தேடுக !

ஞாயிறு, 14 நவம்பர், 2021

மலரும் நினைவுகள் (13) பலராமன் தந்த பரிசு ! திருச்சிக்கு இடமாற்றம் !

(1971 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்) 

செய்வதறியாது சில நாள் தவித்துக்கொண்டிருந்தேன்.   என் தவிப்பை மிகைப்படுத்துவது போல் திருச்சிக்கு இடமாற்றலாணையும் வந்து சேர்ந்தது. என் இடத்தில் வேறு யாரையும் பணியமர்த்தாமல், உள் ஏற்பாடுகள் (Internal Arrangements)  மூலம் என்னைப் பணியிலிருந்து  விடுவிக்குமாறும் பணிக்கப்பட்டிருந்தது ! திருச்சிக்கு நேரில் சென்று பண்டகத்தை பார்த்த பின் முடிவு செய்யலாம் என்று விரும்பினேன் !

 

ஒருநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு, திருச்சி சென்றேன். அன்று திரு.இரத்தினசாமி பணிக்கு வரவில்லை. எனவே பண்டகத்தினுள் சென்று பார்க்க வாய்ப்புக் கிட்டவில்லை. திருச்சி பயிற்சி நிலைய  நண்பர் ஒருவருடன் சென்று திறந்திருந்த சாளரம் வாயிலாகப் பண்டகத்தைப் பார்த்தேன். பொருள்கள் மலைபோல் குவிந்து கிடந்தன. எனக்கு மயக்கம் வருவது போல் தோன்றியது; கீழே  விழாத குறை தான் ! ஒருவாறு  சமாளித்துக் கொண்டு இடிந்த மனத்துடன் புதுக்கோட்டைக்குத் திரும்பினேன் !


என்னை விடுவிக்கச் சொல்லி இயக்ககத்திலிருந்து செய்திகள் வரத் தொடங்கின. பண்டகக் கொள்முதல் பிரிவு இளநிலை உதவியாளர் திரு.அரிகிருஷணன் என்பவர் என்னைப்பற்றி நன்கு அறிந்தவர்; பண்டகப் பொறுப்புகளை என்னிடமிருந்து பெற்றுக்கொண்டார். 01-09-1971 அன்று முற்பகல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டேன் !

 

முப்பது நாள் ஈட்டிய விடுப்புக் கோரி விண்ணப்பம் ஒன்றைத் திருச்சி முதல்வருக்கு அனுப்பிவிட்டு ஊருக்குச் (திருத்துறைப்பூண்டிக்கு) சென்றுவிட்டேன். குடும்பத்தினருடன் சிலநாள் அமைதியாகக் கழித்தபின், இடமாற்றலாணையை உலைவு (Cancel)  செய்வதற்கு முயற்சி செய்யலானேன் ! சென்னையில் சென்று சில நாள் தங்கியும் முயன்றேன். இதற்கிடையில் 30 நாள் ஈட்டிய விடுப்பு முடியும் வேளை நெருங்கியது. மேலும் 30 நாள் ஈட்டிய விடுக்கோரி இன்னொரு விண்ணப்பம் திருச்சிக்கு அனுப்பிவிட்டு சென்னையில் என் முயற்சிகளைத் தொடர்ந்தேன் !

 

நல்ல உள்ளம் படைத்த வழக்குரைஞர் ஒருவர் மூலம் அரசுச் செயலர் திரு.ஆறுமுகம் இ... அவர்களைச்  சந்தித்து என் கோரிக்கையை எடுத்துரைத்தேன். அப்போது இயக்குநர் பொறுப்பில் இருந்தவர் சிலநாள் விடுப்பில் புதுடில்லி சென்றிருந்தமையால், அரசுச் செயலர், இணைஇயக்குநர் திரு பலராமனுடன் தொலைபேசி மூலம் பேசி எனது இடமாற்றத்தை உலைத்திடுமாறு  (Cancel) கேட்டுக் கொண்டார் !

 

அதற்கு திரு.பலராமன் அவர்கள் சொன்ன பதில் முடிச்சை இன்னும் வலுவாக இறுக்கிவிட்டது.  திருச்சி பண்டகம் முறையாகப் பேணப்படாமல் குறைபாடுகள் மலிந்து காணப்படுகின்றன. நான் ஆய்வுக்குச் சென்றிருந்த போது  திருச்சி பண்டகத்தின் நிலையை நேரில் கண்டறிந்தேன்.  அங்கு காணப்படும் குறைபாடுகளை எல்லாம் களைந்து நல்ல முறையில் பேண  வேண்டுமெனில் மிகத் திறமைசாலியான ஒருவரால் தான் முடியும்” !

 

புதுக்கோட்டைக்கு நான் ஆய்வுக்குச் சென்றிருந்த போது, அங்குள்ள பண்டகக் காப்பாளரின் பணித் திறமையை நேரில் கண்டறிய முடிந்தது. என் மதிப்பீட்டின்படி திருச்சிப் பண்டகத்தைச் சீரமைத்துப் பேணுவதற்கு இப்போதுள்ள 28 பண்டகக் காப்பாளர்களில் புதுக்கோட்டை பண்டகக் காப்பாளர் ஒருவரால்தான் முடியும் என்பது என் கணிப்பு. அதனால் தான் அவரைத் திருச்சிக்கு மாற்றியிருக்கிறேன். இந்த நிலையில் நான் என்ன செய்வதென்று சொல்லுங்கள்” . இது தான் அரசுச் செயலருக்கு இணை இயக்குநரின் பதில் !

 

இணை இயக்குநர் சொன்ன பதிலை அப்படியே என்னிடம் சொல்லி, “உன் மீது அவர் நல்ல மதிப்பு வைத்திருக்கிறார், அதைக்  கெடுத்துக்கொள்ள வேண்டாம். இப்போது திருச்சிக்குச் சென்று பணிப் பொறுப்பை ஏற்றுக் கொள்; பிற்காலத்தில்  உனக்கு ஏதும் உதவி தேவை என்றால் என்னிடம் வா; செய்து தருகிறேன்; சென்று வாஎன்று கூறி என் கோரிக்கைக்கு அரசுச் செயலர் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் !

 

--------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”வேதரெத்தினம்” வலைப்பூ.

[தி.: 2052, துலை (ஐப்பசி) 25]

{11-11-2021}

--------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக