(1971 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்)
ஈராண்டுகள் கடந்தன. 1971 –ஆம்
ஆண்டு – வேலை வாய்ப்பு பயிற்சித் துறையில் முதன்முதல் பருவகால
இடமாற்றம் (Periodical
Transfer) அறிமுகப்
படுத்தப்பட்ட ஆண்டு. ஐந்து ஆண்டுகள் பணி நிறைவு செய்த அலுவலர்களிடம்
விருப்பம் கேட்கப்பட்டது.
நான்
“நாகப்பட்டினம்” அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு இடமாற்றலில் செல்ல விருப்பம் தெரிவித்திருந்தேன் !
1971-ஆம் ஆண்டின் இடைப்பகுதியில் ஒரு நாள். இணை இயக்குநர் திரு.எஸ்.பலராமன் அவர்கள் புதுக்கோட்டைக்கு ஆய்வுக்கு வந்திருந்தார். அன்று முற்பகலில் பிற அலுவல்களை முடித்துக் கொணடு, பிற்பகலில் பண்டகத்திற்கு பார்வை ஆய்வுக்காக (Test Check) வந்திருந்தார். உள்ளே வந்து இருக்கையில் அமர்ந்த அவர், சுவர்மாடங்களை (Wall Racks) ஒரு நோட்டமிட்டார். அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருள்களும், அவற்றில் தொங்கிக் கொண்டிருந்த “பொருள் விவரச் சீட்டு”களும் அவர் கண்களில் பட்டதும் எழுந்து சென்று அவற்றைப் பார்வையிட்டார் !
பொருள்கள் குறிப்பிட்ட அலகுகளாக (Units) கட்டி வைக்கப்பட்டிருப்பதும், ஒவ்வொன்றுக்கும்
பொருள்விவரச் சீட்டு
(Description Slip) இணைக்கப்பட்டிருப்பதும் அவருக்கு வியப்பு கலந்த மகிழ்ச்சியைத்
தந்திருக்க வேண்டும். அதைப் பற்றி விளக்கமாகச் சொல்லுமாறு கேட்டார். சொன்னேன்; விளக்கினேன். அரியுருக்குப்
பட்டைகள் போன்றவை
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் முறைமை பற்றியும் சொன்னேன். பதிவேட்டின்
பக்கங்களில் எழுதியுள்ள வன்னிகைக் குறிப்புகள் பற்றியும் சொன்னேன் !
முகமலர்ச்சியுடன் பார்வை ஆய்வைத் தொடங்கினார். கேட்ட
பொருள்களை உடனுக்குடன் கொண்டு வந்து காட்டியதால், மிகுந்த
மனநிறைவுடன், ”நன்றாக வைத்திருக்கிறாய்; இந்த
நடைமுறையைத் தொடர்ந்து பின்பற்று”
என்று கூறிவிட்டு முதல்வர் அறைக்குச் செல்லப் புறப்பட்டார். அப்பொழுது
என்னிடம், காலமுறை
இடமாற்றலின் போது உனக்கு எந்த ஊர் வேண்டுமென்றுக் கேட்டார். “நாகபட்டினம்
தாருங்கள் ” என்று சொன்னேன். குறித்துக்
கொண்டு, அலுவலகம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார் !
மறுநாள் அவரது நிகழ்ச்சி நிரலின்படி திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி
நிலையத்திற்கு ஆய்வுக்குச் சென்றிருக்கிறார். பிற
ஆய்வுகளை முடித்துக்கொண்டு அங்குள்ள
பண்டகத்தை ஆய்வு செய்திருக்கிறர்.
பொருள்களின் வைப்பு முறையில் (Store Keeping)
எந்த ஒழுங்கும் கடைப்பிடிக்கப்படவில்லை
என்பது முதல் பார்வையிலேயே அவருக்குப் புரிந்துவிட்டது. பார்வை ஆய்வின் போது, கேட்ட
பொருள்களை உடனுக்குடன் கொண்டுவந்து காட்டுவதில் மிகுந்த தடுமாற்றம். பண்டக்
காப்பாளரைக் கடுமையாகக் கடிந்து கொண்டிருக்கிறார் !
முதல்வர் அறைக்கு வந்து, முதல்வர்
திரு.சீதாபதியின் இருக்கையில் அமர்ந்து பண்டகம் பேணப்பட்டுள்ள
நிலை பற்றி தனது மன நிறைவின்மையைத் தெரிவித்து விவாதித்திருக்கிறார். முதல்வர் திரு.சீத்தாபதி ஏதேதோ சொல்லி
இணை இயக்குநரைச் சமாதானப்படுத்தி இருக்கிறார்!
திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையமானது தமிழ்நாட்டிலேயே மிகப் பெரியது. ஒப்பளிக்கப்பட்ட பயிற்சியாளர் இடங்கள் 1024. பொருத்துநர் பிரிவில் மட்டும் 20 அலகுகள் (Units) ; கடைசலர் பிரிவில் 12 அலகுகள்; ஒருக்கியல் (Welder) பிரிவில் 8 அலகுகள். மொத்தம் 18 தொழிற்பிரிவுகள் என்பதாக எனக்கு நினைவு ! இத்துணைப் பெரிய நிலையத்தில் ஒரேயொரு பண்டகக் காப்பாளர் பண்டகத்தை முறையாகப் பேணுதல் என்பது கடினமான செயலாகும் !
பண்டகக் காப்பாளர் திரு.இரத்தினசாமி, இணை
இயக்குநரை அணுகி காலமுறை இடமாற்றலின்போது தனக்கு கோயம்புத்தூருக்கு இடமாற்றல் தருமாறு கோரிக்கை வைத்திருக்கிறார். முதல்வர்
திரு.சீதாபதி,
குறுக்கிட்டு, திருச்சி பண்டகம்
மாநிலத்திலேயே மிகப் பெரியது என்பதால், அதை முறையாகப் பேணுதல்
மிகக் கடினமான பணி எனக் குறிப்பிட்டு, இரத்தினசாமி இடத்தில் பணியமர்வு செய்யப்படுபவர் நல்ல திறமைசாலியாக இருக்கவேண்டும்
என்றும் பொருத்தமான ஒருவரைப் பணியமர்த்தம் செய்யுமாறும் இணை இயக்குநரைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் !
அதற்கு திரு.பலராமன் அவர்கள் “புதுக்கோட்டை
பண்டகக் காப்பாளர் பண்டகத்தைப்
பேணுவதில் மிகச் சிறப்பானவராக எனக்குத் தோன்றுகிறது; அவரை
இங்கு இடமாற்றலில் பணியமர்வு செய்கிறேன்” என்று கூறியிருக்கிறார். இந்தச்
செய்தி மூன்றாம் நாளிலேயே எனக்கு எட்டியது !
புதுக்கோட்டை நிலையம் சிறியது. ஒப்பளிக்கப்பட்ட
பயிற்சியாளர் இடங்கள் 276, ஆனால் திருச்சியில் 1024. தமிழ்நாட்டிலேயே
மிகப் பெரிய நிலையம். அங்கு சென்று பண்டகத்தை எப்படிப் பேணுவது என்று மனக்கலக்கம்
அடைந்தேன். வயிற்றில் புளியைக் கரைத்தது போல் என்பார்களே அந்த உணர்வை
அன்று தான் அடைந்தேன் !
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”வேதரெத்தினம்” வலைப்பூ.
[தி.ஆ: 2052, துலை (ஐப்பசி) 23]
{09-11-2021}
--------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக