(1969 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்)
1969 –ஆம்
ஆண்டு என்று நினைக்கிறேன்.
தலநிதித் தணிக்கை (Local Fund Audit)
குழுவினர் திடீர்
ஆய்வுக்கு வந்திருந்தனர். பெயர்
தான் தணிக்கைக் குழுவே தவிர,
இக்குழுவினர் கணக்குகளைத் தணிக்கை எதுவும் செய்வதில்லை. இருப்புச்
சரிபார்ப்புப் பணியை மட்டுமே மேற்கொள்கின்றனர். இக்குழுவினர்
வந்தவுடன் பண்டக அறையின் திறவுகோலினை வாங்கி வைத்துக் கொண்டனர். ஒவ்வொரு
பதிவேடாக எடுத்து வைத்துக் கொண்டு இருப்புச் சரிபார்க்கத் தொடங்கினர் !
நான் அனைத்துப் பொருள்களையும் பகுப்பலகீடு (Unitization) செய்து வைத்திருந்தமையால், பொருள்களின்
இருப்பில் குறைவோ (Shortage)
கூடுதலோ (Excess) இல்லாமல் கள இருப்பும் பதிவேட்டு இருப்பும் ஒன்றுக்கொன்று
ஒத்துப் போயின. மூன்று நாள்கள் நடைபெற்ற இருப்புச் சரிபார்ப்பில் குறைபாடு (Shortage) எதையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை ! வேறு
முரண்பாடுகளையும்
(Discripancies) அவர்களால் சுட்டிக்
காட்ட முடியவில்லை !
அவர்களது ஆய்வறிக்கை அரசுக்கு அனுப்பப்பெற்று இயக்குநருக்கு வந்து சேர்ந்தது. அப்பொழுது
இயக்குநராக திரு.K.M.L.சாப்ரா இருந்ததாக எனக்கு நினைவு. அந்த
ஆய்வறிக்கையின் இறுதிப்பகுதியில் “Main Stores of this I.T.I. is
commendably maintained and well unitized” என்னும் குறிப்பு இடம் பெற்றிருந்தது. இந்தக் குறிப்பைப் படித்துப் பார்த்த இயக்குநர் அந்த அறிக்கையிலேயே “Keep up the tempo” என்று எழுதிச் சுருக்கொப்பம் இட்டிருந்தார். அந்த
அறிக்கை புதுக்கோட்டை அலுவலகத்திற்கு வந்த பின்பே, அறிக்கையின்
சாராம்சத்தைப் படித்துப் பார்த்து முதல்வரும் பிற அலுவலர்களும் என்னைப் பாராட்டினர் ! மோதிரக்
கையால் குட்டுப் பெறுதல் என்பதன் பொருளை அன்று தான் உணர்ந்தேன் !
இதே
1969 – ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். ஆண்டின் பிற்பகுதியில் இயக்ககத்திலிருந்து அகத் தணிக்கைக்
குழுவினர் வருகை தந்திருந்தனர்.
குழுவின் தலைவர் திரு.இரமணி, கண்காணிப்பாளர். இவரது
முழுப்பெயர் எஸ்.வெங்கட்ரமணி என்பதாக நினைவு. தஞ்சாவூரை
அடுத்த சாலியமங்கலம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். நகைச்சுவையாகப்
பேசுவதில் வல்லவர் !
குழுவின் இன்னொரு உறுப்பினர் திரு.கணபதி, உதவியாளர், இராமநாதபுரத்தைச்
சேர்ந்தவர். இவர் தணிக்கைப் பணிக்கு வந்து சென்ற பிறகு குறுகிய காலமே
வேலைவாய்ப்புப் பயிற்சித் துறையில் பணிபுரிந்திருப்பார் போலும் ! ஏனெனில்
இவர் கண்காணிப்பாளராகவோ ஆட்சி அலுவலராகவோ பதவி உயர்வு பெற்ற செய்தியை நான் கேள்விப்பட்டதில்லை. வேறு
துறைக்கு மாறிச் சென்றிருப்பார் என்று நினைக்கிறேன் !
குழுவின் மூன்றாவது உறுப்பினர் திரு.இராமமூர்த்தி, உதவியாளர். இவரும்
வேறு துறைக்கு மாறிச் சென்றதாலோ என்னவோ, இவரைப் பற்றியும்
பின்னாளில் நான் கேள்விப்பட்டதில்லை !
தணிக்கைக் குழுவினரில் முதலிருவர் மட்டும் குறிப்பிட்ட நாளில்
வருகை தந்திருந்தனர். மூன்றாமவரான திரு.இராமமூர்த்தி
அடுத்த சில நாளில் வந்து இணைந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது !
பண்டகக் கணக்குகளைத் திரு.கணபதி
தணிக்கை செய்தார். ஒருநாள் மாலைநேரம், திரு.இரமணி, திரு.கணபதி, நான்
மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில், திரு.இரமணி
அவர்கள், விளையாட்டாகப் பண்டக வரவு செலவுக் கணக்கில் குறை கண்டுபிடித்து தணிக்கைத் தடை எழுப்புவேன் என்று சொன்னார். நானும்
விளையாட்டாக, கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்று சொன்னேன் !
கண்டுபிடித்துவிட்டால் என்ன செய்கிறாய் என்று கேட்டார். என்
கணக்கில் ஒரேயொரு குறை கண்டுபிடித்தாலும், நான்
உங்களுக்கு மறக்க முடியாத பரிசு
(GIFT) ஒன்றைத் தருகிறேன்
என்று தெரிவித்தேன். திரு.இராமமூர்த்தி இரண்டொருநாளில்
வந்துவிட்டு, யாருக்கோ உடல்நலம் சரியில்லை என்று சொல்லிவிட்டு ஊருக்குச்
சென்றுவிட்டார். இருவர் குழு 10 நாளில் தணிக்கையை
நிறைவு செய்தது. பண்டகக் கணக்கில் ஒரேயொரு குறை கூடக் கண்டுபிடிக்கமுடியவில்லை
என்பதை திரு.இரமணி ஒப்புக்கொண்டார் !
நான் அணியமாக (Ready) வைத்திருந்த என் பரிசை
அவரிடம் தந்தேன். பளபளப்பான வெள்ளைத்தாளில் எழுதி, கெட்டியான
அட்டையில் ஒட்டி, பூ
வேலைப் பாடுகளுடன் கண்ணாடிச் சட்டமிட்டுத் தயாரிக்கப் பெற்றிருந்த அவரைப் பற்றிய கவிதைதான் அந்தப் பரிசு ! இதோ
அந்தக்கவிதை !
அன்பைச் சொரிந்து வரும் அருவி ! – எளிமை
…………..அழகு ததும்புகின்ற ஊற்று ! – ஒளிரும்
பொன்னில் உறவுகொண்ட மேனி ! – விழியில்
…………..பொங்கி வழிந்துவரும் நிலவு ! – எமது
நெஞ்சில் குடிபுகுந்த தென்றல் ! – அழியா
……………நினைவில் வளர்ந்துவரும் கவிதை ! – அமுதத்
தஞ்சை உலகளித்த தரளம் ! – மின்னும்
…………..தங்க மதுர மணிக் கலசம் !
(பாடலின் பொருள்: )
அன்பானவர், எளிமையானவர்,
சிவந்த
மேனியர், குளிர்ந்த பார்வையர்,
தென்றலாய்
உள்ளம் தொடுபவர், கவிதை போல் நெஞ்சில் நிலைத்திருப்பவர்,
தஞ்சை
(சாலியமங்கலம்)
தந்த
முத்து, அவர்தான் தங்கம் போல்
மின்னுகின்ற இனியவர் “ரமணி”
என்னும்
கோபுரக் கலசம் !)
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”வேதரெத்தினம்” வலைப்பூ.
[தி.ஆ:
2052, துலை (ஐப்பசி)21]
{07-11-2021}
----------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக