில் மூலப் பொருள் மற்றும் நுகர் பொருள்களின் பகுப்பலகீடு (Unitisation) பற்றி விளக்கி இருந்தேன்அதன் தொடர்பாகக் கூடுதலாகச் சொல்ல வேண்டிய செய்திகள் இரண்டு உள்ளன !

 

பண்டகத்தில்  பெரும்பாலும் மூன்று  புறங்களில் சுவர் மாடங்கள் (Wall Racks) அமைந்திருக்கும். இந்த மாடங்களின் அறை (Compartments)   ஒவ்வொன்றும் நான்கு அல்லது ஐந்தடி அகலமுள்ளதாகவும் ஒன்றரை அல்லது இரண்டடி உயரமுள்ளதாகவும் நான்கு அடுக்குகளாகக் கட்டப்பட்டிருக்கும்.  புதுக்கோட்டையில் பண்டகத்தில் இருந்த சுவர் மாடங்களின் தலைப்பில் (At the Top)   ஆங்கிலத்தில் A, B, C, D, E, F, G என மையினால் அடையாளக் குறியீடு செய்தேன் !

 

இந்தக் குறியீடுகள் ஒவ்வொன்றும் அடுத்தடுத்த (Adjacent) மாடங்களைக் குறிக்கும். மாடங்களின் அறைகளைப் பொறுத்தவரை  மேலிருந்து கீழாக 1, 2, 3, 4, என இலக்கங்கள் கொடுத்தேன்.  A.1 என்றால் அஃதுவரிசையில் 1-ஆவது அறையைக் குறிக்கும். இந்த அறைகளுக்குக் கதவுகள் இராது என்பதை நினைவிற் கொள்ளுங்கள் !

 

நுகர்பொருள்களை எடைபோட்டு அல்லது எண்ணிப் பகுப்பீடு செய்யும் போதே அதற்கென 75 x 75 மி.மீ அளவில் தயார் செய்து வைத்திருந்த அட்டையில் அந்தப்பொருளின் பெயரையும், பதிவேட்டில் அது எந்தப் பக்கத்தில் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும்  மையினால் எழுதி கெட்டி நூலால் அந்தப்  பொருளுடன் அல்லது பொருள் வைத்திருக்கும் பெட்டியுடன்  பிணைத்து வைத்தேன். எடுத்துக் காட்டாக அஃது இவ்வாறு இருக்கும்:- Incanscent Electric Bulb 40 Watts……….(page 15 Volume 4) !

 

பகுப்பீடு செய்த அந்தப் பொருளைச் சுவர் மாடத்தில் எந்த வரிசையில் எந்த அறையில் வைக்கிறேன் என்பதைப் பதிவேட்டில், குறிப்பிட்ட பக்கத்தின் தலைப்பில் வன்னிகையால் (Pencil) எழுதி வைப்பேன். அந்தக் குறிப்பு இவ்வாறு இருக்கும்:- A4. இதன் பொருள் அந்தப் பக்கத்திற்குரிய பொருள் சுவர் மாடத்தில் “A” வரிசையில் 4-ஆவது அறையில் (Compartment) இருக்கிறது என்பதாகும் !

 

சுவர் மாடம் அல்லாமல் எந்தப் பொருளாவது நிலைப்பேழையில் (Almirah) வைக்கப்பட்டிருந்தால்நி.பே.2/3” என்ற குறிப்பு இருப்புப் பதிவேட்டின் குறிப்பிட்ட பக்கத்தில் இடம் பெற்றிருக்கும். இதன் பொருள் நிலைப்பேழை 2-ல், 3-ஆவது அறையில் (Compartment) அந்தப் பக்கத்திற்குரிய பொருள் இருக்கிறது என்பதாகும் !

 

இவ்வாறு, மூலப் பொருள்கள், நுகர்பொருள்கள் அனைத்துக்கும்  பெயரும் பதிவேட்டுப் பக்க எண்ணும் அட்டையில் எழுதி அந்தந்தப் பொருள்களுடன் பிணைத்து வைத்திருந்தேன். துணிக்கடையில்  குறுஞ்சட்டை (T.Shirt) அல்லது அணியநிலை ஆடை (Ready-made Dress) வாங்கும்போது, அதனுடன்  விலைச்சீட்டு  ஒன்று தொங்குவதையும் நீங்கள் பார்த்திருக்கலாம். அதேபோன்று  புதுக்கோட்டையில், பண்டகத்தில் இருந்த அனைத்துப் பொருள்களுடனும் இவ்வாறு  பெயர் மற்றும் பதிவேட்டுப் பக்க எண்விவரச் சீட்டு ஒன்று பிணைக்கப்பட்டு தொங்கிக் கொண்டிருந்தன !

 

கருவிகள், அறைகலன்கள் அனைத்துமே இவ்வாறு சீட்டுகளைத் தாங்கி நின்றன. பார்வை ஆய்வுக்கு (Test Check) வரும்  துறை அதிகாரிகள் இந்தக் காட்சியைக் கண்டு சற்றுத் திகைத்துப் போனார்கள் என்றே சொல்லலாம் !

 

ஆய்வு அலுவலர் எந்தப் பொருளைக் கேட்கிறாரோ, அந்தப் பொருளுக்குரிய, பதிவேட்டின் பக்கத்தைத் திறந்து வைத்திருப்பார்.  அவருக்குத் தெரியாமல், அந்தப் பக்கத்தில் உள்ள வன்னிகைக் குறிப்பை (Pencil Remarks) பார்ப்பேன். அதைப் பார்த்து அந்தப் பொருளின் இருப்பிடத்துக்கு  நேராகச் சென்று எடுத்து வந்து காண்பிப்பேன். இவ்வாறு கேட்கும் பொருளையெல்லாம், தடுமாற்றமின்றி நேராக அந்த இடத்திற்குச் சென்று எடுத்து வருவதைப் பார்த்த  ஆய்வு அலுவலர்கள் மகிழ்ச்சியுடன் மனத்திற்குள்  வியப்படைவதைப் பார்த்து நானும் மிக்க மகிழ்ச்சி  அடைந்திருக்கிறேன் !

 --------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”வேதரெத்தினம்” வலைப்பூ.

[தி.: 2052, துலை (ஐப்பசி)19]

{05-11-2021}

--------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக